சோதிடர்களின் கூட்டுச் சதி

கலைத்துறையில் புதிய தடங்கள் பதிப்பீர்கள். சொல்வாக்கும் செல்வாக்கும் மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் கூடும். எதிரிகள் சில்லறைத் தொல்லை தருவார்கள். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். பயணம் செய்யும்போது எச்சரிக்கை அவசியம். விபத்துகள் நேரிடலாம்.

மேற்கண்ட சோதிடப் பலன்கள், புத்தாண்டை ஒட்டி பண்டிதர் காழியூர் நாராயணன், யதார்த்த ஜோதிடர் செல்வி, சே… ஷெல்வி, குமுதம் ஜோதிடம் ராஜகோபாலன், தினத்தந்தி சிவல்புரி சிங்காரம் உள்ளிட்ட அத்தனைபேரும் எனக்காகச் சொல்லிவைத்தவை.

இதில் ஒன்று நேற்று பலித்துவிட்டது.

கண்காட்சி முடிந்து வீடு திரும்பும் வழியில் வள்ளுவர் கோட்டத்துக்கு எதிரே சிக்னலை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் என்னுடைய வண்டியின்மீது மோத, வேறு வழியே இல்லாமல் விழுந்து காலை உடைத்துக்கொண்டேன். இடது முழங்காலுக்குமேல் அசைக்கக்கூட முடியவில்லை. முகில் நேற்று என்னுடன் வந்தபடியால் ஒழுங்காக வீடு வந்து சேர முடிந்தது. இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன்.

இடித்த நல்ல மனிதர் திரும்பிக் கூடப் பாராமல் பறந்துவிட்டார். என்ன அவசரப் பணியோ தெரியவில்லை. அவருக்கு ஏதும் விபத்தாகாமல் இருக்கவேண்டும்.

முட்டியைச் சுற்றியுள்ள பகுதியில்தான் பாதிப்பு என்பதால் காலை ஓரடிகூட எடுத்து வைக்க முடியாத நிலை. இரவு மிகவும் தாமதமாகிவிட்டபடியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இப்போதுதான் கிளம்புகிறேன். எனக்கென்னவோ, எலும்பு முறிவு இல்லை; தசைநார்கள் ஜாம் ஆகியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதிக வீக்கமில்லை. ஆனால் காலை அசைக்க முயன்றால் வலி அதிகமாக உள்ளது.

நல்லவேளையாக இந்த ஒரு கால் தவிர வேறு எந்தப் பிராந்தியத்திலும் சிறு அடிகூடப் படவில்லை. ரத்தகாயம் ஏதுமில்லை. உட்கார்ந்து எழுத முடிகிறது. எழுந்துபோய் மாவா துப்பத்தான் முடியவில்லை.

இன்றைக்கு புத்தகக் கண்காட்சிக்கு என்னால் போகமுடியப் போவதில்லை. டாக்டர் ஜக்கம்மாவாகி ஏதாவது நல்லவார்த்தை சொல்லி, துரித வைத்தியம் பார்த்தால் இரண்டு, மூன்று நாள்களில் சரியாகிவிடலாம். அல்லது சினிமா டாக்டர் மாதிரி மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி ‘ஐயம் சாரி மிஸ்டர் ராகவன். உங்க கால் எலும்புகள் கண்டபடி உடைஞ்சிருக்கு. நீங்க ஒரு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்தே தீரணும்’ என்பாரேயானால் எனக்கு கண்காட்சி ரிப்போர்ட்டை நீங்கள்தான் தந்தாகவேண்டும்.

கண்காட்சியில் என்னுடைய மாயவலையும் Excellentம் இன்றோ நாளையோ வெளியாகும் என்று நினைக்கிறேன். பார்த்துவிட்டுப் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் எழுதுங்கள்.

Share

35 comments

  • கன்னாப்பின்னான்னு எங்கயோ வாய் விட்டதுக்கு வீட்டு வாசலில் ஆட்டோ வந்திருச்சுப் போல!! உடம்பைப் பார்த்துக்கும்வோய்!!

  • ராகவன். மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு பதிப்பாளன் என்கிற முறையிலும் ஒரு வாசகன் என்கிற வகையிலும் உங்களின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் இரண்டொரு நாளில் (அல்லது மணி நேரத்தில் நலம் பெற) இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  • சீக்கிரமே குணமடைந்து புத்தக திருவிழா திரும்ப வாழ்த்துக்கள்
    அன்புடன்
    நடராஜன்

  • முதலில் elastocrepe bandage வாங்கி சுற்றிவும். அதன் பிறகு வலி குறையும். பிறகு வெளியில் சென்று மருத்துவரை பாருங்கள்

  • சீக்கிரமே குணமடைய பிராத்தனைங்கள். ஒன்னும் ஆகியிருக்காது, சும்மா தைலம் போட்டா போதும்னு சொல்லப்போறாங்க பாருங்க.

  • அன்பின் பாரா,

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதுவும், புத்தகக் காட்சி சமயத்தில்,

    விரைவில் குணமடைய பிரார்த்தனைகளுடன்.

    இன்னும் இரண்டே தினங்களில் பு.கா யில் உங்களைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்!

    எ.அ.பாலா

  • அடாடா, உடம்பை கவனித்து கொள்ளவும்… சீக்கிரம் குணமாகுங்கள்…

  • நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு முறிவு இல்லை. ஆனால் எலும்பு அல்லது தசை நார்கள் அல்லது இரண்டுக்கும் இடையே ஏதோ / என்னவோ ஜாம் ஆகியிருக்கிறது. லிக்விட் அல்லது ரத்தக் கசிவு இருக்கலாம் என்று டாக்டர் சந்தேகப்பட்டார். முட்டியில் மும்முறை இஞ்செக்‌ஷன் செய்தும் பார்த்தார். [கொலை வலி.] இறுதியில் எலும்புகளுக்கிடையே ரத்தக்கசிவு இருப்பது உறுதிப்பட்டது. பத்து தினங்களுக்கு காலைச் சற்றும் மடக்காமல், நீட்டாமல் அப்படியே பார்பி பொம்மை போல் வைத்திருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். பத்து நாள் முழு ஓய்வுக்குப் பிறகு வலி, காயம் நீங்கி நடக்கத் தொடங்க இயலும். ஒரு வேளை அப்போதும் முடியாது போகுமானால் எம்.ஆர்.ஐ. எடுத்துப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இப்போதைக்கு இடதுகால் முட்டியின்மேல் மெத்தென்று ஓர் அட்டை வைத்து மேலுக்கு ஒரு கட்டுப் போட்டு, அதன்மீது கிரிக்கெட் வீரர்கள் மட்டை பிடிக்கும்போது அணிந்துகொள்ளும் pad மாதிரி ஒன்றை வைத்துச் சுற்றியிருக்கிறார்கள். குனிந்து பார்த்தால் உலகளந்த பெருமாள் போல் எனக்கு நானே தோற்றமளிக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவே முடியாது. வீட்டிலிருந்தபடியேதான் ஏதேனும் செய்யவேண்டும். யுத்தம் சரணம் எழுதலாம். நிறைய படிக்கலாம். சினிமா பார்க்கலாம். படுத்துத் தூங்கலாம்.

    ஒன்றுமில்லாவிட்டால் கால்கட்டு அனுபவங்கள் என்று வலைப்பதிவில் கட்டுரைத் தொடர் எழுதலாம். வேறொன்றும் செய்வதற்கில்லை – இப்போதைக்கு.

  • ஐயோ முருகா.. இப்படியொரு சோதனையை கொடுத்திட்டியே ராகவன் ஸாருக்கு..

    ஸார் ரொம்ப, ரொம்ப வருத்தமாயிருக்கு.. மாயவலை புத்தகத்துல உங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்கணும்னு நினைச்சேன்.. முருகன் ஏமாத்திட்டான்..

    சீக்கிரம் குணமாகட்டும்..

    போனில் நலம் விசாரிக்கலாம் என்று நினைத்து உங்கள் போன் நம்பரைத் தேடி, தேடி அலுத்துப் போய்விட்டது.. “மன்மோகன்சிங், சோனியாகாந்தியைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது” என்று சொன்னார்கள். பரவாயில்லை.. உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனக்கு போன் செய்யுங்கள். எனது எண் 9840998725.

  • ரத்தக் கசிவு மட்டும்தான் என்றால் அதிகம் பிரசினை இல்லை. ஆனால் ரெஸ்ட் அவசியம். ஆனால் அது பெரிய இம்சை. அக்டோபர் நடுவில் நானும் இது போல் ஒரு hit and run விபத்தை ( தேமே என்று தெருவில் நடந்து போகும் எழுத்தாளர்களை ஏநன்தான் பைக்கர்கள் போட்டுத் தாக்குகிறார்களோ தெரியவில்லை. பின்னால் ஏதேனும் மாயவலை இருக்கிறதோ?) சந்தித்து கணுக்காலில் விரிசலும் அதற்கு மேல் ரத்தக் கசிவும் ஏற்பட்டு.. 3 வாரம் படுக்க வைத்து விட்டார்கள். அவ்வப்போது ஐஸ் வைத்தார்கள் (தலையில் அல்ல காலில் ) இப்போது கிழக்கு மொட்டை மாடி வரை ஏறி வருகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
    மற்ற புலன்கள் தெம்பொடு இருக்கும் போது நடமாட முடியாமல் இருப்ப்து அவஸ்தை +போர். நான் இந்த அவகாசத்தில் கல்கிக்கு ஒரு சிறு கதை எழுதினேன். நீங்கள் நிறைய எழுதியாயிற்று. எம்.ஜி.ஆர் + அம்மா அல்லது மஞ்சுளா நடித்த ஜிகினா கனவுக் காட்சிகள் நிறைந்த ப்டங்கள் மத்தியான வேளையில் பார்க்கக் கிடைக்கும். பாருங்கள். அவை வெளிவந்த போது நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள். இப்போது நல்ல் சந்தர்ப்பம். பொதிகை பக்கம் போய்விடாதீர்கள். அவர்கள் நான் பிறக்கும் முன் வெளி வந்த படங்களைப் போடுகிறார்கள்.

    பு.க.விற்கு இன்று நான் போயிருந்தேன். ஒன்றும் பிரமாதமில்லை. நாளை என் ரிப்போர்ட்டை எழுதுகிறேன்.

    விரைவில் குண்மாகி தெம்போடு வாருங்கள். தமிழுக்கு இன்னும் புதுப் புத்தகங்கள் கிடைக்கும்.
    அன்புடன்
    மால்ன்

  • அன்புள்ள மாலன்:

    நன்றி. இப்போதுதான் டாக்டர் ப்ரூனோ வீட்டுக்கு வந்துவிட்டுப் போனார். நீங்கள் சொன்னதையேதான் ஸ்பைன் சர்ஜனும் சொல்கிறார். பத்து நாள் நகராதே. ஆனால் எனக்கு டிவி ப்ராப்தியில்லை என்று இட்டமுடன் என்னப்பன் எழுதி வைத்துவிட்டான். இவ்விடம் இருபத்தி நான்கு மணிநேரமும் போகோதான் ஓடும். டோரா, மிஸ்டர் பீன், கார்ட்டூன் மிஸ்டர் பீன், ஆஸ்வல்ட், நாடி டைம், mad, அச்சுபிச்சு சீன விளையாட்டுகள் இன்னபிற.

    நான் நிறைய படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். சென்றமுறை பாஸ்டன் பாலா வந்தபோது ஆப்பிரிக்கா குறித்த புத்தகம் ஒன்று வாங்கி வந்திருந்தார். இன்னும் படிக்காமலேயே கிடக்கிறது. அதை முடிக்கவேண்டும். அ. முத்துலிங்கம் அனுப்பிய நாவல் ஒன்று. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஜோதிபாசு வாழ்க்கைவரலாறு.

    அருமையான வாய்ப்பு. நிச்சயம் வீணாக்க மாட்டேன்.

  • ரெஸ்ட் எடுக்க கிடைத்த சான்ஸ்ன்னு நினைச்சுக்கோங்க. விரைவில் அத்தலெட் வேகத்தில் ஓடக்கூடிய பலத்தை கால்கள் பெற வாழ்த்துகள்.

  • Take care Para. Visited Book fair yesterday and bought the book on Christianity by Xavier. Will visit yet again to get some books. Hope you recover fast.

  • நூறு பட்டியலை சு.வையில் போட்டு வைத்தேன். அதற்கு நன்றிகள். பு.கா சமயத்தில் இப்படி ஆகிவிட்டதே. உங்கள் தொடர் ரிப்போர்ட்டை கவனித்து வந்தேன்.

    சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறேன்.

    சத்தியா

  • மிகுந்த ஏமாற்றம்.

    மாய வலையை ஆன்லைனில் புக் செய்தேன். எப்படியும் பாரா ஸ்டாலில் இருப்பார். அவரின் ஆட்டோகிராபுடன் புத்தகத்தை வீட்டு நூலகத்தில் சேர்க்கப் போகிறேன் பார் என்று மனைவியிடமும் சொல்லி வைத்தேன். (நிலமெல்லாம் ரத்தம் உங்கள் கையெழுத்துடன் தான் என்னிடம் உள்ளது). என் மகள் என்னிடம் ராகவன் அங்கிள் கூட போட்டோ எடுக்கலாமாப்பா என கேட்டதற்கு அவர் அனுமதித்தால் கண்டிப்பாக எடுக்கலாம் என் நினைத்திருந்தோம்.

    சரி, இப்படி சோதிடர்கள் சதி செய்வார்கள் என் யாருக்குத் தெரியும்.

    முடிவாக என்னதான் சொல்கிறார்கள் இந்த மருத்துவர்கள்??

    எப்பொழுது வருவீர்கள்?

    இந்த முறை இல்லாவிட்டாலும், அடுத்த முறை மாயவலையை எடுத்து வருகிறேன். கையொப்பமிட்டுக்கொடுங்கள்.

  • அன்புள்ள பெஞ்சமின்,

    பத்து நாள்களில் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். கண்காட்சியில் முடியாவிட்டால் என்ன? நீங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள். அவசியம் சந்திப்போம்.

  • “ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.”

    இதுதான் கண் பட்டுவிட்டது போல இருக்கு. சீக்கிர்ம் வந்து ஒரு நாளைக்கு பத்து பதினைந்து பதிவுகள் போட்டு பழி வாங்கவும்.

    விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
    நடராஜன்
    நடராஜன்

  • //எழுந்துபோய் மாவா துப்பத்தான் முடியவில்லை.//

    :-))

    இடித்தவர் யாரென்று விசாரியுங்கள். தீவிரவாதக் குழு ஆசாமியாக இருக்கப் போகிறார். நான் வாழத்தாவிட்டாலும் எப்படியும் சீக்கிரம் குணமாகப் போகிறது என்பதால்….

    பு.க.வில் சந்திக்கலாமென்றிருந்தேன். 🙁

  • சுரேஷ் கண்ணன்

    விசாரித்ததில் தெரிய வநதது ” இடித்தவர் பாராவின் தீவிர(வாதி)விசிறி” என்பது மட்டும்
    நடராஜன்

  • I went to Kizhukku stall yesterday. Met all my friends there and i was really surprised how could para not be there…apparam sathya irunthaar..kettappo ippam padichathai short formla sonnar…i felt very bad..please take care Raghavan sir…i know you will make good use of this also.

  • மிகவும் வருத்தமாயிருக்கு சார்.. நீங்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்களின் சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பமே சூப்பர்..

  • “எழுந்துபோய் மாவா துப்பத்தான் முடியவில்லை”

    இன்னமும் விடவில்லையா?…நலம் பெற வாழ்த்துகள்…

    சென்னை மாநகரத்தில் வீடு வாங்கிய கையோடு ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் சேர்த்திருக்கலாமே!

  • கால் நல்லா இருக்கும்..இருக்கணும்..!

    கவலையே படாதீங்க..!
    நீங்க ஃபீனிக்ஸ் ….பறந்துறலாம்..!

  • விரைவில் குணமடைய வாழ்துகிறேன்
    த.முகெஷ் வேலு

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி