தலைப்பிட இஷ்டமில்லை

சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை.

எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு கதாபாத்திரம் இறக்கப் போகிறது என்பது இயக்குநருக்கும் எழுத்தாளருக்கும்தான் முதலில் தெரியும். கதைப்போக்கை கவனிக்கும் உதவியாளர்களுக்கு அடுத்தபடியாகத் தெரியவரும். சக நடிகர்களுக்கு மூன்றாவதாக. சம்மந்தப்பட்ட கலைஞருக்கு இறுதியாக.

இறுதி வரையிலுமேகூட அவருக்குத் தெரியாமல் அவரைச் சாகடித்துவிடக்கூடிய கலை மேதைமை கொண்டோர் உண்டு. ‘இப்ப இவன் உங்கள வெஷம் வெச்சி கொல்லப் பாக்கறான் சார்! நீங்க துடிச்சிக்கிட்டே மயங்கி விழறிங்க.. வாய்ல நுரை தள்ளுது. நீங்க செத்துட்டதா சந்தோஷப்பட்டுக்கிட்டு வில்லன் அவுட் போயிடறான். ஒரு ராம்ப் அடிச்சா, காணாம போன உங்க பொண்ணு உங்கள தேடி வரா. அவ உங்கள காப்பாத்தறா…’

விவரித்துவிட்டு, சாகடிப்பது வரையிலான காட்சியை எடுத்து விடுவார்கள். காணாமல் போன பெண்ணின் கால்ஷீட்டை கவனிக்கும் ஷெட்யூல் டைரக்டர் அடுத்த வினாடி காணாமல் போய்விடுவார்.

நடந்திருக்கிறது.

இன்னும்கூட சில உத்திகள் உண்டு. இறக்கும் காட்சியை எடுத்துவிட்டு அதைக் கனவு என்று சொல்லிவிடலாம். அதற்கு முன் வரக்கூடிய பல காட்சிகளை மிச்சம் வைத்து இறப்புக் காட்சி எடுத்ததன் பின் ஓரிரண்டு தினங்கள் வரவழைத்து அவற்றை ஷூட் செய்துவிடுவது. சம்மந்தப்பட்ட கலைஞர் தான் கதையில் இறந்ததையே மறந்துவிடுவார். அடுத்த ஷெட்யூலுக்கு அழைக்காதபோதுதான் அவரால் கதையின் கோவையை மீட்டு யோசிக்க முடியும். அல்லது எபிசோட் பார்த்துவிட்டு யாராவது விசாரிப்பார்கள். அப்போதைய தருணங்களில் இயக்குநர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பது வழக்கம்.

இந்தக் கஷ்டமெல்லாம் எதற்காக? சொல்லிவிட்டே சாகடிக்கலாமே?

என்றால் முடியாது. இனி இக்கதையில் நீ இல்லை என்றால் எந்த நடிகரும் அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு வரமாட்டார்கள். கால்ஷீட் தராமல் கொன்றே விடுவார்கள். இன்று நேற்றல்ல. தொன்று தொட்டு இதுவே வழக்கம்.

நிறைய பார்த்திருக்கிறேன். சமீபத்தில்தான் சற்றும் நம்பமுடியாத வேறுவிதமானதொரு அனுபவம் வாய்த்தது.

ஒரு தொடர். ஒரு மரணம். ஒரு கலைஞர். கொன்றாகிவிட்டது. அவருக்கும் தெரியும். இனி அவ்வளவுதான். இக்கதையில் இனி நானில்லை.

ஆனால் அந்தக் காட்சியை எடுத்து பல நாள் கழித்து இன்னொரு காட்சி, முந்தைய காட்சியின் தொடர்ச்சியே போன்ற காட்சியை எடுக்க வேண்டி வந்தது. கொன்று புதைத்த உடலை வெளியே எடுத்து போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பியாக வேண்டும். இதற்காக இறந்ததாகக் காட்டிய கலைஞரை திரும்ப அழைத்து வந்து குழியில் படுக்கச் சொல்ல முடியாது. நம்மைக் கொன்றுவிடுவார்கள்.

எனவே பிணத்தைத் தோண்டி எடுத்து வண்டியில் ஏற்றுகிற காட்சியில் பிணத்தின் முகத்துக்கு க்ளோஸே போகாதபடியாக – அதே சமயம் அது ஓர் உறுத்தலாகவும் தெரியாதபடியாகக் காட்சியை எழுதி அனுப்பிவிட்டேன்.

ஷூட்டிங் முடித்து இரவு இயக்குநர் பேசினார். ‘நல்லா இருந்திச்சி சார் சீன். பட் கொஞ்சம் மாத்திக்கிட்டேன்.’

‘என்ன மாத்தினிங்க?’

‘பாடிக்கு க்ளோஸ் வெச்சிக்கிட்டேன். ஒரு ஃபீல் கிடைக்கும்ல?’

அதிர்ந்துவிட்டேன். டூப் வைத்து எடுத்தாலெல்லாம் ஃபீல் வராதே. இயக்குநருக்கா தெரியாது? என் சந்தேகத்தைத் தெரியப்படுத்திய போது அவர் சொன்ன பதில் என் அன்றைய உறக்கத்தை அழித்தது.

‘டெட் பாடின்னாலும் பரவால்ல சார். வந்து நானே பண்ணிக்குடுத்துடறேன். ஒரு நாள்னா ஒருநாள். வருமானத்த எதுக்கு விடணும்னு கேட்டாங்க சார்.’

இந்த பதில் கூட எனக்குப் பெரிதில்லை. இதன் பின்னால் இருந்த காரணம்தான்.

அந்தக் கலைஞரின் வாழ்க்கைத் துணை படுத்த படுக்கையாக இருக்கிறார். இவரது நடிப்பு வருமானம் ஒன்றுதான் அவரை இன்னும் மூச்சுவிட வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல. பல்லாண்டு காலமாக. சற்றும் சோர்ந்துபோகாமல், தான் வாழ்வதே தன் துணைக்காகத்தான் என்று இருக்கிறார் அவர். அந்தக் காதல், அதன் தீவிரம், தன் துணையைச் சாகவிடக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கிற ஆக்ரோஷம் – இதெல்லாம் அப்புறம் தெரியவந்த விஷயம்.

என்னால் நம்பவே முடியவில்லை. சினிமா வேறு. தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை, என்ன ஆனாலும் இறக்கும் காட்சியில் நடிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், இறந்த உடலாகக்கூட நடிக்கிறேன் என்று சொன்ன கலைஞரை முதல்முறையாக அப்போதுதான் அறிந்தேன்.

கலை பெரிது. காசு அதனினும் பெரிது. காதல் அனைத்திலும் பெரிது.

Share

9 comments

  • வரவர கட்டுரைகள்லயும் சீரியல் பார்க்கிற உணர்வு, நல்லாருங்க!

  • இதை வைச்சே ஒரு சிறுகதை எழுதியிருக்கலாம், தினமணிக்கதிரில் கட்டாயம் வெளியிடுவார்கள்.

  • கலை பெரிது. காசு அதனினும் பெரிது. காதல் அனைத்திலும் பெரிது.

    fantastic lines… an eye opener indeed…. super para….

  • இதுவன்றோ இலக்கியம்!…
    பா.ரா.ஜி! இதே போல சீரியல் ரவுடிகள்,சீரியல் கல்யாணங்கள்,சீரியல் பணக்காரர்கள் போன்றவைகளையும் வெளிச்சமிட்டு காட்டலாமே!

  • ஏதாவது யோசித்து இந்தக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பிப்பது கண்டிப்பாகக் கதைக்குத் தேவைங்கற மாதிரி கொண்டு போய்ட்டா?

  • //ஏதாவது யோசித்து இந்தக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பிப்பது கண்டிப்பாகக் கதைக்குத் தேவைங்கற மாதிரி கொண்டு போய்ட்டா?//

    அதையும் கோலங்கள், கஸ்தூரி சீரியல்களில் செஞ்சுட்டாங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • இப்படிப்பட்ட கலைஞர்கள் உயிரைக்கொடுத்து நடிப்பதால் தான் சீரியல் நம்ம வீட்டு பெண்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் வந்த அனைத்து சீரியல்களும் முழு எபிசோடுகளும் நெட்டில் தாராளமாக கிடைக்கின்றன.
    சாகிற மாதிரி நடிக்க எந்த கலைஞரும் ஒத்துக்க மாட்டாங்க சரி. உயிரோடு இருக்குறவங்க போட்டோவை மாலை போட்டு வச்சிருங்காங்களே அதை அந்த கலைஞர் ஒத்துக்குவாங்களா ?

    • ராஷித் அஹமத், போட்டோவுக்கு மாலை போடுவதில் பிரச்னை ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட கலைஞரிடம் சும்மா ஒரு மாதிரி சொல்லி வைத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு தனியாக பேமெண்ட் உண்டா என்று கேட்கவேண்டும். நான் படப்பிடிப்புத் தளங்களுக்குப் போகாதவன். எனவே நடைமுறையை விசாரித்துவிட்டுச் சொல்கிறேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி