காட்டுமிராண்டிக் கல்லூரி

படம் நன்றி: தினத்தந்தி

இரான், ஆப்கனிஸ்தான் போன்ற தேசங்களில் கல்லால் அடித்து, உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட சில சம்பவங்கள் நடந்தபோது காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாத அடிப்படைவாத அயோக்கியர்கள் என்றும் நாம் உள்பட உலகமே கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

நேற்றைக்கு, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கலவரத்தின் சில காட்சிகளை வீடியோ படமாகப் பார்த்தபோது, நமது  இளைஞர்கள் ஒன்றும் பெரிய நாகரிக வளர்ச்சியடைந்துவிடவில்லை என்று தோன்றியது.

தனியாக மாட்டிக்கொண்ட ஒரு மாணவனை கல்லூரி வாசலில் அடித்துத் தாக்கி, கீழே வீழ்த்தி மாற்றி மாற்றி நான்கைந்து மாணவர்கள் உருட்டுக் கட்டையால் அடி அடி என்று அடித்து, அவன் மயங்கிவிட்ட பின்பும் நிறுத்தாமல் ரத்தம் பெருக்கெடுக்குமளவுக்குத் தாக்கித் தம் வெறியைத் தீர்த்துக்கொண்டதும், இதனைச் சற்றுத் தள்ளி இருந்து காவல் துறையினர் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதும் மிகுந்த அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இனி இது தொடர்பாகச் சில கண் துடைப்பு விசாரணைகள், கோஷங்கள் இருக்கும். பின்பு மறக்கப்பட்டுவிடும். ஆனால் இப்படியொரு அருவருப்பான சம்பவம் சட்டம் படிக்கும் மாணவர்களிடையே நடந்தேறியிருப்பதற்கு மாநிலமே வெட்கித் தலைகுனிய வேண்டும். நமது கல்வித்திட்டங்கள் மாணவர்களைக் கொண்டு சேர்க்கும் எல்லை இதுதானா?

இந்த மட்டரகமான சம்பவத்துக்கான சரியான காரணம் இன்னும் யாராலும் சொல்லப்படவில்லை. சட்டக்கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடப்பதும் அதற்கு உள்ளுரை காரணமாக சாதி அரசியல் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இம்முறையும் சம்பவத்துக்கு ஏதோ சாதீயக் காரணம்தான் என்று சொல்லப்படுகிறது.

வருத்தத்துக்குரிய விஷயம், இப்படியொரு அதிர்ச்சிகரமான சம்பவம் இரண்டு மணிநேரம் இடைவிடாமல் நடந்து, தொலைக்காட்சிகள் விதவிதமான கோணங்களில் நிறுத்தி நிதானமாகப் படம் பிடித்திருக்கின்றன. சும்மா வேடிக்கை பார்க்கும் போலீசாரையும் சேர்த்தேதான் அவர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் கேமராவுக்காவது முகத்தை மறைத்துக்கொள்ள எந்தப் போலீசாரும் முயற்சி செய்யவில்லை.

என்றால் என்ன அர்த்தம்? திட்டமிட்டு, முன்னேற்பாடுகளுடன், ஒரு முடிவுடன் இந்தச் சம்பவம் நடந்தேற அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன? கேட்டால், யாரும் புகார் கொடுக்கவில்லை, கொடுத்தால்தானே தடுக்கமுடியும் என்று வேறு கேட்டிருக்கிறார்கள்.

ஒப்புக்கு இரண்டு காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழக அரசு. வேறு சில சம்பந்தப்பட்ட காவலர்களை  பாதுகாக்கும் பொருட்டு அவசர அவசரமாக வேறு இடங்களுக்கு மாற்றல் அளித்திருக்கிறார்கள்.

முற்றிலும் அருவருப்பான, வெறுக்கத்தக்க, அயோக்கியத்தனமான, காட்டுமிராண்டித்தனமான, கேவலமான, இந்தச் சம்பவத்துக்குக் காவல் துறை துணை போயிருப்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் நிலையில், காவல் துறையின் முகத்துடன் தமிழக அரசேதான் இதனை நடத்தியிருக்குமோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

உடனடியாக ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகத்தையும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே உரிய விசாரணை நடத்தி, விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமும், இன்னுமொரு முறை சட்டக்கல்லூரி வளாகத்தில் இப்படியொரு சம்பவம் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் மட்டுமே தமிழக அரசு தன்மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தைத் துடைக்க இயலும்.

தொடர்புடைய பிற பதிவுகள்: வினவு குழுமம் | ஆர். முத்துக்குமார் | இட்லிவடை

Share

24 comments

  • என்ன சார் பண்ணப்போறாங்க.. எல்லா சேனலிலும் ரெண்டு மூணு நாள் தேயத் தேய இதே வீடியோ போட்டு காமிப்பாங்க.. அப்புறம், அமெரிக்காவில அணு குண்டு காணாமப்போச்சு, அடுத்த ரதயாத்திரை தொடங்கிடுச்சுனு அடுத்த செய்தி இதை தூக்கி சாப்பிட, எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பாக்கப் போறாங்க.. பொதுவில் அலுவலகங்களில் ஒரு பதம் உபயோகிப்பாங்க.. follow up னு. ஒரு வேலையை பண்ண சொல்லி குடுத்தபிறகு அதனை தொடர்ந்து தொடர்வது.. என்னென்ன update நடந்திருக்குனு விடாம follow பண்றது.. அதை யார் சார் பண்றது..?

  • I accept…..
    This is not the first time that there is a clash between groups in a law college.
    The law college students think themselves as the one and only citizen of our Hon’ble country… U can fell while talking with them.
    This should be controlled.. Either by Principal or by Police (Students don’t want police to come into their college) as no one is having rights to beat other human.
    In humanity basis also this is not admissible.
    The Principal should be changed… Law colleges should be headed by able hands. (Who can control students).
    One student is running to attack the other group with a knife in his hand. The reporters and a police crew are standing without doing anything…. They are not observers and they do have the duty to stop violence atleast on the basis of humanity.. (Namma veetu pillai adi vaanginaa vitruvomaa….
    Ithaiyellaam parthukittu summa irunthathaala thaan thadi eduthavan ellaam thandal kaaran aayeedaraan….)
    Thanks for covering this issue…

    Varuthangaludan…
    Ram C R.

  • நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.

  • //இதனைச் சற்றுத் தள்ளி இருந்து காவல் துறையினர் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதும் மிகுந்த அருவருப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.//

    இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசுபவர்கள் எல்லோருமே இயல்பாக காவல்துறையை குற்றம் சாட்டிவிடுகிறோம்.

    “எந்த ஒரு கல்விநிலையத்திலும் நிர்வாகத்தின் அனுமதியின்றி காவல்துறை உள்ளே நுழையக்கூடாது” என்ற புண்ணாக்கு சட்டத்தை வைத்துக்கொண்டு இதுபற்றி பேச நாம் அருகதையற்றவர்களாகி விடுகிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பரோட்டாக்கடையில் ரவுடித்தனம் செய்த இதே சட்டக்கல்லூரி மாணவர்களை நடுரோட்டில் போட்டு புரட்டியெடுத்தபோதும் காவல்துறையை தான் குறை சொன்னோம். அன்றும் காவல்துறையினர் தான் சஸ்பெண்ட் ஆனார்கள். இடமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதை மட்டும் நினைவுறுத்துகிறேன்.

    கைவைத்தாலும் குறை சொல்வோம், (சட்டப்படி) வேடிக்கை பார்த்தாலும் குறை சொல்வோம் என்ற வெகுஜன மனோபாவமும் கூட ஒருவகையில் வன்முறையே 🙁

  • //கைவைத்தாலும் குறை சொல்வோம், (சட்டப்படி) வேடிக்கை பார்த்தாலும் குறை சொல்வோம் என்ற வெகுஜன மனோபாவமும் கூட ஒருவகையில் வன்முறையே //

    முந்தையப் பின்னூட்டத்தில் காவல்துறைக்கெதிரான சமூகத்தின் வன்முறையே என்று படிக்கவும்.

  • //“எந்த ஒரு கல்விநிலையத்திலும் நிர்வாகத்தின் அனுமதியின்றி காவல்துறை உள்ளே நுழையக்கூடாது” என்ற புண்ணாக்கு சட்டத்தை வைத்துக்கொண்டு //

    இது சற்றும் ஏற்க இயலாத வாதம். அந்தக் காட்சியை நீங்கள் கண்டிருந்தீர்களென்றால் இப்படிப் பேசமாட்டீர்கள். விழுந்து கிடக்கும் ஒருவனை மாற்றி மாற்றி சாத்துகிறார்கள், அவன் துடிக்கக்கூட முடியாமல் துவண்டு கிடக்கிறான் என்னும்போது சட்டம் இருக்கட்டும், ஒரு சக மனிதன் என்னும் அளவிலாவது பதைத்து அருகே ஓடக்கூடவா முடியாது? காவலர்கள் நடவடிக்கைகூட எடுக்கவேண்டாம். வெறும் ஒரு மிரட்டல் சத்தம், தடுக்க வருவதுபோல் ஒரு பாவ்லா? குறைந்தபட்சம் ‘அடிக்காதிங்கடா’ என்றொரு குரல்?

    பிடித்துவைத்த சாணி உருண்டைபோல் நின்றுகொண்டிருந்தவர்களுக்கு தயவுசெய்து வக்காலத்து வாங்காதீர்கள்.

  • //ஒரு சக மனிதன் என்னும் அளவிலாவது பதைத்து அருகே ஓடக்கூடவா முடியாது? காவலர்கள் நடவடிக்கைகூட எடுக்கவேண்டாம். வெறும் ஒரு மிரட்டல் சத்தம், தடுக்க வருவதுபோல் ஒரு பாவ்லா? குறைந்தபட்சம் ‘அடிக்காதிங்கடா’ என்றொரு குரல்?//

    நீங்கள் சொல்வது உண்மைதான் சக மனிதன் என்று ஓடியிருக்க வேண்டும், ஆனால் பல முந்தய அனுபவங்கள் காவல் துறைக்கே உயிர் பயத்தை கொடுத்திருக்கலாம், சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பதால், சட்டம் படித்தவர்கள் என்பதால் நிறைய செயல்படுவதில் சிக்கல்கள் இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் உணர்ந்திருக்கிறார்கள்,
    மிக வேதனையான நிகழ்வுதான் இது, சட்டக்கல்லூரி மாணவர்கள் மட்டும் ஏன் அவ்வப்போது இப்படி ஒரு சம்பவத்தை உருவாக்குகிறார்கள்,என்பதை தெளிந்து அதனை களைய ஒரு சரியான கடுமையான முடிவை அரசு அறிவிக்கவேண்டும்.

  • இந்த மாதிரி வன்முறை சம்பவங்களும், போலீஸ் அதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருப்பதுவும் பல நடந்துள்ளன. கேமெரா முன்னால் ஆதாரங்களை பற்றி கவலைப்படாமல் முதல் முறையாக இப்படி நடந்துள்ளதாக நினைக்கிறேன். இது குறித்து வன்மையாக எழுத வேண்டும்.

    லக்கிலுக்கிற்கு காமெடி உணர்வு ரொம்ப அதிகம் என்று கூட கிண்டலடிக்க முடியவில்லை -மிக அயோக்கியத்தனமான் சம்பவத்தை தன் அசட்டு வாதம் மூலம் நியாயப்படுத்துவதால். கொலை ஒரு குடும்பத்தில் நடக்கும் போது அது குடும்ப பிரச்சனை அல்ல, யாரும் புகார் கொடுக்காமலேயே நடவடிக்கை எடுப்பதுதான் போலீஸின் கடமை.

    //கைவைத்தாலும் குறை சொல்வோம், (சட்டப்படி) வேடிக்கை பார்த்தாலும் குறை சொல்வோம் என்ற வெகுஜன மனோபாவமும் கூட ஒருவகையில் வன்முறையே//

    எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகளை வைத்து ஒளரலாம் என்பதற்கான உதாரணம் இது. சும்மா ரோட்டில் போகும் லக்கிலுக்கை போலீஸ் ஒரு முறை சாத்திவிட்டும், அடுத்த முறை யாரோ லக்கியை சாத்தும்போது வேடிக்கை பார்த்துவிட்டும் இப்படி சொன்னால் தன் வாதத்தின் வன்முறை ஒருவேளை இவருக்கு புரியலாம்

    இங்கு வரும் பின்னூட்டங்களின் பல கருத்துக்களை (குறிப்பாக சட்டக்கல்லூரி பற்றி) நான் ஏற்கமாட்டேன். ஆனால் ஆத்திரப்படவேண்டிய குறைந்த மனிதத் தன்மையை மழுங்கிக் கொண்டு, போலிஸுக்கு லக்கி வக்காலத்து வாங்குவது அயோக்கியத்தனம்.

  • //இது சற்றும் ஏற்க இயலாத வாதம். அந்தக் காட்சியை நீங்கள் கண்டிருந்தீர்களென்றால் இப்படிப் பேசமாட்டீர்கள். விழுந்து கிடக்கும் ஒருவனை மாற்றி மாற்றி சாத்துகிறார்கள், அவன் துடிக்கக்கூட முடியாமல் துவண்டு கிடக்கிறான் என்னும்போது சட்டம் இருக்கட்டும், ஒரு சக மனிதன் என்னும் அளவிலாவது பதைத்து அருகே ஓடக்கூடவா முடியாது? காவலர்கள் நடவடிக்கைகூட எடுக்கவேண்டாம். வெறும் ஒரு மிரட்டல் சத்தம், தடுக்க வருவதுபோல் ஒரு பாவ்லா? குறைந்தபட்சம் ‘அடிக்காதிங்கடா’ என்றொரு குரல்?

    பிடித்துவைத்த சாணி உருண்டைபோல் நின்றுகொண்டிருந்தவர்களுக்கு தயவுசெய்து வக்காலத்து வாங்காதீர்கள்.//

    வீடியோவை பார்க்காமல் இருந்திருப்பேனா? 🙁

    பள்ளி ஆண்டுவிழாவில் ஒரு தடியன் உருட்டுக்கட்டையோடு துரத்தியபோது மான் மாதிரி உயிருக்குப் பயந்து ஓடித்தப்பிய அனுபவமும் எனக்கு இருக்கிறது.

    அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காவல்துறை மட்டுமல்ல. வெறும் லத்தியை வைத்துக்கொண்டு குண்டாந்தடிகளை எதிர்க்க காவலர்களும் பயப்பட்டிருக்கலாம். மேலிடத்து உத்தரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்களோ என்னமோ? இங்கே நேரடியாக குற்றம் சாட்டப்படுவதற்கு தகுதியானவராக அக்கல்லூரியின் முதல்வர் தான் இருக்கிறார் என்பது என் கருத்து.

    போலிசுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது. சட்டம் சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்க காவல்துறையும் பயந்து நடுங்கிக் கொண்டுதானிருக்கிறது.

    காவல்துறையினர் இடிஅமீன் மாதிரி நடந்துகொள்கிறார்கள் என்றாலும் எல்லாவற்றுக்கும் காவல்துறையையே குறை சொல்லும் போக்கு தான் எனக்கு ஏற்க இயலாததாக இருக்கிறது!

    BTW beyond the topic, அம்மாணவர்கள் படிப்பதே அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் தான். படிப்பதும் அம்பேத்கர் சட்டக்கல்லூரி. அதன் பிறகு போஸ்டரில் ‘அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்’ என்று குறிப்பிடுவதில் என்ன தயக்கம்? பேசாமல் மாணவர்கள் போஸ்டரே ஒட்டக்கூடாது என்று ஒரு சர்வாதிகார சட்டம் போட்டுவிடலாம். இதுபோல பிரச்சினைகள் எதிர்காலத்திலாவது உருவாகாமல் இருக்கும்.

  • //லக்கிலுக்கிற்கு காமெடி உணர்வு ரொம்ப அதிகம் என்று கூட கிண்டலடிக்க முடியவில்லை -மிக அயோக்கியத்தனமான் சம்பவத்தை தன் அசட்டு வாதம் மூலம் நியாயப்படுத்துவதால். கொலை ஒரு குடும்பத்தில் நடக்கும் போது அது குடும்ப பிரச்சனை அல்ல, யாரும் புகார் கொடுக்காமலேயே நடவடிக்கை எடுப்பதுதான் போலீஸின் கடமை. //

    அய்யய்யோ. ரோஸாவசந்தே கோபப்பட்டு விட்டார் என்றால் பிரச்சினை ரொம்ப சீரியஸானது என்றுதான் அர்த்தம் போலிருக்கிறது 🙁

    குடித்துவிட்டு ரோட்டில் ரவுடித்தனம் செய்துவிட்டு ஹாஸ்டலுக்குள் ஓடி ஒளிந்த சட்டக்கல்லூரி மாணவர்களை உள்ளே நுழைந்து, அடித்து கைது செய்தபோதும் ரோசாவஸந்த் மாதிரியான மனிதநேய ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டித்தது காவல்துறையை தான். சட்டக்கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் காவல்துறையினர் சூடுபட்ட பூனைகள்.

    இதே போலிசார் கலவரத்தை அடக்க கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை அடித்திருந்தாலும் இதே ரோசாவசந்த் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கடுமையாக கண்டித்திருப்பார் உறுதியாக நம்புகிறேன்.

    //போலிஸுக்கு லக்கி வக்காலத்து வாங்குவது அயோக்கியத்தனம்.//

    போலிஸுக்கு வக்காலத்து வாங்குமளவுக்கு இன்னமும் மூளை கெட்டுப் போய்விடவில்லை. இச்சம்பவத்தில் காவல்துறையை மட்டுமே குற்றவாளியாக்கி மற்றவர்கள் புனிதர்கள் ஆவது தான் கடுப்பாக இருக்கிறது.

  • பிரச்சனைகளின் முலம் கண்டறியப்பட வேண்டும். நமது கல்வித்திட்டமும் பாடமுறையும் மாற்றப்பட வேன்டும். சாதி உணர்வு அசிங்கம் என்ற புரிதல் சிறு வயதிலேயே விதைக்கப்பட வேண்டும்.பாரதியின் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ தினமும் வேதம் போல் உச்சரிக்கப்பட்டு, மனதில் உரமாக்கப்பட வேண்டும்.

    what are we going to do now? Shouldn’t we all unite to fight against the evils of casteism?

  • நான் உங்கள் வெறித்தனமான வாசகன் , அவ்வபோது உங்களின் வலைப்பதிவை படிக்க மட்டும் விட்டு விடுகிறேன் . நான் ஆர்குட்டில் உங்களுக்கென்று ஒரு தனி குழுமம் ஆரம்பித்து அதில் ஐம்பதற்கும் மேற்பட்டவர்கள் உள்ளோம் .

    உங்களின் பல புஸ்தகங்களை திரும்ப திரும்ப படித்ததால் கேட்கிறேன் , ஒரு சில விஷயங்களை திரும்ப திரும்ப எல்லா புத்தகங்களிலும் எழுதுகிறீரே என் ? . உதாரணம் வேண்டாம் என நினைக்கிறேன்

  • //ஒரு சில விஷயங்களை திரும்ப திரும்ப எல்லா புத்தகங்களிலும் எழுதுகிறீரே என் ? //

    வலியுறுத்த விரும்புவதன்றி வேறு காரணமில்லை.
    [பி.கு] ஆர்குட் குழும முகவரியை அளிக்கவேண்டுகிறேன்.

  • அன்புள்ள லக்கி,

    “போலிசார் கலவரத்தை அடக்க கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை அடிப்பது’ என்பதை விட நிலமையை சமாளிப்பது, நடவடிக்கை எடுப்பது என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. (வேறு வழியில்லாமல் ஒரு அப்பாவியை காப்பாற்ற அடித்திருந்தாலும் தவறில்லை). அதைவிட ஒன்றும் செய்யாமல் வாளாவிருத்தல் என்று ஒன்றும் இருக்கிறது. இதில் இரண்டாவதை போலிஸ் செய்யும் போது அதற்கு பிண்ணணி காரணம் இருக்கும். அது சரியாக தெரியாவிட்டாலும் பலர் பல விஷயங்களை பேசவும் செய்வார்கள். போலிஸை குற்றம் சொல்வது என்பது, அங்கே போலிஸாக நிற்கும் மனிதர்களை அல்ல, மேலே சொன்ன பிண்ணணியை பற்றியதே. நீங்கள் சொல்லும் வாதங்கள் பல சந்தர்ப்பங்களில் ராணுவ போலிஸ் ஆராஜகங்களை ஆதரிக்க பலரும் சொல்லும் வாதங்கள் என்பதை நீங்கள் நினைவுபடுத்துவது நல்லது.

    திமுக அரசு ஆட்சி செய்யும் போது (மின்தடையிலிருந்து போலிஸ் அராஜகம் வரை) கூச்சல்கள் அதீதமாக எழுவது வழக்கம். அந்த அதீதத்தின் பிண்ணணியை தாரளமாக பேசலாம். அவ்வாறு பேசும் போது எந்த விதத்திலும் அராஜகத்தை நியாயப்படுத்தாமல் இருப்பதில் ஜாக்கிரதை உணர்வு வேண்டும் என்று நினைக்கிறேன்.

    வேறு இடங்களில் சில நல்ல கேள்விகளை எழுப்பும் நீங்கள், எல்லா இடத்திலும் அரசிற்கு வக்காலத்து வாங்க தொடங்கினால் உங்களின் நியாயமான கருத்துக்கள் கூட கவனிக்கப் படாமல் போகும் அபாயம் உள்ளது.

    திமுக ஆதரவு என்பது திமுக ஆட்சியில் நடக்கும் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது அல்ல. இந்த விஷயங்களையும் மீறி அரசியல் காரணங்களுக்காக ஆதரிப்பது என்று நான் நினைக்கிறேன்.

  • பொதுவாக காவல்துறையினரை செயல்படவிடாமல் சில முட்டுக்கட்டைகளோ அரசியல்ரீதியான முன்எச்சரிக்கைகளோ இருந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரின் மெளனமான எதிர்வினை அடிப்படை மனிதத்தன்மைக்கு எதிரானது. ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் என்றால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மாத்திரமல்லாமல் அங்கிருக்கும் அப்பாவிகளையும் வேட்டை நாய்கள் போல் பாய்ந்து துரத்தி துரத்தி அடிக்கும் காவல்துறையினர்,கண்ணெதிரே நடந்து கொண்டிருந்த கொடுமையை மனச்சாட்சியோடு சற்று தட்டிக் கேட்டிருந்தால் அந்த மாணவனுக்கு நேர்ந்த பாதிப்பை சற்றேனும் குறைத்திருக்கலாம். என்ன காரணம் சொல்லியும் இதை நியாயப்படுத்த முடியாது.

    பொதுமக்களுக்கு ஏற்கெனவே காவல்துறையினர் மேலிருக்கும் வெறுப்பு இன்னும் அதிகமாகியிருக்கும்.

    இந்தப்பிரச்சினையின் உள்ளாக ஊடாடும் சாதிய பிரச்சினைகளை சிலர் ஆராய்கின்றனர். ஆதிக்க சாதியை சேர்ந்தவனை ஒடுக்கப்பட்ட சாதியினர் தாக்கினாலும் அதுவும் வன்முறையே. இதுநாள் வரை பாதிக்கப்பட்டு ஒடுங்கிக் கிடந்தவர்கள் இப்போது பொங்கி எழுந்தார்கள் என்று இந்த வன்முறையை நியாயப்படுத்த முடியாது. வன்முறை கலாச்சாரத்தை யார் பின்பற்றினாலும் அது தடுக்கப்பட வேண்டியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

    என்றாலும் இந்த சம்பவத்தின் பின்னணியிலுள்ள சமூகவியல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்களை ஆராய்ந்து வருங்காலத்தில் இம்மாதிரியான கொடுமைகளை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு இயந்திரத்தின் மூலம் எடுப்பதே முறையான செயலாக இருக்கும்.

  • சட்டக்கல்லூரியில் வன்முறை என்பது புதிய விஷயம் இல்லை என்றாலும் நேற்று இந்த நகர்படத்தை சன் தொலைக்காட்சியில் கண்ட பொழுது மிரண்டு போய் விட்டேன். பெரும்பாலான அரசியல்வியாதிகள் வக்கீலுக்குப் படித்தவர்கள் என்ற காரணத்தினாலும், தனக்குச் சட்டம் தெரியும் என்ற காரணத்தினாலும் தன்னை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அக்கல்லூரியில் நுழையும் பொழுதே அம்மாணவனுக்குள்ளே வந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன்.

    ஆனால் லக்கிலுக்கின் வாதங்களைப் படித்த பின்னும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாவது அந்தக் கும்பலைக் கலைக்கத் தோன்றாத காவல்துறையினரைக் கண்டிக்கத்தான் வேண்டும்.

    இந்த நிலை சரியாக கல்லூரிகளில் அரசியல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்தக் கல்லூரியில் மாணவர்களுக்குப் படிப்பதைத் தவிர வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்ற பயம் வருமாறு செய்ய வேண்டும்.

    உண்மையில் சொல்கிறேன். எ.கொ.இ.ச.

  • இது சட்டக்கல்லுரி மாணவர்களுக்கே உரித்தான மனோபாவம்!. வேறு எந்தக் கல்லூரி மாணவர்களும் இவ்வாறு செய்யத் துணிய மாட்டார். ஒவ்வொரு வருடமும் கட்டணத்தை குறைக்கச் சொல்லி சேலத்தில் இவர்கள் செய்யும் ஆர்பாட்டங்கள் அப்பகுதி மக்களிடையே பிரபலம்.

  • When I saw the video, my blood literally boiled, PaRa. I wanted all involved to pay the heaviest price; starting from the CM, Ministers, Police, the College management, down to the students who perpetrated this atrocity. Not just suspension, transfers and a judicial probe. If not turn the clock back, send a message that next time these things starts, everyone involved know the kindergarten lesson that we live in a civilized society. Fortunately, the realist in me woke up and I calmed down after a couple of hours. Stuff happens. Nothing I can do about it. Did people who are criticizing this now, criticize A, B, C that happened X, Y, Z years back? What are their qualifications to criticize? Would I be this outraged if the video had not come out? What about all the other incidents which were never written about, leave alone being video taped? We should be looking at the root cause and justify why it happened the way it did. You know what? Let’s just order a Judicial Probe. Every one is happy. Except the idealist. The idealist still hopes for at least a little shame. Tough luck.

    Swami

  • நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

    தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

    யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே…

    இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது…

    மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..

    இதற்கு யார் காரணம்…?

    ஜாதி யா?

    தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

    பெயரில் இல்லை … ஆனால்..

    ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..

    வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..

    வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்…

    என்ன செய்வது…

    ௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

    ௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

    ௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் …

    ௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்…

    ௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, “ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் ” … “அடங்க மறு ” என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

    ௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் …

    இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்…

    ஆனால்…கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ….

    மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..

    பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..

    அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை…

    இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..

    நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல…

    தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ….

  • //சும்மா ரோட்டில் போகும் லக்கிலுக்கை போலீஸ் ஒரு முறை சாத்திவிட்டும், அடுத்த முறை யாரோ லக்கியை சாத்தும்போது வேடிக்கை பார்த்துவிட்டும் இப்படி சொன்னால் தன் வாதத்தின் வன்முறை ஒருவேளை இவருக்கு //

    ரோசா வசந்து சும்மா பேசத் தான் லாயக்கு. காரியத்தில காட்ட மாட்டாரு. ஹிஹி

  • Parinaama Valarchiyil Thamizhan muthal kattaththai nokki poik kondirukiran. itahi padam eduththu viyaabaaram pannum media patri onnum sollaathathu vethanai. kumudam.com news videovil oru photographer adi vaangiyavanai pala posegalil click seythu kondirukkiraar.. kodumai..

  • //வேறு இடங்களில் சில நல்ல கேள்விகளை எழுப்பும் நீங்கள், எல்லா இடத்திலும் அரசிற்கு வக்காலத்து வாங்க தொடங்கினால் உங்களின் நியாயமான கருத்துக்கள் கூட கவனிக்கப் படாமல் போகும் அபாயம் உள்ளது. //

    அன்புள்ள ரோஸாவசந்த்!

    என்னுடைய சார்புநிலையை எங்கேயும் மறைத்ததில்லை. நடுநிலை மாதிரியான பம்மாத்துக்களை செய்ததில்லை. இந்தளவில் என்னைப் புரிந்துகொண்டவர்கள் என் கருத்துக்களை எப்படி உள்வாங்குவார்கள் என்பது குறித்துதான் நான் அஞ்சவேண்டுமே தவிர, எனக்கு எதிர்கருத்து கொண்டவர்கள் மற்றும் நடுநிலை பம்மாத்து பேர்வழிகள் என் கருத்தினை மதிக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை.

    அடுத்து, இச்சம்பவம் குறித்து வலைப்பதிவுகளில் வெளிப்பட்டிருக்கும் அதீத அதிர்ச்சி எனக்கு ஒவ்வாததாக இருக்கிறது. நீங்களும் அதீத அதிர்ச்சியையே காட்டியிருப்பதாக கருதுகிறேன். காவல்துறையை குறிவைத்து பலிகடாவாக்கி அரசும் மற்றும் அரசியல்வாதிகளும் செயல்பட்டிருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்.

    இதுபோன்ற அதிர்ச்சிகளை நிறைய நேரில் பார்த்திருப்பதாலும், பங்கு கொண்டிருப்பதாலும் மற்றவர்கள் வெளிப்படுத்தும் அதிர்ச்சியை அதீத அதிர்ச்சி என்கிறேனோ என்னவோ தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் மட்டுமே தினமும் மூன்று இடங்களிலாவது நடைபெற்று வருகிறது. திமுக பேரணியில் டிஜிபி அலுவலகத்துக்குள்ளேயே நடந்த தாக்குதலையெல்லாம் ஒப்பிடும் போது இச்சம்பவம் அதிர்ச்சி மதிப்பீட்டளவில் என்னை உலுக்கவே இல்லை. அச்சம்பவத்தையும் நேரில் பார்த்திருந்தேன். மரணமடைந்தவரின் பிணத்தை மேடைக்கு முன்பாக வைத்தபோது ‘எல்லோரும் அமைதியாக, பாதுகாப்பாக அவரவர் வீட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள்’ என்று கலைஞர் அறிவித்தபோது அவரை கடுமையாக வெறுக்கவும் செய்தேன்.

    கருத்து தெரிவித்தவர்கள் பெரும்பாலும் இச்சம்பவத்தின் பின்னணி குறித்த பிரக்ஞை ஏதுமின்றியே கருத்து தெரிவிக்கிறார்கள்.

    இச்சம்பவம் குறித்து விசாரித்தவரை

    1. 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியின் போது ஒரு பிரிவு மாணவர்கள் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்றில்லாமல் சென்னை சட்டக்கல்லூரி என்று போஸ்டர் அச்சடித்திருக்கிறார்கள்.

    2. தலித் மாணவர்கள் இதுகுறித்த தங்களது ஆட்சேபத்தை கடந்த பத்து நாட்களாக பலவாறாக தெரிவித்திருக்கிறார்கள். எனவே கல்லூரி நிர்வாகத்துக்கு நிச்சயமாக சீரியஸ்னெஸ் தெரிந்திருக்க வேண்டும்.

    3. சம்பவத்தன்று மாலை சட்டக்கல்லூரி முன்பாக சாலைமறியல் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

    4. சாலைமறியலை எதிர்பார்த்தே பத்திரிகையாளர்கள் கல்லூரி வளாகத்திலும், காவல்துறையினர் கல்லூரியை சுற்றியும் குவிக்கப்பட்டார்கள்.

    5. அடிதடி என்பது திடீர் ஏற்பாடு. காவல்துறையும் அதை எதிர்பார்த்திருக்க முடியாது. அடிதடியை எதிர்கொள்ள முன்னேற்பாடாக வந்திருந்தால் ‘வேறு மாதிரியாக’ வந்திருப்பார்கள்.

    6. வேடிக்கை பார்த்தார்கள் என்பது உண்மைதான். இதற்கு முன்பாக இதுபோன்ற சம்பவங்களில் தட்டிக்கேட்டு உதைவாங்கி, இரத்தம் சிந்திய போலிசாரே சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபவத்தை பெற்றிருப்பதால் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழைய காவல்துறை தயங்கியிருக்கும்.

    7. நீங்கள் உட்பட அரசும், அரசியல்வாதிகளும் கூட காவல்துறை மட்டுமே குற்றவாளிகள் என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். நான் அக்கருத்தோடு மாறுபடுகிறேன்.

    8. இதிலெங்கு அயோக்கியத்தனம் வந்தது என்று சொல்லமுடியுமா?

    //சும்மா ரோட்டில் போகும் லக்கிலுக்கை போலீஸ் ஒரு முறை சாத்திவிட்டும், அடுத்த முறை யாரோ லக்கியை சாத்தும்போது வேடிக்கை பார்த்துவிட்டும் இப்படி சொன்னால் தன் வாதத்தின் வன்முறை ஒருவேளை இவருக்கு //

    ரோசா வசந்து சும்மா பேசத் தான் லாயக்கு. காரியத்தில காட்ட மாட்டாரு. ஹிஹி//

    UnluckyNoLook மாமு!

    நீ அதே காரியத்துலே இறங்கிப் பாரு. மவனே அங்கு நடந்ததை விட பயங்கரமா நானே நடத்திக் காட்டுறேன் 🙂

  • லக்கிலுக் சொல்வதை பரிபூரணமாக ஒத்துக் கொண்டாலும், காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த காட்சி கொடுமையிலும் கொடுமை. அதை ஏற்றுக் கொள்ளவே இயலாது

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி