பேட்டை புராணம்

சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.] நான் பார்த்திருக்கும் வீட்டுக்கு வலப்பக்கம் நான்காவது வீட்டில் ஏ.ஆர். ரகுமான் இருப்பதறிந்து இன்னும் சந்தோஷப்பட்டார்கள். [ரகுமான் பெரும்பாலும் லண்டனில்தான் இருக்கிறார் என்று சொன்னதற்கு பதில்: ‘ஆனாலும் வீடு இங்கதானே?’]

தினசரி அலுவலகத்துக்குச் சென்று வருவதே நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்வதுபோலிருந்தது. இருபதும் இருபதும் நாற்பது கிலோ மீட்டர்கள். இடையே நினைவு தெரிந்த நாளாக நடைபெற்று வரும் இரண்டு மேம்பாலப் பணிகள், அதன் பொருட்டு டிராஃபிக் ஜாம். கிண்டி மேம்பாலத்தின் வழக்கமான ஜாம், நந்தனம் ஜாம் அல்லது கோட்டூர்புரம் ஜாம் என்று ஒவ்வொரு நாளும் என் பயணம் ஜாம்ஜாமென்றுதான் நடந்துகொண்டிருந்தது. சற்றும் டிராஃபிக் சென்ஸ் இல்லாத, துளிக் கவனமும் காட்ட இயலாத, காட்டுத்தனமாக வண்டி ஓட்டும் என்னைப் போன்ற ஒரு இம்சை அரசனிடமிருந்து ஜி.எஸ்.டி. சாலை சாதுப் பயணிகளுக்கு இனி விடுதலை.

சகித்துக்கொள்ளக்கூடிய நெரிசல் மட்டுமே இருக்குமானால் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில், அலுவலகத்திலிருந்து என் வீட்டை அடைய 45 நிமிடங்கள் போதும். ஆனால் நினைவு தெரிந்து நான் 45 நிமிடங்களில் வீட்டையோ அலுவலகத்தையோ அடைந்ததில்லை. குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதிகபட்சம் ஒரே ஒருநாள் இரண்டே முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. இனியும் நெரிசல் உண்டு, ஜாம் உண்டு என்றாலும் ஐந்தும் ஐந்தும் பத்து கிலோ மீட்டர்கள் மட்டுமே. கணிசமான நேரச் சேமிப்பு சாத்தியமாகிறது.

ஆனாலும் இருபத்தி மூன்று வருஷ குரோம்பேட்டை வாசத்தை முடித்துக்கொள்வதில் சற்று வருத்தம் இருக்கவே செய்கிறது.

1985 ஜனவரி 28ம் தேதி நாங்கள் குரோம்பேட்டைக்கு முதல் முதலில் குடி வந்தோம். மெயின் ரோடில் அப்போது கிரிக்கெட்டே ஆடலாம். எப்போதாவதுதான் பஸ் வரும். கண்ணுக்கெட்டிய தொலைவெல்லாம் முட்புதர்களாகவே இருக்கும். முட்புதர் இல்லாத இடங்களில் தோல் ஃபாக்டரிகள் இருக்கும். ஊரின் மணம் என்பது தோலின் மணம் மட்டுமே. நூற்றுக்கணக்கான சிறு தோல் தொழிற்சாலைகள் இருந்த இடமாக அது அப்போது இருந்தது. ஒவ்வொரு சாலை ஓரமும் தோல் கழிவு நீர் வண்ணமயமாக ஓடும். ஆரஞ்சு கலர் தண்ணீரையெல்லாம் பார்த்திருக்கிறேன். கிணறு தோண்டினால் கூட பாட்டா ஷோரூமில் உட்கார்ந்துகொண்டு தண்ணீர் குடிக்கிற எஃபெக்ட்தான் கிட்டும்.

மெயின் ரோடிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே லட்சுமி புரம் என்னும் குடியிருப்புப் பகுதியில் என் அப்பா ஒரு வீடு கட்டினார். அவரது வாழ்நாள் சேமிப்பான அறுபதாயிரம் ரூபாயை அப்படியே போட்டு அரை கிரவுண்டில் சிங்கிள் பெட்ரூம் வீடு. அந்த வீட்டு கிரகப்பிரவேசத்தன்று நான் கீழே விழுந்து முகமெல்லாம் காயம் பட்டுக்கொண்டு அனுமார் மாதிரி காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அந்த வீட்டில் இருந்தபோதுதான் எஸ்.எஸ்.எல்.சி எழுதினேன். அங்கேதான் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நண்பனுக்கு காதல் கவிதை எழுதிக்கொடுத்து மாட்டிக்கொண்டேன். அங்கேதான் முதல்முதலில் சிறுகதை, நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். ஆர்.எச். குருமி புத்தக அட்டையை கடல்புறாவுக்குப் போட்டு நாளெல்லாம் உட்கார்ந்து வாசித்தேன்.

லீலா லெண்டிங் லைப்ரரி என்று ஒரு வாடகை நூலகம் அப்போது அங்கே இருந்தது. ஜானகிராமன் புத்தகங்களையெல்லாம் அங்கேதான் முதலில் பார்த்தேன். அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் புத்தகத்தைக் காட்டி, ‘படிச்சிப் பாரு. சுமாரா எளுதுவாரு இந்தாளு. செலபேருக்குப் பிடிக்கும்’ என்று அங்கிருந்த முதியவர் அறிமுகப்படுத்தியதுதான் என் வாசிப்பு ஆர்வத்துக்குக் கிட்டிய முதல் தீனியாக இருந்தது.

தினசரி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதி எடுத்துக்கொண்டு [கண்டிப்பாக யாருக்கும் புரியாத பத்து சொற்களாவது அதில் இருக்கவேண்டுமென்பது அவர் தமக்குத்தாமே விதித்துக்கொண்ட விதி] விடிந்ததும் எங்கள் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பிளேடு போடும் சம்பத் ஐயங்கார் என்கிற ஒரு முதியவர், அப்பா, அம்மா, மகன்கள், மகள்கள் என்று மொத்தமாக வாசலில் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கும் ஓர் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தினர், எப்போதும் ஜல்லிக் கரண்டியால் குழந்தைகளை அடித்துக்கொண்டே இருக்கும் எதிர்வீட்டுப் பெண்மணி, எடுத்ததற்கெல்லாம் வசூலில் இறங்கிவிடும் ஒரு பக்த ஜன சபா கோஷ்டிக்காரர்கள்… மிகச் சிறிய உலகம்தான். ஆனாலும் சுவாரசியமாகவே கழிந்ததாக இப்போது தோன்றுகிறது. பாலிடெக்னிக் முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்துவிட்டதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு தினசரி கன்னிமாரா நூலகத்துக்குச் சென்று நாளெல்லாம் படித்துக்கொண்டிருந்துவிட்டு மூன்று மாதங்கள் கழித்து குட்டு வெளிப்பட்டு அவமானத்தில் கதறி அழுததும் அங்கேதான். [154 கிலோபைட் நூலில் உள்ள ‘ஒரு நம்பிக்கை துரோகம்’ கட்டுரையில் இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன்.]

பிறகு அந்த வீட்டை விற்றுவிட்டு நியூ காலனியில் ஒரு ஃப்ளாட் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தோம். அறுபதாயிரத்தில் கட்டிய வீடு இரண்டரை லட்சத்துக்கோ மூன்று லட்சத்துக்கோ போனதாக நினைவு. அப்போது நியூ காலனி ஃப்ளாட்டும் அந்த விலைக்கே கிடைத்தது. இப்போது முப்பது லட்சத்துக்குக் கூட கிடைப்பது அரிது.

இந்த ஃப்ளாட் மெயின் ரோடுக்குச் சற்றே அருகில் அமைந்திருந்தது. புதிய குடியிருப்பு. ஒரு காலத்தில் ஏரியாக இருந்த இடம் என்று சொன்னார்கள். நாங்கள் குடிவந்த போது குப்பை மேடாக இருந்தது. ஆனால் தோல் வாசனை மட்டும் அப்படியே. மெல்ல மெல்ல பலபேர் அங்கே வீடு கட்டினார்கள். அக்கம்பக்கத்தில் குப்பை மேடுகளில் கொடி நட்டு, கொஞ்சநாள் காத்திருந்துவிட்டுப் பிறகு புதிய புதிய நகர்களை உற்பத்தி செய்தார்கள். ஊரின் பாதி ஜகத்ரட்சகனிடம் இருப்பதாகப் பலபேர் பேசிக்கொண்டார்கள். ஜகத்ரட்சகன் யார்? அப்பாவிடம் கேட்டேன். அவர் ஆழ்வார்களை ஆராய்ச்சி செய்கிற ஒரு பண்டிதர் என்று சொன்னார்.

இது மிகவும் குழப்பம் தந்தது. ஆழ்வார் ஆய்வாளர் நில வளைப்புகளில் ஈடுபடுவாரா? புரியவில்லை. ஆனால் விரைவில் ஜகத்ரட்சகன் ஓர் அரசியல்வாதியாகிவிட்டார். அவ்வப்போது ஆழ்வார்களுக்கும் சேவை செய்துகொண்டுதான் இருந்தார். பேட்டையில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பெரிய மாளிகை கட்டிக்கொண்டு குடிவந்தார். புதிய நகர்கள் வரத்து மேலும் அதிகரித்தது. ஜகத் ரட்சகன் பெயரிலேயே ஒரு அவென்யூ உற்பத்தியாகி, எங்களுடைய முதல் நியூகாலனி ஃப்ளாட்டை விற்றுவிட்டு அங்கே ஓரிடம் வாங்கி நாங்கள் அப்புதிய அவென்யூவில் முதல் வீடு கட்டிக்கொண்டு வரும் சூழலும் வந்தது.

நிறைய கடைகள் உதித்தன. முன்பெல்லாம் ஒரு கவுளி வெற்றிலை வாங்கவேண்டுமானாலும் ரயில்வே கேட் தாண்டி ராதாநகருக்குத்தான் போகவேண்டும். அது ஒரு பிரசித்தி பெற்ற மார்க்கெட். பூவும் மீனும் புடலங்காயும் புண்ணாக்கும் புழுங்கலரிசியும் புடைவையும் நகையும் – எல்லாம் கிடைக்குமிடம். தாம்பரம் சண்முகம் ரோடைவிடப் பிரபலமான மார்க்கெட்.

அந்த மார்க்கெட்டில்தான் முதல் முதலில் என்.ஆர். தாசனைப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர். இன்று பலருக்கு தாசன் பெயர்கூட நினைவிருக்குமோ என்னவோ? கொஞ்சம் புரியாமல் எழுதுவார் என்று பெயர். பெரிய கஷ்டமில்லை. கொஞ்சம் கூர்ந்து படித்தால் எளிதில் புரியவே செய்யும் அவருடைய எழுத்து.

அதே மார்க்கெட்டில்தான் கம்ப ராமாயண விற்பன்னர் ல. சண்முகசுந்தரம் எனக்கு அறிமுகமானார். அபாரமான ரசிகர். பிரமாதமாகப் பேசுவார். எழுதவும் செய்வார். ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரி்ந்து வந்த மனசை ப. கீரன், தினமணி சிவகுமார், குமுதத்தில் பணியாற்றி வந்த மேஜர் தாசன், பாமா கோபாலன் என்று பலபேர் எனக்கு அறிமுகமானார்கள். பாமா கோபாலன் அப்போது குமுதத்தில் ‘பொழுதுபோகாத பொம்மு’ என்றொரு பகுதியை எழுதி வந்தார். ரொம்பப் பிரபலமான பகுதி அது. ஒருமணி நேரத்தில் குரோம்பேட்டை ரயில்வே கேட்டை எத்தனை ரயில்கள் கடக்கின்றன என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை உட்கார்ந்து அவர் எண்ணி எழுதியதை அடுத்தவாரம் நான் எண்ணிச் சரிபார்த்தது நினைவுக்கு வருகிறது.

குரோம்பேட்டையுடன் தொடர்புடைய இன்னொரு குமுதக்காரர் உண்டு. கிருஷ்ணா டாவின்சி. குரோம்பேட்டை ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகராக கிருஷ்ணா அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தார். தாடியும் கருப்பு கோட்டுமாக அவர் எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது கையில் ஒரு நாலுவாரத் தொடரின் கையெழுத்துப் பிரதியை வைத்திருந்தார். ‘மாயக்குதிரை’ என்று தலைப்பு. ‘இந்த வேலைய விட்டுடலாம்னு இருக்கேன். ஃபுல்டைம் ரைட்டராகணும். பெரிய ஜர்னலிஸ்டாகணும்’ என்று சொன்னார். கிட்டத்தட்ட நானும் அதே மனநிலையில் இருந்த காலம் அது. காலக்ரமத்தில் நான் கல்கிக்கும் அவர் குமுதத்துக்கும் போய்ச் சேர்ந்தோம். [மாயக்குதிரை கல்கியில் வெளியானது.] பிறகு குமுதத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டோம்.

எப்படியோ பல எழுத்தாளர்கள் குரோம்பேட்டை தொடர்பு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். அசோகமித்திரனுக்குக் கூட அந்தத் தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன். அவரது மகனோ மகளோ அல்லது வேறு யாரோ அங்கிருந்ததாகச் சொன்ன ஞாபகம். இன்றைக்கு அரசியல் தளத்தில் பிரபலமாக இருக்கும் கவிஞர் இளந்தேவன், கவிஞராக இருந்த காலத்தில் குரோம்பேட்டைக்குக் குடிவந்தவரே. கொஞ்சம் தள்ளி சானடோரியம் மலைப்பகுதியில் வீடு கட்டிக்கொண்டு வந்தார். அவர் வீட்டில் நடந்த ஒரு கவியரங்கத்துக்குப் போயிருக்கிறேன். ‘ஒன்று தெய்வம் ராமனே / உலகனைத்தும் கோயிலே / என்று வாழும் தேவனே / எங்கள் ஆஞ்சநேயனே’ என்று ஆரம்பித்து அவர் எழுதிய பாடல் இன்றுவரை எங்கள் வீட்டுக் குழந்தைகளால் பக்தியுடன் பாடப்பட்டு வருகிறது. யோசித்தால் இன்னும்கூடப் பலபேர் தட்டுப்படுவார்கள்.

அப்புறம், ஆர். வெங்கடேஷ். அவனும் குரோம்பேட்டைக்காரன்தான். ஆனால் கொஞ்சம் தள்ளி புருஷோத்தம நகரில் அவனுடைய வீடு இருந்தது. கணையாழி அலுவலகத்தில் தொடர்பு ஏற்பட்டு, நட்பாகி, கிட்டத்தட்ட நாங்கள் தினமும் சந்தித்துக்கொள்ளத் தொடங்கினோம். படிப்பு, எழுத்து, ஆர்வங்கள் ஒரே மாதிரி அமைந்தது தற்செயல். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என்று எங்களுடைய ஆதர்சங்களும் ஒரே மாதிரி அமைந்ததும் தற்செயல். அவனுக்கு ஆதவன் எழுத்துகள் மீது அளவுக்கதிகமான ஆர்வம் இருந்தது. ஏனோ என்னை அவர் அத்தனை கவரவில்லை. இத்தனைக்கும் எனக்குக் கதை எழுதச் சொல்லிக்கொடுத்த ம.வே. சிவகுமார் ஆதவனின் தாக்கம் அதிகமுள்ளவர்.

நான் அமுதசுரபியில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் ரயிலில் ஒருநாள் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன். தாம்பரத்திலிருந்து அவர் சென்னை கடற்கரை வரை பயணம் செய்பவர். நான் இரண்டு ஸ்டேஷன்கள் தள்ளி ஏறுபவன். சிவகுமாருடனான நட்பு வலுப்பட்டபிறகு என் சீசன் டிக்கெட்டை தாம்பரத்திலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு வாங்கிக்கொண்டு குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் சென்று ரயிலேறுவேன். ஒரு மணிநேரம் பேச்சு, பேச்சு, அப்படியொரு பேச்சு. ரயில் பயணம் அப்போது நெரிசலுடன் இருந்ததில்லை. இரண்டாம் வகுப்பே காலியாகத்தான் இருக்கும்.

கண்ணுக்குத் தெரியாமல் குரோம்பேட்டையில் மக்கள் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது தொண்ணூறுகளின் மத்தியில்தான். தோல் தொழிற்சாலைகளும் அப்போது மெல்ல விடைபெறத் தொடங்கியிருந்தன. நிறைய பள்ளிக்கூடங்கள் வந்தன. ஜகத்ரட்சகன் கல்லூரி கட்டினார். பொறியியல் கல்லூரி. மருத்துவக் கல்லூரி. இன்னும் என்னென்னவோ கல்லூரிகள் வந்தன. சி.எல்.சி. என்கிற க்ரோம் லெதர் கம்பெனி பிராந்தியத்தில் மிகப் பெரிது. ஒரு சாலை முழுதும் வியாபித்திருக்கும் அதன் சுற்றுச்சுவர் பிரம்மாண்டமானது. அதுவே பிறகு கல்லூரியாகிவிட்டது.

ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் மக்கள் தொகைப் பெருக்கம் என்பது தவிர, பேட்டையில் அத்தனை நெரிசல் உண்டானதற்கு வேறு பிரத்தியேகக் காரணங்கள் தெரியவில்லை. தோலுக்கு மாற்றாக வேறு தொழில் ஏதும் வந்ததா என்றால் கிடையாது. பெரிய பெரிய தனியார் நிறுவனங்களும் வரவில்லை. பக்கத்தில் சானடோரியத்திலும் பல்லாவரத்திலும் சில எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லத் தோன்றவில்லை. மெப்ஸ் வந்ததெல்லாம் சமீபத்தில்தான்.

குரோம்பேட்டையின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தால் உடனே தோன்றுவது, நகரின் [ஆம். இப்போது அது நகரம்தான். முன்பெல்லாம் மெயின் ரோடிலிருந்து வீட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே கூடப் போகலாம். இப்போது நியூ காலனி சாலைகளிலும் டிராஃபிக் ஜாம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதல், அஞ்சப்பர் வரை, ஜெயச்சந்திரன் முதல் நாயுடு ஹால் வரை மாம்பலத்தில் உள்ள அனைத்தும் இங்கேயும் உண்டு.] அமைதி. நிச்சயமாக, பிற நகரங்கள் பொறாமைப்படத்தக்க அமைதி. கலவரம் கிடையாது. கடையடைப்பு, கல் வீச்சு, ரவுடிகள் அட்டகாசம், திருட்டு, வழிப்பறி, மோதல்கள், கொலை, கொள்ளை என்று பெரிய அளவில் எதுவும் நிகழ்ந்ததாக நினைவில்லை. அரசியல் கூட்டங்கள் கூட பேட்டைக்குள் நடக்காது. மெயின் ரோடோடு சரி. அதுவும் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள்தான். தி.மு.க., அ.தி.மு.க.காரர்கள் பல்லாவரத்தில்தான் கூட்டம் போடுவார்கள். குரோம்பேட்டையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ரொம்பக் கத்தமாட்டார்கள். ஐந்தாவது மெயின் ரோடில் என் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் சங்கரய்யாவே ரொம்ப அமைதியான மனிதர். இந்த இருபத்தி மூன்று வருடங்களில் [நியூ காலனிக்குக் குடிவந்து பதினைந்து வருடங்களாகின்றன.] அவரை நான் வீதியில் பார்த்த சந்தர்ப்பங்கள் மிஞ்சிப் போனால் பத்திருபது தேறாது. அவரது மகன் என்னுடைய நண்பர். அடிக்கடி சந்திப்போம். அவர் அங்கே ஒரு நகரமன்ற உறுப்பினர்.

ஏதோ ஒரு தேர்தல் நேரத்தில் சந்தானம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் வேட்பாளர் தாக்கப்பட்டு பேப்பரில் எல்லாம் செய்தி வந்தது. ஹிந்துவுக்கு ரெகுலராக மக்கள் பிரச்னையை எழுதுபவர். பிராந்தியத்தில் சங்கரய்யாவைவிட அவர் மிகவும் பிரபலம். அந்தத் தாக்குதலுக்குத்தான் அவர் நன்றி சொல்லவேண்டும். நல்ல நண்பர் எனக்கு. தினசரி காலை வாங்கிங்கில் சந்தித்துக்கொள்வோம். வம்புக்காகவேனும் கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்து சீண்டிப்பார்ப்பேன். சிரித்துக்கொண்டு பதில் சொல்வாரே தவிர சற்றும் கோபம் வராது. சாது கம்யூனிஸ்ட்.  என்றைக்காவது அவர் எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். பொதுச்சேவையில் ஆர்வம் அதிகம். தவிரவும் சுத்தமான ஆசாமி. ஆனால் என்ன பயன்? எங்கள் தொகுதியைப் பொருத்தவரை கம்யூனிஸ்டுகள் அவ்வப்போதைய தோழமை இயக்கங்களுக்குச் சேவகம் செய்யும் பணியை மட்டுமே மேற்கொள்ளமுடியும். சந்தானத்துக்கு சீட் கிடைக்கும் காலம் ஒன்று வருமானால் நிச்சயம் அவருக்கு அப்போது எண்பது வயதாகியிருக்கும்.

படிப்பு, உத்தியோகம், எழுத்து, திருமணம், குழந்தை, விருதுகள் என்று என் வாழ்வின் இதுவரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் குரோம்பேட்டை வாசத்தில் நிகழ்ந்திருக்கின்றன. என்னோடு சேர்ந்து நகரும் நிறையவே வளர்ந்திருக்கிறது. இடம்பெயர்வது குறித்து வருத்தமெல்லாம் எனக்கில்லை.

புறநகர் வாசத்தின் சிறப்பு அல்லது சிறப்பின்மை அதுதான் என்று தோன்றுகிறது. இடத்துடன் உணர்வு ரீதியிலான பிணைப்பு என்று ஏதும் சாத்தியமில்லை. என்னுடைய மதுரை – நெல்லை நண்பர்கள் பலர் அவரவர் ஊர் குறித்து மணிக்கணக்கில் பேசுவதைப் பல சமயம் வாய்பிளந்து கேட்டிருக்கிறேன். சு. வேணுகோபால் [நுண்வெளிக் கிரணங்கள்] அம்மாபட்டி குறித்துப் பேசத் தொடங்கினால் சங்கீதமாக இருக்கும். தி.க.சி. அவர்களுடன் அவரது சுடலைமாடன் வீதி வீட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். நெல்லையைப் பற்றி அவர் பேசிக் கேட்கவேண்டும்.

ஆனால் ஒரு பதிவுக்காகவேனும் குரோம்பேட்டையைப் பற்றி எழுதிவைக்கவேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தாலும் ஒரு செய்திக்கட்டுரை தொனியில்தான் இது சாத்தியமாகிறது. என்ன செய்ய?

ஒன்றும் பிரச்னையில்லை. ஓரெண்ணம் தோன்றுகிறது. யாராவது சொந்த ஊர் எது என்று இனி கேட்டால் தயங்காமல் குரோம்பேட்டை என்றுதான் சொல்வேன். அப்படிச் சொல்லிச் சொல்லியே கம்யூனிஸ்டு சந்தானம் எம்.எல்.ஏ. ஆகும் காலத்துக்குள் குரோம்பேட்டையை திருநெல்வேலி, மதுரை அளவுக்கு ‘ஃபேமஸ்’ ஆக்கிவிடவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.

Share

19 comments

  • //குரோம்பேட்டையை திருநெல்வேலி, மதுரை அளவுக்கு ‘ஃபேமஸ்’ ஆக்கிவிடவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.
    //

    நான்காம் தமிழ் வளர்ந்ததே குரோம்பேட்டையில் தான் என்ற “வரலாற்று உண்மை”யை புத்தகமாக போட போகின்றீர்களா?

  • //154 கிலோபைட் நூலில் உள்ள ‘ஒரு நம்பிக்கை துரோகம்’ கட்டுரையில் இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன்.//

    பாரா! இந்தப் புத்தகத்தினைக் குறித்து அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. உங்களிடம் இதன் பிரதிகள் இருக்கிறதா? கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்குமா? எனக்கு இந்நூலின் பிரதி வேண்டும். உதவ வேண்டுகிறேன்!

    நன்றி.

  • சதீஷ்,

    154 கிலோ பைட் அச்சில் இல்லை. சபரி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அந்தப் புத்தகம் சபரியுடனேயே சமாதியடைந்தது. கௌரா ஏஜென்சீஸில் ஒருவேளை கிடைக்கலாம். அந்தப் பதிப்பகம் மூடப்பட்டபின்பு எஞ்சியிருந்த பிரதிகளை மொத்தமாக எடைக்கு வாங்கிச் சென்றதாக கௌரா ராஜசேகர் ஒருமுறை என்னிடம் சொன்னார். என்னிடம் ஒரே ஒரு பிரதி மட்டும் இருக்கிறது. கிழக்கில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. அதற்கான சாத்தியமும் தற்சமயம் இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் நூலின் மென்பிரதியை [soft copy] மின்னஞ்சலில் அனுப்ப இயலும். தனி அஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

  • அப்ப கோடம்பாக்கத்தில் அந்த டைப்ரைட்டிங் நண்பியை சந்திககலாம். இன்னொரு கொசுவத்தி பதிவு போடலாம்
    அன்புடன்
    நடராஜன்

  • அனுமார் மாதிரி உங்க முகம் மாறினது என்றது கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது புன்னகைக்க வைக்கும் உதாரணம் என்ற அளவில்!கொஞ்சம் நீளமாக இருக்கும் இந்த பேட்டை புராணத்தில் பாராத்தனம் சற்று குறைவாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

    அன்புடன்
    ரூமி

  • இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிடத் தவறிவிட்டதாக ஒரு விஷயத்தை என் மனைவி நினைவூட்டினாள். அது மின்சாரத் தடை தொடர்பானது.

    இப்போது தமிழ்நாடு முழுதும் பவர்கட் பிரச்னை இருக்கிறது. குரோம்பேட்டையிலும் இருக்கிறது. ஆனால் பவர்கட் என்பது ஆதியில் தோன்றியதே குரோம்பேட்டையில்தான் என்று என் மனைவி கருதுகிறாள்.[1997ல் எங்கள் திருமணம் முடிந்து, மாம்பலத்திலிருந்து குரோம்பேட்டைக்கு இடம்பெயர்ந்தவள்.]

    மின்சாரத் தட்டுப்பாடு இருந்தாலும் சரி, இல்லாதுபோனாலும் சரி. ஆற்காடு வீராசாமி அமைச்சராக இருந்தாலும் சரி, அம்மா காலத்து அமைச்சர்களானாலும் சரி. வாரத்துக்குக் குறைந்தது 10-15 மணிநேர மின் தடைப் பிராப்தி குரோம்பேட்டைக்கு உண்டு.

    இப்போதைய கடும் மின்சாரத் தட்டுப்பாட்டுக் காலத்தில் நகர்ப்புறத்தில் ஒரு மணிநேரம், புறநகர்களில் 2 மணிநேரம் என்று மின் தடைக்கான கால அளவு வகுக்கப்பட்டிருந்தாலும் குரோம்பேட்டையில் மட்டும் நாளொன்றுக்குக் குறைந்தது 3-4 மணிநேர மின் தடை அவசியம் உண்டு. குறிப்பாக நள்ளிரவுப் பொழுதில் இது நடக்கும். போன் செய்து கேட்டால் பொறுமையாக பதில் சொல்வார்கள் என்பது மட்டுமே ஆறுதல்.

  • இருபத்தி மூணு வருஷத்தை அப்படியே தாரை வார்த்துவிட்டு இடப்பெயர்ச்சி செய்வது என்பது கொடுமை தான் 🙁

    குரோம்பேட்டையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் குமரன் குன்றம்! ஆனால் ஃபிகரோடு போனால் அங்கிருக்கும் அய்யர்கள் துரத்துவதையே தொழிலாக கொண்டிருப்பார்கள் 🙂

    கால்நூற்றாண்டுக்கு மேலாக குப்பை கொட்டிக் கொண்டிருப்பதால் கோடி ரூபாய் கொடுத்தாலும் மடிப்பாக்கத்தை மாற்றுவதை குறித்து யோசிக்கவே மாட்டேன். (இப்போ எங்க வீட்டின் மதிப்பே கோடியை தாண்டிவிட்டது என்பதால்)

  • //குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. //

    வாங்க வாங்க. பவர் ஹவுஸ் வெள்ளாளத் தெருவில் தான் என் மாமனார் வீடு.

  • சுய முன்னேற்ற நூல்கள் எழுத்தாளர் மெர்வின், ஹிந்து பத்திரிகையின் மிக்ப்பெரிய பதவியில் இருந்தவர் (பெயர் நினைவில்லை) இவர்கள் கூட பழைய பேட்டை வாசிகளே..

    தற்போது தங்களை போலவே குடி பெயர்ந்து விட்டார்கள்.

    85ம் ஆண்டென்றால் நீங்கள் என் ஜுனியர்தான். உங்களை கண்டிப்பாக சந்திச்சிருப்பேன்…

  • அய்யா, நான் பக்கத்தில் புது பெருங்களத்தூரில் இருந்தவன் தான். மிக சமீபத்தில் ‘பாலாஜி மருத்துவமனை’ சென்றிருந்தபோது குரோம்பேட்டையில் அசுர வளர்ச்சியும், நெருக்கடியும் புரிந்தது. பெருங்களத்தூரும் அதே கதைதான். இப்போது ஊருக்குள் சென்றால் நெரிசல் காரணமாக எரிச்சலே மிஞ்சுகிறது.

    //…புறநகர் வாசத்தின் சிறப்பு அல்லது சிறப்பின்மை அதுதான் என்று தோன்றுகிறது. இடத்துடன் உணர்வு ரீதியிலான பிணைப்பு என்று ஏதும் சாத்தியமில்லை. என்னுடைய மதுரை – நெல்லை நண்பர்கள் பலர் அவரவர் ஊர் குறித்து மணிக்கணக்கில் பேசுவதைப் பல சமயம் வாய்பிளந்து கேட்டிருக்கிறேன்…//

    சேம் பிளட்.

  • தி.க.சி. அவர்களுடன் அவரது சுடலைமாடன் வீதி வீட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். நெல்லையைப் பற்றி அவர் பேசிக் கேட்கவேண்டும்.///

    இதென்னது?? பைரவி ஆலாபனையை செம்மங்குடி பாடி கேட்க வேண்டுமென்பதுபோல் இருக்கிறது??

  • எம். ஐ. டி யை பற்றி தங்கள் அனுபவம் இருக்கும் என்று ஆர்வமுடன் படித்தேன்….
    ஒன்றுமே இல்லையா ?
    ராதா நகர் ,ரயில்வே பாலம் பற்றி சொல்லும் போது எம். ஐ. டி-ஐ விட்டு விட்டீர்களே …
    -எம் .ஐ. டி மாணவன்

  • நண்பர் திரு பாரா,

    கிரோம்பேட்டை மற்றும் லட்சுமிபுரம் பற்றி நீங்கள் எழுதிய பதிவை இன்றுதான் பார்த்தேன்!

    சில விபரங்கள் உங்களுக்காக!

    கிரோம்பேட்டை நியூ காலனி என்ற இடம், பல காலங்களுக்கு முன்னர் இடா சேம்பர் என்ற பெண்மணிக்கு சொந்தமானது. அவர் யாரென்றால், சேம்பர்ஸ் என்ற கிறோம் லெதர் கம்பனியை தொடங்கிய பிரித்தானியரின் விதவை! முப்பது வாக்குகளில் சேம்பர்ஸ் இறந்த பின்னர், அவரின் மனைவி கம்பனி விவகாரங்களில்
    ஈடுபட்டார் . இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் பல வெள்ளையர்கள் திரும்பி சென்ற பின்னரும் இடா அவர்கள் மட்டும் கிரோம்பெட்டையில் தங்கி இருந்தார். அவரின் வீடு, அதாவது பங்களா போர்டு ஹய் ஸ்கூல் என்று சொல்லப்படும் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் பக்கத்தில் இருந்தது!

    அவரின் கணக்குவழக்கு முதலியவை பார்த்துக்கொண்டிருந்தவர் நாகப்பா செட்டியார் என்பவர். இடா சேம்பர்ஸ் ஒரு விபத்தில் இறந்தவுடன் (அறுபது ஆரம்பத்தில்) அவரின் அடுத்த கட்ட வாரிசுகள் (அவருக்கு சொந்த வாரிசுகள் இல்லை என்று நினைக்கிறேன்) முக்கால் வாசி நிலங்களை நாகப்பா செட்டியாரிடம் விற்று விட்டு இங்கிலாந்திற்கு போய்விட்டார்கள். கிறோம் லெதர் கம்பனியின் ஒரு பகுதி, ஒன்றிரண்டு மைதானங்கள் மற்றும் கிறோம் லெதர் கம்பனி வாயிலின் அருகில் உள்ள ஒரு சிறு பூங்கா (அதில் சேம்பர்ஸ் அவர்களின் சிலை இருக்கும்) போன்றவை மட்டும் இடா அவர்களின் பெயரிலேயே இருந்தது! ஏதோ கேசு ஒன்று இருந்ததால் அதை யாரும் வாங்கவில்லை என்று கூறப்பட்டது! (இப்பொழுது அந்த பூங்காவும் இல்லை, சிலையும் இல்லை).

    நீங்கள் சொல்லிய லட்சுமிபுரம் போகும் வழியில், அதாவது கிறோம் லெதர் கம்ம்பெணியை தாண்டிய உடன், ஒரு பாழடைந்த பங்களா ஒன்று இருந்தது. அங்கே பல நேப்பாளி குர்காக்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள்! கிரோம்லேதர் கம்பனியின் அந்தகால காவலர்களின் குடும்பங்கள்! கிட்டத்தட்ட எண்பது, எண்பத்தியிரண்டு வரை இவர்கள் இருந்தார்கள். பின்னர் அந்த பங்களா இடிக்கப்பட்டு அங்கு வேறு ஏதோ கட்டடம் வந்து விட்டது!

    அந்த பங்களாவை தாண்டி வந்தால் அந்த காலத்தில் ஒரு பெரிய காலி மைதானம் இருந்தது. அதை தாண்டிதான் லட்சுமிபுரம். அந்த காலி மைதானத்தில் ஒரு பகுதியில் பலர் கிரிகெட் ஆடுவார்கள். கிறோம் லெதர் கம்பனி அருகில் உள்ள இடத்தில், அதாவது கம்பனி சுவற்றை ஒட்டி இருக்கும் மைதானத்தில்,கடன்களை கழிக்க நாகல் கேணி முதல் பல இடங்களிலிருந்தும் வந்து ஒதுங்குவார்கள்!! பன்றி கூட்டங்கள் பல ஓடி விளையாடிக்கொண்டிருக்கும்!

    சில சமயம் அந்த மைதானத்தில் திருநீர்மலை பக்கம் உள்ள சில விவசாயிகள் நெல்லை காயப்போடுவார்கள். அதை பதம் பார்க்க பன்றிகள் வருவதுண்டு. அதை தடுக்க சிறுவர்கள் சிலர் சத்தம் போட்டு கற்களை வீசுவார்கள். ஒரு சமயம் பன்றிகள் தொல்லை அதிகமாகியதால் சிலர் சென்னை உயிர் காலேஜிலிருந்து புலிகளின் சாணத்தை கொண்டுவந்து, தண்ணீரில் கரைத்து பல இடங்களில் கொட்டியதாக சொல்லுவார்கள். பன்றிகள் புலியை பார்த்ததில்லைஎன்றாலும், புலியின் வாசனையை முகர்ந்து ஒரு instinct ஆல் உந்தப்பட்டு பயந்து ஓடிவிடும் என்று சொல்லப்பட்டது (இது எவ்வளவு உண்மை என்று தெரியாது)!

    அந்த பெரிய மைதானம்தான் என்று நாகப்பா நகர்!

    அதை தாண்டி வந்தால் லட்சுமிபுரம்!

    தொட்டபாளையம் – இதுதான் லக்ஷ்மிபுரத்தின் ஒரிஜினல் பெயர்!

    ஐம்பதுகளில் அங்கே நிலம் வாங்கி வீடு கட்டிய சில நகரத்து மக்கள், தொட்டபாளையத்தை அவ்வளவாக விரும்பவில்லை! அங்கே ஆதிக்கமாக இருந்த சில செல்வாக்குள்ள வன்னிய குடும்பங்களும், தொட்டபாளையத்தை கொஞ்சம் உடைத்து அதன் முன் பகுதியை, அதாவது இப்பொழுது கிறோம் லெதர் வழியாக வரும் புதிய ரூட்டில் (பல்லாவரம் நாகல் கேணி திர்நீர்மலை ரூட்டை சேர்ந்ததுதான் அந்தகால 1930 லட்சுமிபுரம்) உள்ள இடங்களுக்கு ஒரு புது பெயர் கொடுக்கலாம் என்று நினைத்தார்கள். அதன் மூலம் வந்த பெயர்தான் லட்சுமிபுரம்!! பின்னர் லக்ஷ்மிபுரமே எல்லோருக்கும் பிடித்துவிட்டப்படியால், பழைய பெயர் முற்றிலுமாக மறைந்தது என்று கூறுவார்கள். அனேகமா இந்த செய்தி இப்பொழுது யாருக்கும் தெரிந்திருக்காது, ஏனென்றால் அந்த காலத்தில் இருந்தவர்கள் ஏறக்குறைய எல்லோரும் டிக்கெட் எடுத்துவிட்டார்கள், என்னைத்தவிர………….( ஹி ஹி நம்பிட்டீங்களா சும்மா தமாஷுக்கு சொன்னேன், எனக்கு அவ்வளவு வயசாகவில்லை)!!!

    இதே மாதிரி இன்னொமொரு வதந்தி உண்டு! நாகப்பா செட்டியாருக்கு வேண்டாதவர் சிலர் பறக்கவிட்ட அவதூறு வதந்தி ஒன்று அந்த காலத்தில் இந்த ஏரியாவில் பிரபலமானது! பாவம் அவர். எவனோ நன்றாக கற்பனை கட்டி விட்டது! அதாவது, இடா சேம்பர் இறந்த செய்தி வந்தவுடன், அவரின் உடலை அவரின் வீட்டிற்குள் வைத்து அவரின் உறவினர் சிலர் இங்கிலாந்திலிருந்து வரும்வரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு நாகப்பா செட்டியாரிடம் வந்தது! இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய அவர், இடா சேம்பரின் வீட்டிலுள்ள அத்தனை விலை உயர்ந்த பொருட்கள், நகை மற்றும் பணம் போன்றவைகளை தனதாக்கி கொண்டு விட்டார் என்ற வதந்திதான் அது! பரபரப்பாக பேசப்பட்டது அந்த காலத்தில்.

    இன்னும் பல பல குறிப்புகள் இருக்கிறது லட்சுமிபுரம், கிரோம்பேட்டை பற்றி!!!

    உங்களுக்கு கேட்க ஆவல் இருந்தால் சொல்லுகின்றேன்!!!!

    • நண்பர் நோ, நன்றி. என் பேட்டையின் சரித்திரத்தை அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள். இதில் பெரும்பகுதி நானறிவேன். தொட்டபாளையம் பெயர் கேள்விபப்ட்டிருக்கிறேன். அதன் பின்னணி மட்டும் தெரியாது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ள மைதானத்தில் நானும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். [அதாவது முதல் பாலில் அவுட் ஆகியிருக்கிறேன் என்று பொருள்.] இப்போது குரோம்பேட்டையின் பெரும்பகுதி ஆழ்வார் உரையாசிரியரும் 😉 அமைச்சருமான ஜகத் ரட்சகனுடையாகிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?

  • அன்பான நண்பர் திரு பாரா,

    சரித்திர முக்கியத்தவம் வாய்ந்த நான் இட்ட குரோம்பேட்டை சரித்திர நிகழ்வுகளை படித்ததற்கு நன்றி.

    ஆழ்வார் உரையாசிரியர் பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த ஏரியாவில் அவர் பல காலம் குடியிருந்ததுதான் பேசிப்பார்த்த பலருக்கு தெரிந்திருக்கின்றது. அந்த காலத்திலிருந்தே ஆழ்வார் ஆய்வுகளை மேற்கொண்டார் என்று சொல்லுகிறார்கள். ராமரை மட்டும் இல்லாமல் வீரமான ராமரையும் கவர்ந்ததால்,புரட்சிகளின் உள்ளம் கவர்ந்த தொண்டரடிபொடியானார் என்றும் சொன்னார்கள்.

    புரட்சி படுத்த படுக்கையாகி விட்ட காலகட்டத்தில், அதாவது ஏறக்குறைய நேரம் நெருங்கும் நேரத்தில், தலையணை அடியிலிருந்த சாவிக்கொத்தையும், சலவை கத்தையும் சந்தடி சாக்கில் சொருகிக்கொண்டு போன சிலரில் இவர் இல்லையானாலும், அந்த சிலரின் சிலுவைதூக்கும் சிப்பந்தியாக செல்வாக்கை நிலைநாட்டியதால், சத்தமில்லாமல் சொத்துக்கள் சட்டைக்குள் வந்தன என்றும் ஒரு கதை உண்டு. கூடவே வீரனின் விவேகம், வெங்காயத்தின் புதிய அவதார வருகையால் அல்லது அம்மணியின் அழுகையால் அமுங்கிப்போய், கத்தைகள் பல கலப்படமில்லாமல் கண்ணனின் இந்த பெயர் பாடியின் பரணில் விழுந்ததாகவும் சொல்லுவார்கள்!

    கேட்காமலே வந்த ஸ்ரீதேவியையும், போய் பார்க்காமலே வந்த மாதவியையும், ஏற்காமல் இருப்பது யார்தான்? பார்த்தார் பரந்தாமன், பிரபந்தமும்
    பிரார்த்தனயுமே பல வடிவாக புண்ணியன் எனக்கு பிணி போக்க வந்ததென்று பட்டென போட்டார் பெட்டிக்குள்ளே. சட்டென பிறந்தது BITS சும் அதிலே.

    சுட்டவன் கெட்டவன் எல்லாம் சத்தியம் பேசி “பாமாவை” படைக்கும் நேரத்தில், கை கட்டி கவனித்து, வாய் விட்டு அந்த உலகளந்த உத்தமன் பெயரை வர்ணித்த இந்த வம்பிலா தொண்டன் பட்டை கிளப்புவதில் தவறில்லையென பட்டதாரி பலவகைகளை, புதியவர்களை, பட்டி தொட்டியெல்லாம் வட்டமிட வைக்க வட்டிக்கு பணம் வாங்காமல் சட்டியில் இருக்கும் சரக்கை எடுத்து சர சரவென சாரம் கட்டினார்! ஏழுமலையானின் பெயரிலும் பல நிலங்களில் ஓரம் கட்டினார், பின்னர் ஓவராக கட்டினார்!

    கட்டுக்கடங்காமல் கட்டடங்களை கட்டினாலும், கட்டுகளை கட்டினாலும், குரோம்பேட்டை வெட்டினாலும், கட்டை பஞ்சாயத்துகளில் மட்டும் கலக்கமாட்டார் என்கிறார்கள். யாரையும் கட்டமும் கட்ட மாட்டார் என்றும் சொல்லுகிறார்கள்! உண்மையும் அதுபோலத்தான் இருக்கிறது.

    மொத்தத்தில், புரட்சி செய்தவரின் பல பொன்னான மூட்டைகள், வீரமானவர்களிடம் வந்து அங்கிருந்து இந்த விவேகமானவரிடம் வந்து,இன்னும் வேகமாக விரிவாகி வேறு வழி இல்லாமல், கடைசியில் வீர வசனம் பேசுபவர்களிடம் விழுந்து, வர வேண்டியதுகளை விலைக்கு வாங்க வீசப்படப்போகிறது!

    பொன்மனத்தின் ஆவி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்குமானால், பாழப்போனவனே, போயும் போயும் பரம் எதிரிக்கா என் பொன் போகிறது என்று புலம்பியிருக்கும் !

    ஆனால், அடிபொடி மிக்க அறிவாளி. காஞ்சித்தலைவனின் படத்தையும் வெள்ளை வர்ணத்தையும் வீட்டு மாடியில் இருக்கும் இருவர்ணக்கொடியுடன் ஒட்டவைக்கு எவ்வளவு நேரமாகும் அவருக்கு! அதெல்லாம் ஒரு சப்ப மேட்டரு!!

    ஏதோ எப்படியோ, நம்மாழ்வார் மறுபிறவி எடுத்து நம்மை ஆளும் ஆளானார்! நல்லவராகவும் இருக்கிறார்!

    ஆகமொத்தம் குரோம்பேட்டையில் இருக்கும் இவர் நல்ல வேளை அண்ணன் அஞ்சா நெஞ்சன் மாதிரி இல்லை நம்ம ஆழ்வாரின் நண்பர் போலத்தான் இருக்கிறார் என்று வேண்டுமானால் மனதை தேற்றிகொள்ளலாம்!!

  • குரோம்பேட்டை போர்டு ஹய் ஸ்கூல் அந்தகாலத்திலேயே ஒரு பிரபலமான பள்ளி. எழுபதுகளில், ஆரம்ப எண்பதுகளில் மிக்க பிரபலமாகி, போர்டு ஹய் ஸ்கூல் பசங்க என்றாலே, கொஞ்சம் பார்த்துதான் பழகனும் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

    அநேகமாக சுமார் பதினொன்றரை அல்லது ஒரு மணிமுதல் குமபலாக கண்மணிகள் கட் அடித்து வெளியே வருவதை பார்க்கலாம். பக்கத்தில் வெற்றி தேட்டரில் அல்லது தாம்பரம் வித்தியாவில் போய் விழுவார்கள்! போதாக்குறைக்கு, சில விடலைகளும், வயாதகிவிட்டதாக நினைத்துக்கொண்டு சில தாவணிகளை குறுக்கு ரோடுகள் ஓரத்தில் நிறுத்தி வைத்து நாங்க எல்லாம் தேரிட்டோம், நீங்க ஏங்க இப்படி என்று ஸ்டைல் காட்டிக்கொண்டிருப்பார்கள்!

    மேலும், அனுமதிக்கப்பட்ட காக்கி அரை டிரௌசர் மேல் ஒரு முழு குழாவை மாட்டிக்கொண்டு, கால் செருப்பு முழுவதும் மறைத்துகொள்ளக்கூடிய
    பெல் பாட்டத்தை ஆட்டியபடி தாவானிக்கனவுகளை தயாரித்துக்கொண்டிருப்பார்கள்! வெவேறு இடங்களிலிருந்து பள்ளிக்கு வருவதால், மிக அமைதியான குரோம்பேட்டை தெருக்களில் யார் நம்மை கண்டுக்க போகிறார்கள் என்ற தில்லுடன், தளுக்கிக்கொண்டிருப்பார்கள் இந்த விடலை ரோமியோக்கள்.

    தாய்க்குலங்கள் சிலதும் தயங்கி தயங்கி, தன்னின் ஆதர்ச பெல் பாட்டத்தை பார்த்து பல் இளித்துபோகும். சில மங்கைகள், பேச்சும் கொடுக்கும். பார்க்க தமாஷாக இருக்கும்.ஆனால் அவர்களுக்கு அது ஒரு சீரிஸ் விஷயமாக இருக்கும். அப்பப்போ, ஆண் மகனின் அன்புத்தோழனும் ஓரத்தில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பான். சைக்கிளை பிடித்தப்படி ஓரமாக, தனியாக நிற்பதால், நண்பனுக்கு சப்போர்ட்டு என்பது புரியும்.

    இதைப்பார்த்த ஒரு நடுத்தரவயது ஒன்று அடித்த கம்மென்ட் எனக்கு இன்னுமும் மனதில் இருக்கிறது. விளக்கு பிடிச்ச காலம் போயி இப்போ பசங்க சைக்கிளை பிடிக்கிறாங்க போல என்பதுதான் அது. ஆனால் தோழனின் காதலுக்காக தயார் நிலையில் சைக்கிள் பிடிக்கும் ஆத்துமாவை ஆவளவு சீப்பாக எடைபோடக்கூடாது என்று சொல்ல நினைத்தேன். நமக்கு ஏன் வம்பு, என்று சும்மா இருந்துவிட்டேன்.

    இந்த நண்பேண்டா வகைராவைப்பற்றி எனக்கு ரொம்பநாள யோசனைகள் உண்டு! அது எப்படி நமக்கு கிடைக்காத ஒன்றை மத்தவனுக்கு கிடைக்கும் பொழுது,அது நமக்கு கிடைச்ச் மாதிரி சந்தோஷப்பட முடியுது என்ற எண்ணம்தான் அது!

    சமீபத்துல சூப்பர் ஸ்டாருக்கு மாமா வேலை பார்த்த (அட, சினிமாவிலதாங்க – நமக்கு அங்கதான எல்லாவற்றிற்கும் உதாரணம் இருக்கும்) , விவேக் கேரக்டருக்கு மற்றும் அதுபோல சில பல சைடு கிக்கு பீசுகளுக்கு, மத்தவன் பொம்பளைய அடையுறதை பார்த்தால் உண்மையாகவே உற்ச்சாகம் வருவதுபோல, நிஜமான ஆட்களுக்கு வருமா என்பதுதான் அது!

    ஒரு வேளை, நண்பனுக்கு உதவி செய்தா, அவனும் நமக்கு ஏதாவது கைம்மாறு செய்வானோ, அதாவது, இந்த மாதிரி வந்து சைக்கில் பிடிப்பான் என்ற நினைப்பு இருக்குமோ. இல்லாட்டி தன்னுடைய இச்சையை தன் நண்பனின் மூலமாக கொஞ்சம் சப்-காண்டிராக்ட் செய்து, அது ஒர்க் அவுட்ட் ஆகிவிட்டால், பின்னர் அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமோ தெரியாதோ! சிவாஜி படத்துல விவேக்கு ஏதாவது கலியாணம் கட்டுவாரா என்ற ஞாபகம் இல்லை! இருந்திருக்காது. சங்கருக்கு படம் முடிக்கவே நேரம் பத்தல. இதுல காமடி பீசுக்கு கலியானமுன்னா, காசி தேட்டருல்ல ஓசிக்கு கூட எவனும் படம் பார்க்க வரமாட்டன் என்பது அவருக்கு தெரியும். காலம் மாறி விட்டதில்ல! இதே டி ஆர் ராமச்சந்திரன் சமாச்சாரமோ இல்லாட்டி அந்த கால நாகேஷு சமாச்சாரமோ இருந்திருந்தால், போனா போகட்டமுன்னு, ஒரு மைனாவதியயோ அல்லது மனோரமாவையோ ஜோடி சேர்த்திருப்பாங்க. ஆனா காலம் ரொம்ப மாரிட்டதனால, ஜனங்களும் சைக்கிள் பிடிக்கும் தொழிலை மட்டும் காமடி பீசு செய்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்ததனால், இயக்குனர்களும் கதாசிரியர்களும் அதையே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! என்ன சைக்கிள் போய் இப்போ ஹீரோ ஹோண்டாவோ அல்லது ஹோண்டாவோ வந்திடுச்சு!

    ஆனால் பாருங்க சைக்கிள் பிடிக்கும் மகாத்த்மியத்தை ஒரு பரிணாம நோக்கில் என்னால பார்க்காமல் இருக்க முடியல. பரிணாம அறிவியலை மிக்க கவனமாக விவரமாக ஓரளவுக்கு படித்ததனால், இந்த சைக்கிள் பிடிக்கும் சாகசத்தின் காரணங்களை இதை வைத்துக்கொண்டு அலசாமல் இருக்க முடியவில்லை!

    அதாவது, ஓரினச்சேர்க்கையின் மூலக்காரனங்களை பற்றி எழுதும்பொழுது, ரிச்சர்ட் டாகின்ஸ் கூறிய ஒரு பாய்ண்ட்டு ஒன்று இருக்கிறது. அதாவது, நாலைந்து ஆண் சிங்கங்கள் ஒரு பெரிய சிங்கக்கூட்டத்தில் இருக்கும் பொழுது, அதில் உள்ள பெண் சிங்கங்களை (கண்டிப்பா மீரா ஜாஸ்மின் இல்லீங்க) தீண்டுவது, அங்கே உள்ள ஒரே வலிமையான ஆண் சிங்கம் மட்டுமேதான்! மற்ற ஆண் சிங்கங்களுக்கு அந்த வாய்ப்பு அநேகமாக வராது. பிடிக்க வில்லை என்றால், அந்த வலிமையான ஆண் சிங்கத்துடன் போராடிதான் பார்க்கவேண்டும். அப்படி ஒரு தடவை போராடினால், தோற்றால், அந்த சிங்கம் குழுவிலிருந்த வெளியேற வேண்டும். வலிமையான ஆண்சிங்கம் அதை செய்யும். தனியாக போன சிங்கம், கூட்டுறவு வேட்டை செய்யமுடியாமல் பசியால் வாடி இறக்க நேரிடலாம். ஆதலால், பல ஆண் சிங்கங்கள், வெட்கம் பார்க்காமல், பெண்ணை தீண்டாமல், அடக்கிக்கொண்டு இருக்கும். சில சமயங்களில் வலிமையான ஆல்பா சிங்கம் பக்கத்தில் எங்கேயாவது போனால் சந்தர்பத்தை பெண் சிங்கத்திடம் பயன் படுத்த எத்தனிக்கும். அதே சமயம் வலிமையான சிங்கத்திற்கு சந்தேகம் வாராது இருக்க, பெண் சிங்கங்களிடம் போகாமல், மற்ற ஆண் சிங்கங்களிடம் உறைந்து, உரசி, இதோ பார் என்னின் இச்சை உன்னின் அந்தபுற நாயகிகளிடம் காட்டப்படவில்லை என்று காட்டும். அதுவே இன்னும் நெருக்கமாக வளர்ந்து, சிறிது சிறிதாக தொடர்ந்ததால் வந்த மாற்றம்தான் ஒரினச்சேர்க்கையாக இருக்கலாம் என்றார் ரிச்சர்ட். இதுதான் உண்மையென்று நினைக்கிறேன். ஏனென்றால் ஓரினச்சேர்க்கையை யாரும் சொல்லிக்கொடுப்பதாலோ, பார்ப்பதாலோ யாரும் வளர்த்துக்கொள்வதில்லை. அது ஒரு பரிணாம உருவகம். அவர்களுக்கு நோய் ஒன்றும் இல்லை. கெட்டவர்களும் இல்லை.அவர்கள் அப்படித்தான். அதில் தவறொன்றும் இல்லை. இரத்தக்கொதிப்பு சிலருக்கு வருவதுபோல. Just body and harmone condition.

    இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், சைக்கிள் பிடிக்கும் நம்ம தமிழ் பட காமடி பீசுகளின் sexual orientation பல சமயங்களில் சந்தேகமாகதான் இருக்கிறது. Of course, இப்படி எல்லாம் யோசித்து கதாசிரியரோ, இயக்குனரோ எடுப்பதில்லை. இருந்தாலும் ஒரு ஜோடியை சேர்த்து விடுவது பெட்டரோ என்று சொல்லத்தோன்றுகிறது!

    இன்னும் வரும்…………குரோம்பேட்டை பற்றிதான்…….நீங்கள் விரும்பினால்………………………………….

  • சாரி திரு பாரா சார், நீங்கள் விரும்பாவிட்டாலும், இந்த சப்ஜெக்ட்டில் என் மனம் கொஞ்சம் திளைக்க ஆரம்பிக்க விட்டது….. பொறுத்துக்கொள்ளுங்கள்…..

    மறுபடியும் குரோம்பேட்டை கதை……சாரி…… சரித்திரம்…….

    இப்படியாக நண்பேண்டாக்களும், நண்பிகளும் நாயகன் நாயகிகளாக குரோம்பேட்டையை வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், சிலம்பம் எடுத்து சுத்த வந்தார் ஒரு புதிய தலைமை ஆசிரியர்! அன்னைக்கு மாற ஆரம்பித்தது அந்த ஸ்கூலு! அவரு பெயர் கதிரேசன் என்று நினைக்கிறேன். எங்கிருந்து வந்தார் என்று தெரியாது. ஆனால் திருநெல்வேலி ஆளாக இருக்கலாம் என்று உதை வாங்கிய சிலர் சொன்னார்கள்.

    உதார் விடுவது நம்ம ஊரு கலைகளில் ஒன்று. அந்த கால கல்லூரி கும்மியில் (அதை கல்செரல்ஸ் என்று மரியாதையாக அழைத்தாலும், கும்மாளம் அடிப்பதே அதன் ஒரே நோக்கம்) இது இல்லாமல் இருக்காது. எதாவது சிறு உரசல் ஏற்பட்டாலும், முதலில் பெயர் சொல்லும் படலம் ஆரம்பிக்கும். அது தொடர்ந்து ஒன்றிரண்டு ஊரறிந்த பெயர்கள் ஓங்கி ஒலித்தவுடன், காம்பிரமைசு நிலைமைக்கு தானாக வரும்! நார்த்து மெட்ராசாக இருந்தால் ராயபுரம் சிவா, இல்லாட்டி நியூ காலேஜு ஜாகிரு என்ற பெயர்கள் கொளுத்தி போடப்படும். எதிரி கோஷ்டி தன பங்கிற்கு, பச்செபாஸ் பாஸ்கர், கந்தசாமி காலேஜு குணா என்று அசால்டாக போடும். கடைசியில் ஒரு முறைப்புக்கு பின்னர் கைகுலுக்கி சென்று விடுவார்கள்!

    இந்த வியாதி போர்டு ஐஸ்கூல் பசங்களுக்கும் இருந்தது. யூனிபோர்முடன் தம்மடிப்பதை யாராவது கேள்விகேட்டால் பெயர் போடும் படலம் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் ஸ்கூல் வாத்தியிடமே பெயர் கொளுத்திபோடும் நிலைக்கு இவங்க எல்லாம் வந்துட்டாங்கன்னு சொன்னாங்க. ஏண்டா லேட்டாக வந்தே என்றால், நம்ம திருநீர்மலை தீனா அண்ணன் வந்துட்டுபோகச்சொன்னாரு அதான்……எண்டா சீக்கிரம் கட்டடிச்சு ஓடுறே என்றால் நம்ம வெற்றி தேட்டர் வேலு அண்ணன் வரச்சொன்னாரு என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில், பெயர் போடுவதை கடந்து, நான் யாரு தெரியுமா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்!

    நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கும் பொழுது, வந்தார் நம்ம ஆருபடயப்பர்! இரண்டாவது வாரத்திலேயே குச்சியை கையில் எடுத்து எட்டரை மணிக்கு கேட்டு வாசலில் நிர்க்கத்தொடன்கினார். லேட்டாக வந்து பெயர் சொல்லிப்பார்த்த உதார் பார்டி ரெண்ட போட்டாரு பாருங்கள் ஒரு பத்து நிமிடங்களுக்கு. போட்டிருந்த திரௌசரின் பின்புறத்தை மூடிக்கொண்டு ஓட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார்கள் அந்த பிஞ்சில் பழுத்த பசங்க ரெண்டும்! கேட்டவர்கள் சொன்னதை கேட்க்க மிக்க தமாஷாக இருந்தது. முதலில் அந்த சின்ன பசங்க ரெண்டு பெயர சொல்ல, கதிரேசன் அண்ணனும் ஒரு நாலு பெயர சொல்ல, அத்தகேட்டு ஆடிபோட்டாங்க பல பேரு. கதிரேசன் அண்ணன் சொன்ன பேருல பம்மல் எம் எல் எவோ அல்லது தாம்பரம் ஏரியாவின் கட்சி பிரபலத்தின் பெயரோ இருந்ததால்!

    செய்தி வேகமாக பரவ, வந்திருக்கிறது சாதாரண ஆளில்ல, பாக்கிங் இவருக்கு இருக்கு போல என்று உதார் பார்டிஎல்லாம் பொத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டது! கதிரேசன் ஐயாவுக்கு, மாமா கதிரேசன் என்ற பெயரும் சூடபட்டதாக ஒரு கிரிகெட் சந்திப்பின் பொழுது காதில் விழுந்தது!

    இந்த மாதிரி பரபரப்ப குரோம்பேட்டை எப்பொழுதுமே பார்த்திராததால், தண்ணி தெளித்து விடப்பட்ட கேசுகளுக்கு தண்ணி காட்ட வந்தவன் புகழும் பல கதைகளும் வேகமாக பல தோன்றியது. அதில் ஒன்று அவர் கட்டடிக்கும் பசங்களை பதம் பார்த்தது! நம்ம பேரரசுவின் பிரயத்தனத்தோடு ஒரு தம்பி சொன்னது என் நினைவில் இன்றும் இருக்கு. மாமா குச்சியை கையில வச்சிக்கிட்டு கேட்டு பக்கத்தில் உள்ள கீற்று கொட்டகைக்கு பின்னால் நின்றிருப்பாராம்! எவனாவது கண்ட நேரத்தில் வெளியே ஓட நினைத்தால் ராமன் உட்ட அம்பு கணக்கா கதிரேசன் குச்சியை கையிலிருந்து விடுவாராம். ஓடுபவனின் காலோ கையோ முதுகோ வீங்கிக்குமாம்!

    விஷயம் இத்துடன் முடியவில்லை. கதிரேசன் ஒழுக்ககேடுகளை ஒழிக்க வந்த வாத்தியார் என்ற பட்டத்தை மேலும் விரிவாக்கி கொண்டிருகிறார் என்பதை பத்தாம் கிளாசை பாசே பண்ணமுடியாத ஒரு வீணாப்போன வெட்டி சொன்னதும் நினைவுக்கு வருகிறது!

    மத்தியான வேளையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ்ட் மேய்ன் ரோடில் ஆரம்பித்து அத்தனை ரோடுகளிலும் வலம் வரத்தொடங்கினாராம் நம்ம தலைமை ஆசிரியர்! எதுக்கென்றால், கட்டடித்து சுற்றிக்கொண்டிருக்கும் இருபால் ஓடுகாலிகளையும் (அப்படி நான் சொல்லவில்லை) அங்கேயே உதைப்பதற்கு! கூடவே நன்பெண்டாக்களுக்கும் விழுந்ததாம் நல்லா! இதில் எவ்வளவு உண்மை என்று தெரியாது, ஆனால், ஸ்கூல் டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தெருவோரமாக பேசிக்கொண்டிருக்கும் வாலிப வாலிபிகளை இப்பொழுதெல்லாம் பார்க்கவே முடியவில்லை என்று சில வயாதான ஆனால் கொஞ்சம் ஜொள் இன்னும் உள்ள பல் இளிச்சாங்கள் புலம்பியது காதில் விழுந்தது!

    அப்படி போச்சு இந்த குரோம்பேட்டை வரலாறின் ஒரு பகுதி!

    படிக்கிற பசங்களை ஆசிரியர் நாலு போடு போடுறது இப்பெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லுகிறார்கள். அடிப்பது என்பது தவறாம், மாணவர்களின் பெற்றோர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள். கதிரேசன் ஐயா போன்றவர்கள் செய்ததனால் உண்மையான மாற்றங்கள் மாணவர்களின் மனதில் வந்ததா இல்லாவிட்டால் அதனால் வேறு விளைவுகள் வந்ததா என்பது தெரியாது. இதைப்பற்றி எங்கோ படித்தது ஒன்று ஞாபகம் வருகிறது. ஆசிரியரின் கடும் கண்டிப்பிற்கு ஆளான ஒரு குழுவுனரையும், ஆளாகாத ஒரு குழுவினரையும் பல காலங்களாக கவனித்து அவர்களின் இன்றைய நிலைமையையும் அன்று நடந்த சம்பவங்களால் அவர்களின் வாழ்க்கை பயணம் எப்படி மாறியது என்பதனையும் ஆராய்ச்சி செய்து ஒரு ரிசர்ச்பேப்பர் பற்றியதுதான் அது. If I remember corrrectly, the paper had concluded that the harsh punishments inflicted had only detrimental results on people’s careers! இது எவ்வளவு உண்மை, அல்லது ஒரே ஒரு உதாரணத்தை வைத்து மொத்த conclusion நிற்க்கு வருவதா என்ற ஐயங்கள் எனக்கு உண்டு!

    எப்படி இருந்தாலும், நம்ம ஊரு பொறுத்த வரைக்கும் சில உதைகள் தேவைப்படுபவைதான் என்று சொல்லத்தோன்றுகிறது! சரித்திரம் அப்படி இருக்கு! Atleast குரோம்பேட்டை சரித்திரம்!

  • அன்பான நண்பர் திரு பாரா,

    நேரம் சிறிது கிடைத்தது, பேட்டை புராணம் பாடலாம் என்று புறப்பட்டு விட்டேன்! (இரண்டு வாரமாக ரொம்ப பிசீ)

    சில சமயங்களில் வாழ்க்கை மிக்க மெதுவாக, ஒரு பிரமிப்பில்லாமல், ஒரு பளிச்சில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்! வீட்டை விட்டால் ஸ்கூலு, அதை விட்டால் வீடு, பொழுது இறங்கும் வேளையில் தூர்தர்ஷன், பிடிக்குமோ பிடிக்கவில்லையோ ஹிந்து பேப்பர், மிஞ்சி மிஞ்சிப்போனால் வாரக்கடைசியில் வெற்றி தேட்டரில் இரண்டு ருபாய் தொநூறு காசுகள் கொடுத்து, கலர் பான்டு மாட்டிய குண்டு நடிகர் மற்றும் நடிகைகளின் தக்கதிமி தரிசனம்!

    அப்பொழுதெல்லாம் தூர்தர்ஷன் சுமார் ஆறரை மணிக்குதான் தொடங்கும். வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சிகள் வரும். ஒவ்வொரு செவ்வாயும் முக்கால் மணிநேர நாடகம் ஒன்றும் வரும். அதைத்தவிர எதிரொலி என்று ஒரு பிரோக்ராம். அதில் மலை முழுங்கி மகாதேவன் என்பவர் மூஞ்சியை கான்ச்டிபேஷனால் அவதிப்படும் ஆகாத்திய அரைகுரையைப்போல வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் முடிக்க நினைப்பார் ! கூடவே, வண்ணாரபேட்டை பிச்சாண்டி ஒயிலாட்ட நிகழ்ச்சியை பற்றி பாராட்டி எழுதிய கடிதத்தை நாலு தடவை படிப்பார். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இன்னமும் இதை பார்ப்பது, அவர் அடுத்த வாரம் தொலைக்காட்சியில் வரப்போகும் சினிமாவை பற்றி சொல்லுவதை கேட்கத்தான்!

    அப்படி ஒரு சினிமா மோகம் அந்த காலத்தில், அதாவது முப்பது வருடங்களுக்கு முன். இடியட் பாக்ஸின் முன் ஒரே தெருவே உட்க்கர்ந்திருப்பதை கண்டிருக்கிறேன்! அதுவும் குரோம்பேட்டை லட்சுமிபுரம் போன்ற இடங்களில் ஒரு சில பொட்டிகளே இருந்ததால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மவுசு அதிகம். அந்த வீட்டு பசங்க, கிரிக்கெட்டில் நல்ல காஜூ அடிக்கலாம். அடித்து விட்டு பந்து பொறுக்காமல் அம்மா கூப்பிட்டாங்க என்று போகலாம். தெருவில் போகும் பொழுது பல முகங்கள் பல் தெரிய விசாரிப்பார்கள்!

    அப்படி வாழ்க்கை பளிச்சில்லாம் போய்க்கொண்டிருக்கும் பொழுதுதான், அதை மாற்ற பன்றி பிடிக்கும் குரூப்பு ஒன்று வந்தது. குரோம்பேட்டை ஏரியாவில் பன்றிகளில் தொல்லை மிக அதிகமானதால், அதை பிடிக்க காற்பறேஷநிலிருந்து அனுப்பட்ட படைதான் இவர்கள். நீளமான ஒரு மூங்கில் கொம்பு, அதன் நுணியில் ஒரு மெல்லிய இரும்பு வயர் சுருக்கு.

    இதற்க்கு முன்னரே பன்றி பிடித்து போனவர்களை பார்த்திருக்கிறேன். அதாவது ஒரு பன்றியை துரத்திக்கொண்டு போய், கையில் வைத்திரக்கும் மூங்கிலை நீட்டி அந்த சுருக்கின் உள்ளே அதன் தலை மாட்டிக்கொள்ள செய்து விடுவார்கள். பின்னர் பன்றியின் கால்களை கட்டி கோணிக்குள் போடு எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். இதைப்பார்த்த இந்த குரோம்பேட்டையில் யாருக்கும் தொந்தரவில்லாமல் பீ தின்று கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட ஜந்துவை, வேறு யாரோ தின்னப்போகிரார்கள் என்று நினைப்பேன்! சோறு திங்கிறியா இல்லை வேறு எதாவதா என்ற கேள்விக்கு இதை போன்ற ஊர் மேயும் பன்றிகளை தின்றவர்கள் சொல்லலாம், இல்லீங்க, நான் பீ தின்றதை தின்னுகிறேன் என்று!

    என் நெருங்கிய நண்பர் ஒருவனுக்கு போர்க் என்றால் கொள்ளை பிரியம். அதை சாபிட்டால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பான்! அவன் சாப்பிடுவதோ விஸ்கான்சின் சலவை பன்னி! பத்து ருபாய் ப்ளேட்டில் பல்லாவரம் பஸ் ஸ்டாண்டு பக்கம் அந்த காலத்துல தருவதோ நம்ம ஊரு சாக்கடை பன்னி! குரோம்பேட்டை, நாகல் கேணி பக்கம் எல்லாம் மேய்ந்து நல்ல சாக்கடைகளாக பார்த்து பொரண்டு கொண்டிருக்கும்!

    பன்றிகள் are actually extremely intelligent! They are not what is made out of them. Calling you a pig is actually not a rebuke. Its a credit. ஒரு சிறந்த அறிவுமிக்க மிருகம் இது. அதனால் தான் என்னவோ வராகமாக பெருமாள் வந்ததா சொல்லுறாங்களோ என்னமோ! பன்றிகளை நாய்கள் பூனைகள் போல வீட்டில் வளர்க்கலாம். எந்த தொந்தரவும் செய்யாது. ஒரே பிரச்சனை, சில கிருமிகளின் புகலிடமாக சில சமயங்களில் ஆகிவிடுவதால், அதை விட்டு விலகி இருப்பதே மேல் என்று ஆகிவிடும்! கண்ட மனித மற்றும் இரசாயன கழிவுகளில் புரள்வதால் they become carriers of certain bacteria and virus. Hence a danger from those street walking pigs!

    அதே போல, காட்டு பன்றிகள் மிக்க அறிவுள்ளவை. Wild boar அல்லது wild pig எனப்படும் வகையறா பன்றிகள், சிங்கத்ததவிர, புலியை தவிர எதற்கும் பயப்படாது! சிங்கங்களே ஓரளவிற்கு ஜாக்கிரதையாகத்தான் அதனை வேட்டையாடும்! அதுவும், only as a last resort. காட்டு பன்றிகள் தன்னின் குட்டிகளை மிக்க ஜாக்கிரதையாக, அன்பாக பார்த்துக்கொள்ளும்! மிக்க பரிவோடு இருக்கும்.

    இப்பேற்பட்ட ஒரு ஜீவனை சிலர் வந்து பிடிக்கும் பொழுது பாவமாகத்தான் இருக்கும். இப்போ விடயம் தெரிகிறது. அந்த காலத்தில் அவ்வளவாக தெரியாது. பன்றிகளை பிடிப்பவர்கள் வருகிறார்கள் என்றால் பசங்க குரல் கொடுத்து விடுவார்கள். பின்னாலேயே போய் பார்ப்போம். தமாஷாக இருக்கும். போரடிக்கும் வாழ்க்கையில் ஒரு சின்ன சலசலப்பு இந்த பன்றி பிடிப்பதை பார்க்கும் நாட்கள்.

    நாங்க எல்லோரும் பின்னாலேயே போனோம். முதலில் பழுத்த பன்றி ஒன்று மாட்டியது. கால்களை பிடித்துகொண்டனர் இருவர். கயிற்றில் கட்டி எடுத்து போவார்கள் என்று நினைத்தோம். ஆனால் கத்தி ஒன்றை எடுத்தான் ஒருவன். ஐயையோ போடப்போகிறான் போல இருக்கு, இதை பார்த்தே ஆகா வேண்டும் என்று நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, பக்கத்து சுவரில் ஏறி, எட்டி எட்டி பார்க்க ஆரம்பித்தோம்!

    கத்தியை எடுத்த அவன், பன்றியின் பின்புறத்தில் அதை விட்டு, பிரித்து எதையோ அறுத்தான். இரத்தம் ஏதும் அவ்வளவாக வந்ததாக நினைவில்லை. பன்றி பயங்கரமாக கத்திக்கொண்டிருந்தது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லாம் முடிந்தவுடன், பன்றியை அவிழுத்து விட்டார்கள். ராக்கெட்டு கணக்காக அது ஓடிவிட்டது! ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. இப்பொழுது டிஸ்கவரி சானலில் மிருகத்தை மிருகம் பிடிப்பதுபோல இருந்தது!

    என்ன நடந்தது என்று யாரோ பிறகு விவரித்தார்கள். அதாவது, பன்றிகளின் ஜனத்தொகையை குறைக்க இந்த ஏற்பாடாம். வேறொன்றும் இல்லை, ஒரு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன், அதுவும் நடு ரோட்டில்! நிறைய பந்திகள் பிடிகபட்ட்ன, கத்தி வைகபட்டன. நாகப்பா நகர் மைதானத்தில் தொடங்கி, சர்வோதய பள்ளி வழி வந்து, மூன்றாவது மெய்ன் ரோடு வந்து, வாட்டர் டாங்கு அடியில் உள்ள முள் புதர்களை கடந்து, கடைசியில் வெற்றி தேட்டர் பின்னால் இருக்கும் குட்டை அருகே இந்த வேட்டை முடிந்தது (இந்த குட்டை இப்பொழுது மூடப்பட்டு அங்கே ஒரு மசூதி வந்து விட்டதாக சொன்னார்கள் – நிஜமா? ஏன் கேட்கிறேன் என்றால், அந்த இடம் ஒரு குட்டை அல்ல. அட்ஹுஹ் ஒரு கோவில் குளம். அது வேறு கதை, பிறகு விவரிக்கிறேன்)!

    இந்த மாதிரி பன்றி வேட்டைகளுக்கு பிறகு போரான எங்கள் வாழ்க்கைக்கு கொஞ்சம் spice கொடுத்தது சில சிவாஜி படங்கள்தான். பன்றி கத்தியதை ஆர்வத்துடன் பார்த்து எங்களுக்கு அதே லெவலில் adrenaline boost கொடுத்தது ஒரு படம். அதை எல்லோரும் ஒரு முறையாவது பார்த்தோம். அதை பற்றி தெனமும் பேசினோம். சிவாஜி கராத்தே போடுவதை செய்து காட்டினோம். படத்தின் பெயர், ரத்தபாசம்!!!! சிவாஜிக்கு ஜோடி “என்னங்க!!!!!!” புன்னகை அரசியா அல்லது சிரிப்பு ப்ரியாவா என்று நினைவில்லை. ஆனால் ஏதோ ஒரு குண்டு என்று தெரியும்! வெற்றி தேட்டரில் சில காட்சிகளும், தாம்பரம் வித்தியாவில் சில காட்சிகளும் போட்டார்கள். நான் இரண்டு தேட்டரிலும் பார்த்ததாக நினைவு. ரத்தாபாசம் கொடுத்த அதிர்ச்சிக்கு பிறகு குரோம்பேட்டை ஆட்க்கொண்ட மற்றுமொரு அதிர்ச்சியின் பெயர் சங்கிலி!!! சிவாஜி காலை கட்டிக்கொண்டு பைட்டு பண்ணுவார்! நாங்க வாயை கட்டிக்கொண்டு படம் பார்த்தோம்…….இன்னும் பல பல தமாஷுகள் மற்றும் அதிர்ச்சிகள் இந்த குரோம்பேட்டை வாழ்க்கையில்…………………….

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி