யதி – வாசகர் பார்வை 7 [ஜானகி கிருஷ்ணன்]

முதலில் அம்மா பாத்திரம் ரொம்பப் பாவமாக இருந்தது.   “நான் உன் போட்டோவை வச்சுப்பேன்” ன்னு சொன்ன  கடைக் குட்டி செல்லப் பையன் எங்கிருந்தோ போன் பண்ணி   “நான் இனி உனக்கு இல்லை – நீ சாக மாட்டே”ந்னு சொன்ன பொழுது  எனக்கு வருத்தமாக இருந்தது.  குழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்த தாய்மார்களுக்குத் தெரியும் அது எவ்வளவு கஷ்டம்னு.  என் சினேகிதி ஒருமுறை என்னிடம் மகன் மிகவும் கடுமையாகத் தன்னிடம் பேசுவதாகச் சொல்லி வருத்தப்பட்டாள். சமாதானமாக நான் சொன்னேன் “கைக் குழந்தையாக காலால் உதைத்த பொழுது சந்தோஷப் பட்டாய் அல்லவா – அதை நினைச்சுக்கோ, இப்போ வார்த்தையால் உதைக்கிறான்.  கொஞ்சம் அனுபவப் பட்டால் அம்மாவைப் புரிந்து கொள்வான்”

ஆனால் இந்தக் கதை இதற்கு முற்றிலும் வேறு திசையில் போனது.

ரசித்துப் படித்த பகுதிகளை தமிழ் படிக்கத் தெரியாத என் மகனுக்குச் சொல்வது வழக்கம். அதில் புதர் வர்ணனை ஒன்று.  எப்போதும் பார்ப்பது தான்.  யார்  அதை உற்றுப் பார்க்கிறார்கள்.  அடுத்து வந்த நாட்களில் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கும் அளவுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தியது இந்த வர்ணனை.

அடுத்து தறி வாத்தியார்.  காதைக் குடைந்து கொண்டு இருந்து விட்டு ஏதோ தெரிந்தைச் சொல்லி விட்டுப் போகும் வாத்தியார். அந்த வயதில் மாணவர்களிடம் சாது வாத்தியார் என்ற பெயர் எடுப்பது அபூர்வம். சொன்ன விதம் நன்றாக இருந்தது.  நாங்கள் படிக்கும் காலத்திலேயே தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதற்காக தன் பிரம்பை மேசையில் வைத்து விட்டு ஒரு ஆசிரியர் வெளியே போய் விடுவார்.  அந்தப் பிரம்பு பாடம் எடுக்குமோ இல்லையோ எங்களை அமைதியாக இருந்த இடம் தெரியாமல் இருக்கச் செய்யும்.

மஹாராஷ்டிர அரசியல்வாதிக்குக் கொடுத்த தண்டனையை அவன் மிகவும் ரசித்தான்.  அதென்ன அடாவடித்தனம் – ஒருவரிடம் நன்றாக ஒரு பொருள் இருந்தால் இவன் கேட்டவுடன் கொடுத்து விட வேண்டுமோ ? மற்றொரு இடத்திலும் இது போல் ஒரு அரசியல்வாதியை தலையை தட்டி, உன் தகுதி என்ன தெரிந்து கொள் என்பது போல ஒரு தண்டனை.

சொரிமுத்துவின் பாஷையில்  மிக முக்கியமான உபதேசங்கள்.  அல்பத்துக்கு ஆசைப்படாதே –  லட்சியத்தை அடையும் வரை சிறிய சித்திகளை பொருட்படுத்தாதே.  “ப2லே சக்தோ  நிபத்யதே” பலனில் கண் வைத்தால் கட்டுப்படுவாய் என்ற கீதாசாரியன் வார்த்தை.

விமலுக்கு அடைக்கலம் கொடுத்தவர்  பின்னால்  குருவும் ஆனார். சன்யாசி என்று இல்லை. எந்த கலையோ கல்வியோ, தொழிலோ, நல்ல குரு அமைவது அதிர்ஷ்டம்.  அதுவும் தன் போக்கில் விட்டுப் பிடிக்கும் அளவு பொறுமையுள்ள குரு. அவரே அவ்வளவு சொன்ன பின்னும் – நெடும் தூரம் நடக்க வைத்த பின் விமலிடம் சொல்கிறார்.  “ஏன் அப்படி செய்தாய்?’

என் விருப்பத்தை  ஒதுக்கி விட்டு எதையும் சாதிக்க இயலாது என்று எனக்கு எப்பொழுதும் தோன்றுகிறது.

ஆனால் நீ தேர்ந்தெடுத்து விரும்ப பழக வேண்டும். என்றார்.  உன் தவத்தில் நீ அடைய வேண்டியவை அதிகம்.

எந்த பெண்ணும் என்னை சலனப் படுத்த அனுமதிக்க மாட்டேன்- “ இவ்வளவுக்கு பிறகும்

பெண்களிடம் என் விருப்பப்படி இருப்பேன் என்றது எனக்கு சம்மதமில்லை. ஏதோ மரியாதை வைத்து அருகில் வரும் பெண்களிடம் தவறாக  நடந்து கொண்டால் தப்பில்லை என்பது எனக்கு சம்மதமாக இல்லை.  உனக்கு சரி, தட்டி விட்டு விட்டுப் போகலாம்.   பின்னால் அந்தப் பெண்ணின் எதிர்காலம்.   அதற்கு  பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதவரை அவள் மாற்றான் மனைவி தான். அதற்கான கௌரவம் கொடுக்கத்தான் வேண்டும்

மின்னஞ்சலில் எங்களுக்கு இரவு வரும்.  விடியும் வரை கூட பொறுமையில்லாமல்  நடு இரவில் எழுந்து யதி மட்டும் படித்து விட்டு திரும்பத் தூங்குவேன்.  வாசிப்பு அனுபவம் என்பதை சிறு வயதிலேயே கண்டிருக்கிறேன். ஆனந்த விகடனில்   ஸ்ரீமதி மைதிலி வந்த நாட்கள்.  விகடன் எதிர் வீட்டிலிருந்து வரும். ஸ்கூலுக்கு போகும் முன் திங்கட்கிழமை காலையில் எதிர் வீட்டிலிருந்து வாங்கி வருவது என் வேலை. வெள்ளிக்கிழமையே வந்தாலும் அந்த வீட்டு மாமி  தர மாட்டாள்.  அவாத்து மாமா மடியாக படித்து விட்டு போட்டபின் தான் மற்றவர்களுக்கு.   மதியம் எங்கள் வீட்டு கூட த்தில் அந்த மாமி, அவர் மாமியார், இன்னும் சிலர், எதிரில் ஒரு விறகு கடை அதன் சொந்தக்காரரின் தாயார், எங்கம்மா அவரை ஆச்சி என்பார்.  எல்லோரும் வருவார்கள்.  ரேஷன்  அரிசியில் கல்லை பொறுக்குவதோ. கீரை ஆய்வதோ அவரவர் கை வேலையுடன் கதை கேட்க வருவார்கள்.  அம்மா தான் படித்துக் காட்டுவாள். மற்றவர்களுக்கு எழுத படிக்கத் தெரியாது. அந்தக் கதையை எந்த அளவு  ஆர்வமாகக் கேட்டார்கள் என்பது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அவரவர்கள் தங்கள்  பங்குக்கு தங்கள் கோப தாபங்களை வெளிப் படுத்துவது வேடிக்கையாக இருக்கும்.

அப்படி ஒரு லயிப்புடன்தான் யதியை வாசித்தேன்.  அழகான நடை – தெளிவான வார்த்தைகள்.  மொழியின்  குழந்தை என்று குரு சொன்னது சரியே.  “வாசா தர்மம்  அவாப்னுஹி” என்று வால்மீகி ராமாயணத்தில் சீதை சொல்வாள் ஆஞ்சனேயனைப் பார்த்து.

இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள்.

Share