முதுமையின் மற்றொரு நோய்

ஆசை யாரை விட்டது? கலைஞருக்கு நோபல் பரிசு வேண்டியிருக்கிறது.

பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் இதற்காகப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு. குழுவில் கலைஞரின் பேத்தி கயல்விழியும் ஒருவர். மிகச் சமீபத்தில் மேடைக்கு வந்தவர் இந்தப் பேத்தி. தவிர சில கல்வியாளர்கள், கவிஞர்கள், ஒரு கவிப்பேரரசர்.

இந்தப் பன்னிரண்டு பேரும் கலைஞரின் எழுத்தோவியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் கமிட்டிக்கு அனுப்புவார்கள். அவர்களும் காலக்ரமத்தில் பரிசினை கூரியர் அல்லது விரைவுத் தபாலில் அனுப்பிவைப்பார்கள்.

முதல் பார்வையில் சிரிப்புத்தான் வந்தது. யோசித்துப் பார்த்தால் இதன்பின்னால் வயோதிகத்தின் வலிமிக்க அவலங்கள் சில புலப்படும்.

கடந்த சில காலமாகவே கலைஞர் மேடைகளை அதிகம் நேசிக்கிறார். யார் அழைத்தாலும் எந்த விழாவுக்கும் செல்கிறார். இளம் கவிஞர்களின் புத்தக வெளியீடுகள் முதல் முதிர்ந்த கவிஞர்களின் இல்லத் திருமணங்கள் வரை. எதையும் விடுவதில்லை. யாரையும் மறுப்பதில்லை. கவிதை நூல் வெளியீடுகளோ, திருமண வாழ்த்தரங்கங்களோ இல்லாத தினங்களில் குடும்பத்தாரும் உயிருக்கு நிகரான ஆர்க்காடு வீராசாமியும் உடன்வர, ஏதாவது ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்குச் சென்று கண்டு ரசித்து, நாலு வரி பாராட்டிவிட்டு வந்துவிடுகிறார்.

அதுவும் இல்லையா? எடு பேனாவை, உருவு தாளை என்று உளியின் ஓசை போல் எதையாவது செதுக்கத் தொடங்கிவிடுகிறார்.

அடக்கடவுளே, அதுவும் முடிந்துவிட்டதா? நட்சத்திர கிரிக்கெட், நட்சத்திர கோலி, கில்லி, பம்பரம் என்று என்ன நல்லிணக்க மேட்ச் நடந்தாலும் ஆஜராகிவிடுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவிக்கு கொடநாடு. ஆளும் கட்சித் தலைவருக்கு மேடைகள். ஆசுவாசம் தருகிற இடங்களில்தான் வித்தியாசம். ஆனால் அவசியம் வேண்டியது ஆசுவாசம்.

குடும்பப் பூசல்கள், மருமகன் வாரிசுகள் தரும் தொல்லை, கட்சியின் அடிமட்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் புகார்கள், குமுறல்கள், மனக்குறைகள், அடுத்த தலைவராக ஸ்டாலினை முன்னிறுத்தும்போது என்ன ஆகுமோ, ஏதாகுமோ, மதுரை மீண்டும் பற்றி எரியுமோ என்கிற பயம், தள்ளாமை, சோர்வு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கிடையே நிலவும் பனிப்போர் என்று அவர் கவலைகொள்ள எப்போதும் உண்டு பிரச்னைகள்.

எத்தனை காலம் சுமப்பது? முடியாது என்று சொல்லக்கூடியவர் இல்லை அவர். வயது அவருக்குப் பொருட்டில்லை. தள்ளாமை இருந்தாலும் எதையும் தள்ளிக்கொண்டு செல்லக்கூடியவர்தான். அரசியலில் அவரளவு சாதித்தவர்கள் குறைவு. குறைகளை விடுங்கள். அது இல்லாதவர்கள் யார்?

விஷயம் அதுவல்ல. கருணாநிதியின் அடிமனத்தில் இன்னும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய நெருப்பு, இலக்கிய அங்கீகாரம். எத்தனை வருடமாக எழுதுகிறார்! என்னென்னவோ எழுதுகிறார். உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதங்களை விட்டுவிடலாம். திருக்குறள், நாலடியார், எட்டடியார் என்று ஆரம்பித்து எல்லா பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தன்னாலான நவீன வடிவம் தரப் பாடுபடுகிறார். அவ்வப்போது கவிதை மாதிரியும் எழுதுகிறார். மனோகரா முதல் உளியின் ஓசை வரை எடுத்து வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சி செய்தால் திரைப்படங்களில் அவரது வசனங்கள் பெற்றிருக்கும் பரிமாண வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் குறித்து நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலும்.

அவர் ஒரு தலைமுறையின் பெரும்பகுதியினரைக் கணிசமாக பாதித்தவர். அதில் சந்தேகமில்லை. கலைஞரின் எழுத்துகள் நவீனமானவை அல்ல என்றும் இலக்கியத் தரத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் வாதிடலாம். பெரும்பான்மையானோர் அதனை அங்கீகரிக்கவும் செய்யலாம். எல்லாம் இன்றைய கருத்து.

அவரது காலத்தில், அவர் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஓர் எச்சரிக்கையாகக் கூட யாரும் இதனை எடுத்துக் காட்டியதாகத் தெரியவில்லை. அவரது பதவியும் இதற்கு ஒரு பெருந்தடையாக இருந்துவந்திருக்கிறது. அவர் என்ன எழுதினாலும் ஆஹா ஓஹோ என்று புகழும் கூட்டம் உள்வட்டமாக மட்டுமில்லாமல் மாநிலமெங்கும் நீக்கமற நிறைந்து இருந்தது. இன்றைக்கும் அப்படியொரு கூட்டம் இருப்பதும், தீவிரம் குறையாமல் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிவருவதும் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

விஷயமென்னவென்றால், ஒரு மனிதன் – தன் செயல்பாடுகளின் நியாயமான மதிப்பீடுகளைக் கண்டறியும் வாய்ப்பை இச்சமூகம் முற்றிலுமாக மறுத்திருக்கிறது என்பதுதான்.

கலைஞரை மட்டும் குறை சொல்லிப் புண்ணியமில்லை. செவி நிறைந்த ஜால்ரா சத்தத்தில் அவருக்கு அவசியம் போய்ச்சேர்ந்திருக்கவேண்டிய உடுக்கை ஒலிகள் தடைசெய்யப்பட்டுவிட்டன.

இதனால்தான் ராஜராஜன் விருது முதல் நோபல் பரிசு வரை சகலமானது குறித்தும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஆர்வமூட்டும்போது அவரால் மறு சிந்தனை செய்ய முடியாமல் போய்விடுகிறதோ என்று தோன்றுகிறது. முதுமையும் சேர்ந்துகொள்ளும்போது, அவற்றின்மீது ஒரு விருப்பும் இணைந்துவிடுகிறது. ஆனானப்பட்ட ஜெயகாந்தனுக்கே தி.மு.கழக விருது விருப்புக்குரியதாகும்போது கலைஞருக்கு நோபல் ஆசை வருவதை அநியாயம் என்று யாரும் சொல்லிவிடமுடியாது.

முட்டிவலி, முதுகுவலி, மூச்சிறைப்பு, தலை சுற்றல், மயக்கம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை போல முதுமை கொடுக்கும் மற்றுமொரு வியாதி இது. முடிந்தவரை மருத்துவ உதவி செய்யவேண்டியது நமது கடமை.

கூடவே சகித்துக்கொள்ளும் மனோபாவமும் வளரவேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி