கதை

துல்லியங்களை வேட்டையாடுதல் (கதை)

ஆகச் சிரமமான கலை என்பது பாத்திரம் துலக்குவதாகத்தான் இருக்க வேண்டும் என்று பாரா நினைத்தான். தனது ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு பிசிறு இருந்துவிடுவது அவனை மிகவும் உறுத்தியது. காப்பி தம்ளர், டபராக்கள், குக்கர் போன்றவற்றைத துலக்குவது, கலையிலேயே சேராது. உண்மையான சவால் எப்போதும் வாணலியிலும் காப்பி மேக்கரிலும் உள்ளது.

அரையங்குலமாவது காந்தவிடாமல் யாருக்கும் வாணலியைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தவிர, எதைச் செய்தாலும் எண்ணெயே வறுபடும் எதற்கும் அடிப்படையாக இருப்பதால் பிசுக்கு தவிர்க்க முடியாது. கரகரவென நடுவில் தேய்த்துக் கழுவிவிடலாம். ஆனால் கைப்பிடி இடுக்குகளுக்குள் பதுங்கியிருக்கும் உணவுத் துகள்களையும் எண்ணெய்ப் பிசுக்கையும் எடுப்பது சிரமம். அதே போலத்தான் காப்பி மேக்கரின் வடிகட்டி பாகம். நன்கு கழுவி காய வைத்துவிட்டு வெளிச்சத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் ஏதோ ஒரு சிறு துவாரத்துக்குள் ஒரே ஒரு காப்பித் தூள் அமர்ந்திருக்கும். உலகில் அழிக்கவே முடியாத கரப்பான்பூச்சி இனத்துக்கு அது சவால் விடுவது போல இருக்கும்.

அவன் ஒவ்வொரு முறையும் நுணுக்கமாகவும் தீவிரமாகவும் தேய்த்துக் கழுவுவான். சரியாகக் கழுவியிருக்கிறோமா என்று முன்னும் பின்னும் உருட்டிப் பார்த்துவிட்டுத்தான் கவிழ்த்துவிட்டுப் போவான். எண்ணி இரண்டு நிமிடங்களுக்குள் அவனது மனைவி அழைத்து ஏதேனும் ஓர் இருட்குகையைச் சுட்டிக்காட்டுவாள். ‘பாரு, சரியாவே பண்ணல.’

இதனிடையில் பாராவின் சட்டச் சகோதரி ஒரு டிஷ் வாஷ் இயந்திரம் வாங்கியிருக்கிறாள் என்ற தகவல் வந்தது. ஒரு தொட்டியில் துலக்க வேண்டிய பாத்திரங்களைப் போட்டுவிட்டு, இன்னொரு இடத்தில் திரவ சோப்பை நிரப்பிவிட்டு ஸ்விட்சைப் போட்டால் அது கடமுடாவென்று உருட்டிப் புரட்டித் தேய்த்துக் கொடுத்துவிடும் என்று சொன்னார்கள்.

அதைக் காண்பதற்காகவே பாரா ஒருநாள் அவள் வீட்டுக்குப் போனான். சமையலறையின் கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, ஓய்வெடுக்கும் ஒரு கிழட்டு எருமையைப் போல இருந்தது அது. பாராவின் சட்டச் சகோதரி துலக்க வேண்டிய பாத்திரங்களை அதில் போட்டு, சோப்புக் கரைசலை ஊற்றி ஸ்விட்சைப் போட்டு டெமோ காட்டத் தொடங்கினாள்.

சத்தம் சற்று நாராசமாக இருந்தது. ஆனால் உள்ளே வேலை நடக்கிறது. அவன் ஆர்வமுடன் காத்திருந்தான். உரிய நேரம் முடிந்ததும் ஸ்விட்சை அணைத்துவிட்டு டிஷ் வாஷ் இயந்திரத்தை சட்டச் சகோதரி திறந்தாள். பாரா பாத்திரங்களை எடுத்து ஆராய்ந்தான். பரவாயில்லை. அந்த இயந்திரமும் அவனைப் போலவே கலையுள்ளத்துடன்தான் வேலை பார்த்திருக்கிறது.

அவன் அவசரமாக வாணலியை எடுத்து, கைப்பிடி ஓர இடுக்குகளை ஆராய்ந்தான். எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. எண்ணெய்ப் பிசுக்கும் மிச்சம் இல்லை. ஓர் இயந்திரத்தால் தான் தோற்கடிக்கப்படுவது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

வீட்டுக்கு வந்து மனைவியிடம், ‘நாமும் ஒரு டிஷ் வாஷர் வாங்குவோமா?’ என்று கேட்டான். சிறிதும் யோசிக்காமல் அவள் ‘அதெல்லாம் வேணாம்’ என்றாள்.

‘பாரு, சரியாவே பண்ணல’ என்று எடுத்துக் காட்ட வழியில்லாத துல்லியங்களைக் கலை விமரிசகர்கள் ஏற்பதில்லை.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி