ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை.
இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக் கட்டணம் பத்து ரூபாயாக இருக்கிறது. குறைந்தபட்ச தூரத்துக்குள் இறங்கிக்கொண்டால் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு வரமுடிகிறது. தியேட்டர்களில் அதிக அடிதடி இல்லாமல் எளிதாக டிக்கெட் பெற முடிகிறது. முப்பதே ரூபாய். இரண்டாம் ஆட்டம் தசாவதாரம் பார்க்க இரண்டாம் முறை சென்றதன் பெயர் கொழுப்பு. ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க விரும்பியதன் விளைவு. பரவாயில்லை. கேரளத்திலும் கமலுக்கு விசிலடிக்கச் சிலர் இருக்கிறார்கள்.
நான் சென்றது எங்களுடைய நியூ ஹொரைஸன் மீடியாவின் மலையாளப் பதிப்பான புலரி மற்றும் மலையாள Prodigy, இந்தியன் ரைட்டிங், ஆக்சிஜன் பதிப்புகளின் அறிமுக விழாவுக்கு. அப்படியே மலையாள எடிட்டோரியல் நண்பர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு. என் நீண்டநாள் நண்பரும் புலரியின் ஆசிரியருமான சுகுமாரனுடன் அரட்டை அடிப்பதற்கு.
திருவனந்தபுரம் மஸ்காட் ஹோட்டலில் விழா நடைபெற்றது. எளிய, அருமையான விழா. ரசனை மிக்க கேரளப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமாக [உண்மையிலேயே] அரங்கு நிறைந்த கூட்டம்.
நீல பத்மநாபன் வந்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் தட்சிணாமூர்த்தி வந்திருந்தார். ஆ. மாதவனை எதிர்பார்த்தேன். ம்ஹும். உலக அளவில் நன்கு அறிமுகமான மிகச் சில சமகால இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான பால் சக்கரியா பார்வையாளர் வரிசையில் அமர்ந்து விழா முடியும்வரை இருந்து, அளவளாவிவிட்டுச் சென்றது மறக்கமுடியாதது.
என்ன எளிமை. கற்கவேண்டும். சக்கரியா போன்ற ஓர் எழுத்தாளர் இன்றைக்குத் தமிழில் கிடையாது. நாவல்கள் என்று அவர் ஏதும் எழுதவில்லை. சிறுகதைகள்தாம். கட்டுரைகள்தாம். கதைக்குள் கடலை நிரப்பும் வித்தைக்காரர். மிகச் சில திராபையான மொழிபெயர்ப்புகளில் மட்டுமே நான் படித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பின் அபத்தங்களை மீறியும் சக்கரியா மனத்தில் நிற்பவர். அவர் அடைந்த உயரத்துக்கு இங்கே வேறு யாருமென்றால் தரையில் கால் பாவாது. அவரோ ஒரு டீக்கடையில் தினசரி சந்திக்கும் எளிய தோழரைப் போலவேதான் எப்போதுமிருக்கிறார். மிகப்பல வருடங்களுக்கு முன்னர் ஓர் எழுத்தச்சன் நினைவு தின சமயத்தில் பஷீரையும் வாசுதேவன் நாயரையும் சுகதகுமாரியையும் சந்தித்தபோது இவ்வாறேதான் உணர்ந்தேன்.
மலையாள எழுத்தாளர்களிடமிருந்து நாம் இதை அவசியம் கற்கவேண்டும். கர்வமற்ற, பாசாங்கற்ற, போலித்தனங்களற்ற, விலைமதிப்பற்ற எளிமை.
வியப்புற வைத்த இன்னொரு அம்சம், புத்தக அறிமுக நிகழ்ச்சிக்கு ஆறேழு தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்திருந்தது. சூர்யா டிவி தவிர பிற அனைத்து மலையாள சானல்களிலும் புலரி – ப்ராடிஜி வெளியீட்டு விழா விவரங்கள் ஒளிபரப்பப்பட்டன. அது அங்கே ஒரு முக்கியச் செய்தி. ஒப்பிடாமல் எவ்வாறு இருப்பது?
கேரளத்து இலக்கிய, பத்திரிகைச் சூழல் குறித்து அவ்வப்போது சாரு நிவேதிதா எழுதுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். இதெல்லாம் உண்மையாக இருக்குமா என்கிற சந்தேகத்துடன்.
சந்தேகமில்லை. உண்மைதான். எழுத்து அங்கே வாழ்கிறது. எழுத்தாளர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள்.