கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி

ஒரு வழியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை குரோம்பேட்டையிலிருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்துக்குக் குடிவந்து சேர்ந்தேன். வீடு மாற்றியதற்கு முன் தினம் பேட்டையில் முழு நாள் மின்சாரம் கிடையாது. காலை ஆறு மணிக்குப் போன கரெண்ட், நள்ளிரவு பன்னிரண்டுக்கு வந்தது. எல்லா வேலைகளும் எனக்காக நாளெல்லாம் காத்திருந்து உறங்கத் தொடங்கியபோது, தட்டி எழுப்பி, மூட்டை கட்ட ஆரம்பித்தேன்.

என் நேரம். ஞாயிறு அதிகாலை இடியுடன் கூடிய பெருமழை பிடித்துக்கொண்டது. சரி, வருவது வரட்டும் என்று துணிந்து இறங்கி என் புத்தக அடுக்குகளின் அருகே சென்றபோது மலைப்பாக இருந்தது.

என்னிடம் சுமார் மூவாயிரம் புத்தகங்கள் இருந்தன. அரசியல், வரலாறு, இலக்கியம் மிகுதி. தத்துவம், ஆன்மிகம் கொஞ்சம். நண்பர்கள் அனுப்புவது, தெரிந்தவர்கள் தருவது, கவிஞர்கள் தலையில் கட்டுவது என்று ஒன்றிரண்டு வரிசைகள். சில மாதங்கள் முன்பு உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தபடியால், நான் படித்து முடித்த, திரும்பப் படிக்க விரும்பாத புத்தகங்களை மட்டும் தனியே எடுத்து, அவற்றை விரும்பிய சில நண்பர்களுக்கு அளித்துவிட்டிருந்தேன்.

அந்த வகையில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் குறைத்திருந்ததால், மிச்சமிருந்தவற்றைச் சேர்த்துக் கட்டும் சுமை அதிகமில்லை.

மறுபுறம் என் மனைவி தனது பன்னிரண்டு வருடகால சேமிப்புகளை மூட்டை கட்டிக்கொண்டிருந்தாள். துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள். பெரிய பெரிய பெட்ஷீட்டுகளில் வீட்டைப் பகுதி பகுதியாகத் திணித்து இழுத்து மூட்டை கட்டி உருட்டியபோது உண்மையிலேயே மிகுந்த மலைப்பாக இருந்தது. குழந்தையின் பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் மட்டுமே நான்கைந்து மூட்டைகள் ஆகிவிட்டன. ‘அவ கேக்கறதையெல்லாம் வாங்கிக் குடுக்காதிங்கன்னு சொன்னத கேட்டாத்தானே?’ என்று அலுப்பில் குற்றம் சுமத்தத் தொடங்கியவளிடம் ஒரு சிறு சண்டை போட்டிருக்கலாம். கேள்வியைத் திருப்பிப் போட்டால் தீர்ந்தது விஷயம். ஆனால் எனக்கும் அலுப்பாக இருந்தது.

குவிந்த பொருள்களின் எதிரே உட்கார்ந்து சற்றே யோசித்தால் ஓர் உண்மை தெரிகிறது. வாழ்வில் நாம் ஆர்வமுடன் சேகரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு கட்டத்துக்குமேல் வேண்டாதவையாகி விடுகின்றன. நிரந்தர விருப்பத்துக்குரியவை வெகு சொற்பம். அதனாலென்ன? அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

புது வீட்டில் [என்றுதான் சொல்லவேண்டும். பதினாறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஃப்ளாட்.] எனது புத்தகங்களை ஒழுங்காக, துறை வாரியாக அடுக்கித் தரும் பொறுப்பை என் நண்பன் கண்ணன் எடுத்துக்கொண்டான். ஒரே இரவு. மாயாஜாலம் மாதிரி முழு வீட்டில் என் ஓர் அறை மட்டும் அதன் பூரணத்துவத்தை எய்திவிட்டது. மற்ற இடங்களெல்லாம் எடுத்து வந்த மூட்டைகளால் நிரம்பியே இருந்தன. என் மனைவிக்குச் சற்று பொறாமை கலந்த வருத்தம்தான். இப்படியொரு தோழமை தனக்கில்லையே என்று எண்ணியிருக்கலாம். ஆயினும் இந்த நான்கு தினங்களில் ஓரளவு சரி செய்ய உதவியிருக்கிறேன். இன்னும் ஒன்றிரண்டு நாள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். கண்ணன் அளவுக்குச் செய்நேர்த்தி எனக்குக் கிடையாதென்றாலும் ஓரளவுக்கு சீரான ஒழுங்கு கடைப்பிடிக்க நினைப்பவன்தான் நானும்.

இன்னும் டெலிபோன் கனெக்‌ஷனுக்கு ஏற்பாடு செய்யவில்லை. பேப்பருக்குச் சொல்லவேண்டும். பாலுக்குச் சொல்லவேண்டும். இண்டர்நெட் இல்லை. கேபிள் டிவி மட்டும் இன்று காலை வந்துவிட்டது. போகோவும் டோராவும் இல்லாவிட்டால் குழந்தைக்கு இட்லி இறங்காது என்கிறபடியால்.

நேற்று மாலை பிராந்தியத்தில் ஒரு சிறு உலா சென்று வந்தேன். நல்ல, வசதியான இடம்தான். கைக்கெட்டும் தூரத்தில் எல்லாம் கிடைக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் நெருக்கத்தில் அலுவலகம் அடைந்துவிட முடிகிறது. குழந்தைக்குப் பள்ளிக்கூடமும் பக்கத்திலேயே அமைந்தது இன்னோர் அதிர்ஷ்டம். இவற்றின்மூலம் மிச்சம் பிடிக்கும் நேரத்தில் இன்னும் உருப்படியாக ஏதேனும் செய்ய முடிந்தால் சரி.

இப்போதைக்குத் துணி உலர்த்த பிளாஸ்டிக் கயிறு வாங்கவேண்டும். சமையல் எரிவாயு கைவசம் இருப்பது தீர்வதற்குமுன்னால் ஏஜென்சி மாற்ற ஏற்பாடு செய்யவேண்டும். குளியலறையில் வேலை செய்யாத ஹீட்டரை அதன் டாக்டரிடம் காட்டவேண்டும். அவசரத்தில் கட்டிப் பரணில் ஏற்றிய மூட்டைகளில் ஒன்றில் கேஸ் அடுப்பு லைட்டரும் ஷேவிங் ரேசரும் கலந்துவிட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து எடுக்கவேண்டும். யார் யாருக்கு முகவரி மாற்றம் தரவேண்டுமென்று யோசித்துப் பட்டியல் போட்டு வங்கி தொடங்கி ரேஷன் அலுவலகம் வரை அலையவேண்டும்.

தீபாவளி வருகிறது, பாண்டிபஜார் போகவேண்டும் என்று மனைவி நினைவூட்டுகிறாள். பக்கத்திலிருக்கும் சேகர் எம்போரியமெல்லாம் கூடாதாம். ஐயோ, மீண்டும் துணி என்று அந்தராத்மா அலறுகிறது. மூட்டையில் திணிக்க இன்னும் கொஞ்சம்.

ஆனாலும் அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

Share

16 comments

  • அரிதினும் அரிது புவியில் உயிராய்ப் பிறப்பது, அதனினும் அரிது வசதியாக வாடகை வீடு கிடைப்பதுதான். வெற்றிகரமாக புது வீட்டில் செட்டில் ஆனதற்கு வாழ்த்துக்கள்! வீடு மாற்றுவதைப் பற்றி புத்தகம் எழுத வேண்டும் என்றால் என்னை அணுகலாம். அயனாவரம் எனும் சிற்றூரில் இருக்கும் எல்லா சந்து பொந்துக்களிலும் வாழ்ந்த பெருமை எங்கள் குடும்பத்துக்கு உண்டு. 2A, 3B,யிலிருந்து 7G ரெயில்வே காலனி வரை ‘ஆயிரம் வீடுகள் மாற்றிய அபூர்வ சிகாமணிகள்’ நாங்கள். என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ‘ஸ்ரீவைகுண்டத்துல எங்க வீடு இந்த அத்தத்திலர்ந்து அது வரைக்கும் இருக்கும், ஹால்லேர்ந்து அடுக்களைக்குள் போகறதுக்குள்ள கால் வலிக்கும்’னு. எங்களுக்கு எரியும், அடுத்தது எப்ப பெட்டியைத் தூக்க போறோமோன்னு கிலி ஏற்படும். என்னுடைய அருமை அப்பாவோ மிகவும் ஜாலியான பேர்வழி. சொந்த வீட்டுக்காரனுக்கு ஒரே வீடுதான், ஆனா பாரு நாம எவ்வளவு வீடு பாத்திருக்கோம்..அப்பறம் நமக்கு நிரந்தரமா எட்டடி தான் என்று தத்துவ மழை பொழிந்து கடுப்பேத்துவார் (அவர் உங்களை மாதிரி உதவி எல்லாம் செய்ய மாட்டார் – லாரிக்கு சொல்வதோடு சரி) நானும் அம்மாவும் என் கணவரும் தான் பேக்கிக், அன்பேக்கிங், அடுக்கிங், எல்லாம்…இருவரும் நிறைய சம்பாதித்தார்கள், நிறைய செலவு செய்தார்கள், குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு என்று தனக்கான நிரந்திரக் கூட்டைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்க்க வில்லை. நானும் அவரும் அம்பத்தூரில் ஒரு ப்ளாட் வாங்கிப் போகும் போது எவ்வள்வு அழைத்தும் வர மறுத்துவிட்டு.
    இப்போதும் எளிமையான ஒரு வாழ்க்கையின் நிறைவில் சிங்கிள் பெட்ரூம் ப்ளாட் ஒன்றில் வசிக்கிறார்கள்.

  • பாரா சார், அவ்வப்பொழுது, அனைத்து அலமாரிகளையும் சுத்தப்படுத்துங்கள். உபயோகிக்காத எந்த பொருளையும் மனதை திட படுத்திக் கொண்டு தூக்கி எறியுங்கள். பரண் என்பது வேண்டாத பொருட்களை போடும் இடமல்ல, அதிகம் உபயோகிக்காத பொருட்களை வைக்கும் இடம் என்பதை மேடத்திடம் சொல்லுங்கள்.அதை விட சுலப வழி, அடிக்கடி வீடு, நாடு மாறினால்
    குப்பை சேராது 🙂

    ஒரு மெயில் போட்டேனே கிடைத்ததா ???

  • //குவிந்த பொருள்களின் எதிரே உட்கார்ந்து சற்றே யோசித்தால் ஓர் உண்மை தெரிகிறது. வாழ்வில் நாம் ஆர்வமுடன் சேகரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு கட்டத்துக்குமேல் வேண்டாதவையாகி விடுகின்றன. நிரந்தர விருப்பத்துக்குரியவை வெகு சொற்பம். அதனாலென்ன? அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.//
    இத நகல் எடுத்து சேமிச்சு வெச்சுக்கிறேங்க. நூத்துல ஒரு வார்த்தை. இதுல உறவுகளும், நட்புகளும் கூட அடங்குற மாதிரி தெரியுதுங்களே

  • “வாழ்வில் நாம் ஆர்வமுடன் சேகரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு கட்டத்துக்குமேல் வேண்டாதவையாகி விடுகின்றன. நிரந்தர விருப்பத்துக்குரியவை வெகு சொற்பம். அதனாலென்ன? அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.” 100% உண்மை .

  • Hi Para,

    Wish you all the best for new (rented)house move. Hope you will buy a new house soon, wish you for buying new house Chennai city iteself.

  • அட.. எப்படீங்க இப்படியெல்லாம்? நானும் போன வாரம் தான் புது வீடுக்கு மாறினேன். இதே கூத்து தான் போங்க. உள்ளூரிலயே இப்படீன்னா, வெளிநாட்டிலே என்ன கஷ்டம்ன்னு என் கதிய நெனச்சு பாருங்க.. இன்னொரு நிம்மதி பெருமூச்சூ தானா வரும்!

  • உங்களின் எழுத்துக்களின் ரசிகன், வீடு வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்.

  • “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவான கால வகையினானே ” சொல்லிட்டுப் போய்டாங்க எப்பவோ ? …அவ்ளோ ஈசியாவா இருக்கு வீடு மாறும் கஷ்டம் …

  • பாரா சார் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  • Dear Ragavan,

    I am a new visitor to your web site.
    Each and every part of your web site looks so fresh and beauty.
    All are well-analysed, well-articulated articles.

    Keep writing….

    Thanks

    Saravana Kumar N.
    Bangalore. 09880761450

  • அன்புள்ள பாரா,
    வீடு மாற்றுவது என்பது மிகவும் கஷ்டமான (துன்பமான) விஷயம். அதானால் பல பேர் மாற்றாமல் “சின்ன விட்டிலேயே ” இருக்கிறார்கள். வீடு சின்னதாக இருந்தாலும்.

    மாற்றி வந்தவுடன் கொடுமையான விஷயம் என்னவென்றால் , முக்கியமான சாமான்களை எதில் இருக்கும் என்று தேடுவது. .பல தடவை கண்டுபிடிக்க முடியாமல் nearest சரவணா பவனில் போய் சாப்பிடுவது.சுலபமாக கிடைப்பது.ஆட்டு கல்,அம்மி. மற்றும் காசியாத்திரை வாக்கிங் ஸ்டிக், விசிறி. புது வீட்டு அட்ரஸ் காட்டுவதற்காக, வீட்டு தலைவர் லாரியில் ஸ்டீரிங்கை இடித்துக்கொண்டு டிரைவர் பக்கத்தில் வர ேண்டும் .வீட்டு தலைவி அம்பசிடர் காரில் (நகை/பணம்/)தன் அம்மா
    குழந்தைகளுடன் போய் விடுவார்.அங்கு எதிர் வீட்டில் டிவி பார்த்துகொண்டிருப்பார்.வீட்டு தலைவர் வரும் வரையில் .

    என்னை தெரிகிறதா? நான் கே.ரவிசங்கர் .நீங்கள் கல்கியில் இருந்தபோது “வைஜயந்தி அலைஸ் லட்டு முழுங்கி ” என்ற கதை எழுதினேன் .நாம் இருவரும் டீக்கடையில் (கல்கி ஆபீஸ் அருகில் ) நெறைய விஷயங்களை பேசிஇருக்கிறோம். (அவனா ………… நீ ……..)

    இப்போது என்ன செய்கிறேன் .raviaditya.blogspot.com என்ற வலைபூ ஆரம்பித்துள்ளேன். ரொம்ப வெயரிசொடிபோய் (Udit Narayan tamil?) ஸ்பாம் மெயில் தொல்லை தாங்காமல் ” ஸ்பாம் மெயில்'” “டீச்சர் காதல்” கவிதைகளை எழுதி , படிக்க வாங்க, என்று எல்லா வலை பூவிலும் நோட்டீஸ் சொருகிக்கொண்டிருக்கிறேன்.. கருத்து சொல்லலாம்

  • வீடு மாறுவதில் உள்ள இன்னொரு சிரமம் இரும்பு,மரம் என்றில்லாமல சாமான்கள்் சுமாராக அடிபடுவதுதான்.ஒரு வழியாக செட்டில் ஆவதற்க்கே மாதக்கனக்கில் ஆகிவிடும். பற்றாக்குறைக்கு வீட்டம்மாவின் நச்சுக்களையும் சமாளித்தாக வேண்டும்.
    ஒரு புதிய அனுபவம்தான்..விரும்பினாலும்..(அ)விரும்பாவிட்டாலும்.

  • பாரா அவர்களுக்கு.
    அலுவலகத்தில் நண்பி ஒருவர் பரிந்துரைத்ததால் கிடைத்த நன் முத்து உங்கள் பக்கம். நான் பிறந்து வளர்ந்த இடம் குரோம்பேட்டை, சில வருடங்களுக்கு முன்பு (10 வருடம் தான்) வாங்கிய வீடு ஒரு சிறிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அதுவும் நீங்கள் குடியேறியிருக்கின்ற இடத்திற்கு மிக மிக அருகில், யுனைட்டட் இந்தியா காலனியில். இந்த இரண்டு விஷயங்களைத்தாண்டி உங்களின் எளிய நடை மிக நன்றாக இருக்கிறது.

    உங்கள் மற்ற பதிவுகளையும் படித்து விட்டு முடிந்தவரை பின்னூட்டமிடுகிறேன்.

    அன்புடன்,
    முரளி.

  • //
    குவிந்த பொருள்களின் எதிரே உட்கார்ந்து சற்றே யோசித்தால் ஓர் உண்மை தெரிகிறது. வாழ்வில் நாம் ஆர்வமுடன் சேகரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு கட்டத்துக்குமேல் வேண்டாதவையாகி விடுகின்றன. நிரந்தர விருப்பத்துக்குரியவை வெகு சொற்பம். அதனாலென்ன? அந்தந்தக் கணங்களிலும் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.
    //
    நிதர்சனமான வரிகள்.. மிகவும் ரசித்துப் படித்தேன்..

  • எனக்குத் தெரிந்த வரையில், குடியிருக்கும் வீட்டுக்கு வெள்ளையடிப்பதும், வீடு மாறுவதும் இமாலயப் பணிகள்.
    அதிலும், ஆள் துணை அதிகமில்லாத வெளிநாட்டில் வீடு மாறுவது இருக்கிறதே.. அடேயப்பா. அனுபவித்தவரே அறிவார்.
    பிரம்மச்சாரியாக இருந்தபோது, இரண்டு பெட்டியும், வாளியும்
    படுக்கையுமாக ஒரு டெக்சியில் மாறியவன், திருமணமாகி, ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், என்னிடம் இருந்த பொருள்களின் அளவைப் பார்த்து நானும் நண்பர்களும் மலைத்துத்தான் போவோம். (அதில் பெரும்பகுதி புத்தகங்கள்)
    உதவிக்கு வந்த நண்பர், “இம்புட்டுச் சாமானையும் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க?” என்று கேட்டார். எல்லாவற்றையும் சாமர்த்தியமாக அலமாரிக்குள் அடுக்கி விடுவேன். எவ்வளவுதான் குறிப்பெடுத்து,அட்டைப் பெட்டியில் எழுதி அடையாளம் இட்டாலும், சில பொருள்கள் காணாமற் போவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. எல்லாப் பெட்டிகளும் வீட்டுக்குத்தானே வருகின்றன. எங்கே போகுமோ ?
    அதிகம் பயன்படாத பொருள்களை அவ்வப்போது வெளியேற்றினாலும், புத்தகங்களைப் பொறுத்த அளவில் மட்டும் அது சாத்தியப்பட மாட்டேனென்கிறது. எல்லாமே என் செல்லங்கள். எப்படி அவற்றைப் பிரிவேன் நான் ?
    ( கத்தி முனையில் மிரட்டாத குறையாய் என் கையில் திணிக்கப்பட்ட சில கவிதைத் தொகுப்புகளும், சிறுகதைப் புத்தகங்களும் இதில் சேர்த்தியில்லை)
    புது வீட்டில், மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை அமைய
    பிரார்த்தனைகள்.
    இன்னும் நிறைய எழுதுங்கள் எங்களுக்காக.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!