நேற்று மயிலாடுதுறையில் சூர்யா என்றொரு சிறுவனை சந்தித்தேன். ஒன்பதாம் வகுப்பில் படிக்கிற பையன். ஒபிசிடி காரணமாக பேலியோ டயட் எடுத்து சுமார் 15 கிலோ எடை குறைத்தவன்.
விஷயம் அதுவல்ல.
இந்தச் சிறுவன் நேற்று என்னைத் தனியே வந்து சந்தித்தான். என்னுடைய பெரும்பாலான அரசியல் நூல்களை இவன் படித்திருக்கிறான். இந்தத் தகவலை அவனது தந்தை சொன்னபோது முதலில் எனக்கு சந்தேகமாக இருந்தது. அப்படியா என்று வெறுமனே கேட்டேன்.
சட்டென்று ஆயில் ரேகை புத்தகத்தின் சாரத்தைச் சொல்லி, அடுத்த பார்ட் எப்ப சார் என்று கேட்டபோது திகைத்துவிட்டேன்.
சதாம் படித்திருக்கிறான். 9/11 படித்திருக்கிறான். அல் காயிதா படித்திருக்கிறான். நிலமெல்லாம் ரத்தம் படித்திருக்கிறான். நம்பமுடியாத அளவுக்கு ஒவ்வொரு புத்தகத்திலும் ஆழம் தோய்ந்திருக்கிறான்.
தஞ்சாவூரில் ஏதோ ஒரு சிபிஎஸ்சி பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படிக்கிற மாணவன். தமிழில் ஆர்வம் கொண்டு படிப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், வெறும் கதைப்புத்தகங்களாக, அந்த வயதுக்கே உரிய புத்தகங்களாக அல்லாமல் அரசியல் நூல்களைத் தேடித்தேடி வாசிப்பது சாதாரண விஷயமல்ல.
‘புரியறதெல்லாம் கஷ்டமா இல்ல சார். ஆயில் ரேகை மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனா அதுவும் புரிஞ்சிடுச்சி’ என்று சொன்னான்.
சொக்கனின் மொசாட் பிடித்திருக்கிறது என்றான். சிஐஏ ஓகே என்றான். உங்கள் புத்தகங்களின் இறுதியில் கொடுக்கிற ஆதார நூல்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டான். எட்வர்ட் சயித் பற்றி விசாரித்தான்.
சூர்யாவின் தந்தை அறநிலையத்துறையில் பணியாற்றுபவர். எங்கே எந்தப் புத்தகக் கண்காட்சி நடந்தாலும் மகனை அழைத்துச் சென்று விடுவதாகச் சொன்னார். ‘நான், என் ஒய்ஃபெல்லாம் பொதுவான புக்ஸ் படிப்போம் சார். இவன் கொஞ்சம் இதுல ஆர்வமா இருக்கான். படிப்புலயும் கரெக்டா இருக்கறதால தடுக்கறதில்லை’ என்று சொன்னார்.
எக்காலத்திலும் அவனது விருப்பங்களில் குறுக்கிடாதீர்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒரு பதினான்கு வயதுப் பையன் மத்தியக் கிழக்கின் எண்ணெய்ப் பொருளாதாரத்தை அமெரிக்கா எப்படி அபகரிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பத்து நிமிடம் பேசுகிறான் என்றால் அவனைத் தலைமேல் வைத்துக் கொண்டாடவேண்டும். அல் காயிதா போன்ற அமைப்புகளால் ஏன் இனி எழ முடியாது என்பதையும் ஐஎஸ் எப்படி ஆதிக்கம் கொள்ள முடிகிறது என்பதையும் இந்த வயதிலேயே விளக்கத் தெரிந்திருப்பவன் நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவான் என்று சொன்னேன்.
புத்தகங்களுக்கான அடுத்த தலைமுறை வாசகர்கள் பற்றி எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் எப்போதும் ஓர் அச்சம் உண்டு.
இனி எனக்கு அது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் எங்கெங்கோ இத்தகு சூர்யாக்கள் பிறந்தபடியேதான் இருப்பார்கள்.