12.3.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பேலியோ கருத்தரங்கில் நான் நிகழ்த்திய உரை.
நண்பர்களே,
டாக்டர் பேசிக் கேட்டீர்கள். டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதாபோல் டாக்டரான, விற்பன்னர் பேசிக் கேட்டீர்கள். நாளைக்குக் கட்சி ஆரம்பித்தால்கூட நாலைந்து தொகுதிகளில் ஜெயித்துவிடலாம் என்னும் அளவுக்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுமத்தில் உள்ளதையும் கொஞ்சம்போல் படித்துத் தெளிந்திருப்பீர்கள். ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டு இங்கே வந்திருக்கிற உங்களுக்குப் புதிதாக நான் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன். ஒன்று செய்யலாம். உங்களுக்கு நான் பேய் ஓட்டக் கற்றுத் தரலாம் என்று தோன்றுகிறது.
பேலியோ வாழ்க்கை முறையை நான் பயில ஆரம்பித்த புதிதில் நான் எதிர்கொண்ட பெரிய பிரச்னையே அதுதான். ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று விதமான பேய்களை நான் சமாளிக்க வேண்டியிருந்தது.
எனக்குத் தெரிந்து பேய்களில் நல்ல பேய், கெட்ட பேய் என்று இரு விதம் கிடையாது. எல்லாமே ஒரே ரகம்தான். பேய்கள் கண்டிப்பாக நம்மைவிடக் கெட்டவை. இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் நாம் கொஞ்சம் நல்ல ரகம். அதனால்தான் பேய்களையும் பொருட்படுத்தாமல் பெரிய கனவுகளோடு இங்கு கூடியிருக்கிறோம்.
பேலியோ உணவு முறை என்பது கனபாடிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் பொதுவில் அறியப்படுகிறது. உண்மையில் எடைக்குறைப்பைக் காட்டிலும் சில சௌகரியங்கள் இதில் கிடைக்கின்றன. கொஞ்சம் விளக்கினால் புரியும் என்று நினைக்கிறேன்.
பரம சாது ஜென்மமான எனக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் வரை ரத்தக்கொதிப்பு என்கிற கெட்ட வியாதி ஒன்று இருந்தது. கொதிக்கக்கொதிக்கக் குடிக்கவேண்டிய காப்பியைக் கூட ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிக்கிற எனக்குப்போய் எப்படி ரத்தம் கொதிக்கும் என்று புரியவேயில்லை. என் குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்தே குபேரனான டாக்டராகப்பட்டவர், இரண்டு வேளை சாப்பிடச் சொல்லி எனக்கு ஒரு மாத்திரை எழுதிக் கொடுத்தார். காலக்கிரமத்தில் அந்த இரண்டு மாத்திரைகளை மூன்றாக உயர்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைத்தார்.
அந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் வரை நான் எப்படி இருந்தேன் என்று நன்கு அறிந்த சிலபேர் இங்கே இருக்கிறார்கள். என் வீட்டில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, பீரோ, மேசை, நாற்காலிகள் எல்லாம் எப்படி வைத்த இடத்தில் அப்படியே இருக்குமோ அதே மாதிரிதான் நானும் இருந்தேன். பத்தடி நடந்தால் பிரசவ வலி எடுத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு விடுவது வழக்கம். உட்கார்ந்த இடத்தில் என் சொர்க்கத்தை உருவாக்கிக்கொள்ள உடம்பு வலிக்காமல் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ரத்தம் என்ன. மொத்தமே கொதித்து ஆவியாகியிருக்க வேண்டியது.
ஓர் அதிசயம் போலத்தான் என் மனைவியின் மூலம் எனக்கு ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமம் அறிமுகமாகி நான் இந்தப் பேட்டைக்குக் குடி மாறி வந்தேன். ஆறு மாதங்களாகின்றன. இப்போது என் ரத்தம் கொதிப்பதில்லை. அச்சுறுத்தட்டுமா என்று கேட்டுக்கொண்டிருந்த சர்க்கரை அளவு இருந்த இடம் தெரியாமல் எங்கோ போய் ஒடுங்கிவிட்டது. உருவத்திலும் குணத்திலும் பூமியைப் போலிருந்தவன், இன்று குணத்தில் மட்டுமே அப்படி இருக்கிறேன். ஒரு மனிதனை உடலில் இருந்து மனம் வரை முற்றிலும் மாற்றி, புத்தம்புதிய பாட்ஷா மறுபதிப்பு போல் வெளியிட முடியுமா என்றால் முடியும். பேலியோ அதைச் செய்திருக்கிறது.
பேய்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம் அல்லவா? அந்த மூன்று பேய்களை இப்போது பார்க்கலாம்.
முதலாவது பேய், சந்தேகம். இதென்ன சரியான காட்டான் கூட்டமாக இருக்கிறதே, கொழுப்பைத் தின்று ஒரு மனிதன் எப்படி உயிரோடு இருக்க முடியும்? நாலு நாளில் ஹார்ட் அட்டாக் வந்து மண்டையைப் போட்டுவிட மாட்டோமா என்கிற அடிப்படைச் சந்தேகமே இங்குள்ள முதல் பேய்.
இரண்டாவது பேய்க்கு இரண்டு பேர் உண்டு. ஒன்று சங்கடம். இன்னொன்று தர்ம சங்கடம். ஒரு வீடு மாறினாலே ஆயிரத்தெட்டு சங்கடங்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு முதல் போஸ்ட் கார்டு வரை முகவரி மாற்றத்துக்கு அலைவதில் தொடங்கி, கேஸ் கனெக்ஷன் கேபிள் கனெக்ஷன் டெலிபோன் கனெக்ஷன் இண்டர்நெட் கனெக்ஷன் வரை மல்லுக்கட்டி நிற்பது தவிர்க்க முடியாதது. பேலியோவுக்கு மாறுவதென்பது கிட்டத்தட்ட வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்வது. இதில் ஆரம்பச் சங்கடங்கள் இல்லாமல் எப்படி இருக்கும்? இந்தச் சங்கடங்கள் இயல்பானவையாக இருந்தால் அவை வெறும் சங்கடங்கள். இன்னொருத்தரால் வரும்போது அதுவே தர்மசங்கடமாகிவிடுகிறது.
இரண்டு முடிந்ததா? மூன்றாவது பேய் மட்டும் கொஞ்சம் பேஜாரானது. திடீரென்று உங்கள் ஆபீசில் உங்களை அண்டார்டிகாவுக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். காய்கறிகள் கிடைக்காது. சிக்கன் கிடைக்காது, மட்டன் கிடைக்காது, வெண்ணெய் கிடைக்காது, பால் கிடைக்காது, எதுவும் கிடைக்காத ஓரிடம். அங்கே போய் எப்படி பேலியோ கடைப்பிடிப்பது? பிரச்னைதான் அல்லவா?
ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் நண்பர்களே. எல்லா பூட்டுகளும் அவற்றுக்கான சாவிகளுடனேதான் தயாரிக்கப்படுகின்றன. பிரச்னைகளுக்கான தீர்வு அதற்குள்ளேயேதான் இருக்கிறது.
மேற்படி மூன்று பேய்களை விரட்டும் கலையைப் பற்றி நாம் சற்றுப் பேசலாம் என்று நினைக்கிறேன்.
சாஸ்திரத்திலேயே மூன்று விதமான தடைகளைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆதி தெய்விகம். ஆதி பௌதிகம். ஆத்யாத்மிகம். ஆதி தெய்விகம் என்றால் நமக்கு மீறிய சக்தியால் வருகிற தடை. அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆதி பௌதிகம் என்பது நாம் ஒன்றை ஆரம்பிக்கும்போது யாராவது அல்லது ஏதாவது வந்து கட்டையைப் போட்டுக் குட்டையைக் குழப்புவது. ஆத்யாத்மிகம் என்பது நமக்குள் இருந்தே வருகிற தடை.
பேலியோவில் பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது இந்த மூன்று விதமான தடைகளையும் நான் சந்திக்க வேண்டியிருந்தது.
நண்பர்களே, நான் ஒரு தாவர பட்சிணி. இனிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் முட்டை இருக்கும் என்பதால் கேக்கைத் தொட்டுக்கூடப் பார்க்காத அளவுக்குத் தீவிரவாத வெஜிடேரியன். காய்கறிகளில் காளானை உண்ணமாட்டேன். அது ஓர் உயிரினம் என்று எப்போதோ சிறு வயதில் கேள்விப்பட்டதன் விளைவு. என் குடும்பப் பின்னணியோ, குலமோ, மற்றதோ இதற்குக் காரணமல்ல. எங்கள் குடும்பத்திலேயே வளைத்து வளைத்து சிக்கனையும் மட்டனையும் உண்ணுகிற ஜீவாத்மாக்களை நான் அறிவேன். மரக்கறி உணவு என்பதை முழு விருப்பத்துடன் தேர்ந்தெடுத்துக்கொண்டபடியால் மற்றதன்மீது எனக்கு இச்சை எழுந்ததில்லை.
ஆனால், எனக்கு எதை உண்டாலும் ருசியாக உண்ண வேண்டும். தரத்தில் அரைச் சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால்கூட முகம் சுளித்துவிடுகிற ஜந்து. உணவின் அதிதேவதையே மண்டியிடுகிற அளவுக்கு என் உணவின் ருசியில் எப்போதும் உயர்தரம் காக்கிறவன் நான். ஆனால் சைவ பேலியோவில் நானாவித சாத்தியங்கள் ஏதுமில்லையே என்றார்கள். தினமும் பாதாம் வறுத்துத் தின்றால் முப்பத்திரண்டில் மூன்றிலொரு பங்குப் பற்கள்தான் மிஞ்சும் என்றார்கள்.
அப்படியா?
பனீர் ஒரு துணைப் பொருள். அதை எப்படி முக்கிய உணவாக எடுத்துக்கொள்ள முடியும்? தினசரி வீட்டில் பனீர் டிக்காவும் பனீர் புர்ஜியும் சமைத்துக்கொண்டிருக்க நாமென்ன சேட்டுக்கடையா நடத்துகிறோம்? அதெல்லாம் முடியவே முடியாது என்றார்கள்.
அப்படியா?
ஒரு புளியோதரை இல்லாத வாழ்க்கை நமக்கு எதற்கு? உருளைக்கிழங்கில்லாத உலகில் வாழத்தான் முடியுமா? லட்டில்லாத வாழ்க்கை. குலோப்ஜாமூன் இல்லாத வாழ்க்கை. வறுத்த முந்திரியும் மாதுளை முத்துகளும் புதைந்த வண்ணமயமான கேசரி இல்லாத வாழ்க்கை. வாழைக்காய்ப் பொரியல் இல்லாத வாழ்க்கை. வத்தக்குழம்பு சாதம் இல்லாத வாழ்க்கை. அட, ஆயிரம் அப்பள நிலவுகள் பூக்காத, வடையற்ற, பஜ்ஜியற்ற, வகை வகையான ஐஸ் க்ரீம் அற்ற ஒரு வாழ்க்கையை எதற்காக வாழவேண்டும்?
ஐம்பதுகளின் தமிழ் சினிமாவிலும் இப்போதைய தொலைக்காட்சித் தொடர்களிலும் எப்போதும் குதித்து வந்து எதிரே நின்று பேசுகிற மனச்சாட்சி இதைக் கேட்டபோது எனக்குத் தோன்றிய பதில் இதுதான்.
இந்த ருசி உடல் நலனுக்குக் கேடென்றால் கேடற்ற உணவில் புதிய ருசிகளை நான் கண்டுபிடிப்பேன்.
விளையாட்டில்லை. உண்மையிலேயே அது என்னால் முடிந்தது. உணவைப் பொறுத்தவரை எனக்கு அதுநாள் வரை சாப்பிட மட்டுமே தெரியும். ஆனால் பேலியோ எனக்கு சமைக்கச் சொல்லிக் கொடுத்தது. ஒப்புக்குச் சமைப்பதல்ல. உயர்தரமாகச் சமைப்பது. என் எழுத்தில் எனக்குள்ள தீவிரமும் நேர்மையும் சமையலிலும் கூடி வந்திருப்பதை சரித்திரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
உண்மையைச் சொல்லுவதென்றால் என் வாழ்வில் நான் சமரசமில்லாத அதி உன்னத ருசியுள்ள உணவை தினசரி உண்ண ஆரம்பித்தது பேலியோவுக்கு வந்த பிறகுதான்.
ஆக, விதவிதமாக உண்ண முடியுமா, இந்த உணவு முறையில் ருசி இருக்குமா என்கிற அடிப்படை சந்தேகத்தை அடியோடு ஒழித்தேன். நாமெல்லாம் திரிசங்கு ஜாதி. சொர்க்கம் நமக்கில்லை, நரகம் நமக்கு வேண்டாம் என்றால் நமது சொர்க்கத்தை நாமே படைத்துக்கொள்வதுதான் சரி.
ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் பயம் இருக்கிறது பாருங்கள். அதை ஒழிப்பதுதான் இங்கே முதன்மையான சவாலாக இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னால் என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஒரு நாலைந்து நாள் அங்கேயேதான் நான் வசிக்க வேண்டியிருந்தது. இரவு பகலாகக் கண் விழித்து உட்கார்ந்திருந்ததில் எனக்குக் கிடைத்த ஞானம் மிக எளிமையானது. பணக்காரன் ஏழை, உயர்ந்தவன் தாழ்ந்தவன், நல்லவன் கெட்டவன், ஆண் பெண் பேதமின்றி ஒரு காற்றைப் போல், நீரைப் போல், கடவுளைப் போல் அனைவரையும் சமமாக பாவித்து அருள்பாலிக்கிற தேவதை இந்த ஹார்ட் அட்டாக். என்ன ஒன்று இது கெட்ட தேவதை.
காலகாலமாக பேதமின்றி மனித குலத்தைத் தாக்கிக்கொண்டிருக்கிற ஹார்ட் அட்டாக்குக்கு பேலியோக்காரர்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது எந்த வாட்சப் வெறியன் கிளப்பிவிட்ட பீதி என்று எனக்குப் புரியவில்லை. உண்மையில் பேலியோ உணவு முறை ஹார்ட் அட்டாக்கைக் கூடியவரை தள்ளிப் போடக்கூடியது. கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பது தண்ணீர் அருந்தினால் போதை ஏறும் என்பதைப் போல. ஆய்வுகள் சொல்லுவது என்னவென்றால் கொழுப்பு குறைவாக எடுக்கிறவர்களுக்குத்தான் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.
நான் மருத்துவ விவகாரங்களுக்குள் போக விரும்பவில்லை. அந்தத் தகுதியுள்ளவனும் அல்ல. ஆனால் இந்த ஹார்ட் அட்டாக் பூச்சாண்டி பல மூலைகளில் இருந்து தாக்கக்கூடியது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் நூற்றுப் பத்து கிலோ எடைக்குமேல் இருந்தவன். சரசரவென்று எடை இறங்கி எண்பதில் தொடங்கும் ஓர் எண்ணை எட்டிப் பார்த்த தினத்தில் என் அம்மா சொன்னார். ‘எல்லாம் ஓகேதான். அதான் எடை குறைஞ்சிடுச்சே. விட்டுட்டு எப்பவும்போல சாப்டேன்?’
‘இத விட்டுட்டா திரும்ப ஏறிடுமேம்மா? அப்ப என்ன பண்றது?’ என்றதற்கு அவர் சொன்ன பதில், ‘அப்ப திரும்ப இதுக்குப் போயிடு. குறைச்சிட்டு திரும்பவும் பழைய மாதிரி சாப்டு.’
பாசம் போலத் தெரிந்தாலும் இதன் உண்மைப் பெயர் பயம். பயல் கொழுப்பு சாப்பிடுகிறான். அது ஹார்ட் அட்டாக்கைக் கொடுக்கும்.
என் அப்பா பசிக்குத் தின்ற நாலு கவளம் சோற்றைத் தவிர, எதையுமே உண்ணாதவர். கிட்டத்தட்ட ஒரு யோகியின் வாழ்க்கை வாழ்ந்தவர். அவருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததை அம்மாவால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
ஆதி தெய்விகம் என்று சொன்னேன் அல்லவா? விதியின் தடை. அதுதான் இது. நாம் தவிர்க்க முடியாதது அது ஒன்றைத்தான். ஆனால் தவிர்க்கத்தான் முடியாதே தவிர, தள்ளிப் போட முடியும். ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தில் ஃபரூக் அப்துல்லா என்றொரு டாக்டர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரைப் படித்துப் பாருங்கள். டாக்டர் ஹரிஹரனின் பழைய கட்டுரைகளைத் தேடிப் படித்துப் பாருங்கள். எப்படித் தள்ளிப் போடலாம் என்று ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார் போல சொல்லிக் கொடுக்கிறார்கள் இவர்கள். இந்த மருத்துவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும், கையெடுத்துக் கும்பிடுவதைத் தவிர?
இனி இரண்டாவது பேயை விரட்டப் பார்க்கலாம். இது அன்னிய சக்தி, அயல்நாட்டு சதி வகையறாவுக்குள் வருவது.
எங்கள் குடும்பத்தில் எனக்கு அடுத்த தலைமுறையில் ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் பன்னெடுங்காலமாகக் கல்யாணம் ஆகாமல் இருந்தார்கள். சரி அவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.
ஆனால் சொல்லி வைத்த மாதிரி நானும் என் மனைவியும் பேலியோ உணவு முறைக்கு மாறியதில் இருந்து ஒவ்வொருவராக வந்து திருமண அழைப்பிதழை நீட்ட ஆரம்பித்தார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். நாங்கள் பேலியோ பயிலத் தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் ஏழெட்டு திருமண விசேஷங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த மாதிரி விசேஷங்களில்தான் உறவினர்களின் பாசமானது தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின் பாசம் போல் பொங்கிப் பீறிடத் தொடங்கிவிடும்.
என்ன பெரிய டயட்? ஒருநாள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. டேய், ஜானவாச ஸ்வீட் அசோகா. ஒனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு தனியா ஒரு டிபன் பாக்ஸ்ல எடுத்து வெச்சிட்டேன். அக்கார அடிசில் பிரமாதமா இருந்ததே, நீ சாப்ட்டியோ?
நம்மை இழுத்துக்கொண்டுபோய் உட்கார வைத்து சாப்பிட வைப்பதில்தான் அவர்களுக்கு என்னவொரு ஆனந்தம்! தீபாவளிக்கு பட்சணம் சாப்பிட்டால் தப்பில்லை. பொங்கலுக்குப் பொங்கல் சாப்பிட்டால் தப்பில்லை. பிள்ளையார் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை சாப்பிட்டால் தப்பில்லை. நவராத்திரிக்கு சுண்டல் தின்றால் தப்பில்லை.
தப்பைத் தப்பில்லாமல் செய்வதில் நாம் தப்பே செய்வதில்லை.
இந்தச் சங்கடங்களுக்கு என் மனைவி ஓர் உபாயம் கண்டுபிடித்தார். என்ன பண்டிகையானாலும் சரி. என்ன மாதிரியான குடும்ப விசேஷமானாலும் சரி. நூறு பாதாம் வறுத்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவது. அல்லது கையில் எடுத்துக்கொண்டு போய்விடுவது. யாராவது சாப்பிடக் கூப்பிட்டால், ‘ஓ, நான் போன பந்திலயே சாப்ட்டேனே? சீக்கிரம் போங்க, பூசனி அல்வா தீந்துடப் போறது’
முடிந்தது கதை.
சீட்டிங் என்று சொல்கிறார்கள். நாம் எதை ஏமாற்றுகிறோம் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நாம் நம்மை நாமேதான் ஏமாற்றிக்கொள்ள விரும்புகிறோம். இதன் நஷ்டம் யாருக்கு என்று யோசித்துப் பார்த்தால் அதைச் செய்யத் தோன்றாது.
ஒன்று சொன்னால் நம்புவீர்களா? மாதம் ஒருநாளாவது, மதிய உணவாக கால்கிலோ மைசூர்பாவும் கால் கிலோ ஆனியன் பக்கோடாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நான். என் குடும்பத்துக்கு நான் முக்கியம் என்று என்று நினைத்தேனோ, அன்று அதை விட்டேன். இன்று நான் இனிப்பைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனால் எதையுமே இழக்கவில்லை – எடையைத் தவிர.
இந்த உரையின் இறுதிக்கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆம். அந்த மூன்றாவது பேய் மிச்சம் இருக்கிறது. அதையும் பார்த்துவிடலாம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் என்ன செய்வது? நீங்கள் அசைவம் உண்பவர் என்றல் உங்களுக்கு அப்படியொரு சூழ்நிலையே வராது. அண்டார்டிகாவில்கூட மீன் கிடைக்கும். பெங்குவின் கிடைக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால் திமிங்கலமே கிடைக்கும். துளி கார்ப்பும் இல்லாமல் கீடோ டயட்டே இருக்கலாம்.
பிரச்னையெல்லாம் மைனாரிடிகளுக்குத்தான். சமூகமானால் என்ன, சாப்பாடானால் என்ன? கஷ்டப்படுவது அவர்கள்தாம். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், இந்தக் கஷ்டங்கள் அனைத்துமே நம் மனம் உருவாக்கும் மாயத்தோற்றம்தான்.
நான் கலைத்துறையில் இருப்பவன். சாதாரண மதிய உணவில் இருந்து மகத்தான இரவு விருந்து வரை சகலமும் அசைவ மயமாகவே அங்கே இருக்கும். ஆனால் எப்பேர்ப்பட்ட அசைவ விருந்திலும் வெங்காயப் பச்சடி இருக்கும். வெள்ளரிக்காய், கேரட் கலந்த சாலட் இருக்கும். தயிர் இருக்கும். பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ள தால்ச்சா என்ற பெயரில் அவர்கள் கொண்டு வந்து வைக்கிற கத்திரிக்காய் கூட்டு இருக்கும்.
மனமிருந்தால் மார்க்கபந்து.
உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். படியுங்கள். கண்மூடித்தனமாக எதையும் நம்புவதைவிடப் படித்து, பேசி, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது. நான் பேலியோவை ஏற்பதற்கு முன்னால் இதை எப்படியெல்லாம் கிண்டல் செய்தேன், எவ்வாறெல்லாம் வாரியெடுத்து வாயில் போட்டு மென்று துப்பினேன் என்பது நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் எப்போது இதன் அறிவியல் அடிப்படைகளைப் படித்துப் புரிந்துகொண்டேனோ, அப்போது என்னை மாற்றிக்கொண்டேன்.
எந்த மகத்தான மாற்றமும் ஆரம்ப எதிர்ப்புகளைச் சமாளித்துத்தான் தீரவேண்டும். பேலியோவுக்கு வருகிறவர்களுக்கு உள்ள முதல் எதிர்ப்பு, அது பற்றிய பயம்தான். ஆனால் அது தேவையற்ற பயம்.
நண்பர்களே, இது மரணமற்ற பெருவாழ்வுக்கான மகத்தான முதல்படி. தயங்காமல் அடியெடுத்து வையுங்கள். நீங்கள் நோயற்று வாழ என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
நன்றி, வணக்கம்.