பன்னிரண்டு ஹால்கள். இரண்டாயிரம் நிறுவனங்கள். இருபது தேசங்கள். பிரகதி மைதான், புதுதில்லி. சர்வதேச புத்தகக் கண்காட்சி பத்து நாள்கள் நடந்து, இம்மாதம் பத்தாம் தேதி முடிவடைந்தது.
அடிக்கிற குளிர்க்காற்றுக்குத் தொட்டுக்கொள்ள கோன் ஐஸுடன் ஸ்வெட்டர் அணிந்த தில்லி பெண்கள் அழகழகாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, குண்டு வால்யூம் என்சைக்ளோபீடியா, டிக்ஷனரிகளுடன் விற்பனைப் பிரதிநிதிகள் வழியெல்லாம் இடைமறித்து முகத்துக்கு நேரே ப்ரூஸ் லீ மாதிரி மிரட்டுகிறார்கள். வேண்டாம் என்றாலும் விடுவதில்லை. அறுபது சதம் தள்ளுபடி. எண்பது சதம் தள்ளுபடி. அசகாய வார்த்தை உத்திகள். இன்னும் கொஞ்சம்தானே? ஏன் நூறு சதம் தரக்கூடாது? கேட்க முடியாது. பாவம், பிழைப்பு.
ஆனால் தில்லியில் இம்மாதிரியான அதிரடி விற்பனைப் பிரதிநிதிகளையெல்லாம் யாரும் தடுப்பதில்லை. அமைப்பாளர்கள் பயில்வான்களைப் போல் முறைத்துப் பார்த்தபடி இன்ஸ்பெக்ட் பண்ணிக்கொண்டிருப்பதில்லை. யாரும் வரலாம், என்னவும் விற்கலாம்.
கண்காட்சி அரங்குகளுக்குள்ளேயே, முழு ஸ்டால் எடுக்க வசதியில்லாதவர்கள் ஓரங்களில் ஒரு ரேக் நிறுத்தி, புத்தகங்களை அடுக்கிக் கூவிக்கொண்டிருக்கக் கண்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸாமி, சிந்தி, உர்தூ மொழிப் புத்தகங்கள். அங்கிங்கெனாதபடி ஆங்கிலம். எல்லா மொழிகளிலும் உண்டு, தாடி வைத்த, காவி அணிந்த தன்னம்பிக்கை சாமியார்கள்.
பொதுவாக இந்தியப் பதிப்புலகம் குறித்த ஒரு தெளிவான பார்வையைப் பெற இக்கண்காட்சி பேருதவி செய்யக்கூடியதாக இருந்தது. தமிழ், மலையாளம், பெங்காலி மொழிப் புத்தகங்கள் தவிர பிற மொழிகளில் புத்தகங்களின் தோற்றம் பற்றிய அக்கறை யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனந்த சுதந்தரம் அடைந்த தினத்தில் வெளியான பிரசுரங்கள் எப்படி இருந்தனவோ, அதே தரத்தை இன்னும் காப்பாற்றும் அசாமி, குஜராத்தி, மராத்திப் புத்தகங்கள் ஏராளம் உள்ளன. ஹிந்தி பதிப்பாளர்கள் நாற்பது பக்கப் புத்தகமானாலும் கெட்டி அட்டை போட்டு, தங்க கலரில் பார்டர் கட்டிவிடுகிறார்கள். நாற்பது ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரை விலை விகிதங்கள் உள்ளன. ‘வாணி’ என்ற பிரசித்தி பெற்ற ஹிந்தி பதிப்பு நிறுவனம், கலர் கலராக பல்பெல்லாம் எரியவிட்டு, தனது அரங்கை டி. ராஜேந்தர் பட செட் போல அமைத்திருந்தது. உள்ளே ஏராளக் கூட்டம். எண் கணிதம் முதல் ப்ரச்னோபநிஷத் வரை எல்லா விதப் புத்தகங்களும் கிடைக்கின்றன. பெரிதும் நாவல்கள். சிறுகதைகள்.
தமிழ்நாட்டு வாசகர்கள்தாம் படைப்பிலக்கியத்துக்கான வாசல்களை இழுத்துப் பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. பிற அனைத்து மொழிகளிலும் நாவல்களே பிரதானமாக இருக்கின்றன. பெங்குயின் நிறுவனம் யாத்ராவுடன் இணைந்து பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் கொண்டுவரத் தொடங்கிவிட்டது. சொக்க வைக்கும் தோற்றப் பொலிவுடன் அவர்களது வழக்கமான 195, 295, 395 ரூபாய் விகிதங்களில் ஏராளமான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள். தமிழ் இன்னும் இல்லை.
ஆனால் பெங்குயின் ஆங்கில அரங்குடன் ஒப்பிட, இந்தப் பிராந்திய மொழி அரங்கில் கூட்டம் உறை போடக்காணாது. பெங்குயினே வெளியிட்டாலும் நாவல்களுக்கு அத்தனை விலைதர வாசகர்கள் தயாரில்லை போலிருக்கிறது. வாணி, ராஜ்பால் வகையறாக்கள் போதும். நாற்பது ரூபா. ஐம்பது ரூபா. எழுபது ரூபா. நூறு ரூபா. போதும். தவிரவும் கெட்டி அட்டை. தங்க பார்டர். இந்த விதத்தில் பெங்குயின் பருவம் எய்தவில்லை என்றே தோன்றுகிறது.
ஹார்ப்பர் காலின்ஸ், சைமன் அண்ட் ஷஸ்டர்ஸ், ரேண்டம் ஹவுஸ் என்று பெரும் நிறுவனங்கள் பல வந்திருந்தன. விற்பனை இங்கு பிரதான நோக்கமில்லை. வர்த்தகம்தான். அரங்குகளுக்குள்ளேயே சந்திப்புகளுக்கென தனியே இடம் ஒதுக்கி, சிறு அறைகள் அமைத்து, இரு புறமும் நாற்காலி, இடையே வட்ட வடிவக் கண்ணாடி மேசை போட்டு, பேல் பூரி சாப்பிட்டபடி பிசினஸ் பேசுகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதி சாத்தியங்கள், மொழிமாற்ற ஒப்பந்தங்கள் இன்னபிற.
பதிப்புரிமை தீர்ந்த பழைய பெரும் இலக்கியங்களைப் பல நிறுவனங்கள் மிக அழகான புதிய பதிப்புகளாகக் கொண்டுவந்திருக்கின்றன. டால்ஸ்டாயும் தாஸ்தயேவ்ஸ்கியும் ஷேக்ஸ்பியரும் ஜேம்ஸ் ஜாய்ஸும் விக்டர் ஹ்யூகோவும் அலெக்சாண்டர் டூமாவும் இன்ன பிறரும் சகாயமாக எழுபத்தைந்து ரூபாய்க்கே அகப்படுகிறார்கள். தோல் அட்டை. நல்ல தாள். உயர்ந்த அச்சுத்தரம். அள்ளிப்போகிறார்கள் வாசகர்கள்.
என்னை மிகவும் கவர்ந்த அம்சம், சில ஜெர்மானிய மொழிப் பதிப்பாளர்கள் கொண்டுவந்திருந்த குழந்தைகள் புத்தகம். நம்பமுடியாத கற்பனை வளத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்தப் புத்தகங்களை மொழி புரியாது போனாலும் மணிக்கணக்கில் புரட்டியபடி இருக்கலாம். புத்தகங்களின் வண்ணமும் வடிவமும் கொள்ளை கொள்கின்றன. நுணுக்கமான நகை தயாரிப்புப் பணியைப் போலப் புத்தகங்களைத் தயாரிக்கிறார்கள். ஒரு புத்தகம், நாம் புரட்ட ஆரம்பிக்கும்போதே பேசத் தொடங்கிவிடுகிறது. பதிலுக்கு நாமும் பேசலாம். அதுவும் பதிவாகும். அடுத்தமுறை அதே புத்தகத்தை எடுத்துப் பிரித்தால், ‘என்னப்பா, காலைல என்ன டிபன் சாப்ட்ட?’ என்று கேட்கும்போலிருக்கிறது.
பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற தேசங்களிலிருந்து வந்திருந்த பதிப்பு நிறுவனங்களில் இஸ்லாத்தைத் தவிர வேறு சப்ஜெக்டே கிடையாது. சவூதி அரங்கில் படு சுத்தம். நீங்கள் புனிதராக இருந்தாலொழியப் புத்தகங்களைத் தொடாதீர்கள், பார்வைக்கு மட்டும் என்று போர்டு எழுதி வைத்துவிட்டார்கள். ஒரே ஒரு பைபிள் கடை. நூறு மொழிகளில் சேர்ந்தாற்போல் பைபிள் பார்த்தேன். வாசிக்கும் பைபிள்கள். தொட்டுப்பார்க்கும் பைபிள்கள். தூர இருந்து பார்க்கக்கூடிய பைபிள்கள். மணிபர்ஸ் பைபிள்கள். ஹேண்ட் பேக் பைபிள்கள். தலையணை பைபிள்கள். ஆப்பிள் வடிவில் ஒரு பைபிள் இருக்கிறது. உக்ரேனிய மொழி. படித்து ரசிக்க முடியாதவர்கள் கடித்துச் சாப்பிட்டுவிடலாம் என்று நினைக்கத்தக்க வகையில் தயாரிப்புத் தரம்.
இந்தக் கண்காட்சியில் மூன்று தமிழ் நிறுவனங்கள் பங்குபெற்றன. நியூ ஹொரைஸன் மீடியாவின் இந்தியன் ரைட்டிங் மற்றும் கிழக்கு பதிப்பகம். காலச்சுவடு மற்றும் பாவை பப்ளிகேஷன் பெயரில் என்.சி.பி.எச். என்னமோ விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் என்கிற பெயரில் வேறொரு கடையும் இருந்தது. சென்னை உள்பட வேறெந்த புத்தகக் கண்காட்சியிலும் இவர்களைப் பார்த்ததில்லை. பபாசி இல்லை. வேறு யார் என்று தெரியவில்லை. சும்மா ஜாலிக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது.
உலக அளவில் பதிப்புத்துறை எத்தனை முன்னேறிக்கொண்டிருக்கிறது, நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கண்காட்சி உதவி செய்தது. சர்வதேசத் தரத்துடன் ஒப்பிட்டால் நாம் செல்லவேண்டிய தொலைவு வெகு அதிகம். ஆனால் இந்திய அளவில் தமிழகமும் கேரளமும் தொட்டிருக்கும் உயரங்களைத் தொட பிற மாநிலங்களுக்கு இன்னும் பத்து வருடங்களாவது பிடிக்கும்.