என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா வீட்டுக்குச் செல்ல நேரும்போதெல்லாம் அவரை அந்தக் கோலத்தில்தான் கண்டிருக்கிறேன்.
அந்த ஈசி சேரின் கைப்பிடியை அப்படியே முன்னால் நகர்த்தி குறுக்காகப் போட்டுக்கொள்ளலாம். எழுந்து உட்கார்ந்து படிக்க, எழுத சௌகரியமாக, அகலமாக இருக்கும். தாத்தா அதன்மீதுதான் டிரான்சிஸ்டர் வைத்திருப்பார். அருகே குட்டியாக டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி டப்பா. அவருடைய டிரான்சிஸ்டர் எப்போதும் மதுரை சோமுவைத்தான் ஒலிபரப்பும். அல்லது எம்.டி.ராமநாதன்.
தாத்தாவை நான் கவனிக்கத் தொடங்கியது அவரது அந்திமக் காலங்களில்தான். அவர் பெரம்பூர் ஐ.சி.எஃப்பில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர் என்று சொல்லக்கேள்வி. இடையே இறந்தது போக அவருக்கு மூன்று பிள்ளைகள், ஐந்து பெண்கள். மூத்த மகளான என்னுடைய அம்மாவின் திருமணம் ஒன்றுதான் அவரது கவனிப்பில் நடந்தது. மற்றவர்களுடைய திருமணத்தையெல்லாம் இறைவன் தான் நடத்திவைத்தது.
தாத்தா உல்லாசி. ஆனால் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்து நான் கண்டதில்லை. எப்போதும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மிஞ்சிப்போனால் ஐந்து ரூபாய் இருக்கும் அவரிடம். ஒரு சில மணிநேரங்கள்தான் அதுவும் தங்கும். சைதாப்பேட்டையில் அந்நாளில் புகழ்பெற்ற வளர்மதி, மாரி ஓட்டல்களில் அவர்தமது காலைச் சிற்றுண்டியை முடிப்பார். பிறகு தேரடியை ஒட்டிய அவரது விடலைக் கிழவர்கள் கோஷ்டியுடன் சீட்டுக்கட்டைப் பிரித்தால் அவருக்கு யுகங்கள் கணமாகும். டி.ஏ.எஸ். பட்டணம் பொடியும் வெற்றிலை சீவல் பன்னீர்ப் புகையிலையுமாகப் பொழுதுகள் கரையும். அபூர்வமாக வெளேரென்று ஜிப்பா அணிந்து [கதர், காட்டனெல்லாம் இல்லை. பாலியெஸ்டர் மட்டுமே அணிவார்.] எங்காவது கச்சேரிக்குக் கிளம்புவார். மாம்பலம் சிவா போன்ற ஒரு சில நாகஸ்வர வித்வான்களும் மதுரை சோமு போன்ற சில பாடகர்களும் அவருக்கு நெருக்கமான சிநேகிதர்கள்.
வேறு சில பிரமுகப் பிரபலங்களும் தமது சிநேகிதர்கள்தான் என்று தாத்தா சொல்லுவார். நம்புவது கஷ்டமாக இருக்கும். ஐ.சி.எஃப்பில் ஃபிட்டராகப் பணியாற்றியவருக்குப் பிரபல கலைஞர்களுடன் தொடர்பு எப்படி உண்டாகியிருக்கும்?
அந்நாளில் இதனை யோசித்துக்கொண்டிருப்பது எனக்கொரு பொழுதுபோக்கு. பாட்டியிடம் ஒரு சில சமயம் விசாரித்திருக்கிறேன். சரியான பதில் வந்ததில்லை. பொதுவாகப் பாட்டிக்கு தாத்தாவைப் பிடிக்காது. அநேகமாகத் தனது எட்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அப்படியாகியிருக்கலாம். என்னைப் படிக்க வெச்சிருந்தா பீ.ஏ. வரைக்கும் படிச்சிருப்பேன். இந்த மனுஷன கல்யாணம் பண்ணிவெச்சி சீரழிச்சுட்டா என்று எப்போதும் தன் பெற்றோரைத் திட்டிக்கொண்டிருப்பாள் பாட்டி.
தாத்தா குடும்பக் கவலைகள் அற்றவர். எப்படி அப்படி இருக்கமுடியும் என்பது இன்றளவும் எனக்கு வியப்புத்தான். சங்கீதம், நாட்டியம் என்று அவரது விருப்பங்களும் ஆர்வங்களும் அந்தக் குடும்பத்துக்கு அதிகம். ஏழைமை என்று சொல்லமுடியாது. ஆனால் வளமை காணாத வீடு அது. பாட்டியின் பூர்வீக வீடுதான். தாத்தாவுக்கு அந்த வீடு மாதிரியேதான் பொடி டப்பாக்களும் வெற்றிலை சீவலும்கூட. எப்படியோ அமைந்துவிடும்.
எழுத்து, புத்தகம், கவிதை என்கிற சொற்களெல்லாம் அந்த வீட்டு வாசற்படி ஏறத்தொடங்கியது என் அப்பா அங்கே மாப்பிள்ளையான பிற்பாடு. தாத்தாவுக்கு மிகவும் குஷியாகிவிட்டது. மாப்பிள்ளை கவிஞரல்லவா?
எப்போதாவது சைதாப்பேட்டைக்குக் குடும்பத்துடன் நாங்கள் போய்விட்டால் போதும். தாத்தா உற்சாகமாகிவிடுவார். ‘மாப்ளே.. இங்க உக்கார்றது..’ என்று தனது சிம்மாசனத்தை ரெண்டு தட்டு தட்டி நீட்டுவார். என் அப்பாவை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஹெட் மாஸ்டராக இருந்தபோது அத்தனை பிடித்ததா என்று எனக்கு நினைவில்லை. ஓய்வு பெறுவதற்குச் சற்று முன்னால் அவர் பள்ளிக் கல்வி துணையோ இணையோ இயக்குநராகி ஒரு நாள் ஜீப்பில் வந்து இறங்கியதும்தான் தாத்தாவின் உபசரிப்புகள் பரிமாணமெய்தின. ஈசி சேரை இழுத்துப் போடுவார். மின்விசிறியை தூசு தட்டி எடுத்து வந்து ஒரு ஸ்டூலில் வைத்து அவர் பக்கமாகத் திருப்பி விடுவார். காப்பியை தன் கையால் ஆற்றித் தருவார். என் அப்பா தூங்கினால் கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போனாக அருகே இருந்து பார்த்துக்கொள்வார். யாரும் கிட்டே போய் எழுப்பிவிட முடியாது. தாத்தாவுக்குக் கோபம் வந்துவிடும்.
அவர் ஒரு நல்ல கணவராகவும் தகப்பனாகவும் இல்லாது போனாலும் ஒரு சிறந்த மாமனார் என்று என் அப்பா எப்போதும் சொல்வது வழக்கம். இப்போதும்கூட. ஆனால் தாத்தாவின் பிற மாப்பிள்ளைகள் யாருக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் வாய்த்ததாக நினைவில்லை. தாத்தா அவர்களையெல்லாம் சீந்தக்கூட மாட்டார். எப்போதாவது தீபாவளி, பொங்கலுக்கு வந்தால் கண்டுகொள்ளக்கூட மாட்டார். அவர் பாட்டுக்குத் தன் சீட்டாட்ட கோஷ்டியில் போய் ஐக்கியமாகிவிடுவார். எப்படியோ என் அப்பாவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். முதல் மாப்பிள்ளை என்பதாலோ, கவர்மெண்ட் மாப்பிள்ளை என்பதாலோ, அவரே பார்த்து வைத்த ஒரே மாப்பிள்ளை என்பதாலோ. அந்த அன்புக்கு நிகரே சொல்லமுடியாது. அப்படித் தலைக்குமேல் வைத்துத் தாங்குவார்.
எல்லாம் சரி. என் அப்பாவை குஷிப்படுத்துவது எப்படி? அவருக்கு சங்கீதமெல்லாம் தெரியாது. டான்ஸ்? வாய்ப்பே இல்லை. பொடி? பன்னீர்ப்புகையிலை? ம்ஹும். அவர் ஒரு தத்தி. எதையும் அனுபவிக்கத் தெரியாதவர். வளர்மதி, மாரி ஓட்டல்களில் ஆனியன் ரவா சாப்பிடக்கூடத் தயங்குகிறவர்.
எனவே தாத்தா தன் கையில் வேறொரு ஆயுதத்தை எடுத்தார். ‘மாப்ளே, விஷயம் தெரியுமா? ஒரு காலத்திலே பாரதியாருக்கு இந்த ராமசாமி பக்கோடா வாங்கிக்குடுத்திருக்கேன். இன்னிக்கி அவன் பெரிய கவிஞன். நான் அதே தரித்திரவாசி.’
அப்பா அதிர்ந்துபோய்விட்டார். என் அப்பாவுக்கு பாரதியை ரொம்பப் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு மிகக் கவனமாக பாயிண்டைப் பிடித்திருக்கிறார்!
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த அபூர்வமான தருணத்தின் ஒரே சாட்சியாக 40, பெருமாள் கோயில் தெரு வீட்டின் வாசல் படியில் அமர்ந்து தாத்தாவைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘நிஜமாத்தான் சொல்றேன். நீங்க நம்பலன்னா நான் என்ன பண்ணமுடியும்? என்கூடத்தான் சீனன் கடைக்கு வந்தார். தாடியும் மூஞ்சியும் பாக்க சகிக்கலே. குளிச்சி எத்தன நாளாச்சோ தெரியல. பசிக்கறதும் ஓய்ன்னார். சரி வான்னு கூட்டிண்டு போனேன். சீனன் கடைல சுடச்சுட பக்கோடா போட்டுண்டிருந்தான். சாப்பிடறேளான்னேன். சரின்னார். அம்பது கிராம் நிறுத்துக் குடுத்தான். வாங்கி, நின்ன வாக்குல சாப்டுட்டு வாயத் தொடச்சிண்டு போயே போயிட்டார்..’
தாத்தா காட்சி ரூபமாக விவரித்துக்கொண்டிருந்தார். என் அப்பாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘சும்மா கதை. பாரதியார் நீங்க சொல்ற டயத்துல இங்க வந்திருக்க சான்சே இல்லை. அவ்ர் அப்ப பாண்டிச்சேரில இருந்தார்’ என்று லா பாயிண்டைப் பிடித்தார்.
‘இப்படி பேசினா நான் என்ன பண்ணமுடியும்? சந்தேகமிருந்தா நெல்லையப்பன கேட்டுக்கலாம். பாவி அவனும் செத்துத் தொலைச்சிட்டான்’ என்று தாத்தா கோபமாகிவிட்டார்.
இது எனக்கு இன்னும் வியப்பு கலந்த அதிர்ச்சியளித்தது. நெல்லையப்பன் என்று அவர் ஒருமையில் அழைத்தது, பரலி சு. நெல்லையப்பரை. அவருடன் தாத்தாவுக்குத் தொடர்பிருந்திருக்கிறதா?
‘ஆமாமா’ என்று பாட்டி அலுப்புடன் சொன்னதை நான் நம்பித்தான் ஆகவேண்டும். பாட்டி கப்சா விடுகிறவள் இல்லை. தவிரவும் நெல்லையப்பர் சைதாப்பேட்டையில் இருந்திருக்கிறார்.
ஏன் தாத்தா ஒருவேளை நெல்லையப்பருக்கு பக்கோடா வாங்கிக்குடுத்ததைத்தான் நீ பாரதியாருக்குன்னு மறந்துபோய் மாத்தி சொல்லிட்டியோ?
வேறொரு சமயம் கேட்டேன். தாத்தாவுக்கு இப்போது மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. ‘அடி சனியனே எழுந்து போ. வந்துட்டான் பெரிசா..’
தாத்தாவுக்கு நான் எப்படிப் புரியவைப்பேன்? நான் கிண்டலுக்குக் கேட்கவில்லை. அவர் குறிப்பிடுவது ஒரு சரித்திரச் செய்தி. சீனி விஸ்வநாதன் தனது பாரதி சரித்திரத்தில் எழுதாமல் விட்ட ஒரு முக்கியமான விஷயம். சைதாப்பேட்டையில் பாரதி பக்கோடா சாப்பிட்டிருக்கிறாரா? அது பெருமாள் கோயில் தெரு ராமசாமி ஐயங்காரால் வாங்கித் தரப்பட்டதுதானா?
சீனி விஸ்வநாதன் மட்டுமல்ல. பாரதியின் சரித்திரத்தை எழுதிய எவராலும் எங்கும் குறிப்பிடப்பட்டதில்லை. பரலி சு. நெல்லையப்பரே கூட எழுதியதில்லை, யாரிடமும் சொன்னதுமில்லை. சாட்சிகளற்ற ஒரு சம்பவத்துக்கு என் தாத்தா மட்டுமே சாட்சியா?
பாரதியார் என் தாத்தா கையால் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டாரா என்கிற கேள்விக்கு இன்றுவரை என்னிடம் விடையில்லை. ஆனால் என் அப்பாவைப் போல் ‘அதெல்லாம் கப்ஸா’ என்று ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. பல முறை தாத்தாவிடம் நான் அதை விசாரித்துவிட்டேன். கடைசி வரை அவர் தனது ஸ்டேட்மெண்டை மாற்றவேயில்லை. சந்தேகமே இல்லை, பாரதியார் சைதாப்பேட்டைக்கு வந்தார், நான் சீனன் கடையில் பக்கோடா வாங்கிக்கொடுத்தேன்.
விசாரித்து உண்மையறிய இன்று பாரதியாருமில்லை, பரலி நெல்லையப்பரும் இல்லை, என் தாத்தாவும் இல்லை.
பாரதியை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இது நினைவுக்குவரத் தவறுவதுமில்லை. இன்றைக்கு பாரதியார் நினைவு தினம்.
மாரி ஓட்டல் அந்த காலத்திலேயே இருந்ததா? சின்ன வயசில் எனக்கு ஜூரம் வந்தால் சைதாப்பேட்டை ஈ.எஸ்.ஐ.க்கு அம்மா தூக்கி வருவார். ஊசி போட்டு முடித்ததும் மாரி ஓட்டலுக்கு நடக்கவைத்து அழைத்துப் போய் செட் தோசை வாங்கித்தருவார்.
உங்க தாத்தா பொய் சொல்லியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். என் அம்மாவின் சித்தப்பா (எனக்கு தாத்தா) காமராஜரோடு நெருக்கமாக இருந்தவர். அவர் உயிரோடு இருந்த காலம் வரை அதை நானும், அப்பாவும் நம்பவேயில்லை. அவரது மரண ஊர்வலத்தின்போது அவரது அந்த காலத்து சகாக்கள் சிலர் காமராஜருக்கும், தாத்தாவுக்கும் இருந்த உறவுகளை பேசியவாறே நடந்து வந்தபோது தான் நம்பினேன்.
பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவரின் பேரனுக்கு பின்னூட்டம் போடும் பாக்கியம் என்னைப் போல எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று தெரியவில்லை 🙂
சொல்ல மறந்துவிட்டேனே?
பதிவின் தலைப்பு கலக்கல் 🙂
very interesting. இன்னும் கொஞ்சம் எழுதமாட்டீர்களா என்று ஏங்கச்செய்துவிட்டது எழுத்து. இத்தகைய அனுபவங்கள்தான் எழுத்தாளனை உருவாக்குகிறதா? உங்கள் பாட்டியைப் பற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதி இருந்தீர்கள். அதுவும் இதே போலவே சுவையாக இருந்தது. அப்படி ஒரு பாட்டிக்கா இப்படியொரு தாத்தா? சாரி, கணவர்;-)
உங்க தாத்தாவிடம் பசிக்குது வோய்’ன்னு சொன்னது பாரதிக்கே உரிய மிரட்டல் தோணி.
பாரதியாரும் பக்கோடாவும் ரெண்டுமே இப்போ நினைத்தாலும் மனசில் ருசி கூட்டும் விஷயங்கள் 🙂
பாரதியார் இறந்தது 1921 என நினைக்கிறேன். அச்சமயம் உங்கள் தாத்தாவுக்கு என்ன வயது இருந்திருக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
இதே கேள்வியை நானும் என் தாத்தாவிடம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறேன்!
என் தாத்தா 1980-ல் [சந்தேகமாக இருக்கிறது இப்போது! ஒருவேளை 81, 82ஆகக்கூட இருக்கலாம். நாளை அம்மாவிடம் கேட்டுவருகிறேன்!] இறந்தார். அப்போது அவருக்கு 80-81-82 ஏதோ ஒரு வயது இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. ஆனால் முதிர்ந்த வயதுதான். அதில் சந்தேகமில்லை. அவர் நெல்லையப்பருடன் பழகியவர் என்பதை வேறு சிலர் மூலமும் நான் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் நெல்லையப்பர் பாரதியாருடன் நெருங்கிப் பழகிய காலத்தில் இவர் நெல்லையப்பரின் நண்பராக இருந்தாரா என்று தெரியவில்லை!
இதை படிக்கும்போது எங்க தாத்தாவைப் பற்றி எனக்கு கூறப்பட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
எங்க அம்மாவின் தாத்தா (அம்மாவின் அப்பாவின் அப்பா) எங்கள் ஊரில்(கல்லிடைக்குறிச்சி) புகழ் பெற்ற மருத்துவர்.
அவரை சந்திக்க மகாகவி பாரதியார் அடிக்கடி வருவாராம். ஒரு முக்கியமான மருந்து வாங்க!
அந்த மருந்து, கர்ப்பிணிகளுக்கு வலி தெரியாமல் இருக்க தரப்படுவது. அதில் கஞ்சா கலக்கப் பட்டிருக்குமாம். 🙂
அதை லேசில் எங்கள் தாத்தா தர மாட்டாராம். இருந்தாலும், ஒரு கட்டத்தில் பாரதியார் மேல் உள்ள மரியாதையிலும், அவரின் வற்புறுத்தல் காரணமாகவும் தந்து விடுவாராம்.
பாரதியார் உடனே கிடைக்கும் ஏதேனும் சீட்டில் “லக்ஷ்மி வராகன் குலம் வாழ்க” என்று எழுதி கொடுத்து விட்டு சந்தோஷத்துடன் செல்வாராம்.
இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். பாரதியார் வரும்போது அக்கம்பக்க வீட்டினர், அவரை பைத்தியம் என்று சாடுவார்களாம். 🙁
அவர் ஒன்றும் மகான் அல்ல. ரசனையோடு வாழத் தெரிந்த சாதாரண ஒரு மனிதன். நாம் மனிதர்கள் அல்ல..
உங்களுடைய தாத்தா சொன்னது நிஜமோ, பொய்யோ.. 1920-களிலேயே தமிழ்நாட்டில் பக்கோடா புழுங்கிக் கொண்டிருந்தது உண்மையாகிவிட்டது..
ஒரு வரலாற்று உண்மையை வெளிப்படுத்திய உங்களது தாத்தாவுக்கும், உங்களுக்கும் எனது நன்றிகள்..
//அவர் ஒன்றும் மகான் அல்ல. ரசனையோடு வாழத் தெரிந்த சாதாரண ஒரு மனிதன். நாம் மனிதர்கள் அல்ல..//
நாகராஜன் ஸார், ‘எங்கிட்டோ’ போகப் போகிறார்.. மிகவும் ரசித்த வார்த்தைகள்..
பாரதிக்கு தாத்தா கொடுத்தது பக்கோடா. பாராவுக்கு மாவா கொடுத்தது யாரோ?
நாகூர் ரூமி
ரூமி,
மாவா கதை தனியே எழுதவேண்டியது. சில தற்காப்பு காரணங்களுக்காக எழுதாமல் இருக்கிறேன்! 😉
நல்ல கட்டுரை. படிக்க சுவராசியமாக இருந்தது. நன்றி.
//para Says:
September 11th, 2008 at 9:20 pm
ரூமி,
மாவா கதை தனியே எழுதவேண்டியது. சில தற்காப்பு காரணங்களுக்காக எழுதாமல் இருக்கிறேன்!
//
நான் இப்போது மாணிக்சந்த் + ஒரு ரூபாய் அஜந்தா பாக்கு (அல்லது) பாஸ் பாஸ் மிக்ஸ் செய்து காக்டெயிலாக உபயோகிக்கிறேன். இந்த காம்பினேஷனை விட மாவா எந்தவகையில் உயர்ந்தது?
மாவா சாப்பிட்டால் ‘புதையல் தீவு’ மாதிரி சிறுவர் கதை எழுத கற்பனை பீறிட்டு வருமா?
மாவா இனிப்பா? கசப்பா?
நீங்க நல்லவரா? கெட்டவரா? (ஒரு ஃப்ளொவில் வந்துவிட்டது. இதற்கு பதிலளிக்க வேண்டாம்)
மாணிக்சந்த் சிறியது ஒன்று ரூ.4/-க்கு விற்கிறது + ஒரு ரூபாய் அஜந்தா. ஒருவேளைக்கு 5 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மாவாவுக்கு மாறினால் என் பொருளாதார பிரச்சினை கட்டுக்குள் வருமா?
நானும் தெகிரியமாக மாவாவுக்கு மாறிவிடலாமா?
லக்கி,
மாவா இயற்கை உணவு. மாணிக் சந்த், பான்பராகெல்லாம் கெமிக்கல் கசுமாலங்கள் நிறைந்தது. இரண்டும் உடல் நலத்துக்குத் தீங்கானதே என்றாலும் மாவாவில் தீங்கு சதவீதம் குறைவு.தவிரவும் மாவாவில் புகையிலையின் சதவீதத்தை நாம் நம் இஷ்டத்துக்கு கூட்டவோ குறைக்கவோ செய்ய இயலும். மற்றதில் அது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியில் நிச்சயம் மாவா உதவிகரமானதே. ஒரு பொட்டலம் ஐந்து ரூபாய்தான். [சில இடங்களில் ஆறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.] ஒரு பொட்டலம் மாவாவை ஐந்து அல்லது ஆறு முறை உபயோகிக்கலாம்.
நான் எப்போதும் புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்தின் வாசலில் உள்ள சேட்டுக் கடையில்தான் மாவா வாங்குவது வழக்கம். கி.பி. 2000 முதல் இவ்வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். [அதற்குமுன் பான்பராக், சூப்பர், மாணிக்சந்த், சிம்லா என்று ஒரு முழு வட்டம் சுற்றி, பிறகு நண்பர்களால் தடுத்தாட்கொள்ளப்பட்டேன்.] குமுதத்தில் இருந்த காலத்தில் நேரிலும் அதன்பிறகு இன்றுவரை ப்ராக்ஸி முறையிலும் எனக்கான மாவாவைப் பெற்று வருகிறேன். மிகவும் தரமான மாவா தயாரிப்பாளர் அந்த சேட். விலை ஏற்றமாட்டார். ஒரு நாள் நாம் வாங்கவில்லையென்றாலும் அன்புடன் விசாரிப்பார். நல்ல கஸ்டமர் ரிலேஷன்ஷிப் உள்ளவர்.
பான்பராக், மாணிக்சந்த் போடுவதற்கு பதில் மாவாவுக்கு நீங்கள் மாறுவது சிறப்பானதே. இதன் மிக முக்கிய பயன் – மற்ற ஜர்தா பாக்குகளைப் போல் உங்கள் வாயின் உள்பக்கத்தைப் பதம் பார்க்காது. எப்போதும் வாய்ப்புண்ணுடன் அவதிப்பட நேராது.
வந்தால் நேரடியாக கேன்சர்தான். அது வ்ரும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு மாறிவிடுங்கள்.;-)
🙂 சான்ஸே இல்லை. மாவா பத்தி நீங்கள் 500, 600 பக்கத்தில் ஒரு புத்தகம் போட்டால் பிச்சுக்கிட்டு போவும். தமிழ் சமுதாயத்துக்கு நீங்கள் செய்த பெரும்பணியாகவும் அது அமையும். 🙂
Dear Para, Iam not able to fully understand the conversation between you and luckylook. Please explain “mawa”. What is that? is that anything related to Ganja or something like that? do you use that regularly? sorry if iam wrong.
அன்புள்ள வினோத்குமார்,
நீங்கள் ஒரு சமத்து அப்பாவி என்று நினைக்கிறேன். அப்படியே இருக்கவும். அதுதான் நல்லது. ஆனால் மாவாவை கஞ்சா, அபின் வரிசையில் சேர்த்துவிடாதீர். இதுவும் உங்களைப் போலவே ஒரு சாது. அப்பாவி. லாகிரி வஸ்து என்று பொதுவில் சொல்லப்பட்டாலும் என் அனுபவத்தில் அது லாகிரியெல்லாம் தருவதில்லை. சும்மா கிராம்பு மெல்வதுபோல் விறுவிறுப்பாக இருக்கும். அதுவும் சற்று நேரம். அவ்வளவே. நீங்கள் மிகவும் குழப்பமும் பதற்றமும் அடைந்துவிட்டதுபோல் உணர்கிறேன். மாவாவை விளக்கிவிடுகிறேன்.
மாவா என்பது ஒரு கலவை. நல்ல வறுத்த சீவல், வட தேசத்து ஜர்தா [இதில் 65, 60, 63, 120, 360 என்று பல ஜாதிகளுண்டு.], வாசனை சுண்ணாம்பு மூன்றையும் உரிய அளவில் கலந்து, மேலுக்குக் கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு பாலித்தீன் தாளில் கொட்டி சுருட்டி, தேய் தேய் என்று தேய்த்தால் கிடைக்கிற பொடி. அசப்பில் ரசப்பொடி போல் இருக்கும். இதில் வாசனை ஒன்றும் பிரமாதமாக இராது. அந்த விறுவிறுப்பு மட்டும்தான்.
சமீபகாலமாக இந்த மாவா கலவையில் குங்குமப்பூ, ஜாதிபத்திரி போன்ற வாசனாதி திரவியங்களையும் சேர்த்து ப்ரீமியம் விலையில் விற்கிறார்கள். என் சரக்கின் விலை வெறும் ஐந்து ரூபாய்தான். இந்த ப்ரீமியம் சரக்கு 10-12 ரூபாய் வரை விலை சொல்லப்படுகிறது.
ஆனால் வாசனை திரவியங்கள் சேர்த்த மாவா எனக்கென்னவோ ருசியாக இல்லை. மாவாவின் சிறப்பு ராவா போடுவதுதான்.
நான் குமுதத்தில் இருந்த காலத்தில் எனக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் நானும் லக்கியைப் போலவே பாக்கெட் சரக்குகளைத்தான் மென்றுகொண்டிருந்தேன். அங்கே சிவகுமார் என்கிற வாசுதேவ், பெ. கருணாகரன் என்கிற என் இரண்டு நண்பர்களும் மாவாப்ரியர்களாக இருந்தார்கள். மூவரும் வேலை நெருக்கடி மிகும் பொழுதுகளில் சற்றே இளைப்பாற சாலைக்கு இறங்கி வருவோம். ஆளுக்கொரு மாவா தேய்க்கச் சொல்லிப் போட்டு மென்று துப்பிவிட்டு அங்கேயே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி கொப்புளித்துவிட்டு நல்ல பிள்ளைகளாக மீண்டும் ஃபாரம் பார்த்துக் கெட்டுப் போக மேலே போய்விடுவோம்.
இதெல்லாம் தேவையற்ற கெட்ட பழக்கங்கள்தான். சந்தேகமில்லை. ஆனால் விட முடியவில்லை என்பதைக் காட்டிலும் விடத் தோன்றவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.
நான் எப்போதும் ‘நல்லதை மட்டுமே பார்’ கட்சியைச் சேர்ந்தவனாக இருந்ததில்லை. ‘எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே பார்’ கட்சிக்காரன்.
மாவாவின் நல்லவை என்னென்ன என்று அடுத்தக் கேள்வி கேட்டுவிடாதீர்கள். நான் அம்பேல்!
//சைதாப்பேட்டையில் அந்நாளில் புகழ்பெற்ற வளர்மதி, மாரி ஓட்டல்களில் அவர்தமது காலைச் சிற்றுண்டியை முடிப்பார். //
ஹையா! எனக்கு இந்த இடத்தைத் தெரியுமே! நாங்கள் சைதை காரணீஸ்வரன் கோயில் தெருவில் இருந்த போது விடுமுறை நாட்களில் வளர்மதி ஹோட்டலுக்கு அப்பா அழைத்துச் சென்றதுண்டு. ரவா இட்லி நன்றாக இருக்கும். மசால் தோசை அப்போதெல்லாம் ஒன்றரை ரூபாய்க்கே கிடைக்கும். ஹ்ம்… எல்லாம் ஒரு காலம்! இப்போது வளர்மதி ஓட்டல் இருக்கின்றதா என்று அறிய ஆவலாக உள்ளேன். அடுத்தமுறை இந்தியா வரும்போது நிச்சயமாய் ஒரு சைதாப்பேட்டை டிரிப் உண்டு!!
அன்புள்ள பாரா !!
சைதை பக்கோடா பற்றிய சரித்திர உண்மையை இத்தனை நாள் ஏன் மறைத்தீரோ தெரியவில்லை…
தாத்தா உண்மை தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்.
அது சரி…அதற்காக சந்தடி சாக்கில் அப்பாவி அப்பாவை ‘தத்தி’ எனப்புகழ் பாடுவது கொஞ்சம் ஓவர் !!
மாவா விளக்கம் என்னை மாதிரி பரிசுத்தமானவர்களைக் கூட தடுமாற வைப்பதென்னவோ உண்மை…
அலுவலக உளைச்சலில் உங்கள் இணைய பக்கத்தை படிப்பதே ஒரு வித மாவா மயக்கம் தான்.. ஹி..ஹீ..
நன்றி
//மாவாவின் சிறப்பு ராவா போடுவதுதான்.//
ஆஹா.. ஆஹா.. ரசித்தேன் 🙂
If your grandpa used the words “50 gram niRutthuk kodutthaan”, then your thattha is probably making the story up. Before Bharathi died, gram was a not commonly used measure. Aha! I can be the next Sherlock!
Saidapet Mari hotel! I wonder whether this still exists…
வளர்மதி ரொம்பநாளாக சாப்பாடு ஹோட்டல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். டிஃபன் எல்லாம் கூட இருக்குமா? நான் அங்கே லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டதோடு சரி. இப்பொழுது கொஞ்ச நாட்களாக சாயங்கால வேளையில் சைனீஸ்/தந்தூரி என்று போடுகிறார்கள். நான் அதற்கருகில் இருக்கும் கடையில் லெமன் பன்னீர் சோடா குடிப்பதோடு சரி (மற்ற இடங்களில் லெமன் சால்ட் சோடாதான், இங்கு மட்டுமே லெமன் பன்னீர்). பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இவ்வமிர்தரசம் கிட்டும்.
மாரி ஹோட்டல் கொஞ்சம் renovate பண்ணி (கொஞ்சம் என்றால், கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான்), chat items எல்லாம் பரிமாறுகிறார்கள். என்ன இருந்தாலும் பாவப்பட்ட மேற்கு சைதாப்பேட்டைக்கு மாரியை விட அவ்வளவு பெரிய ஹோட்டல் எங்கும் இன்னமும் வரவில்லை. கௌரி நிவாஸ் கொஞ்சம் பரவாயில்லை.
மெய்ன் சைதாப்பேட்டைக்குப் போனால் பாலாஜி பவன் (என்னளவில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்) இருக்கவே இருக்கிறது. 5 நான், 1 மலாய் கோஃப்தா அல்லது பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டால் போதும். ஹோட்டல்காரருக்கு சொத்தில் பாதியை எழுதிவைக்கத் தோன்றும், ஆனால் கம்மியான பில்தான் வரும்.
மாவு அரைச்சா இட்லி குத்தலாம், மாவா அரைச்சா இட்லி குத்த முடியுமா?
மாவாவின் சிறப்பு ராவா போடுவதுதான்..
பாரா = சுஜாதா பாதி + கிரேசி மோகன் மீதி
சூப்பர்..
வாழ்த்துக்கள்.
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
பக்கோடாவா? சமீபத்தில் 1930களில் ‘போண்டா’ எல்லாம் கிடையாதா?!
the comments section was more informative and entertaining than the post. 😉 🙂
அருமையான வாசிப்பனுபவம். சுவராசியமான எழுத்து நடை!
ஆனாலும் கிராம் அன்று கிடையாது என்று துப்பறிந்த வாசகர் முந்திக் கொள்கிறார்…கிராம் என்ற வாசகம் எழுத்தாளரின் சேர்க்கையாக இருக்கலாம். மாட்டிக் கொண்டீர் போல :-}}
கிராம முன்சீபாக பணியாற்றிய எனது அம்மாவின் தாத்தாவையும் திருநெல்வேலியில் பிரபலமான ஜம்புலிங்கத்தையும் இணைத்து சுவ்ராசிய்மான கதை ஒன்று கேட்டிருக்கிறேன்…
//நிஜமாத்தான் சொல்றேன். நீங்க நம்பலன்னா நான் என்ன பண்ணமுடியும்? என்கூடத்தான் சீனன் கடைக்கு வந்தார். தாடியும் மூஞ்சியும் பாக்க சகிக்கலே. குளிச்சி எத்தன நாளாச்சோ தெரியல. பசிக்கறதும் ஓய்ன்னார். சரி வான்னு கூட்டிண்டு போனேன். சீனன் கடைல சுடச்சுட பக்கோடா போட்டுண்டிருந்தான். சாப்பிடறேளான்னேன். சரின்னார். அம்பது கிராம் நிறுத்துக் குடுத்தான். வாங்கி, நின்ன வாக்குல சாப்டுட்டு வாயத் தொடச்சிண்டு போயே போயிட்டார்..’//
மிக ஜீவனுள்ள நடை !
ஆனால் ஒரு சிறிய தவறு , பாரதி வாழ்ந்த காலத்தில் கிராம் முறை கிடையாது .
50 கிராம் பகோடா வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்
amirthamintl@gmail.com