சூனியர்களுக்கு சகாயம் செய்ய அவர்களின் முன்னோர்கள் கண்டறிந்து கொடுத்த தருவான சகட விருட்சம் பற்றிய சுவராசிய விவரிப்புகளுடன் அத்தியாயம் தொடங்குகிறது. சகடக்கனி தரு, ஸ்போடில்லா பழம் பற்றியெல்லாம் வார்த்தைகள் வழியாக விரியும் வர்ணனைகள் அபாரம். மரத்துக்குக் கூட இத்தனை பின்புலமா? இந்த நாவலில் உயர்திணையோ, அஃறிணையோ எதன் அறிமுகமும் பிரமாண்டமாகவே நீண்டு விரிகிறது. மிகு புனைவில் பா.ரா.வின் பந்து சிக்சரை நோக்கி பறந்த படியே இருக்கிறது. சகடக்கனியின் பின்புலத்தில் சூனியன் தன் சாகச வாழ்வியலை மெச்சிக் கொள்கிறான்.
தன் ஆசனவாயில் விசமேறி உறைந்து கிடக்கும் சகடக்கனியோடு ஜிங்கோ பிலோபா வேர்களை இணைத்து புதிய பாஷாணத்தை உருவாக்கி அதன் மூலமாக அனைத்துலகுக்குமான பிரம்மாவின் பணியை செய்ய திட்டமிடுகிறான். பிரம்மாவின் படைப்புகளை நாமெல்லாம் வியப்பது போல சூனியன் எள்ளி நகையாடுகிறான். எந்த வரம்பிற்குள்ளும் வசப்படாத மனித ஜாடையற்ற ஒரு படைப்பை உருவாக்குவதே அவனின் மன ஓட்டமாக இருக்கிறது.
முகநூலில் பதியப்படும் ஒரு ”ஹாட்டை” இன்னொரு ”ஷாட்” தூக்கியடிப்பது போல வெண்பலகையில் நீலநகரவாசிகள் தூக்கியடிக்கும் விசயத்தை சுருக்கென சுட்டும் சூனியன் போகரை தியானப் பொருளாய் கொண்டு அவர் நவபாஷாணம் அரைக்க தேர்ந்தெடுத்த இடத்தில் இருந்து தன் வேலையை ஆரம்பிக்கிறான். அந்த ஆரம்பத்தில் ஒரு ”இஃகு” வைத்து சொல்லுவதில் அடுத்த அத்தியாயம் புதிர் போடுகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.