Prodigy பயிலரங்கம் [1]

ரேவதி பேசுகிறார்எழுதுவது தொடர்பாகச் சொல்லிக்கொடுக்கப்படும் விஷயங்களால் பத்து பைசா பிரயோஜனமில்லை என்பது என் கருத்து. எனக்குப் பல பேரிடம் கற்றுக்கொள்ளச் சென்ற அனுபவமும் உண்டு; எழுத்துப் பயிலரங்குகளில் வகுப்பெடுத்த அனுபவமும் உண்டு. கிழக்கு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இந்தப் பயிலரங்கு நடவடிக்கைகள் அடிக்கடி என் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றன. விதியை வெல்ல யாராலும் முடியாது.

எப்படி எழுதலாம், அல்லது எப்படி எழுதவேண்டும் என்கிற தியரி மிகவும் போரடிக்கக்கூடியது. பதிலாக, நன்றாக எழுதப்பட்ட புத்தகங்களை இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தாலே போதும், எழுத வந்துவிடும்.

ஆனால் ஆரம்ப எழுத்தாளர்களுக்குச் சில எளிய உத்திகளைக் கற்றுத்தரலாம். அந்த உத்திகள் அனைத்தும் அபத்தமானவை, நல்ல எழுத்து என்பது அதற்கு அப்பால்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரும்போதுதான் அவர்கள் எழுத்தாளர்களாகிறார்கள்.190420092216

இன்றைக்கு எங்கள் நிறுவனத்தின் ஓர் அங்கமான Prodigy இம்ப்ரிண்ட் சார்பில் ஒரு பயிலரங்கு நடத்தினோம். உண்மையில் இது நாங்கள் பயில்வதற்கான ஓர் அரங்கு. நூற்றுக்கும் மேற்பட்ட ப்ராடிஜி – சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிட்ட பிறகும் ஒரு போதாமை தெரிகிறது. மொழியில், வெளிப்பாட்டில், கட்டுமானத்தில், எதனை – எந்தளவு சொல்லலாம் என்கிற கணக்கில் எப்போதும் தடுமாற்றங்கள் இருக்கின்றன.

சிறுவர்களுக்கு எழுதுவது மிகவும் சவாலான செயல். எப்போதும் நம்மையறியாமல் அவர்கள் நம்மை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்களை நிறைய வைத்தேதான் பெரும்பாலும் எழுதுவோம். கதை, கவிதை என்றால்கூடப் பரவாயில்லை. கதையல்லாத விஷயங்களைச் சிறுவர்களுக்கு வலிக்காமல் வாசிக்கக் கொடுப்பது மிகவும் சிரமம். கொஞ்சம் தடுமாறினால் பாடப்புத்தக வாசனை அடித்துவிடும். இன்னும் கொஞ்சம் தடுமாறினால் சிறுவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பால் சென்றுவிடுவோம்.

இந்த இரு அபாயங்களும் நேராமல் சுவாரசியமாகச் சிறுவர்களுக்கு எழுத என்னென்ன செய்யலாம்?

எங்கள் எடிட்டோரியல் நண்பர்களும் ப்ராடிஜிக்குத் தீவிரமாக எழுதும் – எழுத விரும்பும் சில எழுத்தாளர்களும் மட்டும் பங்குகொண்ட இந்தப் பயிலரங்கம் இன்று காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற்றது.

ச.தமிழ்ச்செல்வன்ச. தமிழ்ச்செல்வன், இரா. நடராசன், ரேவதி, ஹேமாவதி, அ. வெண்ணிலா, பத்ரி மற்றும் நான் அமர்வுகளை வழிநடத்தினோம். மொத்தமாகச் சுமார் நாற்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரும்பாலான அமர்வுகள் திருப்திகரமாக, உபயோகமாகவே இருந்தன.

நகர்ப்புற, மத்தியதர, உயர் மத்தியதர சிறுவர் சிறுமியரை நோக்கியே பெரும்பாலும் புத்தகங்கள் பேசுகிற நிலையில் தமிழ்ச்செல்வனும் இரா. நடராசனும் சுட்டிக்காட்டிய கிராமப்புற சிறுவர் சிறுமியரின் உலகம், அறிதல் முறை, அவர்களுக்கான வசதி வாய்ப்புகள், வாசிப்பு சாத்தியங்கள் குறித்த தகவல்கள் எங்களுக்குப் பல புதிய கதவுகளைத் திறப்பதாக இருந்தன. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கதைகளை எப்படிச் சொல்லலாம் என்று ரேவதி பேசினார். [தமிழின் முதுபெரும் சிறுவர் எழுத்தாளர். என்னுடைய முதல் ஆசிரியர். கோகுலத்தில் அவரிடம்தான் நான் அரிச்சுவடி கற்று எழுத ஆரம்பித்தேன்.] பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுதுவது பற்றி அ. வெண்ணிலா பேசினார். வெண்ணிலா நன்றாகக் கவிதை எழுதுவார் என்று தெரியும். அவர் இத்தனை அழகாக, கோவையாகப் பேசவும் செய்வார் என்பதை இன்றுதான் கண்டேன். அறிவியல் எழுத்து பற்றி பத்ரியும் குழந்தைகளுக்கான மொழி – எடிட்டிங் குறித்து நானும் உரையாற்றினோம்.

என்னுடைய ப்ரசண்டேஷனின் தொடக்கப்பகுதியை மூன்றில் ஒரு பங்காக எடிட் செய்திருக்கலாம் என்று பத்ரி சொன்னார். எழுதி வைத்துப் படித்தால் இந்த அபாயம் இராது. [ஆனால் கேட்கச் சகிக்காது.] இயல்பான பேச்சாற்றல் இல்லாதவர்கள் பேச முற்படும்போது இம்மாதிரியான விபரீதங்களுக்குப் பொறுமை காத்துதான் தீரவேண்டியிருக்கும்.

அ. வெண்ணிலா இந்தப் பயிலரங்குக்காகவே சொக்கன் பெங்களூருவிலிருந்து வந்திருந்தான். வலைப்பதிவு உலகிலிருந்து யுவ கிருஷ்ணா என்கிற லக்கிலுக், அதிஷா மற்றும் குகன் ஆகியோர் வந்திருந்தார்கள்.

நிகழ்ச்சியின் முழு ஒலி வடிவத்தையும் விரைவில் பத்ரியின் வலைப்பதிவில் பெறலாம். நான் வழங்கிய ப்ரசண்டேஷன் தனிப் பதிவாக.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

Add comment

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading