காதலின் இசை

அவன் அப்போது பிரபலமில்லை. உள்ளூரில் மட்டும் ஒரு சிலருக்கு அவனுடைய இசையின் அருமை தெரியும்.

என்றைக்காவது எதையாவது சாதிக்கக்கூடியவன். இன்றைக்குச் செய்யும் இம்சைகளை அதனால் பொறுத்துக்கொள்வோம். நள்ளிரவு தொலைபேசியில் அழைத்து பாடிக்காட்டுகிறாயா? சரி, பாடு. கஞ்சா குடித்துவிட்டு சுய சோகத்தில் புலம்பி வேலையைக் கெடுக்கிறாயா? செய். பணப்பிரச்னை. அது எப்போதுமிருக்கிறது. இந்தா, என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவே. எடுத்துக்கொள். போய்க் குடி. அல்லது ஏதேனும் இரவு விடுதியில் கூத்தடித்துவிட்டு வா. ஊரெல்லாம் பொம்மனாட்டி சகவாசம். உருப்படமாட்டாய். எனினும் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்துகொள். என்றைக்காவது நீ சாதிப்பாய். அப்போது நினைத்துப் பார்க்கச் சில ஞாபகங்கள் வேண்டாமா? ஒழிந்து போ.

ஆயிரம் தோழிகள் இருந்த அவனுக்கு அப்போது ஒரு காதலியும் இருந்தாள். எல்லா பெண்களையும் போலவே அவனது இசைக்கு மயங்கி நட்பாகி, காதலாகிக் கசிந்துகொண்டிருந்த தோழி. அவனைக் காட்டிலும் அவள் பிரபலம். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் அன்றைக்கு அவளை அறியாதவர்கள் இருக்கமுடியாது. பொது இடங்களில் முகம் தென்பட்டால் ஓடி வந்து சூழ்ந்துகொண்டு கையெழுத்துக் கேட்க எப்போதும் உண்டு ஒரு கூட்டம்.

அவன் ஒரு சமயம் அவளிடம் கேட்டான். நான் என்றைக்கு எனக்குரிய பிரபலத்தை அடைவேன்?

அவள் பதில் சொல்லவில்லை. நெடுநேரம் யோசித்தாள். திறமைசாலி. அபாரமான திறமைசாலி. ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட வாய்க்காத திறமை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது. ஏன் குறைகிறது என்று கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே குறைவது என்னவென்பது தெரியவரும். சற்று வினோதமான விஷயம்தான். ஆனாலும் பிரச்னையில்லை. பசித்தவனுக்குத் தூண்டிலைத் தரலாம். அதற்குமுன் ஒரு துண்டு ரொட்டி? தவறில்லை.

என்னுடன் வா என்று வெளியே அழைத்துச் சென்றாள். ஏதோ ஓரிடம். என்றோ ஒரு தினம்.

கார் கதவு திறந்து இருவரும் இறங்கியதும் நூறு விழிகள் அவளைப் பார்த்தன. உடனடியாக இன்னொரு நூறு விழிகளுக்கு அது அறிவிக்கப்பட்டது. சர்வவியாபியாக எங்கும் நிறைந்திருக்கும் பத்திரிகைப் புகைப்படக்காரர்களும் பார்த்துவிட்டார்கள். ஃப்ளாஷ். ஃப்ளாஷ். ஃப்ளாஷ்.

பிரபல நடிகையுடன் கைகோத்துக்கொண்டு வளையவரும் அந்த இளைஞன் யார்? படத்தில் வட்டமிட்டு, பத்து பாயிண்டில் கேப்ஷன்கள் போடப்பட்டன. தேசம் முழுதும் அவன் முகம் பரவியது. யார்? யாரிவன்?

யாருக்கும் அப்போது தெரியாது. அவன் ஓர் இசைக்கலைஞன். அன்றைய அமெரிக்கர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த டிவி நடிகையைக் காட்டிலும் கோடி மடங்குப் புகழை எதிர்காலத்தில் பெறவிருக்கிறவன். இந்தப் பிரபலம் ஓர் இடைக்கால நிவாரணம் மட்டுமே.

தவறில்லை என் காதலனே. நீ யார் என்று கேட்க ஒரு தருணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். நீ என் காதலன் என்று அறிமுகப்படுத்தப்படுவாய். பிறகு திருத்தி எழுதிக்கொள். நீ ஓர் இசைக்கலைஞன். வறுமையிலும் திறமையிலும் வாடிக்கொண்டிருக்கிறவன். ஒரு வாய்ப்புக்காக, வேட்டை நாய் போல் மூச்சிறைத்துக்கொண்டு கிடக்கிறாய். டிவி சீரியல்களில் மயங்கிக்கிடக்கிற மக்களுக்கு என்றைக்காவது விழிப்பு வரும். அப்போது என்னைத் தூக்கிய தோள்கள் உன்னைத் தூக்கிக் கொண்டாடும். இது நான் உனக்களிக்கும் வாக்குறுதி.

பிறகும் அவளேதான் அவனுடைய முதல் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு நிதியுதவியும் செய்தாள். மில்லியன்களில் ஆன செலவு. மாபெரும் நிகழ்ச்சி. கிரேக்க தேசத்தின் தலைநகரமான ஏதென்ஸில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐந்நூறு அடி உயரப் பாறைக் குன்று. அகன்று விரிந்த அதன் மேற்பரப்பில் மனிதன் வாழத் தொடங்கிய காலத்திலிருந்து நின்றுகொண்டிருக்கும் ப்ராப்பிலேயா (Propylaea) என்கிற பிரம்மாண்டமான கோட்டை வாயில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து முடித்து மிச்சம் வைத்த கட்டடங்கள். Hekatompedom என்கிற புராதனமான கோயில். அங்கே சிலைகளின் சிதைந்த எச்சங்கள். பழமையின் அசாத்தியமான கம்பீரம் தாங்கி நிற்கும் மியூசியம். கல்வெட்டுகள். புல்மொட்டுகள். காலாற நடந்தால் எதிர்ப்படும் கிழட்டு ராட்சசன் போல் ஹெரோடஸ் ஆட்டிகஸ் (Herodes Atticus) ஆடிட்டோரியம்.

ஒரு கனவு போலத்தான் மனத்தில் அந்தக் காட்சி விரிந்தது. பழுப்பு படிந்த கறுப்பு வெள்ளைப் படமாக. ப்பூ என்று ஊதி தூசு தட்டினால் கனவு கலையலாம். அல்லது புகைப்படம் கிழிந்து போகலாம். நோக்கம் அதுவல்ல. கனவில் தென்பட்ட புகைப்படத்தை பத்திரமாக எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, விடிந்ததும் முதல் காரியமாக வாழ்வின் வண்ணமயமான ஆல்பத்தின் முதல் பக்கம் ஒட்டியாகவேண்டும். கனவின் கையைப் பிடித்துக்கொண்டு நிஜத்தின் முரட்டுப் பாதைகளில் முன்னேறியாகவேண்டும். முடியுமா என்று நண்பர்கள் சந்தேகப்படுகிறார்கள். முடியும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. முடியும் என்றே அவளும் சொன்னாள். முடிவதோ முடியாததோ பிரச்னையல்ல. முயற்சி. அதுதான் முக்கியம். வாழ்வின் அற்புதக் கணங்களும் அர்த்தமுள்ள பக்கங்களும் அங்கேதான் இருக்கின்றன.

அந்த நிகழ்ச்சி அவன் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை. மூன்று தினங்கள் நடைபெற்ற நிகழ்ச்சி. முன்னதாக ஏற்பாடு செய்திருந்த கிரீஸ் தேசிய சிம்ஃபொனி இசைக்குழு கடைசி நேரத்தில் கைவிட்டுவிட, தேடிப்பிடித்து அழைத்து வந்த லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு அன்றைக்கு அவனுக்காக வாசித்தது.

எத்தனை செலவு? எப்படிச் சமாளிப்பேன் என்று அவன் கலங்கி நின்றபோது அவள்தான் தைரியம் சொன்னாள். செலவை மற. இப்படியொரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்குமா? ராயல் ஃபில்ஹார்மோனிக் குழு உனக்காக வாசிக்கிறது. நீ அடையவிரும்பும் உயரத்துக்கு இதனைக்காட்டிலும் சிறந்த முதல் ஏணி அகப்பட வாய்ப்பில்லை.

அந்தச் செலவையும் அவள்தான் ஏற்றுக்கொண்டாள்.

நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவனுக்கு நின்று மூச்சுவிடக்கூட நேரமில்லாது போயிற்று. தினமொரு தேசம். விமானங்களில் வசித்துக்கொண்டு, அரங்கங்களில் வாழத் தொடங்கினான்.

அன்பே, இதுதானே நீ எதிர்பார்த்தது? இந்த உயரம்தானே? இந்தப் புகழ்தானே?

அவன் புன்னகை செய்தான். அவனைவிடப் பத்துப் பன்னிரண்டு வயது மூத்தவள் அவள். ஆனாலும் காதலி. திருமணம் என்று செய்துகொள்ளாதுபோயினும் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். அவனுக்கு அப்போது முப்பத்தி மூன்று வயது. அவளுக்கு நாற்பத்தியேழு.

சகி, உனக்கு நான் என்ன செய்யமுடியும்? உன் சந்தோஷத்துக்கு ஒரு குழந்தை தரட்டுமா?

அவளுக்கு விருப்பம்தான். ஆனாலும் வேண்டாம் என்றே சொன்னாள். வயது ஒரு காரணம். பணமும் புகழும் குவிந்துகிடந்தாலும் வாழ்வில் ஏதோ ஒன்று குறைகிறது. என்னவென்று புரிபடாத ஏதோ. இட்டு நிரப்பக் குழந்தைதான் சரி என்று தோன்றவில்லை. தானே ஒரு குழந்தையாகிவிட விரும்புகிறோமா என்ன?

நண்பனே, எனக்கு நீ போதும். உன்னோடு இருப்பது போதும். உன் இசை போதும். உன் புகழ் போதும். இனி நான் நடிக்கக்கூடப் போவதில்லை. எப்போதாவது கண்மூடித் தலைசாய்க்க உன் தோள் கிடைக்குமல்லவா? போதும். மிகவுமே போதும்.

ஆனால் அதன்பிறகுதான் அவனைப் பார்ப்பதே சிரமமாகிப் போனது. வாரம் ஒரு தேசம். சுமக்க முடியாத புகழ். திரும்பிப் பார்க்க அவகாசமில்லாத நிகழ்ச்சி நிரல்கள்.

அவன் இந்தியாவுக்கு ஒரு சமயம் வந்து நிகழ்ச்சி நடத்திவிட்டுத் திரும்பியபிறகு அவள் கேட்டாள். இத்தனை காலம் உனக்காக நான் வாழ்ந்துவிட்டேன். கொஞ்சநாள் எனக்காக நீ வாழ்வாயா?

நியாயமான கோரிக்கை. தவறே இல்லை. இத்தனை உயரங்களுக்குத் தூக்கிச் சென்றவள் முன்வைக்கிற குறைந்தபட்ச கோரிக்கை. இடையில் எத்தனை கஷ்டங்கள், போராட்டங்கள், பிரச்னைகள், அபாயங்கள், படுபாதாளங்கள்! அனைத்திலிருந்தும் அவள்தான் மீட்டிருக்கிறாள். பெண்வடிவில் ஒரு சக்தியாக. பெரும் சக்தி. சந்தேகமில்லை.

ஆனால் நான் செய்யக்கூடியதென்ன? மன்னித்துவிடு என் காதலி. என் இசைக்காக அல்லாமல் வேறு எதற்காகவும் என்னால் வாழமுடியாது.

அவர்கள் நட்புடன் பிரிந்து போனார்கள்.

*

டேவிட் ரென்ஸின் எழுத்தில் யானியின் சுய சரிதம் (Yanni in Words) வாசித்துக்கொண்டிருந்தபோது இந்தக் குறிப்பிட்ட பகுதியைத் தாண்ட முடியவில்லை என்னால். நான் செய்திருப்பது மொழிபெயர்ப்பல்ல. காட்சியை நான் உணர்ந்தவண்ணம் மறு விவரிப்பு செய்திருப்பதுதான்.

மிக அற்புதமாக, அப்பட்டமாக, எவ்வித ஜோடனைகளுமில்லாமல் நேரடியாக எழுதப்பட்டிருக்கும் இந்தத் தன் வரலாற்று நூலில் [தேடிப்பிடித்து அனுப்பித்தந்த என் நண்பர் பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி.] யானி என்கிற கலைஞன் உருக்கொண்ட கதை விறுவிறுவிறுவென்று ஒரு காட்டாறு போல் சீறிப்போகிறது.

அந்த அக்ரோபொலிஸ் நிகழ்ச்சியை நடத்த அவர் பட்ட கஷ்டங்கள் மட்டுமே இன்னொரு கிரேக்க துன்பியல் காவியம்.

வலிகளில்லாமல் வாழ்க்கையில்லை. தன் வலிகளை இசையாக உருமாற்றத் தெரிந்த கலைஞரான யானி, தனது ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணியாக இருந்த சம்பவங்கள் குறித்து விவரிக்கும்போது பிரமிப்பு உண்டாகிறது. பிரசித்தி பெற்ற அவருடைய Acroyali / Standing in motionக்குப் பின்னால் உள்ள கதை – வேண்டாம். சொல்லில் அதன் ஜீவன் இறந்துவிடும்.

யானிக்கே சொற்களுடன் அத்தனை உறவில்லை. தனது மனத்தில் உதிக்கும் இசையை சொல்லுக்குள் பொருத்தாதிருப்பதில்தான் பெருவிருப்பம். மிகப் பிற்காலத்தில்தான் பாடலெழுதிப் பாடவும் செய்யலாம் / வைக்கலாம் என்று அவர் சற்று இறங்கிவந்திருக்கிறார். அநேகமாக, கூந்தலையும் மீசையையும் இழந்ததன் பிறகாக இருக்கும். அவருடைய Tribute கேட்டுப்பாருங்கள். இது வேறு யானி என்று சொல்லத் தோன்றலாம்!

*

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் உலுக்கிய அந்த வரி குறித்துச் சொல்ல வந்தேன். எனக்காகக் கொஞ்சகாலம் வாழ்கிறாயா? ஜானகிராமனின் ‘இதற்குத் தானா பாபு?’வுக்கு நிகராக சிந்திக்கவிடாமல் அடிக்கிற வரி.

எனக்கு லிண்டா ஈவான்ஸ் என்கிற அந்த நடிகையைத் தெரியாது. அவரது எந்த நிகழ்ச்சியையும் புகைப்படத்தையும்கூடப் பார்க்கிற வாய்ப்பு நேர்ந்ததில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு கூகுளில் தேடி அவரது முகத்தைப் பார்த்தேன். புத்தகத்திலேயேகூடச் சில படங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகத்துக்காகவே யானியுடனான தனது அனுபவங்களைச் சில வரிகளில் லிண்டா பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அவரால் வாய்ப்புகள் பெற்று, அவரால் முன்னுக்கு வந்து, அவரால் புகழ் எய்திய யானி, லிண்டாவுடன் வாழ்ந்த ஆண்டுகளின் ஞாபகார்த்தமாக Reflections of Passion என்றொரு ஆல்பத்தை 1990ம் ஆண்டு வெளியிட்டார். ஜீவத் துடிதுடிப்பு மிக்கதொரு காதலின் இசை என்பது எப்படி இருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

இன்றுவரை யானி லிண்டாவின் மீதான தன் காதலைத் துறக்கவில்லை. ஆனால் தன் இசைக்காகக் காதலியைத் துறக்க முடிந்திருக்கிறது அவரால்.

பெரும் துயரம்தான். துயரத்தின் சிறுதுளியேனும் கலக்காமல் கலையின் காட்டாற்று வெள்ளம் கரை சேராது போலிருக்கிறது.

* Yanni in Words
* Tribute
* Acroyali / Standing in Motion

* Reflections of Passion

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி