நாளிதழ்களில் இலவச இணைப்பாக தரப்படும் இதழ்களில் துணுக்கு, பொன்மொழி, கவிதை, என ஏதாவது ஒன்றை எழுதி அதன் கீழ் ”யாரோ” என போட்டிருப்பார்கள். இந்த தலைப்பை வாசித்ததும் அது தான் நினைவுக்கு வந்தது. ஆனால், கபடவேடதாரியில் ”யாரோ” யார்? என தெரிந்துவிடும் என்றே நினைக்கிறேன்.
தங்கள் உலகில் இருக்கும் வனம் குறித்து சூழியன் கூறும் தகவல்கள் ஒரு பிரமாண்ட வனத்தை மனதில் காட்சிகளாய் விரிய வைக்கிறது. வனமற்ற உலகில் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்ற சூனியனின் கேள்வி நமக்கும் உரியதாகிறது.
நீலநகரத்தில் இருக்கும் வனம் தன் உலகில் இருக்கும் வனத்திற்கு இன்னும் ஒரு படிமேலாக இருப்பதையும், வனவிலங்குகளும், அங்கு வசிக்கும் வனவாசிகளும் நெருங்கி வாழ்வதையும் காண்கிறான். உதாரணத்திற்கு, தன் வீட்டில் வசிக்கும் யாளிகளுக்கு இரு வேளையும் சர்க்கரை பொங்கல் போன்ற ஒன்றை உணவாகத் தருகிறார்கள்! புவிப்பந்தில் நாம் பார்த்து மிரளும் அத்தனை ஜந்துகளும் அவர்கள் வீட்டு வாசலில் சாய்ந்து கிடக்கின்றன. அவைகளை அவர்கள் சகஜமாகக் கையாள்கிறார்கள். தங்களின் கூரைகளை அவர்கள் மேயும் விதத்தை வாசிக்கும் போது சங்கப்பாடல்களில் வரும் கற்பனை நயம் நினைவில் வருகிறது.
வனவாசிகளுக்கிடையே நிகழும் பகை, அதை நாகரிகமாய் வெண்பலகையில் வெளிப்படுத்தும் போலி மனப்பான்மை எல்லாமே நம்மை சுற்றி நிகழ்பவைகளின் பிரதி எனலாம்! மனிதர்களோடு விலங்குகளும் அங்குள்ள நூலகத்தில் வசிக்கின்றன. வாசிக்கின்றன. ஆம். வனவாசகர்கள் சொற்களை மொத்தமாக நூலக அடுக்குகளில் இருந்து உறிஞ்சி எடுத்து வீட்டிற்கு வந்து அவைகளைப் பிரித்து வைத்து புரிந்து கொள்வார்களாம். அப்படியான ஒரு வரம் நமக்கெல்லாம் வாய்க்குமானால் வாசித்துச் செரிக்கலாம். இலக்கிய அரட்டையும் – அடிக்கலாம். ”திரு. யாரோ அனைத்துக் கிரகங்களிலும் பிரபலமானவர்” என்ற அறிமுகத்தை கவிதையைக் கடந்து நன்றி அறிவித்தலை வாசிக்கையில் எதார்த்தமாகி விடுகிறது!
நமக்குக் காட்டிய இந்த வன உலகை சூனியன் தான் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு விளக்கி ரிலாக்சேஷனுக்காக நாளை அங்கு செல்வோம் என்கிறான். திட்டமிட்டபடி மறுநாள் வனஎல்லைக்கு வந்த செம்மொழிப்ரியாவுக்கும், 16 ம் நரகேசரிக்கும், அதுல்யாவுக்கும் தனது புதிய இரு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வைப்பதோடு அத்தியாயம் நிறைவடைகிறது. வனத்திற்குள் அவர்கள் நுழைந்து நிகழ்த்தப்போகும் விசயங்கள் குறித்த அறிதலுக்கான ஆவல் அதிகரிக்கிறது.