மூன்று விஷயங்கள்

நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர்.

நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித் ததும்புகின்றன. போக்குவரத்து நின்றுவிட்டது. அவ்வண்ணமே பழவந்தாங்கல் பக்கமுள்ள சுரங்கங்களும். எப்போதும் வட சென்னைதான் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு காணும். இம்முறை போட்டிக்குத் தென் சென்னையும் வந்துவிட்டது. சைக்கிள் முதல் பேருந்துகள் வரை எதுவும் போக முடியாதபடி அனைத்துச் சாலைகளும் நதிகளாகக் காட்சியளிக்கின்றன.

ஒரு பெரு நகரத்துக்குத் தேவையான அடிப்படை நீர் வெளியேற்று வழிகள் எந்த இடத்திலும் செய்யப்படவில்லை என்பது இம்மாதிரி மழைக்காலங்களில்தான் தெரியவருகிறது.

அலுவலகத்தில் பலபேர் இன்றும் வரவில்லை. வீடுகளுக்குள் நீர் புகுந்துவிட்டதாகச் செய்திகள் மட்டும் வருகின்றன. கட்டிலுக்கு மேலே நிற்கிறோம், டேபிளுக்கு மேலே குழந்தையைப் படுக்கவைத்திருக்கிறோம் எனப் பலவாகத் தகவல்கள். புயல் கரையைக் கடந்துவிட்டது என்றாலும் மழை நிற்கவில்லை. காலை தொடக்கம், இன்றும் பெய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் நேற்றைப்போல் இல்லை.

வெள்ள நிவாரணம் என்று எப்படியும் நூறிலிருந்து இருநூறுக்குள் ஏதோ ஒரு கோடித் தொகையைக் குறிப்பிட்டு வாங்கிவிடுவார்கள். ஆங்காங்கே சோற்றுப்பொட்டலங்கள் விழும். சில பிரதான சாலைகள் சீரமைக்கப்படலாம். எப்படியும் அடுத்த தேர்தல் நெருங்கும்வரை இனி சாலைப் பிரச்னைதான் பெரிதாக இருக்கப்போகிறது.

*

மும்பையில் நிகழ்ந்திருக்கும் தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு நாளுக்கு நாள் எத்தனை சீர்கெட்டுப் போகிறது என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பொடா, தடா சட்டங்களைப் போன்ற கெட்டிப்பட்ட சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும்படி இப்போதும் அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள். ஒரே பாட்டு. ஒரே பல்லவி. ஒரே ராகம். ஒரே தாளம்.

ஒரு தீவிரவாதச் செயலை நடக்கவிடாமல் தடுக்க என்ன செய்யவேண்டும்? அதற்கு யாரும் எந்த உபயோகமான யோசனைகளையும் தெரிவிப்பதில்லை. உளவுத்துறை என்ன செய்கிறது என்று ஒருவார்த்தை கேட்பதில்லை. உளவுத்துறையின் வேலை என்னவென்பதே பலருக்குச் சரிவரத் தெரிவதில்லை. வெற்றுக்கூச்சல்கள், இந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி வெடிப்புச் சத்தங்களைக் காட்டிலும் நாராசமாக இருக்கிறது.

கடந்த பெங்களூரு, அஹமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போதும் முன்னதாக ஜெய்ப்பூர் சம்பவத்தின்போதும் இந்தியன் முஜாஹிதீன் குறித்துச் சில செய்திகள் வந்தன. இப்போது டெக்கன் முஜாஹிதீன் என்று இன்னொரு பெயர். இதெல்லாமும் அவர்களே மின்னஞ்சல் அனுப்பி, தங்களைப் பற்றித் தெரிவித்துக்கொள்வதால் கிடைக்கும் பெயர்களே தவிர, நம்மவர்கள் தேடிக் கண்டுபிடிப்பவையல்ல.

டிசம்பர் 13, 2001ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் அமைப்பான ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அதிகாரிகள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக வேலை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலிருக்கிறது. சில மாதங்கள் முன்பு தலைநகரில் நடைபெற்ற குதிரை பேரத் திருவிழாவின் சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி இருந்தது நினைவுக்கு வருகிறது.

செய்யட்டும், தப்பில்லை. தேசப் பாதுகாப்புக்காகவும் கொஞ்சம் வேலை பார்க்கலாம். அதுவும் தப்பில்லை.

ஐ.பியின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும்.

அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிடி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பியின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் மக்களுக்கு என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.

இதெல்லாம் தவிர ஒரு நாளைக்குச் சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய – சீன யுத்தத்துக்குப் பிறகு RAW என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பிக்கு இருக்கும் பணி இதுதான்.

மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீசுடன் எப்போதும் சுமூக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களை கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.

நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., ‘ரா’வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தேதியில் ‘ரா’ எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானை கவனிப்பது. எப்போதெல்லாம் குட்டை குழப்ப விருப்பமோ, அப்போதெல்லாம் இலங்கை. போரடித்தால் அருணாசல பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.

ஆனால் இதற்கே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின் தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ‘ரா’வின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பியால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ [Directorate General of Forces Intelligence] தீர்மானிக்கும். பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும் டிஜிஎஃப்ஐயைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் தோழர்களாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.

2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும் அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதுமான சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.

எதற்கு இதெல்லாம்?

நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் ‘ரா’வின் உதவியைக் கோரியிருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ‘ரா’வே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பியால் என்ன செய்யமுடியும்?

அதனால்தான் குண்டு வெடிக்கிறது. கராச்சியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் போலக் கப்பலில் வந்து இறங்கி நகரெங்கும் சுட்டுவிட்டுப் போகிறார்கள். நூற்றுக்கணக்கான பலிகளுக்கும் பொருள் இழப்புக்கும் ஆளாகவேண்டி வருகிறது.

மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. அடுத்தடுத்து நடைபெறும் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்கள் மத்திய அரசின்மீது அழுத்தமான அவநம்பிக்கையையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

*

முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் காலமானார். நீண்டநாள் புற்றுநோய். நீடித்த சிகிச்சை. தனது வலியையும் உடல்சார்ந்த வேதனைகளையும் எப்போதும் வெளிக்காட்டாமல், தன்னால் இயன்றவரை அரசியலில் உற்சாகத்துடனே இறுதிவரை செயல்பட்டு வந்தவர்.

இலங்கையிலிருந்து ஐ.பி.கே.எஃப்பைத் திரும்பப் பெற்றது – போஃபர்ஸ் – மண்டல் கமிஷன் ஆகிய மூன்று காரணங்களுக்காக வி.பி.சிங் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டியவர்.

வெகுகாலம் முன்பு புதுடெல்லியில் அவரைச் சந்தித்து ஒரு பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத்தலைவராக என் நண்பர் கணபதி [தலைநகரத்தான் என்ற பெயரில் தமிழிலும் எழுதுவார்.] பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது உதவியால்தான் அந்தப் பேட்டி சாத்தியமானது. சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தப் பேட்டியின் இறுதியில் நான் கேட்ட கேள்வி: எப்பப்பார் கருணாநிதியைப் புகழ்ந்துகொண்டே இருக்கிறீர்களே, எந்த வகையில் அவர் உங்களை இத்தனை பாதித்திருக்கிறார்?

‘அவரது அனுபவம் பெரிது. அத்தனை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட வேறு யாராக இருந்தாலும், ஆணவத்தில் நிலைகொள்ளாமல் திரிவார்கள். ஆனால் என் நண்பருக்கு எப்போதும் அப்படியொரு எண்ணம் எழுந்ததே இல்லை. அகங்காரமில்லாத அரசியல்வாதி அவர். மற்ற அனைத்துக் காரணங்களைக் காட்டிலும் இதுவே எனக்கு முதன்மையான காரணம்.’

அந்தப் பேட்டியில் ராஜிவ் காந்தி, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி போன்ற வேறு பல அரசியல்வாதிகள் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் சிங் தமது அபிப்பிராயங்களை வெளிப்படையாகப் பேசினார். துரதிருஷ்டவசமாக நான் எடுத்துச் சென்றிருந்த ஒலிப்பதிவுக் கருவி பேட்டி நேரம் முழுதும் வேலை செய்யாமலேயே இருந்துவிட்டதை வெளியே வந்தபிறகுதான் கவனித்தேன்.

என்னுடன் வந்திருந்த கணபதியும் ஒரு ரெக்கார்டர் எடுத்து வந்திருந்தார். நல்ல வேளையாக அதில் பேட்டி பதிவாகியிருந்தது. ‘கவலைப்படாதீர்கள். நான் இந்த கேசட்டைப் பிரதியெடுத்து உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்’ என்று சொல்லி என்னை ஊருக்கு அனுப்பினார்.

துரதிருஷ்டம்தான். வேறென்ன சொல்ல? நான் சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கிய மறு தினமே கணபதி மாரடைப்பில் காலமான செய்தி வந்தது.

என் பத்திரிகை வாழ்வில், பிரசுரமாகாத ஒரே பேட்டி அதுதான்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

5 comments

  • //மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. //

    மோடி பிரதமரானால் தீபாவளி பட்டாசை வெடிக்கக் கூட யோசிப்பார்கள் என்கிற தொனியில் இணையத்தில் சில அருள்வாக்குக் குரல்கள் கேட்கிறதே? அதைப் பற்றி என்ன நினைனக்கிறீர்கள்?

  • * மோடி பிரதமரானால் தீபாவளி பட்டாசை வெடிக்கக் கூட யோசிப்பார்கள் என்கிற தொனியில் இணையத்தில் சில அருள்வாக்குக் குரல்கள் கேட்கிறதே? அதைப் பற்றி என்ன நினைனக்கிறீர்கள்? *

    அது சரி

    மன்மோகன் சிங்காவது கமாண்டோக்களை அனுப்பினார்

    பாஜக, தீவிரவாதிகளை விடுதலை செய்தல்லவா ராஜ மரியாதையுடன் அனுப்பி இருப்பார்கள்

    ஏற்கனவே அதைத்தானே செய்தார்கள்

    பின் ஏன் இந்த அருள்வாக்குகளோ

  • இன்றைக்கு இருக்கும் சூழலில் , நீங்கள் மும்பை தாக்குதலை பற்றி புத்தகம் போடலாம் . ஆச்சர்யம் இல்லை . கடைகளில் அது ஹிட்லர் புத்தகம் போல் நன்றாக கூட விற்பனியாகலாம் , அதற்க்கு நாள் உண்டு . தமிழகத்தில் இருக்கும் மிக சில ” Terrorologist” இல் நீங்களும் ஒருவர் . முழு விவரமும் வந்தபின் நீங்கள் எழுவது ஒருபுறம் இருக்கட்டும் , இப்பொழுது சொல்லுங்கள் , இது எத்தனை நாள் திட்டமிட்டு நடந்திருக்கு ? விட்டால் அவர்கள் உசிலம்பட்டி முஜாஹிதீன் என்று கூட பெயர் வைத்து கொள்வார்கள் , ஒன்றும் செய்வதற்கில்லை . நீங்கள் ஒரு அக்மார்க் தீவிரவாத எழுத்தாளர் என்பதால் தான் கேள்வி . விஷயத்தின் வீர்யம் புரிந்திருக்கும் , சில நுணுக்கங்கள் உரைத்திருக்கும் . எம்-19 கொலம்பியாவில் “Palace of Justice” மீது நடத்திய தாக்குதலை ஒப்பீடு செய்யலாம் நீங்கள் . கேள்வி இது தான் , யார் ? எப்படி இவ்வளவு நுணுக்கமாக ? எப்படி இவ்வளவு பலம் அவர்களுக்கு ?

  • //மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை.//

    நல்லவராக மட்டும் இருந்துவி்ட்டால் போதுமா..? வல்லவராகவும் இருத்தல் வேண்டுமே..?

    அந்த நல்லவர் என்பதில் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருத்தலும் உள்ளடக்கியிருக்கிறது.. அப்போது இந்த நல்லவர் டிரேட் மார்க் காணாமல் போய்விட்டதே..

    ஒரு சமயம் நினைத்தால் இவருக்கு நரசிம்மராவ் எவ்வளவோ பரவாயில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது..

  • //நல்லவராக மட்டும் இருந்துவி்ட்டால் போதுமா..? வல்லவராகவும் இருத்தல் வேண்டுமே..?//

    உ.த. அவர்களே.. இதற்கு பதிலாக நேரடியாகவே அத்வானிக்கு நீங்கள் சொம்படித்துவிட்டு போயிருக்கலாமே?

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading