a-s-d-f-g-f ;-l-k-j-h-j

இன்றைக்கு கோடம்பாக்கம் [பழைய] ராம் தியேட்டர் அருகே போய்க்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தேன். என்னுடைய பதினைந்தாவது வயதில் முதல் முதலில் பார்த்தபோது தென்பட்டதுபோல் அத்தனை பேரழகியாக இல்லை. இந்தக் கட்டுரை அவளைப் பற்றியதில்லை. அவளைப் போலவே தன் அடையாளம் துறந்துவிட்ட எங்கள் ஊர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பற்றியது. அங்கேதான் அவள் எனக்கு அறிமுகமானாள்.

எங்காவது இன்றைக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருக்கிறதா? என் கண்ணில் ஏதும் படுவதில்லை. கம்ப்யூட்டர் சென்டர்கள் புழக்கத்துக்கு வந்து ஒழித்த ஒரு நல்ல தொழில் அது. எண்பதுகளில் பெரும்பாலான பையன்கள் காதலிக்கப் பழகும் இடமும் அதுவாகவே இருந்தது.

குரோம்பேட்டையில் அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்கு அருகே இருந்தது அந்த இன்ஸ்டிட்யூட். குரோம்பேட் காலேஜ் ஆஃப் காமர்ஸ் என்று பெயர். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன ஆவது என்று ஏதும் யோசனையில்லாமல் ஏ எஸ் டி எஃப் ஜி எஃப் ஸ்பேஸ் செமி கோலன் எல் கே ஜே ஹெச் ஜே அடிக்கப் பழக ஆரம்பித்தேன். மாதம் பதினைந்து ரூபாய் ஃபீஸ். ஒரு மாபெரும் பம்பரத்தை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்ட பெண்மணி ஒருவர் அந்த இன்ஸ்டிட்யூட்டை நடத்திக்கொண்டிருந்தார். ஏழு ஹால்டா மெஷின்கள், நான்கு ரெமிங்டன், இரண்டு ஃபாஸிட்.

புதிதாகச் சேருபவர்களை டீஃபால்டாக ஹால்டாவில்தான் போடுவார்கள். உடலில் உள்ள முழுச் சக்தியையும் செலுத்தி அடித்தாலும் இஸட் மற்றும் க்யூ வராது. தவிரவும் எப்போதுமே மக்கிப் போன ரிப்பன் தான் போடப்பட்டிருக்கும் [ஃபாஸிட் மெஷினில் பத்து நாள் ஓட்டிவிட்டு எடுத்து ஹால்டாவில் போட்டுவிடுவார் அந்தப் பெண்மணி. ஃபாஸிட் மெஷின் ஹயர் க்ரேடு போகிறவர்களுக்கு மட்டும். இந்தப் பிரிவினையின் லாஜிக் எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.]

ரெமிங்டன் தமிழ் பேசும் அங்கே. தமிழ் டைப்பிங்குக்கு வருகிற பெண்கள் ஷிஃப்ட் போட்டுப் போட்டே உடல் இளைத்துக்கொண்டிருந்தார்கள். அடேயப்பா, தமிழ் டைப்ரைட்டிங்கில்தான் எத்தனை ஷிஃப்ட்!

பேட்டையில் இருந்த ஒரே ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் என்பதால் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கும். நாள் முழுதும் [இரவு ஒன்பது மணிவரை] டைப்பிங் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்து வருஷம் குப்பை கொட்டி வெறுத்துக்கிடந்த பையன்கள் எல்லோரும் அந்த இன்ஸ்டிட்யூட்டின் வண்ணமயமான சூழலைக் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரமெல்லாம் ஏ எஸ் டி எஃப் ஜி எஃப் அடிக்க சித்தமாயிருந்தார்கள். ஆண்டவா, லோயர் பாஸ் பண்ணிவிட்டாலும் ஹயரில் கண்டிப்பாக ஊத்தி மூடிவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வேண்டுமென்றே பரீட்சைகளில் தப்புத்தப்பாக அடிக்கவும் தயாராக இருந்தார்கள்.

அந்த வயதில் அங்கு பார்த்த பெண்கள் எல்லோருமே அழகாகத்தான் தெரிந்தார்கள். இன்று பார்த்து அதிர்ந்துபோன அவளைப் போலவே. வி ஷேப்பில் தாவணி அணிந்து வருவார்கள். சிலர் இரட்டைப் பின்னல் போட்டிருப்பார்கள். மடித்துக் கட்டி பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோல் ரிப்பன் சுற்றியிருப்பார்கள். பின்வரிசையில் அமர நேர்ந்தால் பார்த்துக்கொண்டே தப்புத்தப்பாக அடிக்கலாம். உரிமையாளர் பெண்மணி நமக்குப் பின்னால் வந்து நின்று நாக்கைப் பிடுங்குவதுபோல் ஏதாவது சொல்லுவார். முன் வரிசை வி ஷேப் தாவணி திரும்பிப் பார்க்கும். ஒருவேளை சிரிக்கலாம்.

ஆனால் எனக்குத் தெரிந்து அந்த இன்ஸ்டிட்யூட்டில் தப்புத் தண்டா ஏதும் நிகழவில்லை. குறைந்தபட்சம் எந்தப் பையனும் எந்தப் பெண்ணிடமும் காதல் கடிதம் டைப் அடித்துக் கொடுத்ததில்லை. ஒரு சண்டை சச்சரவு வந்ததில்லை. பம்பரப் பெண்மணியின் நிர்வாகம் அப்படி. அருகே வந்தாலே நடுங்கிப் போவோம். அத்தனை மிரட்டல். அத்தனை ஸ்டிரிக்ட்.

ஒரே ஒரு சமயம் என்னுடன் டைப்பிங் கற்க வந்த இனாயத்துல்லா என்கிற நண்பன், அங்கிருந்த ஒரு பெண்ணின்மீது காதல் கொண்டு என்னை ஒரு கவிதை எழுதிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டான்.

என்னை ஓர் எழுத்தாளனாக மதித்துக் கேட்ட [அதுவும் கவிஞனாக!] முதல் மனிதன் அவன் தான். எனவே உற்சாகமாக உடனே ஒரு தாளை உருவி விறுவிறுவென்று அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் [ஒன்றிரண்டு சீர் உதை வாங்கினாலும்] ஒரு காதல் பாட்டு எழுதிக்கொடுத்தேன். அப்போது எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாத காரணத்தால் கையால்தான் எழுதினேன். அந்தப் பாடல் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அவன் சுட்டிக்காட்டிய பெண்ணின் பெயர் மீரா. அது நினைவிருக்கிறது. பாட்டின் ஒவ்வொரு வரியின் ஈற்றுச் சொல்லும் மீரா மீரா என்று வரும்படி அமைத்திருந்தேன்.

அந்தப் பாட்டை வைத்துக்கொண்டு லோயர் பரீட்சை நாள் வரை அவன் கொடுக்கலாமா, வேண்டாமா என்று தவித்து, இறுதியில் வாப்பாவுக்குப் பிடிக்காது இதெல்லாம் என்று சொல்லிவிட்டு அவளைத் தன் மானசீகத்தில் சகோதரியாக ஏற்றுக்கொண்டுவிட்டான்.

எழுதிய பாட்டு தொலைந்துவிடப் போகிறதே என்று ஒரு பிரதி என் நோட்புக்கில் எழுதிவைத்தேன். வந்தது வினை.

நான் வீட்டில் இல்லாத ஒரு நாள் என் அப்பா எடுத்துப் படித்துப் பார்த்து, வீடு முழுதும் தகவல் தெரிவித்துவிட, அன்றைக்கு அம்மா ஆடிய ருத்திர தாண்டவம்!

அடுத்த பல மாதங்களுக்கு அம்மாவுக்கு என்மீது சந்தேகம் தீரவில்லை. என்ன மறுத்து என்ன பயன்? அம்மாக்களின் சந்தேகங்கள் அழகானவை. அபத்தமாக இருந்தாலும் தன் அழகைத் தொலைக்காதவை. பின்பு நான் பாலிடெக்னிக்கில் சேர்ந்து ஆர்.எச். குருமி புத்தகத்தைப் படித்துவிட்டு வைத்துப் போனாலும் நைஸாகப் பின்னால் வந்து வைத்துப் போன புத்தகத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டிவிட்டுப் போவாள். மேலும் பதினாறு சீர் கழிநெடிலடி ஏதேனும் அகப்படுமோ என்கிற நப்பாசை.

என் அப்பா ஒருவார்த்தை கேட்கவில்லை. போதிய இடைவெளியில் ஒரு நாள் ‘கவிதை நல்லாத்தான் வருது உனக்கு’ என்று மட்டும் சொன்னார். பாராட்டாகவா எடுத்துக்கொள்வது? தெரியவில்லை.

பின்னும் நான் அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு விடாமல் சென்று ஹயர் பரீட்சை எழுதி முடித்தேன். தமிழ் டைப்பிங்கிலும் சேர்ந்து நேரடியாக ஹயர் எழுதி முதல் வகுப்பில் தேர்வானேன். எனக்கே எனக்கென்று சொந்தமாக ஒரு ஃபேஸிட் மெஷின் வாங்கவேண்டுமென்றெல்லாம் கனவு கண்டேன்.

அதே இன்ஸ்டிட்யூட்டில் பிறகு ஷார்ட் ஹேண்ட் வகுப்பும் ஆரம்பமானது. பம்பரப் பெண்மணியின் கணவரே ஷார்ட் ஹேண்ட் மாஸ்டர். எதற்கு விட்டுவைப்பானேன் என்று அந்த வகுப்பிலும் சேர்ந்தேன். ஆனால் ஏனோ எனக்கு ஷார்ட் ஹேண்ட் வகுப்பு பிடிக்கவில்லை. அங்கும் நிறைய பெண்கள் வரவே செய்தார்கள். ஆனாலும் ஒட்டவில்லை. ஒரு சில நாள்களுடன் அதற்கு விடைகொடுத்துவிட்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இன்ஸ்டிட்யூட்டின் சீனியர் மாணவன் என்கிற முறையிலும் பம்பரப் பெண்மணியின் நம்பிக்கைக்குரிய நல்ல மாணவன் என்கிற முறையிலும் அடிக்கடி அங்கே போய்க்கொண்டிருந்தேன். ஒரு சில வகுப்புகளை அவர் என்னைப் பார்த்துக்கொள்ளக்கூடச் சொல்லியிருக்கிறார். [இட்லிக்கு அரைக்கணும். உள்ள வேல இருக்குது. நீ கொஞ்சம் பார்த்துக்கயேன்.]

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 1986ம் வருடம் என்று நினைக்கிறேன். அதே குரோம்பேட்டையில் அதே டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருந்த வீதிக்கு இரண்டு வீதிகள் தள்ளி Premier Institute of Computer Studies என்றொரு புதிய இன்ஸ்டிட்யூட் தொடங்கப்பட்டது. பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், டிபேஸ் என்று வாசலில் போர்டு மாட்டி குறைந்த செலவில் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூப்பிட்டார்கள்.

போயேண்டா என்று என் அப்பா சொன்னார். பம்பரப் பெண்மணியின் இன்ஸ்டிட்யூட்டில் படித்துக்கொண்டிருந்த அத்தனை பேரின் அப்பாக்களும் அதையே சொல்ல, நான் பிகினர்ஸ் ஆல் பர்ப்பஸ் சிம்பாலிக் இன்ஸ்டிரக்‌ஷன் கோட் வகுப்புக்குப் போய்ச் சேர்ந்தேன். மற்ற மாணவர்களும் அவரவருக்கு விருப்பமான கோர்ஸ்களில் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

ஏசி ஹால். அரை இருள். பளபளவென்று கம்ப்யூட்டர்கள். வண்ணத்திரை இல்லை. அப்போது கறுப்புத் திரைதான். டை கட்டிய ஆசிரியர். வகுப்புக்கு இடையே ஏலக்காய் போட்ட டீ வரும். ஆங்கிலப் பேச்சு. இடையே இட்லிக்கு அரைக்க எழுந்து போகமாட்டார்கள். எல்லாம் புதிதாக இருந்தது. வாசனையாக, நன்றாக இருந்தது. க்ரோம்பேட் காலேஜ் ஆஃப் காமர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோகத் தொடங்கியது.

பேசிக் வகுப்பு என்னைப் போலவே அப்போது யாருக்கும் புரியவில்லை. எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவருக்கே முழுக்கப் புரிந்திருக்குமா என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது. அங்கே ‘விஷன்’ என்றொரு சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. பின்னால் வென்ச்சுரா என்று ஒன்று வந்தது. இண்டர்நெட்டெல்லாம் கிடையாது. பலான படமெல்லாம் பார்க்க சாத்தியமில்லை. சொல்லிக்கொடுத்ததை அடித்துப் பார்க்கலாம். வெறும் எழுத்து. அல்லது வெறும் எண். ஆனாலும் கிளுகிளுப்பாகவே இருந்தது.

பேசிக் மட்டும் படித்தேன். ஒன்றும் புரியாமலேயே பரீட்சை எழுதி தேர்வும் ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். சரிதான் என்று விட்டுவிட்டேன். காலம் மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரிக்கும், பிறகு பத்திரிகைகளுக்கும் இட்டுச் சென்று எங்கெங்கோ சுற்றிக் காட்டிவிட்டுக் கொண்டுவந்து சேர்க்க, காலேஜ் ஆஃப் காமர்ஸ் நினைவிலிருந்து நகர்ந்து, காணாமலே போய்விட்டது. ஃபோனடிக் கீபோர்டில் பழகவேண்டி வந்து, படித்த யளனகபக ட்மதாதவே மறந்துவிட்டது.

இன்று பார்க்க நேர்ந்த அந்தப் பெண் வினாடிப் பொழுதில் அனைத்தையும் மீட்டுக்கொடுக்க வல்லவளாயிருந்தாள். கடவுளே, அவள்தான் எத்தனை பெருத்துவிட்டாள்! எப்படியும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பாள். குரோம்பேட்டையிலிருந்து எப்போது வீடு மாற்றிக்கொண்டு கோடம்பாக்கத்துக்கு வந்திருப்பாள்? அவள் கணவன் யாராக இருப்பான்? அவனுக்கு யளனகபக ட்மதாத தெரிந்திருக்குமா? தன் மனைவி 1986ம் வருடம் நான்கு பேருக்கு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள் என்று தெரியுமா அவனுக்கு? அவளுக்கேதான் அது தெரியுமா? அவளுக்கு குரோம்பேட் காலேஜ் ஆஃப் காமர்ஸ் இப்போதும் நினைவிருக்குமா? பிரம்மாண்டமான அதன் முதலாளியம்மாவை நினைவு வைத்திருப்பாளா? சமையல் கட்டிலிருந்து இடுக்கியில் வாணலியைத் தூக்கியபடியே ஹாலுக்கு ஓடி வந்து ‘இப்ப பேசாம வேலைய பாக்கறிங்களா? இல்ல எந்திரிச்சி வீட்டுக்குப் போறிங்களா?’ என்று மிரட்டியதெல்லாம் நினைவிருக்குமா?

தமிழ் ஹயர் பரீட்சைக்கு ஓரிரு தினங்கள் முன்பு அவள் நடுவிரலில் தேள் கொட்டிவிட, பேண்ட்-எய்ட் போட்டுக்கொண்டு அவள் உறுதியுடன் தேர்வெழுதி [அல்லது தேர்வு அடித்து] முடித்த காட்சி இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. என்னைப் போலவே அவளும் முதல் வகுப்பில்தான் பாஸானாள்.

எனக்கு இப்போது யளனகபக உதவுவதில்லை என்றாலும் டைப்பிங் உதவுகிறது. அவள் வாழ்வில் அதற்கு ஏதேனும் பங்கு இருக்குமா?

இந்த வார இறுதியில் குரோம்பேட் காலேஜ் ஆஃப் காமர்ஸுக்கு ஒருநடை போய்வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். டைப் ரைட்டிங் வகுப்புகளும் ஷார்ட் ஹேண்ட் வகுப்புகளும் வழக்கொழிந்துவிட்ட காலத்தில் அந்த குண்டு முதலாளியம்மா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்க்கும் ஆவல் உண்டாகியிருக்கிறது.

ஒரு கையில் ஆப்பக்கடாயும் இன்னொரு கையில் கம்ப்யூட்டர் மவுஸுமாக ஒருவேளை அவர் சி ப்ளஸ் ப்ளஸ் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கலாம்.

Share

25 comments

  • நல்லா சுத்தி இருக்கீங்க கொசுவர்த்தி!! எங்க பள்ளிக்கூடத்தில் கூட நமக்கு டைப்பிங் கத்துக் குடுக்க பார்த்தாங்க. அவ்வளவு சுலபமா விட்டுருவோமா என்ன. கடைசி வரை asdfgf ;lkhjவே தாண்டலை!

    ஆனா இந்த பாசிட் மெஷின் சண்டை இங்கவும் உண்டு! :))

  • //தன் மனைவி 1986ம் வருடம் நான்கு பேருக்கு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள் என்று தெரியுமா அவனுக்கு? அவளுக்கேதான் அது தெரியுமா? //

    எப்படி எழுதமுடிகிறது உங்களால்? ஒவ்வொரு வரியையும் ரசிக்காமல் அடுத்ததற்கு போகவே முடிவதில்லை. பழைய நினைவுகளையெல்லாம் கிண்டிவிட்டுவிட்டீர்கள். மிகவும் அழகான கட்டுரை இது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • I am not able to type in tamil. But i like your style. You have ability to describe what is in your memory and the way, the style, which is looks like sujatha and balakuramaran..

    I like that sentence “girls are getting thin by pressing the shift key in the tamil typing machine” and that girl was looks alike Miss Universe at the age of 16 and your dad was asking you after a long time about the poetry and wishing you by the way…

    This documentry also like a poetry.

    Welldone Mr. Raghavan.

  • நானும் தட்டச்சுப் பள்ளியின் நடத்துனராக இருந்து கொண்டே [ பயிற்சிக் கட்டணமில்லாது :)] தமிழ், ஆங்கிலம் தட்டெழுத்து உயர்நிலை முடித்தேன்.

    இதே அனுபவங்கள் எனக்கும் இருந்ததால் பதிவினூடே பயணிக்க முடிந்தது.

  • \\எங்காவது இன்றைக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இருக்கிறதா?\\

    இருக்கிறது. இன்றும் நன்றாகவே நடந்து கொண்டு இருக்கிறது என்று பொய் சொல்லமாட்டேன். நண்பர் ஒருவர் இன்னும் நடத்திக்கொண்டு இருக்கிறார். அழியும் தொழில் அது. இப்போது வருவோர் தேர்வுவரை தங்குவது கிடையாது. Computerல வேகமா தட்டச்ச பயன்படுத்துவதாக தெரிகிறது. பத்தாவதுக்கு கீழ் படிக்கும் பையன்களும் பெண்களும் கூட வந்து போகிறார்கள். அதனால் பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது நண்பருக்கு.

  • அற்புதம். ரொம்ப அழகா நியாபகங்களை மீட்டுக் கொண்டுவந்திருக்கிங்க பாரா!நானும் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் போய் யளனகபக கத்துக்கிட்டவன் தான். நிறைய பொண்ணுங்கள ஜொள்ளுவிட்டு பாத்தவன் தான். ஆனா இந்தக் கட்டுரைய படிக்கறவரைக்கும் அதையெல்லாம் திருப்பி நினைச்சிப் பாக்க தோணவே இல்லை. ஆப்பக்கடாய் இன்ஸ்டிரக்டர் பெண்மணி கண்ணில் நிற்கிறார். பதிவுக்கு மிக்க நன்றி.

  • //ஃபாஸிட் மெஷினில் பத்து நாள் ஓட்டிவிட்டு எடுத்து ஹால்டாவில் போட்டுவிடுவார் அந்தப் பெண்மணி. ஃபாஸிட் மெஷின் ஹயர் க்ரேடு போகிறவர்களுக்கு மட்டும். இந்தப் பிரிவினையின் லாஜிக் எனக்கு எப்போதும் புரிந்ததில்லை.//
    ராகவன்! எனக்குத் தெரிந்து இது சுலபமான லாஜிக்! – ஃபாஸிட்டை விட ஹால்டா விலை குறைச்சலென நினைக்கிறேன்! எப்படியும் ஆரம்ப காலங்களில் இருப்பவர்கள் விசைகளின் மேல் ஏறி நிற்காத குறையாகத்தான் அடிப்போம் (ரெண்டே மாசம்! – மூணாவது ஃபிங்கரிங் வரை வந்தேன்! அதன் பின் பத்தாவது ரிசல்ட் வந்துவிட்டது – மேனிலைக்கு வேறு பள்ளி, வேறு ஷிஃப்ட்! எனவே ரெண்டே மாதத்தில் ஜூட்!)எனவே இந்த முறை என என் அம்மா சொல்லியிருக்கிறாள்!

    மேலும் தற்போதுள்ள 38- 50 வயதுக்காரர்களுக்கு பெரும்பாலும் தட்டச்சு, சுருக்கெழுத்து ரெண்டுமே பரிச்சயம் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். (என் வீட்டில் என் மாமா, அம்மா, சித்தி மூணு பேரும் டைப்ஷார்ட் ஹையர்!) ஏனென்றால் இவ்விரண்டும் படித்திருந்தால் வேலை நிச்சயம் என்றொரு கற்பிதம் உண்டு. (உண்மையும் கூட!)

    ஃபிங்கரிங் மனப்பாடமாகி யந்திரத்தனமாக அடித்துக் கொண்டிருக்கும்போது “காயத்ரி இன்ஸ்டியூட்” பெரியவர் “அட்டையைப் பாரு…அட்டையைப் பாரு…” என்று படுத்தியது நினைவுக்கு வருகிறது!

    நல்லதொரு flashback! இடுகைக்கு நன்றி!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

  • அய்யோ.. கொன்னுட்டீங்களே? ரெண்டு வாரத்துக்கு எனக்கு தூக்கம் வரப்போவதில்லை 🙁

    மடிப்பாக்கம் கூட்ரோடு சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸும், காயத்ரியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள் 🙂

    கலைஞர் கூட டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் ‘சாரதா’ என்ற ஃபிகரை சமீபத்தில் 1930களில் டாவு அடித்ததாக காதல் படிக்கட்டுகளில் எழுதியிருந்தார்!!

  • //ஒரு தாளை உருவி விறுவிறுவென்று அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்//

    கொஞ்சம் சுஜாதா வாசனை 🙂

  • அற்புதமான நடையுடன் கூடிய நயமான மலரும் நினைவுகள். Fantastic ! நாஸ்டால்ஜியாவைத் தூண்டிய நீவிர் வாழ்க 🙂

    திருவல்லிக்கேணியிலும் தேரடித் தெருவில் ‘ஸ்ரீநிவாசா இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்’ என்று ஒரு பயற்சிப் பள்ளி இருந்தது. அங்கு டைப் / ஷார்ட் ஹேண்டோ டு, வணிகமும் அக்கவுண்டன்சியும் சொல்லித் தந்தார்கள். இன்றும் இருக்கிறது. ஆனால் இப்போது என்ன பயிற்சி தருகிறார்கள் என்று தெரியாது ! சும்மா ஜாலிக்கு நானும் பத்தாவது பரீட்சைக்குப் பின் 2 மாசம் டைப்பிங் கற்றேன்

    நீங்கள் அந்தப் பெண்ணை கோடம்பாக்கத்தில் பார்த்தது நிஜ நிகழ்வென்றால் (கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை என்று நீங்கள் எழுதியிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் இப்படிச் சொல்கிறேன்), அவரிடம் சென்று பேசி உங்கள் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொண்டிருக்கலாமே 🙂

    அந்த குண்டு முதலாளியம்மாவை மீண்டும் சந்தித்த பின் ஒரு பதிவு இடுவீர்கள் தானே 😉

    எ.அ.பாலா

  • பாலா,

    //கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை என்று நீங்கள் எழுதியிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால்//

    இல்லை. அது நடந்ததுதான். நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அம்பேத்கர் சிலை சிக்னலில் அவளைக் கண்டேன். ஒன்றுக்கு இருமுறை திரும்பிப் பார்க்கத்தான் முடிந்தது. நிறுத்திப் பேச வாய்ப்பில்லாத சூழ்நிலை.

  • //அற்புதமான நடையுடன் கூடிய நயமான மலரும் நினைவுகள். Fantastic ! நாஸ்டால்ஜியாவைத் தூண்டிய நீவிர் வாழ்க//

    வழிமொழிகிறேன்

  • ஏதேதோ ஞாபகமெல்லாம் வந்து தொலையுது ஸாரே.. நானும் என் அனுபவங்களைச் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். சொல்லிட்டீங்க..

    படிக்கப் படிக்க ஆர்வம் கூடுகிறது.. எழுத்துத் திறமை அப்படி.. வேறென்ன..

    வீ்ட்டுக்கு வீடு வாசப்படிதான் போல..

  • Pathivu arputham.. pazhayatha ninachu parkirthathu thappila.. aana vasayiduchonnu oru ninappu varama irundha sarithan. enakku appadi oru ninaipu varum… appuram ennanga Para, innum C, C++ mattumae nikkarenga… athukku appuram yaekappata language vandhuruchu…. yenna ‘Dasavatharam’ padathila ‘azhagiya singer’ yarunna ketta kellvikku kamal pathil sonna mathiri
    aayidum unga pathilum…. (Neenga sonna vimarchanam than..summa eduthuvittaen…) Just joking para… dont take it seriously…

  • //appuram ennanga Para, innum C, C++ mattumae nikkarenga… athukku appuram yaekappata language vandhuruchu…//

    அம்பேல். இதுவே நமக்கு அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா. நான் என்னத்தைக் கண்டேன்? சும்மா காதில் விழுவதுதான். மற்றபடி உங்கள் விமரிசனத்தை 100% ஏற்கிறேன். கமலுக்கு நேர்ந்த அதே சறுக்கல்தான். சந்தேகமில்லை. ஆனால் விடமாட்டேன். எல்லா கம்ப்யூட்டர் மொழிகளையும் ஒரு வழி பண்ணிவிடுகிறேன், கொஞ்சம் பொறுங்கள்.;-)

  • அன்பு ராகவன், எனது டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட் நாட்களையும் நினைவுபடுத்தி விட்டீர். அங்குதான் என் சுமதி கற்றுக் கொண்டிருந்தாள். (காதலை அல்ல). நாங்கள் இருவரும் காதலித்ததே சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் எங்களுக்கே தெரிந்தது! ஆனால் எங்கள் காதல் தொடங்கியது அந்த இன்ஸ்ட்யூட்டில் அல்ல.

    உமது எழுத்து கிளுகிளுப்பூட்டக் கூடியது.

    நாகூர் ரூமி

  • //தன் மனைவி 1986ம் வருடம் நான்கு பேருக்கு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள் என்று தெரியுமா அவனுக்கு? அவளுக்கேதான் அது தெரியுமா?//

    அதுசரி, 1986ம் வருடம் நான்கு பேருக்கு உலகப் பேரழகனாகத் தெரிந்தீர்கள் என்று உங்களுக்கேதான் அது தெரியுமா?

  • இதையே திருப்பிப்போட்டு அந்தப் பொண்ணு ஒரு குத்து குத்தினா எப்படி இருக்கும்ணு கற்பனை செஞ்சு பாத்தா இன்னும் சுவாரஸ்யமா இருக்குது.

    உணர்ச்சிமயமான இளமைக் காலங்களை மீளப் பார்ப்பதில் ஒரு சுவை, அதிலும் ஹார்மோன் கலந்த நினைவுகள்…

  • //இதையே திருப்பிப்போட்டு அந்தப் பொண்ணு ஒரு குத்து குத்தினா எப்படி இருக்கும்ணு கற்பனை செஞ்சு பாத்தா இன்னும் சுவாரஸ்யமா இருக்குது.// இது நடக்க ரொம்ப ரொம்ப வாய்ப்பு கம்மிங்க.

    இது போன்ற infatuation சம்பந்தப்பட்ட நாஸ்டால்ஜியாக்களை பெண்கள் எழுதி அதை அவங்க சுற்றமும் நட்பும் சகஜமா எடுத்துக்கற நிலை இங்க இன்னும் பரிபூர்ணமா வந்துடலை. இந்தப் பதிவை படிச்சுட்டு பா.ராவோட வீட்டம்மா ஒரு புன்னகையோட கடந்து போயிட முடியும். அதிகபட்சம் அடுத்தடுத்த முறை இவரை ஓட்டும் போது யூஸ் பண்ணிக்க ஒரு பாயின்ட், அவ்ளோதான். ஆனா //தன் மனைவி 1986ம் வருடம் நான்கு பேருக்கு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள் என்று தெரியுமா அவனுக்கு? // இதையே ரொம்ப பேரால சகஜமா எடுத்துக்க முடியறதில்லை. அப்படி இருக்க ஒரு வேளை அந்தப் பெண்ணும் முன் வரிசையில் இருந்து திரும்பிப் பார்க்காமலே தினமும் தவறாது தனக்காக திட்டு வாங்கிய பா.ராவை பாராமுகமாகவே சைட் அடித்ததாய் கொசுவத்தி சுத்தினா கேட்டுகிட்டு சும்மா இருப்பாங்களா என்ன?

  • நானும் பாலிடெக்னிக் முடித்து விட்டு தட்டச்சு வகுப்பிற்கு சென்றேன்.கீழ்நிலையில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றென்.நான் ஒரு சிறிய வலைப்பூ நடத்துகிறேன்.வலைப்பூவில் எழுதுவதற்கு தட்டச்சு பயிற்சிதான் உதவியாக இருக்கிறது.ஆனால் இப்பொழுதெல்லம் யாரும் தேர்வு வரை செல்வதில்லை கணினியில் தட்டச்சு செய்வதற்காக ஒரிரு மாதங்கள் பயிற்சிக்காக செல்கிறார்கள்.எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள நகரத்தில் ஒரே ஒரு Type writting institute தான் இருக்கிறது.

  • After reading this wonderful experience, I went down my memory in Jamshedpur. In 1973 when our Shorthand teacher Mr Iyer used to explain difficult words from The Hindu editorials, e.g., difference between summit and submit and many more words. Those were the days I will never forget. He used to take shorthand class more than an hour.

    In Bangalore Sultanpalya now, whenever I go to hotel for breakfast I see a typewriting institute opposite to hotel, with very few students. But still it is open.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!