உண்ண உணவுக்கும், ஒதுங்க உறைவிடத்திற்கும் வழியில்லாத சூழலில் நீலநகரமக்களை சாட்சியாக்கித் தன் மரணப்போராட்ட அறிவிப்பை கோவிந்தசாமியின் பெயரில் அவனுடைய நிழல் வெளியிடுகிறது. நாற்பதாண்டுகள் கோவிந்தசாமியோடு இருந்துவிட்டு விலகி நிற்கையில் அதற்கு கிடைத்த சுதந்திரம் கோவிந்தசாமி நீலநகரத்திற்கு வந்ததற்கான காரணத்துக்கே வேட்டு வைப்பதோடு சாகரிகாவை தனதாக்கிக் கொள்ளவும் கோவிந்தசாமியின் முடிவு செய்கிறது. முன்னோட்டமாக சாகரிகாவின் மனமாற்ற பல்ஸை அறிய நிழல் விரும்புகிறது.
வெண்பலகையில் தான் இட்ட பதிவு அதற்கான அச்சாரம் என்ற நிழலின் நினைப்பு பொய்க்கவில்லை. அந்த பதிவின் வழியாகவே நிழலின் விருப்பத்தை ஷில்பா சாகரிகாவிடம் கூறுகிறாள். ரம்புல்லியனோடு அவர்களுக்கிடையே இந்த சம்பாஷணைகள் நடந்து கொண்டிருக்கும் போதே நிழல் சாகரிகாவின் வீட்டுக் கதவைத் தட்டுகிறது. அடிதடியோ, ஆக்ரோஷமோ இல்லாது பரஸ்பர மரியாதை, வருத்த தெரிவிப்புகளுக்குப் பின் நிழலும் அவர்களுடைய பார்ட்டியில் கலந்து கொள்கிறது.
ஷில்பா – சாகரிகா – நிழல் மூவரும் இணைந்த கூட்டணி அமைகிறதா? சாகரிகாவிடம் பெற்ற உறுதிமொழியை வைத்துக் கொண்டு ஷிப்லா என்ன செய்யப் போகிறாள்? இந்த எதிர்பார்ப்புகளோடு கபடவேடதாரியை பின்தொடர்வோம்.