ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – ஒரு மதிப்புரை

பா ராகவன் எழுதிய இந்த சென்னை நினைவுக் குறிப்புகள் என்னும் கட்டுரைத் தொகுதியை நேற்றுதான் என் நண்பர் கிருஷ்ணகுமார் மூலமாக என் கையில் கிடைத்தது. எடுத்து படிக்கத் துவங்கி, கீழே வைக்க மனமில்லாமல் 160 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இதை கட்டுரை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. இது பா.ரா-வின் சுயசரிதம் (50%) என்று வைத்துக் கொள்ளலாம். அவருடைய பழைய நினைவுகளில் துவங்கி, நிகழ்காலத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு போன வருடம் துவங்கியபோது முடித்திருக்கிறார்.

மாறிப்போன சென்னையின் முகம், வழக்கொழிந்துபோன சில வாழ்க்கை முறைகள் என ஏங்க வைக்கும் அத்தனை விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் வரிசைகட்டி நிற்கின்றன. சென்னைவாசிகளுக்கு குறிப்பாக மத்திய சென்னைவாசிகளுக்கு அறிமுகமில்லாத குரோம்பேட்டை, தாம்பரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளின் பூர்வ கதைகளை இன்று கேட்கும்போது வியப்பு மேலிடுகிறது. சென்னையில் 20 வருஷமாக அல்லது அதற்கும் மேலாக வாழ்கிற ஒவ்வொருத்தரின் கனவான சொந்த வீடு பற்றி பா ரா சொல்வது அனைத்தும் நம் எல்லோருக்கும் அடிக்கடி மனதில் தோன்றும் ஒன்றுதான். நிறைய உண்மைகளை கண்ணதாசனின் வனவாசம் போல் சொல்லியிருக்கிறார். சிலவற்றை இப்போதும் ரசித்து உணர முடிகிறது. குறிப்பாக மெஸ் கலாச்சாரம் பற்றி அவர் பேசியது, கண்ணதாசன் மகள் நடத்திவரும் மெஸ் பற்றி சொல்லும்போது, தரமான உணவு மிகக் குறைவான விலையில் என்று கூறியிருக்கிறார். எனக்கும் அந்த அனுபவம் உண்டு… இன்றும் அந்த இடம் மாறி திருப்பதி தேவஸ்தானத்திற்கு பின்னால் ராமானுஜம் தெருவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, உணவு தரம் மாறவே இல்லை. விலையில் சிறு மாற்றம் உண்டு. ஆனால் ஆச்சியின் உபசரிப்பும், அவர்களுடைய மகனின் விருந்தோம்பலும் இன்றும் மாறாத ஒன்று. அதேபோல அவருடைய யதி நாவலில் குறிப்பிட விரும்பாத ராமகிருஷ்ண மடம், அதன் சன்யாசிகள் பற்றிய கட்டுரை நமக்கு மடத்தின் சேவைகள் பற்றி அறிந்து கொள்ளவும். ஏற்கனவே அவர்களை பற்றிக் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகமாகவும் செய்கிறது. 90 கிட்ஸுக்கே உரித்தான கருப்பு வெள்ளை நாவல்கள், அவற்றை நாவல்கள் என்று சொல்ல முடியாது பிளாட்பார (ஸ்பெஷல்) புத்தகங்கள் பற்றி, அதன் தயாரிப்பு பற்றி அவர் சொல்லும்போது, அதன் வண்ணம் மஞ்சளாக இருந்தாலும் அந்தப் பத்திரிகையும் பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திருப்பதை நம்மால் யோசிக்க முடிகிறது.

சென்னையில் முட்டி மோதுகிற ஒவ்வொருவரையும் நிச்சயமாய் ஏதோ ஒரு வகையில் வாழவைக்கிறது என்ற கூற்றை பா.ரா-வும் அறுதியிட்டு, சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக அறிவிக்கிறார். நானும் அதனை வழி மொழிகிறேன். அவருடைய என்ன ஓட்டம் மிகத் தெளிவாக எழுத்தாக உருமாறி கட்டுரையாக பரிமளித்திருப்பது நன்றாக தெரிகிறது. சுகா எழுதிய தாயார் சன்னதி புத்தகத்தின் முன்னுரையில் வண்ணதாசன் அண்ணாச்சி சொல்லியிருப்பார் ‘இவனுக்கு ஆனா விலிருந்து சொல்லித் தராமல் அஃகன்னாவிலிருந்து சொல்லிக் கொடுத்தார்கள் போல… ஒவ்வொரு கட்டுரையிலும் கடைசி வரி தரமாய் வந்து விழுந்திருக்கிறது’ என்று. அது போல பா.ரா-விற்கும் அந்தக் கடைசி வரி கூடுதல் அற்புதம், இயற்கையாய் அமைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு சில:

“எல்லா வெற்றிகளும் குறைந்தபட்ச களப்பலிகளையாவது கேட்காதிருப்பதில்லை”

“மக்களுக்கோ மக்களையோ ஏதாவது செய்துகொண்டே தான் இருந்தாக வேண்டியிருக்கிறது”

“நூலகமோ ஆலயமோ இந்த நகரத்தில் மனிதனுக்கு மீட்சி தர இன்னொரு மனிதன் கிடைக்காமல் போவதில்லை”

கடைசிக் கட்டுரையில் அவரே சொல்லி இருப்பது போல ‘இந்த உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே உள்ள ஒரு சௌகரியம் எனக்கொண்டு. எழுதுபவன் எழுதிக்கொண்டிருக்கும் போது அவனுக்கு துயரம் என்ற ஒன்று கிடையாது இதை நிறைவு செய்யும் இந்தக் கணத்தில் அதை மீண்டும் உணர்கிறேன் முப்பது நாட்களும் நான் துயரமற்று இருந்தேன்’

அதேபோன்ற ஒரு நிலை எனக்கும் வாய்த்தது. இந்தக் கட்டுரைகளை படித்து முடிக்கும் வரையில், நான் வேறு உலகில் இருந்தேன். என் கவலைகள் கஷ்டங்களை மறந்து முடித்தவுடன், எல்லாம் திரும்ப வந்து மேல் ஏறிக்கொண்டன. அந்த சில மணி நேரங்களை தனதாக்கிக் கொண்டு, கால எந்திரத்தில் ஏற்றி அன்றைய சென்னையை எனக்கு காண்பித்த பாராவின் இந்தப் புத்தகம் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று… குறிப்பாக சென்னைவாசிகள்.

நன்றி: வெங்கட கிருஷ்ணன்

விகடகவி இதழ்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி