யதி – வாசகர் பார்வை 6 [மீனாட்சிசுந்தரம் வைத்தியநாதன்]

நான் முதல் முதலில் வாசித்த பாராவின் நாவல், அலகிலா விளையாட்டு. அப்போது எனக்கு அவருடைய முகம் தெரியாது. இந்த நாவலாசிரியருக்குக் குறைந்தது 60-70 வயது இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பாரா அப்போது இளைஞர். இது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. தனது முப்பதுகளில் உள்ள ஒருவர் இப்படியொரு கதையை எழுத முடியுமா, யோசிக்கத்தான் முடியுமா என்று அப்போது நினைத்தேன். பிறகு அவருடைய புவியிலோரிடம் வாசித்தபோது மிரண்டுவிட்டேன். ஒரு வாரப்பத்திரிகை எழுத்தாளராக இருந்துகொண்டு எப்படி இவர் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று நினைத்தேன். பிறகுதான் அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம் இரண்டுமே வாரப் பத்திரிகைகளில் வெளிவராமல் நேரடியாக வெளிவந்த நாவல்கள் என்று தெரிந்துகொண்டேன். பத்திரிகைத் தொடர்களாக வந்த அவருடைய அலை உறங்கும் கடல், மெல்லினம் இரண்டும் எனக்குப் பிடித்தமானவை. ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றையும்விட இப்போது அவர் எழுதியிருக்கும் யதி வியக்க வைக்கும் அளவுக்கு சிறப்பும் அழகும் கொண்டது. [பூனைக்கதை என்ற நாவலைச் சில மாதங்கள் முன்னர் படித்தேன். அதன் முதல் பாகம் எனக்குப் புரியவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.]

நான்கு துறவிகளின் கதையாக [ஒருவரின் பார்வையில்] விரியும் யதி, நம் நாட்டில் உள்ள பல்வேறு விதமான துறவிகளின் வாழ்க்கை முறையை விவரிப்பது போன்ற பாவனையில் மனித மனங்களின் ஆதாரத் தேடலை நோக்கி நகர்கிறது. துறவிகளும் மனிதர்கள்தானே? மண்ணில் கால் பதித்து நிற்பவர்கள்தானே? ஆனால் எந்த அம்சம் அவர்களில் பிரமிக்கச் செய்கின்றதோ, அதை விலக்கிப் பார்க்கக் கற்றுத் தருகிறது யதி. இந்த வகையில் இந்நாவல் எனக்குள் பல கதவு சன்னல்களைத் திறந்து வைத்தன என்று சொல்லவேண்டும். சித்தர்கள் என்றும் மகான்கள் என்றும் எத்தனையோ பேரைத் தொழுகிறோம். நாம் வாழும் காலத்திலேயே பலரின் மதிப்பீட்டுச் சரிவுகளைக் காண்கின்றோம். அது தரும் இனம் புரியாத் துயரத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு அடுத்தவரை நோக்கி நகரும் பலபேரைக் கண்டிருக்கிறேன். எல்லோருக்கும் யாராவது ஒருவர் தேவைப்படவே செய்கிறார் போலும். அந்த ‘யாராவது ஒருவர்’ காவி அணிந்தவராக இருப்பது அவசியமாகவும் உள்ளது.

யதியில் வரும் விமல், மதிப்பீடுகளை நொறுக்கி எறியும் ஒரு துறவியாகத் தென்படுகிறார். கதை சொல்லி என்பதாலோ என்னவோ, தனது தர்க்கங்களுக்கு இவர் சேர்க்கும் நியாயங்கள் சிறிது அதிகமாகத் தெரிந்தது. ஒப்பிட்டுப் பார்க்கும்போது விமலைக் காட்டிலும் அவரது இரண்டாவது சகோதரராக வரும் வினய் என்னதான் தனது லட்சியப் பயணத்தில் தோல்வி அடைந்தாலும் நெஞ்சில் நிலைக்கிறார். காரணம், தனது தோல்விகளுக்குத் தன்னைத் தவிர வேறு யாரையும் காரணம் சொல்லாத அவரது இயல்பு.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், தோல்வி தரும் குற்ற உணர்ச்சி மற்ற மூன்று சகோதரர்களுக்குமே இருப்பதால், அவர்கள் குற்ற உணர்வின் மையத்தைத் தேடித் திரிகிறார்கள். ஆனால் தோல்வியே இறுதி என்று அறிந்துவிடும் வினாடியில் வினய் வெற்றியின் வாசலைத் திறந்துவிடுகிறார். அவருக்குக் கிடைக்கும் கோரக்கர் தரிசனம் என்பதை நான் ஒரு குறியீடாகவே பார்க்கிறேன். கோரக்கர் சாம்பலில் இருந்து பிறந்த சித்தர். வினய் தோல்வி என்று கருதிய அனைத்தும் சாம்பலே ஆகும். அர்த்தமற்ற தேடலை விட்டுவிட்டு அமைதியாக ஒதுங்கிவிடும்போது கிடைக்கும் நிம்மதியும் ஆறுதலுமே தவப்பலன்.

யதியில் வினய்க்கு அடுத்தபடி நான் மிகவும் விரும்பிய கதாபாத்திரம், சித்ரா. அவள் பெண்ணாக இருந்த நாட்களில் இச்சகோதரர்களின் அந்தரங்கக் காம இச்சைக்கு மானசீகக் கருவியாக இருந்தவள். பேயான பின்பு பெண்மையின் இயல்பான அறச்சீற்றம் மேலோங்கப் பழிவாங்க நினைக்கிறாள். பேயான பின்பு வினோத்தைப் பழிவாங்க, தவம் செய்து வரம் வாங்கும் சித்ரா இறுதிவரை அவனைக் கொல்வதே இல்லை. வினோத்தின் சகோதரனைக் கொண்டே அவனைக் கொலை செய்யத் திட்டமெல்லாம் தீட்டினாலும் அடி மனத்தில் அவளுக்குக் கொலை வெறியைவிடக் காதலே மிகுந்து இருந்திருக்கிறது. நாவலை முழுவதும் வாசித்து முடித்த பிறகு, இமயமலைக் குளிரில் ஜுரம் கண்டு யோகி விஜய்யிடம் சிகிச்சை பெறும் அந்த முஸ்லிம் பெண்கூட சித்ராவாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது. நான்கு பிள்ளைகளையும் தன் கணவனிடம் இருந்து பிரித்து விடுவதற்காக அந்தத் தாய் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி அவர்களை சன்னியாசிகளாக்கி விரட்டியது இந்நாவலின் ஒரு முனை என்றால், நான்கு பேரையுமே துறவின் பலனை அறிய முடியாமல் செய்துவிடுகிற இன்னொரு முனை இவள்தான். அந்த விதத்தில் இது நான்கு சன்னியாசிகளின் கதையே இல்லை. இரு பெண்களின் கதைதான்!

யதியில் மிக முக்கியமாக என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சம், இதில் விவரிக்கப்படும் நிலப்பரப்புகள். காட்சிக்குக் காட்சி இடம் மாறிக்கொண்டே இருக்கும் கதையில் ஒவ்வொரு இடமும் வெவ்வேறு விதமான வகையில் வர்ணிக்கப்படுகின்றன. உதாரணமாக ஆறுகள், அருவிகள், குளம் போன்ற நீர்ப்பரப்புகளின் அண்மையில் கதை நடக்கும்போது ஆசிரியர் கையாளும் மொழி நடையும் பல்வேறு மலைப்பகுதிகளில் கதை செல்லும்போது கையாளும் மொழி நடையும் மொத்தமாக மாறுபடுகின்றன. மலைப் பகுதியில் நடப்பதைச் சொல்லும்போது உள்ள இறுக்கம் நீர் நிலைகளைக் கடக்கும்போது நெகிழ்ந்துவிடுகிறது. இதற்கு உதாரணமாக, மடிகேரியில் தமது குருநாதரை விமல் முதலில் சந்தித்தபோது நடக்கும் சம்பவங்களை, காசியில் கங்கைக் கரையில் வினய் விஜயைச் சந்தித்த சம்பவத்துடன் ஒப்பிடலாம். இரண்டுமே குளிர்ச்சியான அனுபவங்கள்தான். சுதந்திரத்தைக் கண்டடையும் கட்டங்கள்தான். ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் மனப்பதிவுகள் மொத்தமாக வேறு வேறு.

நாவலில் வரும் சொரிமுத்து, சம்சுதீன் போன்ற சித்தர்கள் இதன் கதாநாயகர்களை மறந்தாலும் நம்மால் என்றுமே மறக்க முடியாத ஆளுமை படைத்தவர்கள். ஓஷோ, ஜெயேந்திர சரஸ்வதி போன்ற சாமியார்கள் அவர்களின் சுய வடித்திலேயே இந்நாவலில் ஒவ்வொரு காட்சியில் வந்து போகிறார்கள். வாழும் அல்லது வாழ்ந்த சாமியார்களை ஓரிடத்தில் வைத்து நாவல் சுட்டிக்காட்டும் மேற்கண்ட ‘கதை சாமியார்கள்’ சொல்லும் செய்திகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை.[அதை விவரித்தால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.]

இந்நாவலை தொடர் முடிந்தபின் மொத்தமாகத்தான் படித்தேன். தினமணி இணைய தளத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எடுத்துப் படிப்பது மிகவும் கடினமான பணியாகத்தான் இருந்தது. ஆனாலும் படிக்க எடுத்தால் நிறுத்த மனமே வரவில்லை. பல அத்தியாயங்கள் கவிதை போலவே இருந்தன. ஆசிரியரின் கடும் உழைப்பும் சிறந்த மொழி ஆளுமையும் வியக்கச் செய்தன. யதியைப் போன்ற ஒரு நாவலை எழுதியவரா பலப்பல அரசியல் புத்தகங்களையும் எழுதியிருப்பார் என்று நம்பவே முடியவில்லை. இந்நாவலின் கடைசி அத்தியாயம் கொடுத்த மன நெகிழ்ச்சியும் ஒரு சொட்டுக் கண்ணீரும் என்றும் என் நினைவில் இருக்கும்.

-மீனாட்சி சுந்தரம் வைத்தியநாதன்

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!