அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது,  கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது.  சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.

மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ – ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ – சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.

விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.

[டொரண்டோவிலிருந்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அனுப்பிய தகவல். அம்பைக்கு வாழ்த்துகள். அம்பையின் முழுச் சிறுகதைத் தொகுப்பு காலச்சுவடில் கிடைக்கும்.]

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

1 comment

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading