எனக்குத் தெரியும். நான் ஒரு புத்தகத் திருடன் கையில் அகப்பட்டிருந்தேன். நான் ஒரு பட்டத்துக் குதிரை என்பதையோ என்மீது அலெக்சாண்டர் அமர்ந்திருக்கிறான் என்பதையோ திருடன் பொருட்படுத்தவில்லை. அவன் கண்காட்சி முழுவதும் என்னைத் தேடித்தான் சுற்றி அலைந்திருகிறான். இது எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஏனெனில், ஓர் அரங்கின் மேல் அடுக்குப் பிரபல புத்தகக் குவியல்களையெல்லாம் விட்டுவிட்டு, மண்டியிட்டுக் கீழே குனிந்து அவன் எதையோ தேடிக்கொண்டிருந்தான். உண்மையில் அவனது தேடல் அந்த அரங்கில் இருந்த பலருக்கு இடைஞ்சலாக இருந்தது. யாரும் முன்னும் பின்னும் நகர முடியாதபடிக்கு அவன் தனது முதுகை ஒரு தடுப்புக் கட்டை போலக் குறுக்கே போட்டிருந்தான். அப்படி அவன் எதைத்தான் அவ்வளவு நேரமாகத் தேடுகிறான் என்று எனக்கே மிகுந்த ஆர்வமாக இருந்தது. மேசைக்கு அடியில் குவிக்கப்பட்டிருந்த விற்காத பழைய புத்தகங்களின் இடையே என்னைக் கண்டெடுத்த கணத்தில் அவனது தேடல் நிறைவடைந்துவிட்டது. ‘ஆ, கிடைத்துவிட்டது!’ என்று உற்சாக மிகுதியில் அவன் துள்ளி எழுந்தபோது, கவனிக்காமல் இரும்பு அலமாரியின் கீழ்த்தட்டில் மோதிக்கொண்டான். அவனுக்கு வலித்திருக்க வேண்டும். சிறிது முகம் சுளித்து, நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டாலும் ஒரு பட்டத்துக் குதிரையைக் கைப்பற்றிவிட்ட மகிழ்ச்சியை அவன் முகத்தில் கண்டேன்.
அவன் என்னை முகர்ந்து பார்த்தான். பிறகு வாளிப்பான என் பின்புறத்தைத் தனது இடக்கரத்தால் தடவிக் கொடுத்தான். அலெக்சாண்டர் எப்போதும் என்னை இடக்கரத்தால்தான் தடவுவான். வாளேந்தும் வீரன் என்றாலும் அவனது கரம் மென்மையானதாக இருக்கும். ஆனால் இந்த குதிரைத் திருடனின் கை சொரசொரவென்றிருந்தது. இவனுக்கு ஏதோ சரும வியாதி இருக்க வேண்டும். உள்ளங் கையில் ஏராளமாகத் தோல் உரிந்திருந்தது. தவிரவும் திருட்டுத்தனம் அளித்த பதற்றத்தில் அந்தத் தோல் உரிந்த கரத்தில் வியர்க்கவும் செய்தது. இருப்பினும் அவனது வாழ்நாள் தேடல் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. அவன் ஒரு பட்டத்து குதிரையைக் கைப்பற்றியிருந்தான்.
உடனடியாக அவன் அந்த அரங்கத்தைவிட்டு வெளியே சென்றுவிடவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று என்னைப் புரட்டிக்கொண்டிருந்தான். இரண்டாயிரத்து இருநூற்று எண்பதாண்டுகள் புராதனமான என் தேகத்தைச் சிறிது உலுக்கினேன். என் பிடறியின் ஓரிழை அவன் நாசிக்குள் சென்று, கணப் பொழுதில் மூளை நரம்புகளைத் தாக்கியது. அந்த நெடியில் அவன் சில தும்மல்கள் போட்டான். மூக்கைத் தேய்த்துவிட்டுக் கொண்டான்.
இப்போது அந்த அரங்கத்துக்கு ஓர் அரசியல்வாதி தனது பரிவாரங்களுடன் வந்தார். உடனே கடைச் சிப்பந்திகள் பரபரப்பானார்கள். ஓடிச் சென்று அவரை வரவேற்று, புத்தகங்களைக் காட்டத் தொடங்கினார்கள். அரசியல்வாதியை அந்த அரங்கத்தில் கண்டதும் ஆங்காங்கே திரிந்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் குறிப்பிட்ட அரங்கத்தினுள் நுழைந்து சுற்றி வளைத்துப் படமெடுக்கத் தொடங்கினார்கள்.
இதுதான் தருணம். திருடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது இத்தகையதொரு தருணத்தைத்தான். அவன் எனது உரிமையாளனைப் போன்ற பாவனையில் ஏந்திக்கொண்டு அரங்கினை விட்டு வெளியே வந்தான். யாருமே அவனைக் கவனிக்கவில்லை. நான் அலெக்சாண்டரிடம் சொன்னேன், ‘என்னை ஒருவன் களவாடிச் செல்கிறான். நீ ஏன் வாளை உருவாமல் இருக்கிறாய்?’
அலெக்சாண்டர் வாளை உருவினான். குதிரையைக் கொன்றுவிட்டுத் திருடனுடன் லாயத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.