மாடியில் ஓர் எழுத்தாளர் குடியிருக்கிறார். அவர் வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்த அவரது மனைவியின் துப்பட்டா, காற்றில் அடித்து வந்து எங்கள் பால்கனியில் விழப்போக, அதை எடுத்துச் செல்வதற்காக வந்தார். வந்துவிட்டதால் நலம் விசாரித்துவிட்டு, ‘இப்ப என்ன சார் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு பேய்க்கதை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உடனே எனக்கு சுவாரசியமாகிவிட்டது.
‘ஆண் பேயா? பெண் பேயா சார்?’
‘ஒரு ஆண் எழுத்தாளர் எழுதும் கதைகளில் ஆண் பேய் வரவே வராது. பி.டி. சாமியில் ஆரம்பித்து ஓரான் பாமுக் வரை அப்படித்தான்’ என்று அவர் சொன்னார்.
‘சார், எனக்கு ஆண் பேய்கள் உலவும் பெண் எழுத்தாளர் கதைகளையாவது சிபாரிசு செய்யுங்கள்’ என்றேன்.
‘ஐயோ அது சிரமம் ஆயிற்றே?’ என்றவர், ‘பெண் எழுத்தாளர்களும் ஆண் பேய்களைப் பெற்று வளர்ப்பதில்லை’ என்று சொன்னார்.
‘அப்படியானால் ஆண் பேய் இனமே அழிந்து போய்விடுமே சார்?’ என்று மிகவும் வருந்தினேன்.
‘துயரம்தான். ஆண் பேய்களின் இனம் தழைக்க விரும்பும் நீங்கள் ஏன் கதை எழுத ஆரம்பிக்கக்கூடாது?’ என்று எழுத்தாளர் கேட்டார்.
‘ஏன், ஒரு அபார்ட்மெண்ட்ல ஒரு வெட்டி ஆபீசர் இருக்கறது பத்தாதா? என்னாங்க, மாவு தீந்துடுச்சி. போய் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வாங்க’ என்று என் மனைவி குரல் கொடுத்தாள்.
‘இப்படித்தான் சார் ஆண் பேய்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன’ என்று சொல்லிவிட்டு அவர் துப்பட்டாவுடன் கிளம்பிச் சென்றார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு காலிங் பெல் அடித்தது. திறந்தால் எழுத்தாளர் நின்றுகொண்டிருந்தார்.
‘என் ஒய்ஃப் துப்பட்டா உங்க வீட்டு பால்கனில விழுந்திடுச்சி. எடுத்துட்டுப் போக வந்தேன்’ என்று சொன்னார்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.