எத்தனைக் கோடி இம்சை வைத்தாய்!

பொதுவாக எனக்கு டாக்டர், மருந்து, இஞ்செக்‌ஷன் என்றால் கொஞ்சம் அலர்ஜி. குறிப்பாக அவர் என்னத்தையாவது எழுதிக்கொடுத்து போய் டெஸ்ட் எடுத்துக்கொண்டு வா என்று சொல்லிவிடுவாரேயானால் குலை நடுங்கிப் போய்விடும். எதோ நாம்பாட்டுக்கு எம்பெருமானே என்று இருக்கிற ஜோலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம், டெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழி என்று வாங்கும் பணத்துக்கு வஞ்சனையில்லாமல் கச்சாமுச்சா இங்கிலீஷில் கண்ட வியாதி வெக்கைகளைக் குறிப்பிட்டு மனச்சோர்வில் தள்ளிவிடுவார்கள் என்று பாலகாண்டத்திலிருந்தே ஒரு இது. கூடுமானவரை டாக்டரைப் பார்ப்பதைத் தவிர்க்கவே எப்போதும் நினைப்பேன்.

தலைவலி, ஜுரம் என்றால் சமாளிக்க முடிந்தவரை சமாளித்துவிடுவேன். நிலைமை கைமீறும்போது வேறு வழியில்லாமல் போய்விடும். என் அந்தராத்மாவின் அலறலைப் பொருட்படுத்தாமல், என்னவோ பிக்னிக் அழைத்துச் செல்கிற பரவசத்துடன் என் மனைவி டாக்டர் வீட்டுக்குப் புறப்பட்டுவிடுவாள். அவர் என்னவாவது டெஸ்ட் எழுதிக் கொடுத்துவிட்டால் போதும். அவள் பரவசம் எல்லை தாண்டிய பயங்கரவாதமாகிவிடும். நகரின் எந்த மூலையில் இருந்து எந்த மூலைக்கும் டெஸ்டுகளின் பொருட்டு என்னை உலா அழைத்துச் செல்வது அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

எக்ஸ் ரே எடுக்க, ரத்தம் எடுக்க என்று இதுநாள் வரை மிக எளிய பரிசோதனைகளுக்குரிய முயலாகத்தான் இருந்துவந்திருக்கிறேன். சென்ற மாத ஆரம்பத்தில் என்னப்பன் என்னை வைத்து ஒரு திருவிளையாடல் ஆடிப்பார்க்க முடிவு செய்தான். அதன் விவரம் பின்வருமாறு:-

‘கங்கிராஜுலேஷன்ஸ். உனக்கு நாப்பது வயசு’ என்றாள் என் மனைவி.

‘ஆமாமாம். நாய்க்குணம் வந்துவிட்டது’ என்று பதில் சொன்னேன். யாரும் தப்பர்த்தம் கொள்ளக்கூடாது. நாயின் குணம் என்ன? சோறு போடும் வீட்டுக்கு விசுவாசமாக இருப்பது. உரிமையாளரிடம் பாசத்தோடு நடந்துகொள்வது. எப்பப்பார் காலைச்சுற்றி வருவது.

ஊரைச் சுற்றி வீணாய்ப் போன காலமெல்லாம் முடிந்து நாற்பது வயதில் ஒருத்தன் வீட்டை நினைக்கத் தொடங்கும்போது உருவாகும் குண மாற்றத்துக்கே நாய்க்குணம் என்று பெயர்.

இதை என் மனைவிக்கு விளக்கப்போக, விளைந்தது விபரீதம்.

‘சரி, அப்படின்னா நிஜமாவே உனக்கு எம்மேல அக்கறை இருக்குமானா நீ ஒரு கம்ப்ளீட் மெடிக்கல் செக்கப் பண்ணிக்கணும்’ என்று சொன்னாள்.

இதென்ன விபரீதம்?

அப்படித்தானாம். நாற்பது வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட கோளாறுகள் சுமார் ஒருநூறு ஒரு மனிதனின் வாழ்வில் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும் என்றும், முளையிலேயே கவனித்துவிடுவது சாலச்சிறந்தது என்று டாக்டர் பெருமக்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தாள்.

இந்த டாக்டர்களுக்கு வேறென்ன வேலை? என்னத்தையாவது சொல்லி பயமுறுத்திக்கொண்டே இருப்பது, அல்லது செலவு வைத்துக்கொண்டே இருப்பது. அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப்பார்த்தேன். ‘அப்ப உனக்கு நாய்க்குணம் இன்னும் வரல’ என்றாள் அதர்ம பத்தினி.

இது ஏதடா ரோதனை என்று அப்போதைக்கு விஷயத்தைத் தள்ளிப்போட, ‘சரி சரி. இப்பென்ன அதுக்கு? போய் டாக்டரை ஒருநாள் பாப்போம். டெஸ்டெல்லாம் எழுதி வாங்கி அப்புறம் போயிட்டு வருவோம்’ என்று சொல்லிவைத்தேன்.

சொய்யாவென்று கைப்பையைத் திறந்து ஒரு ஸ்லிப்பை எடுத்து நீட்டினாள். வெலவெலத்துப் போய்விட்டேன். என்னை நேரில் பார்க்காமலேயே என் மனைவியின் பேச்சைக் கேட்டு, என் கல்யாண குணங்களைப் புரிந்தவராக ஒரு முழு மருத்துவப் பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்திருந்தார் அந்த உத்தமோத்தமர்.

ரத்தப்பரிசோதனை – உணவுக்கு முன், உணவுக்குப் பின், ரத்த அழுத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஈசிஜி, எக்ஸ்ரே, எக்கோ என்று ஒரு முழு வெள்ளைத்தாளில் ஏகப்பட்ட பரிசோதனைகள் எழுதி கையெழுத்திட்டிருந்தார். சென்னை மாநகரில் சகாய விலைக்கு இவையனைத்தையும் சாத்தியமாக்கும் ஒரு பரிசோதனைக் கூடத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு கணம் எனக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நாளது தேதிவரை எந்த வியாதி வெக்கையும் இருப்பதாக என் உள்ளுணர்வு எனக்குச் சொன்னதில்லை. பார்ப்பதற்குக் கொஞ்சம் தும்பிக்கையில்லாத பிள்ளையார் மாதிரி இருந்தாலும் தேக சௌக்கியத்துக்கு ஒரு குறையும் கிடையாது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் வேலை பார்க்கிறேன். மூன்று மணிநேரம் தூங்கினால் போதும் எனக்கு. முகத்தில் மட்டும் அவ்வப்போது எண்ணெய் அல்லது அசடு வழிந்து கொஞ்சம் களைப்பு வெளிப்படுமே ஒழிய, எழுத்திலோ வேறு எந்தச் செயலிலோ அதுவும் பிரதிபலிக்காது.

திடீரென்று இப்போது செக்கப் அது இது என்று போய் சர்க்கரை இருக்கிறது, ரத்த அழுத்தம் இருக்கிறது, கிட்னியில் ஒரு பெரிய கல் இருக்கிறது, அது கங்க மன்னன் பிருத்வீபதி தலையில் சுமந்துவந்த கல்லைக் காட்டிலும் பெரிது, மூளை நரம்பில் என்னமோ கோளாறு என்று என்ன எழவையாவது சொல்லித் தொலைத்துவிட்டால் தமிழகத்தின் எதிர்காலம் என்னாவது?

‘அதெல்லாம் முடியாது; வந்தே தீரவேண்டும்’ என்று சொல்லிவிட்டாள் பத்னி. கேட்காவிட்டால் இருக்கவே இருக்கிறது பட்னி.

அரைநாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அன்று காலை ஆறு மணிக்கு சென்னை நந்தனத்தில் இருந்த அந்தப் பரிசோதனைச் சாலைக்குள் ஒரு பெருச்சாளிபோல் நுழைந்தேன். அந்த அதிகாலை நேரத்தில் ஓர் இளம் பெண் அங்கே ட்யூட்டியில் இருந்தாள்.

என்ன இது? ஆண்களைப் பரிசோதிக்க ஆண் பரிசோதனையாளர்கள் கிடையாதா இங்கே? என்ன அக்கிரமம்.

’போ’ என்றாள் என் மனைவி. போர்க்களத்துக்குத் திலகமிட்டு அனுப்பிய புறநாநூற்றுப் பெண்டாட்டி. அவளுக்கென்ன, சொல்லிவிட்டாள். அகப்பட்டவன் நானல்லவா?

அந்தப் பெண் ரத்தம் எடுக்க என் நாடி நரம்புகளைத் தேடி சில நிமிடங்களில் களைத்துப் போனாள். ‘குண்டா இருக்கறதால நரம்பு தட்டுப்படலை’ என்று கமெண்ட் வேறு. பல்லைக் கடித்துக்கொண்டேன். கண்ணை இறுக மூடிக்கொண்டு ஒரு கொலைவாள் தாக்குதலுக்குத் தயாராக இருந்தேன். சுரீலென்று ஒரு சிறு வலிதான். கண்ணைத் திறந்து பார்த்தால் ஓர் ஆழாக்கு ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருந்தாள்.

‘ஓகே சார். இந்தாங்க’ என்று ஒரு சிறு டப்பாவைக் கொடுத்தாள். பழனி பஞ்சாமிருத டப்பாவின் ரெட்யூஸ்டு சைஸில் இருந்த அந்த டப்பா எதற்கு என்று எனக்குச் சட்டென்று புரியவில்லை. விழித்தேன்.

‘யூரின் டெஸ்டுக்கு சார்’ என்றது அந்தக் குழந்தை. கொஞ்சம் அசிங்கமாக வெட்கப்பட்டபடி அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். வாழ்வில் முதல்முறை! என் மனைவியைக் கடந்துபோகும்போது, ‘மொரார்ஜி தேசாய் ஞாபகத்துக்கு வரார்’ என்றேன். ‘வீட்டுக்கு வா, கொண்டேபுடுவேன்’ என்றது அவள் பார்வை. சே. எத்தனை கோடி இம்சை வைத்தாய் இறைவா.

நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது கையில் ஏந்தியிருந்த அந்த டப்பாவை ஓர் அகல் விளக்கு எடுத்து வரும் லாகவத்தில் ஏந்தியிருந்தேன் போலிருக்கிறது. வரிசையில் அடுத்து காத்திருந்த இரண்டு பேர் சட்டென்று எழுந்து நின்றார்கள். ஒரு மாதிரியாகப் போய்விட்டது எனக்கு. சடாரென்று கையைக் கீழே இறக்கி, பின்புறம் மறைத்துக்கொண்டேன். ‘ஏன் தலைல வெச்சிண்டு வரவேண்டியதுதானே?’ என்று ஒரு அசரீரி கேட்டது. அசரீரிதான். சத்தியமாக என் மனைவியாக இருந்திருக்காது.

இதெல்லாம் பரவாயில்லை. அப்டமன் ஸ்கேன் என்று கடுங்குளிர் பிரதேசமொன்றில் படுக்கவைத்து, ‘பேண்ட் பட்டன கழட்டிருங்க சார்’ என்றார் என்னைவிட குண்டாக இருந்த ஒரு பெண்மணி.

கடவுளே, இவர்தான் ஸ்கேன் எடுக்கப்போகிறாரா? எனக்கு ஒரே கூச்சமாகப் போய்விட்டது. ’ரொம்பக் குளிருது. ஒரு போர்வை இருக்குங்களா?’

‘இதென்ன லாட்ஜு ரூமா? ரெண்டு நிமிட் வெயிட் பண்ணுங்க. டாக்டரம்மா வருவாங்க. பேண்டு லூஸ் பண்ணீருங்க’ என்று சொல்லிவிட்டுப் போனாள் அந்த அம்மணி.

டாக்டர்-அம்மாவா!

அடக் கொடுமையே? அந்தப் பரிசோதனைச் சாலையில் 33 அல்ல; 99 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்குத்தான் என்பது பிறகுதான் தெரிந்தது. ஒரே ஒரு அப்பாவி வாட்ச்மேன் மட்டும்தான் அங்கே என் கண்ணில் பட்ட ஆண் சிங்கம்.

அப்டமன் ஸ்கேன், எக்கோ, ஈசிஜி என்று வரிசை வரிசையாக ஒவ்வொரு சோதனைக் கூடத்திலும் என்னை ஒரு வளத்தியான பெருச்சாளியாகக் கருதி பரிசோதித்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

சரியாக அரைநாள் ஆனது அனைத்துப் பரிசோதனைகளும் முடிவதற்கு. மாலையே ரிசல்ட் கொடுத்துவிட்டார்கள். எனக்கு நன்கு தெரிந்த ரிசல்ட் தான். ஒரு பிரச்னையும் இல்லை.

ஆனால் நாள் முழுக்க நான் பட்டபாடு!

எக்கோ எடுத்த டாக்டர், ‘கொஞ்சம் அந்தப் பக்கமா திரும்பிப் படுங்க சார்’ என்றார். திரும்பினேன். ப்ரொஃபைல் போஸில் என் மத்தியப் பிரதேசம் தனித்த ஒரு பாபிலோன் தொங்கும் தோட்டத்து தர்பூஸ் மாதிரி அந்த மர பெஞ்சின்மீது பொத்தென்று விழ, வாக்கிங், எக்சர்சைஸ், உணவுக்கட்டுப்பாடு குறித்தெல்லாம் சுமார் முக்கால் மணி நேரத்துக்கு போதித்துத் தீர்த்துவிட்டார். என்னத்தைச் சொல்லுவேன்? கல்மிஷம் இல்லாமல் வளர்ந்த உடம்பு. இப்படி கண்ட பேரிடம் கல்லடியும் சொல்லடியும் படவேண்டியிருக்கிறது.

வியாதி ஒன்றுமில்லாது போனாலும் நிறைய துக்கமும் துயரமும் சுமந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். அடக்கமாட்டாமல் என் மனைவியிடம், ‘இன்னிக்கு ஒரு முழுநாள் என்னை பாடா படுத்தி என்ன சாதிச்சே?’

‘பாத்து ரசிச்சேனே. அதைவிடவா?’ என்றது ஒரு குரல். இதுவும் அசரீரிதான். அவளில்லை.

Share

23 thoughts on “எத்தனைக் கோடி இம்சை வைத்தாய்!”

 1. ரத்தினசாமி

  அற்புதம். என்ன சரளமான நகைச்சுவை! பின்னி பெடலெடுக்கிறீர்கள் பாரா! பகிர்வுக்கு மிக்க நன்றி.

 2. “திரும்பினேன். ப்ரொஃபைல் போஸில் என் மத்தியப் பிரதேசம் தனித்த ஒரு பாபிலோன் தொங்கும் தோட்டத்து தர்பூஸ் மாதிரி அந்த மர பெஞ்சின்மீது பொத்தென்று விழ!”
  நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருக்கிறேன் :), wonderful piece of writing!

 3. டப்பாவை ஓர் அகல் விளக்கு எடுத்து வரும் லாகவத்தில் ஏந்தியிருந்தேன் போலிருக்கிறது. வரிசையில் அடுத்து காத்திருந்த இரண்டு பேர் சட்டென்று எழுந்து நின்றார்கள்….. ஹா ஹா ஹா முடியல….

 4. உடல் ஆரோக்கியத்தை பேணுவது மூன்று பிரிவில் அடங்கும்

  1.வருமுன் காப்பது:
  அதாவது உணவு கட்டுப்பாடு,விடாமல் உடற்பயிற்சி செய்வது ,மனதை அழுத்தமின்றி,சந்தோஷமாக வைத்திருப்பது

  2.வந்து விட்டதா என பரிசோதித்து கொள்வது
  அதான் Master Check-up!

  3 வந்துவிட்டால் மருத்துவர் சொல்படி நடப்பது:
  மருந்து மற்றும் பழக்க வழக்கங்கள்

  இதில் எந்த கணவனுக்கும் தன்னைப் பொறுத்தவரையிலோ,அல்லது தன் மனைவியைப்பொறுத்தவரையிலோ,மேற்கண்ட மூன்றிலும் துளியும் அக்கறை கிடையாது

  ஆனால் மனைவிக்கு தன்னைப் பொறுத்தவரையில் மேற்கண்ட மூன்றிலும் துளியும் அக்கறை கிடையாது என்றாலும்
  தன் கணவனைப்பொருத்தவரையில் item ஒன்றில் அக்கறை இல்லாவிட்டாலும்,இரண்டிலும் மூன்றிலும் அளவுக்கதிகமான அக்கறை.(சும்மாவா,தாலி விஷயமாச்சே!)

  எனவே நாம் கஷ்டப்படவே பொறந்தவர்கள்

  ஏப்ரல்’12 check-up பிற்கு ரெடியாகவும்!!
  😉

 5. நகைச்சுவைக்காக தனியே மெனக்கெட்டு எழுதாமலேயே உருவாக்கப்பட்ட ஒரு முழு நீள நகைச்சுவை பதிவு.

  # டவுட்டு: தொடர்ந்து ஒரே சுய எள்ளல் (வார்த்தை பிரயோகம் சரிதானா?) நிறைந்த பதிவுகளாக வருவதன் காரணம் மனம் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதோ?

  கிங் விஸ்வா

  லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

  சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

 6. கொஞ்சம் மஞ்சுளா ரமேஷ் n சினேகிதி பா ரா article வாடை அடிக்கிறது இருந்தாலும் ::)

  1. சஹ்ருதயன், மிகச் சரி. இது சினேகிதியில் வெளியானதே. சென்ற கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேனே.

 7. Athammohamed

  “பாபிலோன் தொங்கும் தோட்டத்து தர்பூஸ் மாதிரி”-சிரிப்பை அடக்கமுடியலே குருவே. 🙂 அலுவலக நண்பர்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

 8. ||கங்கிராஜுலேஷன்ஸ். உனக்கு நாப்பது வயசு’ என்றாள் என் மனைவி.

  ‘ஆமாமாம். நாய்க்குணம் வந்துவிட்டது’ என்று பதில் சொன்னேன். யாரும் தப்பர்த்தம் கொள்ளக்கூடாது. நாயின் குணம் என்ன? சோறு போடும் வீட்டுக்கு விசுவாசமாக இருப்பது. உரிமையாளரிடம் பாசத்தோடு நடந்துகொள்வது. எப்பப்பார் காலைச்சுற்றி வருவது.

  ஊரைச் சுற்றி வீணாய்ப் போன காலமெல்லாம் முடிந்து நாற்பது வயதில் ஒருத்தன் வீட்டை நினைக்கத் தொடங்கும்போது உருவாகும் குண மாற்றத்துக்கே நாய்க்குணம் என்று பெயர்.||

  ||நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது கையில் ஏந்தியிருந்த அந்த டப்பாவை ஓர் அகல் விளக்கு எடுத்து வரும் லாகவத்தில் ஏந்தியிருந்தேன் போலிருக்கிறது. வரிசையில் அடுத்து காத்திருந்த இரண்டு பேர் சட்டென்று எழுந்து நின்றார்கள். ஒரு மாதிரியாகப் போய்விட்டது எனக்கு. சடாரென்று கையைக் கீழே இறக்கி, பின்புறம் மறைத்துக்கொண்டேன். ‘ஏன் தலைல வெச்சிண்டு வரவேண்டியதுதானே?’ என்று ஒரு அசரீரி கேட்டது||

  ||‘இதென்ன லாட்ஜு ரூமா? ||

  ||என் மத்தியப் பிரதேசம் தனித்த ஒரு பாபிலோன் தொங்கும் தோட்டத்து தர்பூஸ் மாதிரி அந்த மர பெஞ்சின்மீது பொத்தென்று விழ||

  தேவனின் எழுத்து தோற்றது போங்கள்…அவருடைய துப்பறியும் சாம்பு கதைகளில் தான் அற்புத நகைச் சுவை ரசித்திருக்கிறேன்..

  க்ளாஸ் !

  ஆனால் சுய விமர்சனம் அல்லாத இவ்வளவு நகைச்சுவையுடன் எழுத்து சாத்தியப்படுமா என்று யோசிக்கிறேன்…?!

  ||வாக்கிங், எக்சர்சைஸ், உணவுக்கட்டுப்பாடு குறித்தெல்லாம் சுமார் முக்கால் மணி நேரத்துக்கு போதித்துத் தீர்த்துவிட்டார்.||

  இதெல்லாம் பற்றி நானே முன்னாடி சொல்லியிருக்கேனே !( என்று ஒரு குரல் எனக்கு படிக்கும் போது கேட்டாற் போலிருந்தது..ஆனால் பக்கத்தில் எவரையும் காணோம்..ஒரு வேளை அசரீரியோ !? )
  :))

  1. //சுய விமர்சனம் அல்லாத இவ்வளவு நகைச்சுவையுடன் எழுத்து சாத்தியப்படுமா என்று யோசிக்கிறேன்…?!//

   அறிவன்! மிகச் சரியாகப் பிடித்துவிட்டீர்கள். நகைச்சுவை என்பது உண்மையை அதன் மூக்குக்கு அருகே போய் நின்று பார்த்தால் பிறக்கிற எழுத்து. அடுத்தவர் அருகே அத்தனை நெருக்கமாகப் போவது ஆபத்து. நிலைக்கண்ணாடிதான் நமக்கு வசதி. முற்றிலும் கற்பனையாக எழுதப்படும் நகைச்சுவை ஓரிடத்திலும் சிரிப்பை வரவழைக்காது என்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.

 9. நாற்பது என்றால் நிஜமாகவே முப்பத்தொன்பதுக்கு பிறகு வரும் அதே நாற்பது தானா?

  1. பஷீர்: நாற்பதென்றால் முப்பத்தொன்பதற்கு அடுத்து வருவதல்ல. நாற்பத்தொன்றுக்கு முன்னால் வருவது.

 10. சுப்ப்ராமன்

  அற்புதமான நகைச்சுவை மிளிரும் நடை, பாரா. குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து விட்டீர்கள்.

 11. அன்பின் பாரா! உங்களுடைய எழுத்துக்களின் தீவிர வாசகன் நான். உங்களுடைய பல புத்தகங்களை படித்திருக்கின்றேன். பதிவினில் நீங்கள் இடுகிற அனைத்து இடுகைகளையும் படித்து விடுவேன். நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்பதை அறிந்துக்கொள்ள ஆவல். பல வேலைகளுக்கிடையினில் உங்களுக்கு எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது? உங்களின் எல்லா பதிவுகளும் ஒரு சீரான தரத்தில் இருக்கின்றன. அதை எவ்வாறு நிர்வகிப்பு செய்கின்றீர்கள்? சீரியசான விதயங்களுடன்கூட நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்களே, இது எப்படி? சீரியஸ் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை எழுத வராது என்பார்களே. உங்கள் எழுத்துக்களுக்கு உங்களுடைய இல்லத்தில் ஆதரவும் ஊக்கமும் அளிப்பார்களா?

  வரம்பு மீறியனவாகவும், அற்பத்தனமாகவும் இக்கேள்விகள் இருக்குமானால் தயவுசெய்து எடுத்துவிடுங்கள். பல நாட்களாகக் கேட்க விரும்பியவற்றை கேட்டுவிட்டேன். பிழை இருந்தால் மன்னிப்பீர்.

  தங்கள் வாசகன்.

 12. அம்பிகா சோனி

  நகைச்சுவை உங்களுக்கு எப்போதுமே சரளமாக வருவதுதான், கல்கி காலத்திலிருந்தே. உடம்பிற்கு எதுவுமில்லை; பூரண ஆரோக்யம் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறதே அதுவே பரம சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் இது போன்று எழுதிக் குவிக்க வாழ்த்துகள்

  இப்படிக்கு
  புனை பெயரில் எழுதும்
  ஒரு போளி(!) எழுத்தாளன்

 13. /சஹ்ருதயன், மிகச் சரி. இது சினேகிதியில் வெளியானதே. சென்ற கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேனே./

  பிறகு தான் கவனித்தேன் ! இருந்தாலும் கொஞ்சம் பேரு அந்த பத்திரிக்கையும் தெரிஞ்சுக்கட்டுமே!

  /சுய விமர்சனம் அல்லாத இவ்வளவு நகைச்சுவையுடன் எழுத்து சாத்தியப்படுமா என்று யோசிக்கிறேன்…?!//

  //அறிவன்! மிகச் சரியாகப் பிடித்துவிட்டீர்கள். நகைச்சுவை என்பது உண்மையை அதன் மூக்குக்கு அருகே போய் நின்று பார்த்தால் பிறக்கிற எழுத்து. அடுத்தவர் அருகே அத்தனை நெருக்கமாகப் போவது ஆபத்து//

  அடுத்தவர்னு போய்ட்டா நையாண்டி ஆயிடுமே 😉

 14. அலுவலக நண்பர்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.I said it can’t be translated in French.

 15. ஒரு வாசகன்

  இதெல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் நீலக்காகத்தை மறந்துவிடாதீர்கள்

 16. ஐயா மந்திர எழுத்து மன்னரே !! எழுத்தால் கட்டிப்போடும் கலையை எங்கு கற்றீர். உமக்கென்ன நூறுவயது வரை எழுதிக்கொண்டே இருப்பீர் உமது கோடிக்கணக்கான வாசகர்கள் பிரார்த்தனையில் தீர்க்காயிசாக இருப்பீர். இனிமேல் செக்கப் என்ற விஷப்பரிட்சை வேணாம். எனக்கு ஒன்றும் இல்லை நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே நினைத்துக்கொண்டே காலத்தை ஓட்டுங்கள் எழுத்தாலும் நகைச்சுவையாலும் வாசகர்களை பரவசப்படுத்தும் உங்களுக்கு ஒன்றும் வரவே வராது.

 17. முப்பத்தொன்பதுக்கு பின் வருவது,நாற்பத்திஒன்றிற்கு முன்வருவது இல்லையா?
  கற்ற கணிதம் வீண்தானா?

 18. நல்ல அருமையான நடை சார் உங்களுடையது… (எழுத்து நடையை சொன்னேன்)…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *