என்னால் நம்பவே முடியவில்லை. நானா இப்படி? விளையாட்டாக ஓரிரு அத்தியாயங்கள் படிக்க ஆரம்பித்து, அதிலேயே மூழ்குகிற வகையில் யதியில் என்னை இழந்தது எப்படி?
துறவின் மீது அனைவருக்கும் பொதுவான எதிர்ப்புணர்வும் வியப்புணர்வும் இருக்கும். வாழ வழியின்றி, வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியின்றி துறவை நாடிச் செல்கின்றனர் என்று நினைப்போர் பலர். கெளதம புத்தரைக் கூடக் குறை சொல்வோர் உண்டு. ஆனால் துறவென்பது ஒரு மனிதனின் மன ஆழத்தில் அவன் தன்னை முழுமையாய் உணரும்போது தன்னையும் மீறி தன்னை உலக வாழ்க்கையில் இருந்தும், சுக துக்கங்களில் இருந்தும் இயல்பாக விடுவித்துக் கொள்ளும் செயல். இது அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆனால் அனைவரையும் கவனிக்கவைப்பது.
யதியில் நான்கு வெவ்வேறு விதமான துறவின் நிலைகளை நமக்குக் காட்டி கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பாரா. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நான்கு மனிதர்களின் துறவைச் சொல்வதன் வழியே நாம் இதுவரை பயணித்திராத பாதையில் அழைத்துச் சென்று வேறு ஓர் உலகத்தைச் சுற்றிக் காட்டுகிறார்.
யார் அவர்கள்? அவர்கள் ஏன் துறவைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்ன சாதித்தார்கள்? தத்துவச் சிடுக்குகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் தரையில் கால் ஊன்றி நின்று வெல்கிறது யதி. வாழ்வை இப்படியான கோணத்திலும் அணுகலாம் என்று உணரவைக்கிறது.
யதியைப் படிக்கும் போது சில நிகழ்கால / கடந்த கால சாமியார்கள் நினைவுக்கு வந்தாலும் கதையின் போக்கில் உடனே மறந்தும் மறைந்தும் போகிறார்கள். கதையைப் படித்து முடிக்கும்போது இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடுவன அல்ல என்று தோன்றும்போதே, எல்லா முகங்களிலும் நம்முடையதைப் பொருத்திப் பார்க்கவும் வைப்பதே இதன் வெற்றி.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அவை பேசும் வசனங்களும் நாம் அருகிலேயே இருந்து அந்தக் காட்சிகளை காணுவது போல உணர்த்தி இருக்கிறார். சமயத்தில் நாமே பேசுவது போல!
துறவின் வெற்றி என்பது துறவையும் துறத்தலில் இருக்கிறது. அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இந்நாவலில் வருகிற அத்தனை சன்னியாசிகளும் ஒரு சாதாரணப் பெண்ணிடம் தோற்றுப் போகிறார்கள்.
இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய உண்மை ஒன்று கதையின் முடிவில் தெரிகிறது. அது தொடக்கத்தில் இருந்து நம்முடன் பயணிக்கும் ஒரு ஓலைச்சுவடியின் ரகசியம். உண்மையில் ரகசியம் என்பது சுவடியில் இல்லை. சுவடியாகவே உள்ள கதையின் நாயகர்களான நான்கு பேரின் தாயிடம் உள்ளது. மறக்க முடியாத பாத்திரம்.
முழுதும் ஒரு கார்பரேட் சாமியாரின் பார்வையில் விரிகிறது யதி. அவர் தேடுகிற ஒரு மனிதர் [அவரது மூத்த சகோதரர்] கடைசி வரை அவரைச் சந்திப்பதே இல்லை. ஆனால் அவரைத் தேடாதவர்களை அவர் தேடித் தேடி சந்திக்கிறார். இந்த அழகிய முரண் நாவலின் இறுதியில் உச்சம் பெற்று முற்றிலும் எதிர்பாராத புதிய தரிசனத்தைத் தருகிறது.
தனக்கென்று ஒரு பேங்க் அக்கவுன்ட் கூட இல்லாத அந்த சாமியார் சகல சுகங்களையும் அனுபவிக்கிறார். அனைத்தின் மீதும் படர்ந்து, எதிலும் ஒட்டாது விலகுகிறார். வியப்பூட்டும் விமலின் பாத்திரப் படைப்பு, கதையில் சரியாக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சொரிமுத்துவை நம்மால் மறக்கவே முடிவதில்லை. அப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரம் அது. கேசவன் மாமா இயல்பான கிராமத்து பிராமணர். அவரின் அப்பாவித்தனமான கேள்விகளும் அக்காவின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான பாசமும் மறக்கவும் மறுக்கவும் முடியாதது.
ரொம்பவும் பாவமென்றால் அது வினய்தான். தன்னுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் தோற்றுப்போய் எதிலும் நிலையின்றிக் கலங்கும் மனிதனாக அறிமுகமாகி, இறுதியில் தனது அலைதலின் எல்லையில் அதையே தரிசனமாகவும் ஞானமாகவும் பெறுகிறபோது முற்றிலும் வேறு பரிமாணம் எய்திவிடுகிறான்.
நம் அன்றாட வாழ்வில் நிறைய வினோத்களைப் பார்க்கலாம். விமல்களை நமக்குத் தெரியும். விஜய்யும் வினய்யும்தான் நமக்கு நாம் அறியாத பல புதிய உலகங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
பரவசமும் நெகிழ்ச்சியும் ஊட்டும் வாசிப்பனுபவம் இதில் எனக்குக் கிடைத்தது. அந்த நெகிழ்ச்சியைத் தவறவிட நீங்கள் விரும்பவில்லை என்றால் நிச்சயம் யதியைப் படியுங்கள்.
B.சுதாகர்
@bsudhagar