இதைவிட சந்தோஷமாக எப்போதும் நான் உணர்ந்ததில்லை. முதல் முதலாக என்னுடைய மாணவன் ஒருவனின் புத்தகத்துக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது.
ஆர். முத்துக்குமார் எழுதி கிழக்கு கடந்த ஆண்டு வெளியிட்ட ‘அன்புள்ள ஜீவா’ என்கிற ப. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது மணிவாசகர் பதிப்பகம் ஆண்டுதோறும் வழங்கும் விருது.
கே.ஜி. ராதாமணாளன் என்பவரது ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகமும் முத்துக்குமாரின் மேற்படி புத்தகமும் 2007ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களாக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று [21.07.2008] விருது வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. பத்ரி சென்றிருந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கல்கியில் ரிப்போர்ட்டிங் செய்துகொண்டிருந்த முத்துக்குமார் எழுத்தார்வத்துடன் கிழக்கில் வந்து சேர்ந்தான். எம்.எஸ்.சி. ஐடியோ, கம்ப்யூட்டர் சயின்ஸோ படித்தவன். அந்த உத்தியோகம் வேண்டாம் என்று எழுத வந்து குறுகிய காலத்தில் சிறப்பாக எழுதக்கற்றுக்கொண்டு ஆறேழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான். அவற்றுள் ‘உல்ஃபா’ குறித்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமானது.
என் ஆசிரியரான இளங்கோவனுக்கு, என்னுடைய மாணவர்களிலேயே அதிகம் பிடித்தமானவன் முத்துக்குமார்தான். ரிப்போர்ட்டரில் அவனை என்னவாவது எழுதவைத்துக்கொண்டே இருப்பார். ‘இவன் ஒருத்தன்தாண்டா உங்க ஆளுங்கள்ளயே ஃப்ரெஷ்ஷா, சுறுசுறுப்பா எழுதறான்’ என்பார்.
எளியதொரு அங்கீகாரமே என்றாலும் அவனைக்காட்டிலும் இது எனக்குத்தான் மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
அன்புள்ள ஜீவாவை நீங்கள் இங்கே காணலாம். முத்துக்குமாரை இங்கே வாழ்த்தலாம்!