யுத்தம் சரணம்: சில விமரிசனங்கள், சில விளக்கங்கள்

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியாகும் என்னுடைய ‘யுத்தம் சரணம்’ தொடர் குறித்து இணையத்தில் வெளியாகும் சில விமரிசனங்களைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து சில வாசகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நண்பர் சுரேஷ் யுத்தம் சரணம் அறிவிப்பு வெளியான பதிவில் இன்று இதனை ஒரு வினாவாக முன்வைத்துள்ளார். வாசகர்களின் வசதிக்காக அவரது கருத்தைக் கீழேயும் அளித்திருக்கிறேன். இது பற்றிய என் கருத்துகள் இதனைத் தொடர்ந்து வெளியாகியிருக்கிறது.

ஈழம் பற்றிய யுத்தம் சரணம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தீர்கள், அதைப் பற்றி இணைய உலகில் விரிவான விவாதமே ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஈழத்தகவல்களைப் பிழையுடன் கூறுவதாயும், பொன்சகா கொலைமுயற்சியிலிருந்து இதைத் தொடங்கியது, ஈழம்பற்றி அறியாத வாசகனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் தமிழ் சசி தனது வலைப் பதிவில் கூறியிருக்கிறார். உங்களது பெயரில் ஆரம்பித்திருக்கும் ஆர்குட் குழுமத்திலும் இது பற்றிய ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கும் ஒரு வாசகன். – சுரேஷ்

இனி என் பதில்:

அன்புள்ள சுரேஷ்

இத்தொடரினைக் குறித்து இணையத்தில் வெளியாகும் ஒவ்வொரு குறிப்பையும் விமரிசனத்தையும் கவனமாகப் படித்து வருகிறேன். ஈழப் போராட்டம் குறித்த சார்பற்ற, சரியான தகவல்களை அளிக்கவேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இதில் எவ்வித இடமும் இல்லை. எழுதுகிற ஒவ்வொரு வரிக்கும் சாத்தியமுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் ஆதாரங்கள் தேடி, ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் எழுதுகிறேன். இவற்றைத்தாண்டி, தகவல் பிழைகள் வருமானால் – சுட்டிக்காட்டப்படுமானால், அதையும் சரிபார்த்து, நேர்ந்த பிழையைச் சொல்லி, சரியான தகவலையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்த சரியான புரிதலை உண்டாக்குவது ஒன்றே இத்தொடரின் நோக்கம். பெரிய நாளேடுகளும் பிரபல விமரிசகர்களும் தொடர்ந்து ஈழம் குறித்த ஒருதலைப்பட்சமான தகவல்களையே முன்வைத்துவரும் சூழலில், அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொதுவில் வைத்து, உண்மையை வாசகர்களே உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் இதனை வடிவமைக்க விரும்புகிறேன்.

மகாவம்சம் தொடங்கி இலங்கையின் முழுமையான சரித்திரத்தை இத்தொடர் விவரிக்கும். களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். மற்றபடி இதன்மூலம் க்ரைம் நாவல் வாசிக்கும் பரபரப்புணர்வை உண்டாக்கும் எண்ணம் சற்றுமில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் மாவிலாறு யுத்தக் காட்சியை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்க இயலும். பல வீடியோ காட்சிப் படங்கள் என்னிடம் உள்ளன.

பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதனால், அந்தத் தீவிரம் சற்றும் குறையாத ஒரு மொழிநடையை இணையத்தில் உள்ள பல வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் மூலமும் சில வலைப்பதிவுக் குறிப்புகள் மூலமும் அறிகிறேன். எதையும் காட்சிப்படுத்தாமல் நேரடியாக நடந்ததைச் சொல்லும் அத்தகைய உத்தி, பத்திரிகைத் தொடருக்குப் பொருந்தாது. மக்களை விடாமல் வாசிக்கவைப்பது என்பது ஆகப்பெரிய சவால். எனக்கு அவர்கள் வாசித்தே தீரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்த முடியுமானால் எத்தனை கனமான விஷயத்தையும் பத்திரிகைத் தொடராக எழுத இயலும். டாலர் தேசம் தொடங்கி இதைப் பலமுறை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்.

எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் கருத்து ரீதியில் முன்வைக்கப்படும் எந்த ஒரு விமரிசனத்தையும் நிச்சயம் நிராகரிக்கமாட்டேன். பதில் சொல்லவேண்டிய ஒவ்வொரு வினாவுக்கும் அவசியம் பதிலளிப்பேன். மின்னஞ்சல் மூலமோ, நேரடியாகவோ, தொடரிலோ, அல்லது என் வலைப்பதிவிலோ – அவசியத்துக்கேற்றபடி. ஏதேனும் பிழைகள் சுட்டிக்காட்டப்படுமானால் அவசியம் திருத்திக்கொள்வேன். இது விஷயத்தில் எனக்கு அகங்காரம் ஏதுமில்லை. ஈழத்தில் நடப்பது பற்றி வெறுமனே கவலைகொண்டு வருந்திக்கிடக்கும் கோடிக்கணக்கான சாதாரணர்களுள் நானும் ஒருவன். அவ்வளவே.

ஆனால் வாரம் இருமுறை இதழில் இது வெளியாகிறபடியால் உடனடிப் பிழை திருத்தம் என்பது சற்றே சிரமமான செயல். ஏதேனும் பிழை நேர்ந்தால், எதிர்வரும் இதழ்களில் ஒன்றில்தான் சரி செய்ய இயலும்.

தொடர் நிறைவடைந்து புத்தகமாக இது வெளிவரும்போது எந்தப் பிழையும் இல்லாமல் வரும் என்கிற ஓர் உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறேன்.

ஈழப் பிரச்னை குறித்த உள்ளார்ந்த அக்கறை உள்ள வாசகர்கள் என்னுடைய இம்முயற்சியில் சகபயணிகளாக இணைந்துகொள்ள முன்வருவார்களேயானால், அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். பெரும்பான்மை வாசகர்களுக்குச் சரியான தகவல்கள் சென்று சேர உங்களால் இயன்ற தகவல் உதவிகளை எனக்குச் செய்யலாம்.

என்னைக்காட்டிலும் சிறப்பாக இதனை எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கக்கூடும். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அர்த்தமுள்ளதாக்க விரும்புகிறேன். அவ்வளவுதான்.

தொடர்புடைய தமிழ் சசியின் பதிவு இங்கே.

தொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே.

Share

20 comments

 • தேர்ந்த அரசியல்வாதியின் பதிலை இதில் காண்கிறேன்.தமிழ் சசி
  குறிப்பான விமர்சனத்தை எழுதியுள்ளார்,நீங்கள் எழுதியிருப்பதில் உள்ளதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்.அதில் உள்ளவற்றிற்கு
  பதில் இல்லை.மூக்கை சுற்றி வளைத்து எழுதாமல் நேரடியாக
  இது விமர்சனம்,இது என் பதில் என்று எழுதியிருக்கலாம்.
  தகவல்களைத் தருவதில்,தொகுப்பதில்,விவரிப்பதிலும் எத்தகைய பார்வை வெளிப்படுகிறது என்பது வாசகர்களுக்குப் புரியும்.

 • Sri Lankan Tamil issue is very contentious one. Howsoever you approach it, there will be people crying hoarse and even pouring vitriol. Though I am not reading Yutham Saranam, your explanation speaks volumes of your nonpartisan stand. My best wishes.

 • வலைப்பதிவில் நேரடியாகக் கருத்தை உள்ளிட முடியவில்லை என்னும் குறிப்புடன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய வாசகர் R.Chandraprakashன் கடிதம்:

  அன்பின் பாரா!

  உங்களின் இந்தப் பதிவு நெகிழ்வூட்டுகின்றது. ஈழப்பிரச்சினையின்பால் உங்களுக்கு உண்டான மெய்யான அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. விமரிசனங்களில் சத்திருந்தால் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபக்க சார்புகள் இணையத்தில் மிகவும் அதிகமாக இருக்கிறது. எல்லாவற்றினுக்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தால், அதுவே பெரிய வேலையாகிவிடும். எழுத முடிந்தவர்கள் எழுத்தாளராகின்றார், முடியாதவர் விமரிசகராகின்றார் என்று எப்போதோ படித்துள்ளேன். இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 • //களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். //

  ஆனாலும் ஏன் பொன்சேகாவின் மீதான தாக்குதல் முயற்சியிலிருந்து என்று புரியவில்லை 🙁

  மருதனின் விடுதலைப்புலிகள் புத்தகத்தின் ஓபனிங்காவது ராஜீவ்காந்தி கொலையில் ஆரம்பிக்கிறது. அது ஒரு பெரிய ஹேப்பனிங் என்ற விதத்தில் ஒத்துக்கொள்ள முடிகிறது. பொன்சேகா தாக்குதலைவிட முக்கியமான மிடில் ஹேப்பனிங் எதுவுமேயில்லையா என்ற கேள்வி எழுகிறது.

  செஞ்சோலையில் இருந்து ஆரம்பித்திருந்தால் இம்பேக்ட் பெரியதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

 • //நேரடியாக இது விமர்சனம்,இது என் பதில் என்று எழுதியிருக்கலாம்.//

  அன்புள்ள காட்சில்லா, ஒரு பொதுவான தகவல் அறிவிப்பின் அவசரத் தேவை கருதியே இப்பதிவினை எழுதினேன். நிச்சயமாக அனைத்து விமரிசனங்களுக்கும் சரியான பதில் அளிப்பேன். ஆனால் தினசரி வருகிற விமரிசனங்கள் அனைத்துக்கும் உடனுக்குடன் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டிருந்தால் என்னால் தொடரை எழுத இயலாமல் போகும்.

  தொடரில் புரிதல் தொடர்பான ஒரு பிழை ஏற்பட்டிருப்பதைத் தமிழ் சசி சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கான விளக்கத்தினை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். அவரும் புரிந்துகொண்டார்.

  நிச்சயமாக, இத்தொடர் தொடர்பான அனைத்து விமரிசனங்களையும் என் பதிலையும் பொதுவில் வைப்பேன். சற்று அவகாசம் அளிக்கக் கோருகிறேன்.

  இத்தொடருக்காக நான் திரட்டும் ஆதாரங்களைக் கூட தொகுத்து இணையத்தில் அளிக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

 • ஏற்க கூடிய விளக்கம். ஒருவகையில் நீங்கள் கூறுவது உண்மையே. பதில் சொல்லிக்கொண்டே இருந்தால் அப்புறம் எப்படி எழுத முடியும்?! நீங்கள் எழுதுங்கள். இறுதியில் நீங்கள் தரப்போகும் விளக்கங்களை அப்போது கேட்டுக்கொள்கிறோம். இப்போதைக்கு தொடர் சுவாரசியமாகவே செல்கிறது. படிக்க காத்திருக்கிறோம்!

 • அன்பு பா.ரா ,

  உங்கள் எழுத்துகளை முழுவதும் வாசித்தவர்களுக்கு ” Half way opening ” புதிதல்ல . உதாரணங்கள் சில மட்டுமே

  1. ஹமாஸ் பற்றிய தொடரில் ஷேக் அஹ்மது யாசினின் கொலையில் இருந்து ஆரம்பிக்கும் .

  2. ஹிஸ்புல்லா பற்றிய தொடர் , ஜூலை 2006 யுத்தத்தில் இருந்து ஆரம்பிக்கும் .

  3. 9/11 புத்தகம் அந்த சம்பவத்தில் இருந்தே ஆரம்பிக்கும் .

  4. Luis Carrero Blanco கொலையில் இருந்து ஆரம்பிக்கும் பாஸ்க் பிரிவினைவாதிகளின் தொடர்

  இது போல் தான் அனைத்தும் . இன்னும் சிறிது நாட்கள் பொறுத்தால் மஹாவம்சத்தில் இருந்து தொடர் திசை மாறும் என நன்கு அறிகிறேன் .

  கண்டிப்பாக யாரையும் தீவிரவாதியாக சித்தரிப்பதோ , தவறான தகவல்கள் தருவதோ உங்கள் நோக்கமாக இருக்க இயலாது .

  அன்புடன் ,

  பிரகாஷ்

 • அன்பு பா.ரா. அவர்களுக்கு

  ஒரு வாசகனுக்கும் மதிப்பளித்து தாங்கள் விளக்கமளித்ததற்கு நன்றி.தங்கள் நடை எங்களைப் போன்ற ரசிகர்களுக்குப் புதிதல்ல..!!

  இருந்தாலும், மற்ற தொடர்களிலிருந்து இது வேறுபட்டது. மற்றவை அடுத்த வீட்டுக் கதைகள். உணர்வு ரீதியாக எவரையும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் யுத்தம் சரணம் நம் வீட்டுக் கதை…!!

  நம் சகோதரர்களின் வரலாறு. அது தவறாகப் பதிவாகிவிடக் கூடாது என்பதே தமிழ் சசி போன்ற நண்பர்களின் ஆதங்கமாயிருக்கலாம்.

  இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை தமிழர்களின் உணர்வு இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்று தான் நான் சொல்லுவேன். ஏனென்றால் ஈழத்தின் முழுக்கதை 87க்கு பிறகு பிற்ந்த தோழர்களில் பலருக்கு முழுமையாகத் தெரியவில்லை.

  மேலும் தவறான வழிகாட்டுதல்களைச் சொல்லும் ஊடகங்களின் தாக்கமும், ஈழச் சகோதரர்களைப் புலம் பெயர்ந்தவர்கள் என்று அடையாளப் ப்டுத்தியதால் ஏதோ அவர்களிடத்தில் நாம் பங்கு கேட்பதைப் போலச் சில நண்பர்கள் பேசும்போது, புரியாதவர்களுக்கு விளக்கமளித்தாலும், மனதில் ஒரு வலி இருக்கும் அவர்களின் புரியாமை பற்றி.

  இந்த நிலையில் உங்கள் தொடர் பற்றிய அறிவிப்பு வந்த போது ஒரு மகிழ்ச்சி…!! எளிமையாக ஆனால் உறுதியான விளக்கம் உங்களிடமிருந்து வரும் என்று..!! அதனால் தான் தமிழ்சசியின் பதிவை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

  தொடரின் தொடர்ச்சியைக் காண ஆவலோடு இருக்கின்றோம்.

  அன்புடன்

  உங்கள் வாசகன்
  சுரேஷ்

 • Please don’t do halfway opening it gives wrong impression about the war. I don’t know much about it. if I read the article like this, I thougt what Rajapakshei is doing correct. So please write as it was and is.
  Thanks

 • ஒரு தொடர் பகுதியினைப் பற்றிய கருத்தினை அதன் முதல் இரண்டு அத்தியாயங்களை மட்டும் வாசித்துவிட்டு சொல்வது என்பது ஏற்புடையதில்லை என்றே எண்ணுகிறேன். இவற்றினை நானும் வாசித்தேன். என்னில் உருவாகும் அபிப்பிராயம் எப்படியானாலும், அதனை வெளிப்படுத்த இது தகுந்த சமயமல்ல என்று நினைக்கின்றேன். மேற்கொண்டு சில அத்தியாயங்களாவ்து சென்ற பிறகு பேசுவதே சரியாக இருக்கும் நண்பர்களே.

 • உங்களது விளக்கத்தினை ஏற்கிறேன். முன் தீர்மானத்துடன் வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களையும் நீங்கள் நட்புணர்வோடு எடுத்துக்கொள்ளும் பாங்கு போற்றத்தக்கது. எனக்குத் தெரிந்து தமிழ் உணர்வுடன் கூட சாதிய உணர்வும் இணையத்தில் நிறையவே இருக்கிறது. எனவே அனைத்திற்கும் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அது வீண் முயற்சியாகும். எழுதுங்கள். நீதிமான்களின் தீர்ப்புக்கு பிறகு செவி சாய்த்துக்கொள்ளலாம்.

 • லக்கி சொன்னதைப்போல செஞ்சோலையிலிருந்தும் ஆரம்பித்திருக்கலாம். சரி இதை முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரமும் இருக்கிறது. இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியிருப்பதைப்போல மொழி நடை குறித்து எவருக்கும் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லைதான். இது உங்கள் தொடர். உங்கள் பாணியில் எழுதலாம். ஆனால் கருத்தியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு கண்டிப்பாய் பதில் அளிப்பேன் என்பதை பாராட்டி வரவேற்கிறேன்.

  அதேசமயம் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளை பின்னுக்குத் தள்ளுங்கள். சொல்லிய விவரங்களில் பிழை இருப்பின் அதை எவர் சொன்னாலும் கூடுமான வரை குறுகிய அவகாசத்தில் பதில் அளித்தீர்களேயானால் உங்களது நோக்கமான பரவலாய் தமிழ் மக்களுக்கு இந்த விவரங்கள் போய்ச் சேர வேண்டும் என்பது நிறைவேறும். இத்தொடரின் அடிப்படை ஆதாரமே இத்தொடர் உண்மையான விவரங்களைத் தருவது என்ற நம்பிக்கைதான். ஆகவே அந்த நம்பிக்கையை உங்களது செயல்களின் மூலம் காப்பாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  இன்னொரு விஷயம். சசி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மடல் அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடிய ஒன்று எனில் அதையும் பொதுவில் இட முடியுமா?

 • பா.ரா.

  கடுமையான விமர்சனங்களை இத்தனை அமைதியான முறையில் ஏற்றிருக்கும் உங்கள் பாணி வரவேற்கத்தக்கது.

  யாருக்கு எப்படியோ..? எனக்கு ஆரம்பம் பிடித்திருக்கிறது.. தெரிந்த விஷயங்களை விட்டுவிட்டு தெரியாத ஒரு விஷயத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பது வாசகனை படிக்க வைக்க உதவிடும் உத்தி.. அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளர்கள்..

  இதோ மூன்றாவது பகுதியையும் படித்தாகிவிட்டது.. முதலில் படிக்க வைக்க வேண்டும் என்கிற உங்களுடைய வெறி இதிலும் நன்கு தெரிகிறது..

  இப்படியே தொடரவும். காத்திருக்கிறோம்..

 • Sir,
  Please do not play with Sri Lankan brothers.
  Do not use your Brainy-stuff here.
  This is not just getting your payment from Kumudam; it’s a life of Un privileged Tamil brothers.

  karuppan

 • பா.ராவிற்கு தன்னம்பிக்கை அதிகம்,அதைவிட எழுதும் திறனும், எழுதுவதற்கான உழைப்பும்.

  இலங்கையின் அரசியல் சட்டம்,காலனிய ஆட்சியின் தாக்கம், சமூக,நிர்வாக அமைப்பு பற்றிய சரியான புரிதலும் தேவை.வெறும் வரலாற்றறிவு மட்டும் போதாது.ஸ்டான்லி தம்பையா, ஒபையசேகரா போன்றோர் எழுதியிருப்பதை முழுதும்
  வாசிக்காவிட்டாலும் ஒரு சுருக்கமாகவேனும் அறிந்து
  கொள்வது நல்லது.அது போல் நார்வே ஏன் அமைதி
  பேச்சுவார்த்தையில் இத்தனை அக்கறை காட்டியது
  என்பதையும் அறிய முயன்றால் நல்லது.

  இது போன்ற ஒரு பொருளில் நூல் எழுதுவதை வாரப் பத்திரிகை தொடராக செய்வதில் உள்ள சிக்கல்களை பா.ரா அறிந்த மாதிரி தெரியவில்லை.படித்து,தொகுத்து, எழுதி,மீண்டும் படித்து,சரிபார்த்து, என்று நிதானமாக செய்ய வேண்டியதை இப்படி வாரம் இருமுறைத் தொடராக செய்வது எந்த அளவு சரியாக வரும் என்று தெரியவில்லை.ஈழம் தொடர்புடையது என்பதால் தொடராக எழுதாமல் புத்தகமாகவே வெளியிட்டாலும்
  சந்தையில் நல்ல வரவேற்ப்பிருக்கும்.

 • பாரா! தற்செயலாக இப்பதிவிற்கு மீண்டும் வந்து பார்த்த சமயம் உங்கள் பதிவுத் தொகுப்பு பக்கத்தினுள்ளே சென்று பார்த்தேன். இது உங்களின் நூறாவது பதிவு!! வாழ்த்துக்கள்.

 • அன்புள்ள ராகவன் அவர்களுக்கு உங்களுடைய முந்தைய தொடர்களான மாயவலை , ஆயில் ரேகை முதலியவற்றை படித்து இருக்கிறேன், மிக அருமை. தற்பொழுது யுத்தம் சரணம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு இடத்தில் ஆரியர் இருப்பது என்றால் அங்கே திராவிடரும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரிந்திருக்கும் ஆரிய‍‍ திராவிட பாகுபாடு என்பது ஆங்கிலேயரால் இந்தியர்களை பிரித்தாள செய்த சூழ்ச்சிகளில் ஒன்றாகும். நம் நாட்டு மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும் இந்த பொய்யை மெய்யாகக சித்தரித்து வருகின்றனர். தயவு செய்து நீஙகளும் இந்த பிரிவான வாத சித்தாந்தத்தை உங்ச்கள் கட்டுரைகளில் முன்வைக்காதீர்கள்.

  உங்கள் ரசிகன்

 • திரு பா ரா அவர்களுக்கு,

  இந்த பதிவை பார்த்தபிறகு – உங்களுடைய யுத்தம் சரணம் படித்தேன். மிக நன்றாக இருக்கிறது. ஒரே மூச்சில் 7 வார தொடரையும் படித்து விட்டேன்.

  ஒவ்வொருக்கு ஒரு கருத்து. இங்கே ஆரம்பிக்காதீர்கள். இதை ஏன் எழுதினீர்கள் அதை ஏன் எழுதினீர்கள் என்று கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்.

  உள்ளபடியே இந்த தொடர் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்…

  வெங்கட்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter