யதி – ஒரு மதிப்புரை (திவாகர். ஜெ)

“சாமியார்கள் பற்றிய நூல்கள் ஏதேனும் இதற்கு முன் வாசித்து இருக்கிறீர்களா? நான் ஒரே ஒரு நூல் தான் வாசித்து இருக்கிறேன். ”சாமியார்களின் திருவிளையாடல்கள்” என்ற நூல். அதில் போலிச் சாமியார்கள் குறித்தும், மண், பெண் என அத்தனையின் மீதும் அவர்கள் செய்த காவாலித்தனங்கள் குறித்தும் ஆதாரத்தோடு விளக்கப்பட்டிருக்கும். மற்றபடி, சாமியார்களுக்கும், நமக்கும் இப்போது உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமூக இடைவெளியை விட பல மடங்கு தூரம் அதிகம்.
பா. ராகவன் அவர்களின் இந்நூல் இவ்வாண்டு சென்னை புத்தக கண்காட்சியில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்பதற்காக நண்பர் மோகனவேலு அவர்களிடம் சொல்லி அன்பளிப்பாக பெற்றது தான். புத்தகத்தின் அளவு பெரிது, விலை தள்ளுபடியில் மிகக் குறைவாக கிடைக்கிறது என்பதைத் தாண்டி நூலைப் பற்றியோ, நூலாசிரியரைப் பற்றியோ அப்போது பெரிதாய் வேறெதுவும் தெரியாது. ஆனால், இப்போது, பா.ரா. வின் அத்தனை நூல்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையே மேலெழுகிறது.
சரி. கதைக்கு வருவோம். நூலின் முதல் அத்தியாயத்திலேயே இது சாமியார்கள் பற்றிய கதை என்ற எண்ணம் தோன்றி விட்டது. இனி இந்நூலைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுமாவென்ற எண்ணம் தோன்றியது ஆனால் பா.ரா.வின் எழுத்து மேற்கொண்டு சிந்திக்க விடாமல் நாவலுக்குள் மலரின் தேனில் மூழ்கும் வண்டென உள்ளிழுத்துச் சென்று விட்டது.
துறவறம் மேற்கொண்ட அண்ணன், தம்பிகள் நால்வரும் தங்கள் தாயின் மரணத்திற்கு ஒன்று கூட வரும் கதையென்று ஒற்றை வரியில் சொன்னால் சரியாக இருக்காது. அது ஒரு புள்ளி மட்டுமே. அதைக் கொண்டு கதை விரியும் களம் மிகப் பெரிது.
விஜய்:
சற்றேறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நாவலில் ஒரு நபரை கடைசி வரை நமக்கு காட்டாமல் ஆனால் நாவல் முழுவதும் அவனே வியாபித்திருப்பது போல் செய்துள்ள பாங்கே எனை இந்த நாவலில் மிகவும் கவர்ந்தது எனக் கூறுவேன். நாவலின் தொடக்கத்தில் கதையை சொல்லும் விமல் தன் அண்ணனான விஜய் குறித்தும், அவன் செய்யும் ஆச்சரியமூட்டும் மாய சித்துகள் குறித்தும் கூறும் தகவல்கள் வாயிலாக விஜயை நமக்கு பா.ரா. அறிமுகப்படுத்துகிறார். பின், தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் விஜய் குறித்து யார் யாரோ கூறுவதன் மூலமாக மட்டுமே விமலும் நாமும் விஜய் குறித்து அறிகிறோம். விஜய் ஒரு யோகியா, சித்தனா (இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் என்பது இப்போதுவரை எனக்கு தெளிவில்லை) அல்லது எல்லாவற்றிற்கும் மேலாகவா என நாவல் முழுவதும் நம்மை அலைக்கழித்துக் கொண்டே வருகிறார் ஆசிரியர். நாவலின் கடைசி நூறு பக்கங்களை உள்ளபடியே நான் விஜய் நேரில் வந்து விடுவான் என்பதற்காகவே நள்ளிரவு வரை வாசித்தேன். சொல்லப்போனால், நாவலில் வரும் கதாபாத்திரங்களை விட வாசிக்கும் நம்மை தான் விஜயை ரொம்பவே எதிர்பார்க்க செய்து விட்டார் நூலாசிரியர் பா.ரா.
வினய்:
விமலின் பார்வையில் சொல்வதானால் இவன் விஜயால் தவறாக வழிநடத்தப்பட்டவன் என்பதா அல்லது சரியாக வழிநடத்த பலர் இருந்தும் அவர்களின் பேச்சினை அலட்சியம் செய்து தன் வழியில் நடக்கிறேன் பேர்வழி என்று வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிற்கும் சராசரிக்கும் கீழானவன் என்பதா? ஆனால், என்னளவில் நம்மில் பெரும்பாலானோர் வினய் ஆகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணுகிறேன். என்னவொன்று, அவனின் தேடல் வேறு நமது தேடல் வேறு. அதுதான் வித்தியாசம். உண்மையில் நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களிலும் வினயின் மீது தான் நமக்கு அதிக கழிவிரக்கம் பிறக்கிறது. ஆனால், இறுதியில் அவனுக்கு கோரக்கரின் தரிசனம் கிடைத்தது என்ற செய்தி சற்றே ஆறுதல்.
வினோத்:
வினய் ஆவது தனது இலட்சியம் எதன் வழியிலாவது நிறைவேறாதா என்ற ஆதங்கத்தில் வாழ்க்கையைத் தொலைத்தவன் எனலாம். ஆனால், இந்த வினோத், தன் உள்ளத்தில் தோன்றியதே சரியென்று எண்ணி, அதனால் தன்னையும் வருத்தி பிறரையும் வருத்தி ஒரு குழப்ப நிலையிலேயே கடைசி வரை அலைகிறான். எனினும் தான் கொண்ட கொள்கையின் மீது ஒரு நிலையான நம்பிக்கை இல்லாதவர்கள் இவனைப் போல் தான் தன் வாழ்வின் இறுதிவரை ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையிலேயே வாழ வேண்டி வரும்.
விமல்:
நம் கதையின் நாயகன் இந்த விமல் தான். நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை விமலின் பார்வையிலேயே கதை நகர்கிறது. இந்த நாவலை நான் தொய்வின்றி இறுதி வரை வாசித்ததற்கு காரணமே இந்த விமல் பாத்திரம் தான். ஆம். சாமியார் தான் என்றாலும் தனக்காக எந்தவொரு தனிப்பட்ட சொத்துகளும் இல்லாதவன். அதுவும், இவன் எங்கேயுமே தன்னை ஒரு சாமியார் என்று கூறிக் கொள்வதில்லை. நாம் விமலை சாமியார் என்று நினைத்தாலும் சரி. குரு என்று நினைத்தாலும் சரி. தன் சுதந்திரம் மட்டுமே முக்கியம் என்று வாழ்பவன். உண்மையில் விமல் கதாபாத்திரம் எனக்கு ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலின் பாத்திரத்தையே நினைவுபடுத்தியது. ஒருவேளை நாவல் விமலின் பார்வையில் சொல்லப்படாமல் வினோத் அல்லது விஜயின் பார்வையில் கொண்டு செல்லப்பட்டிருக்குமானால் அது இத்தனை சுவாரசியம் உடையதாய் இருந்திருக்குமாவென்று தெரியவில்லை. இந்த விமல் பாத்திரத்தை சரியாய் எனக்கு உங்களுக்கு விளக்க முடியவில்லை என்று தான் கூறுவேன். வாசிக்கையில் நீங்களே அதை உணர்வீர்கள். ஆனால், இப்படிப்பட்ட சாமியார்கள் நம் நாட்டில் இருந்துவிட்டால் தேவலாம்.
சித்ரா:
நாவலின் முக்கிய கதாபாத்திரம். ஆனால், உயிருடன் இருக்கையில் சித்ரா பேசுவது போன்று அதிகப்படியான வசனங்களே ஏதுமில்லை. ஆனால் அண்ணன் தம்பிகள் அனைவருக்குள்ளும் ஏதோவொரு வகையில் ஆட்சி செய்திருக்கிறாள். காமம், காதல், உறவு எல்லாமே தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு தான் என்று மற்ற நான்கு பாத்திரங்கள் வாயிலாக திரும்ப திரும்ப நிறுவ முயற்சித்தாலும் காதலின் புனிதத்தை இவள் மூலம் நமக்கு விளக்க முற்பட்டிருக்கிறார் பா.ரா.
சம்சுதீன், சொரிமுத்து, பத்மா மாமி, கேசவன் மாமா, விமலின் அம்மா என நாவலின் அத்தனை மாந்தர்கள் பற்றியும் தனித்தனியே நிறைய பேசலாம். அவ்வளவு இருக்கிறது.
இந்திய பண்பாட்டின் மரபுக் கூறுகளை சரியாக புரிந்து கொள்ளாமலேயே இதுநாள் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாவல் முழுவதும் நமக்கு உணர்த்திக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் பா.ரா.
தொய்வின்றி நம் வாசிப்பினைப் பரவலாய் கொண்டு செல்கிறது யதி. அரசியலில் நாம் அறியாத பல பக்கங்களையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல். வித்தியாசமானதொரு வாசிப்பு அனுபவத்தை எனக்குள் ஏற்படுத்திய நூலென்றே யதியைக் கூறுவேன் நான்.
– திவாகர். ஜெ
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!