அபாயகரம் – ஒரு மதிப்புரை (விவேக் பாரதி)

‘அன்பின் பாராவுக்கு,’

 

நாடறிந்த (நாட்டை அறிந்த, நாடு அறிந்த) எழுத்தாளர் பாராவுக்கு அனேகமாக வரும் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். அதனால் நானும் அப்படியே தலைப்பிட்டேன். சற்று வித்தியாசமான இந்த நூல்நோக்கம் 2 நூல்களைப் படித்துக்கொண்டு வந்து முன்னால் போடுகிறது. இரண்டுக்குமான கைகள், பாராவுடையது.

தீவிர இலக்கியவாதி, இலக்கியத் தீவிரவாதி, நாவல் உலகின் நாவல்பழம் உள்ளிட்ட பல அடைமொழிகளால் நண்பர்கள் சிலர் பாராட்டிப் பேசும் பாராவை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். அன்னாரின் அட்வைஸ் இன்னும் என் காதுகளில் ‘‘தம்பி கவிதைக்கு பெரிய மார்க்கெட் இல்ல… நீங்க கதை எழுத முயற்சி செய்யுங்க’’… அவருடைய 2 நூல்களைக் கையில் எடுத்தேன் (வெவ்வேறு காலங்களில்)

ஒன்று : அபாயகரம் 

பாராவின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது இதைத்தான். முதன்முறை வாசிக்கும்போது நான் கல்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். (பாரா கல்கியில் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார் என்பதை அறிந்தபின் அடிவயிற்றில் கோளங்கள் சுற்றின). கல்கியில் அவருடைய புல்புல்தாரா தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. பொதுவாக கதை படிக்க ஆர்வம் இல்லாதவன், லாவகமாக என் பொறுப்பாசிரியரிடம் தப்பித்தபடி அதனைக் கடந்துவிடுவேன்.

ஆனால், ஒருநாள் ’அபாயகரம்’ என்ற புத்தகம் வெளியாகும் அறிவிப்பை பாரா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நான் சொன்னேனே, எனக்கு அவர் கொடுத்த அட்வைஸ் ஒன்று உள்ளத்தில் இருந்ததென்று, அதை இந்த அறிவிப்பு சுரண்டியது. அபாயகரம் என்பது கவிதைத் தொகுப்பு. சொன்னால், பாரா ‘வாய்ல அடிங்க வாய்ல அடிங்க… கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள்’ என்று சொல்வார். ஆனால் வகை என்னவோ அதுதான். சாரி பாரா! ‘‘கவிதைத் தொகுப்பு’’.

ஆனால், வாக்குமூலத்திலேயே ஐயா வணக்கம் சொல்லி திறமையாக நகர்ந்து கொண்டார். என்னதான் இருக்கு என்று பார்க்க வருபவர் முன் நிராயுதபாணி வேடமிட்டு நிற்கிறார். தரிசித்த புரிதலில் தொடர்ந்தேன். புத்தகத்தை அவர் எனக்கே சமர்ப்பித்ததாக உணர்ந்து அடுத்த பக்கத்தை விரலால் தொட்டு மெதுவாக நீவினேன்.

முதலிரண்டு பக்கங்கள் வெற்றிடம். மூன்றாம் பக்கத்தில் ஒரு யானை வரைபடம். அது கானகத்து யானையாக இராமல் கார்ட்டூன் யானையாக இருந்தது, பாரா எனும் பயமுறுத்தும் எழுத்து மெஷினை எனக்கு அருகில் உட்காரச் செய்தது. கண் சிமிட்டிய யானையின் முகத்தில், கண்ணக்குழி விழுவதாய்க் கற்பனை செய்துகொண்டேன். என்னருகே ஏனோ பாரா குழந்தை ஆனார். தலையை கோதிவிட்டு அடுத்ததைச் சொல்க என்றேன். விரல் சூப்பியபடியே பக்கம் நீவினார்.

5வது கவிதை. குழந்தை பாரா இப்போது ஸ்கூல் டவுசர் போட்டிருக்கும் சுட்டிப் பயலாய். ஆளற்ற பாத்ரூமில் சத்தமின்றி ஒரு வாளி தண்ணீரை நகர்த்திக் கொண்டிருந்தார். புன்னகைத்தபடி இழுத்து அடுத்து புரட்டச் சொன்னேன். (ஒரு பெரும் ஆளுமையை நமக்குக் குழந்தையாக்கிப் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம். ஆஹா, பிள்ளைக்கவி எழுதிய/எழுதும் கவிஞர்களே லேசாக பொறாமை கொள்கிறேன்.)

8வது கவிதை, குறள் படிக்க ஆரம்பித்திருந்தார் பள்ளி மாணவன் பாரா. 10ம் கவிதையில் வீட்டுப்பாடம் எழுத மறந்து புறக்காளின் அனுங்குதலை அங்கலாய்த்துக் கொண்டிருப்பவராய் அமர்ந்திருந்தார். சற்று எடை கூடியிருந்தது. உணவிட்ட கைகளை நானும் நினைத்துக்கொண்டு காதைத் திருகி பக்கங்களை நீவச்சொன்னேன்.

பாரா மேஜையை 11ம் கவிதையில் பார்வையிட்டேன். அடுக்கல்தான், வேலை ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. நகர்ந்தேன். பாப்கார்னை 14ல் கண்டேன். பையன் வளர்ந்து பேண்ட் அணிந்திருந்தார். துளிர்த்திருந்தது மீசை. கண்களில் ஆர்வம் குறையாத தேடல் பார்வை. இனி தியேட்டருக்கு கூட கொஞ்சம் காசு கொண்டுபோய் 2 பாப்கார்ன் பாக்கெட்டுகள் வாங்கி, சச்சரவில்லாமல் ‘படம் மட்டும்’ பார்க்க வேண்டும் என்று ஆணையிடத் தோன்றியது.

அடுத்த 15ல் பாரா புத்தக அலமாரியின் பொக்கையை துப்பறியும் சாம்புவாய். கற்பனைப் பாரா படிக்கத் தொடங்கியிருக்கிற சந்தோஷம். அலமாரியின் பொக்கையைத் தவிர மற்ற களேபரங்கள் ரசிக்கவில்லை. ஆனால், அந்தக் கால வர்த்தமானத்தில் ஆச்சர்யம் நிகழ்ந்திருந்தது. 16ல். பாராவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் குழந்தை அல்லவா, அநியாயத்துக்கு மனைவியிடம் சொல்லக் கூடாததெல்லாம் சொல்லி உளறி கொட்டுகிறார். முதுகு தேய்க்க முடியவில்லை, ஹீட்டர் அணைக்க மறந்து போகிறது. எத்தனை குற்றச்சாட்டுகள். அப்பாவிக் கணவர் பாரா எப்படியேனும் கரையேற வேண்டும் என்று பராசக்தியை பிரார்த்தித்தேன். அஹ், இனி பாராவா கவிதைப் பக்கங்களைத் திருப்பப் போகிறார்? அவர் கடமை இப்போது எனக்கானது. சரி சேவை செய்வது எனக்குப் பிடிக்கும். அடுத்து திருப்பினேன், மொட்டைமாடியில் பாரா.

ஓடிச் சென்று எட்டிப் பார்த்தேன். பெனாத்தும் கையில் மறந்தேனும் ஒரு சிகிரெட் துண்டோ, ஒரு கிளாஸ் காஸ்ட்லி மருந்தோ இருக்குமோ என்று. பாவம், குழந்தை பேப்பரும் பேனாவுமாய் நாளைய கவிதைக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை, நிறைய படித்துவிட்டதால், பாரா பாத்ரூமுக்குள்ளும் சீயக்காய் தூளில் சீதையைக் கண்டு ராமாயணத்தை நினைவு கூர்ந்துகொண்டிருந்தார். பேசாமல் குளித்துவிட்டு வருவதற்கென்ன? அதுசரி, கவிஞனாகி விட்டால் இப்படிப்பட்ட கொனஷ்ட்டைகள் இயல்பாகவே வந்துசேரும்.

தான் படித்த ராமாயணத்திலிருந்து பாரா சீதையை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. கம்பனின் விருத்தத்தையும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கவிதை செம்மையான அறுசீர் விருத்தமாய் மலர்ந்தது. ஆனால் அங்கேயும் தேமா வரவேண்டிய ஒரே ஓரிடத்தில் புளிமா வந்து கொஞ்சம் புளித்தது. (இன்று பலர் இதில் கோட்டை விடுகிறார்களே)

அடுத்து, இருக்கும் கவிதைகளை எல்லாம் படித்து முடித்துவிட்ட பாரா, கவிஞர்களை விஞ்ச நினைத்தார். எத்தனை காலத்துக்குத்தான் முல்லையையும் மல்லியையும் பாரிஜாத பன்னீர் புஷ்பங்களையும் பாடிக்கொண்டிருப்பீர்கள் என்று சிரித்து, குரோட்டன்ஸை பற்றிய கவிதையை முகத்தில் அடித்தார். ஹாலின் அலங்கார குரோட்டான்ஸ் பாடல்பெற்ற பாக்கியத்தில் 2 ஷேடுகள் அதிகம் நிறம் கொடுத்தது.

எழுதிய கவிதைப் புத்தகம் விற்றுப்போகாத ஏக்கம், கற்பனைப் பாராவைத் தொற்றிக் கொண்டது. காதலில் ஆரம்பித்து கழுவி ஊற்றி ஒரு கவிதையை எழுதிவிட்டு, நோட்டை அக்கடாவென்று கடாசினார். ஹால் சோபாவில் ஒன்றைரை முழம் தூக்கி வைக்கப்பட்ட முகத்தில் குழந்தை மட்டும் அப்படியே இருந்தது.

கோபத்தில் மேலும் சில வசைகல் காதலுக்குப் பாய்ந்தன. அதிலும் கடற்கரை அனுபவம் கிளாஸ். காதலித்த/லிக்கும் எல்லாரும் அனுபவித்ததன் சாரமாக. அட, அதுதான் கவிதை. (பாரா நான் சொன்னேன்லையா இது கவிதைத் தொகுப்புதான்). ஆனால், அடுத்து வைத்திருந்த சிவப்பு சுடிதார் கொஞ்சம் ஓவர். இன்னும் எத்தனை நாளுக்கு கலர் பிளைண்ட்நெஸ் உள்ள காளைக்கு சிவப்பு எதிரி என்பீர்களோ?

எதையும் வித்யாசமாக செய்வதில் நாட்டம் கொண்ட பாரா, அடுத்தும் ஒன்றைச் செய்திருந்தார். 29ம் கவிதைக்குப் பின் மீண்டும் ஒரு 24ம் நம்பர் வந்தது. அதிலிருந்து அடுத்தடுத்து தொடர்ந்தது. ஒன்று தெரியுமா? என்னைப் பொறுத்தவரை கவிஞன் ஆவதற்கு முதல் தகுதியே கணக்கில் வீக்காக இருப்பதுதான். (நானும் கைத்தூக்குகிறேன்).

பாரதிக்குப் பின் இலக்கிய உலகம் மாறிவிட்டது. கடவுள் நம்பிக்கை உண்டோ இல்லையோ, கவிஞர் என்றாலே ஒரு ’வேண்டும்’ பட்டியலைத் தயாரித்து, யாரிடமோ வேண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பாரா, போதும் போதும் என்று அதையும் உல்டா செய்கிறார். (எத்தனை கவிஞர்களைக் கண்டிருப்பார்.. ஹ்ம்ம்). கண்ணதாசன், நாமுவுக்கு அடுத்து, தனக்கிருக்கும் ஒரு பழக்கத்தை லெட்டரில் இப்படிக்கு எழுதுவது போல விடாமல் பிடித்துக்கொண்டே வருகிறார் பாரா. அந்த மாவாவுக்கு தனி நன்றி.

அப்ஸ்ட்ராக்டான காட்சிகளை விவரித்து, அதில் ஒரு பேண்டஸியை உருவாக்கி ரசிக்க வைப்பது இந்த போஸ்ட் மார்டனிச தத்துவங்களில் ஒன்று. அப்படி மரச்சட்டம், அலமாரி, புத்தகம், வானம், 4 சுவர் அறை என்று பாரா காட்டும் நவீனத்துவம் மற்றவற்றினின்று வித்யாசப் படுவது மரபு மாறாமல் கவிதையை முடித்திருக்கும் தன்மை. தொடங்கியதை முடித்துவைக்க முடியவில்லை என்று பேப்பர்களைக் கசக்கி கசக்கி ரீசைக்கிள் பின்னில் நிரப்பி வைத்திருக்கும் பாராவை நான் மேஜையில் கண்டேன். இன்று எழுதுபவர்கள் பலரின் பிம்பமாய், கீபோர்டைத் தட்டியபடியே இருந்தார்.

நவீனத்துவம் இங்கு தொடப்பட்டபோதே இவரும் பின்னாலேயே வருவார் என்று நான் கணித்திருந்தது தஸ்தாயேவ்ஸ்கியை. (எனக்கென்னவோ வெண்ணிற இரவுகள் ரசிக்கவில்லை… வேறு யாரேனும் ஏதேனும் சஜஸ்ட் செய்தால் நலம்). நல்லவேளை அவர் அழைத்ததற்கு பாரா சரிந்து உட்கார்ந்துவிடவில்லை. இருவரும் சேர்ந்தே நகர்ந்தோம்.

காதைத் தொலைத்துக் காலையைத் தேடிக் கண்டுபிடித்த கற்பனை அசத்தலாய் இருந்தது. சபாஷ் என்று அருகில் இருந்த பாரா தோளில் தட்டிக் கொடுத்தேன்.  அடுத்தடுத்துச் செல்லச்செல்ல  ஆரஞ்சு டைப்ரைட்டர், அவசியமான குண்டி கழுவல், இறக்கி வைக்காத மூச்சா என்று ஒரு நவீன கவிஞருக்கு உண்டான எல்லா தகுதிகளும் வழிய நின்றிருந்த பாராவை அதன்பிறகு நான் அண்ணாந்தே பார்த்தேன்.

ரயில் பெட்டியில் ஏறி, கனவுப் பெட்டியிலிருந்து இறங்கிய பாராவுடன் நானும் பயணித்தேன். காக்கைக்குப் பிண்டம் வைத்திருந்தபோது காக்கைளின் முதுகில் ஏறி நானும் பறந்து கொண்டிருந்தேன்.

42ல் நாட்டு நடப்பு, அரசியல், குடும்ப நிலைமை, பணம் தேவையென்ற அறிவு, மகிழ்ச்சி அதில் இல்லையென்ற ஞானம் இதெல்லாம் வரும் என்று வீட்டார் ஆரூடம் சொல்வார். அதெல்லாம் தெரியவில்லை, ஆனால் பாராவின் 42 அருமையான எண்சீர் விருத்தம்,. நான் மேற்சொன்ன எல்லாவற்றையும் மொத்தமாக் ஊற்றி, கொஞ்சம் ஆங்கில டிகாஷன் கலந்து, எள்ளல் சர்க்கரை இருமடங்கு தூக்கிவிட்டு, நையாண்டி நெடி பறக்க இறக்கி வைத்த எனக்காக காபி. 2 முறை அருந்தி ஆனந்தம் கொண்டேன். அதிலும் வீட்டுக்கு வாஷிங்மெஷின் கேட்டதெல்லாம் தீர்க்க தரிசனம். (பக்கத்தில் வாசிங்மெஷின் கிடைக்காத சோகத்தில் அம்மா முறைக்கிறார்)

பின்னர் அப்படியே சில குட்டிக்குட்டி உளறல்களைக் கடக்க, 47ல் மரம் நகர்ந்ததாகச் சொன்ன பாரா, 50ல் முடிக்கும்போது சுவர் நகருவதைக் கண்டபடி நானும் புத்தகத்தை மூடி பெருமூச்சு விட்டேன்.

என்னடா என்றாள் அம்மா!

ஒருகணம் தெளிவுவர தலையாட்டிக் கொண்டு, என்னுள்ளே கேட்டேன் ”ச்ச, புத்தகம் பெயர் என்ன?”

அபாயகரம்!

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!