பச்சை வார் வைத்த ஒரு செங்கல் நிறப் பை (கதை)

இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பிருந்தே அப்பா ‘பை.. பை..’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லிக்கொண்டு விடைபெறும் அளவுக்கு காலமறிந்தவர் என்று நாங்கள் கருதவில்லை. அதனால் நினைவு தவறி ஏதோ உளறுகிறார் என்று நினைத்தோம். அம்மா, ‘அந்தப் பையைக் கொண்டு வந்து அவர் கையிலே குடுடா’ என்று சொன்னாள். அப்போதுதான் அவர் தனது கைப்பையைக் கேட்டிருக்கிறார் என்று புரிந்தது.

அப்பாவின் கைப்பைக்குக் குறைந்தது முப்பது வயது இருக்கும். எனக்கு நினைவு தெரிந்து அவர் பையை மாற்றியதில்லை. அது ஒரு புராதனமான செங்கல் நிற ரெக்ஸின் பை. ஓரங்களில் கையால் தையல் போடப்பட்டிருக்கும். செருப்புத் தைக்கும் தொழிலாளிகளிடம் பல முறை அதன் கைப்பிடி வாரை மட்டும் அவர் மாற்றியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அது செங்கல் நிறத்துக்குப் பொருந்தாத வேறேதாவது நிறத்தில் அமையும். அதை அவர் பொருட்படுத்த மாட்டார். ஒன்றிரண்டு முறை ஜிப்பை மாற்றியிருக்கிறார். ஆனால் அழுக்கேறி, பார்க்க விகாரமான தோற்றத்தை அடைந்துவிட்டிருந்த அந்தப் பையை அவர் மாற்ற நினைத்ததில்லை.

அந்தப் பைக்கென்று குறிப்பிடத்தக்க சரித்திரம் எதுவும் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்று அம்மா சொன்னாள். ஆனால் நெடுங்காலமாக வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் வேலைக்குப் போய்க்கொண்டிருந்த நாள்களில் இருந்து. ஓய்வு பெற்றதும் பென்ஷன் அலுவலகத்துக்கு அடிக்கடி போவார். அப்போதும் அதே பைதான். பிறகு ஏதாவது திருமணம், இதர நிகழ்ச்சிகள் என்றாலும் அவர் கையில் அந்தப் பை இருக்கும். அதற்குள் இருந்துதான் மொய்க்கவரை எடுத்துக் கொடுப்பார். (நூற்றியொரு ரூபாய்க்கு மேல் பொதுவாக அவர் மொய்க்கவர்களில் வைக்க மாட்டார்.) முதல் முறை நெஞ்சு வலி வந்து மருத்துவமனைக்குச் சென்றபோதுகூடத் தன் கைப்பையை மறக்காமல் எடுத்துக்கொண்டுதான் ஆம்புலன்ஸில் ஏறிப் படுத்தார். பிழைத்து வீடு திரும்பிய பின்பு தனது இதயக் கனியைக் காக்கும் மருந்து மாத்திரைகள், டாக்டர் ப்ரிஸ்கிருப்ஷன்கள், ரிப்போர்ட்டுகள் போன்றவற்றை அந்தப் பைக்குள் வைத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். எனவே உயிர் பிரியும் நேரத்தில் அவருக்கு மிகவும் பிரியமான அவரது கைப்பையை அருகே வைப்பது நியாயமானது என்று நினைத்தோம்.

காரியங்கள் முடிந்து உறவினர்கள் போனபின்பு அப்பாவின் கைப்பையை எடுத்தேன். உயில் போல ஏதேனும் ஒன்றோ, அல்லது இதுவரை எங்களிடம் தெரியப்படுத்தாத அவரது சேமிப்பு குறித்த விவரங்களோ அதில் இருக்கலாம் என்று தோன்றியது. இல்லாவிட்டால் மரணப் படுக்கையிலும் கவனமாக அதை நினைவுகூர்ந்து கேட்டிருக்க மாட்டார்.

உள்ளே இருந்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன். மளிகைக்கடை பில்கள் இருந்தன. மருந்துச் சீட்டுகள், மாத்திரைகள் இருந்தன. நாற்பத்தைந்து ரூபாயும் பதினெட்டு ரூபாய்க்குச் சில்லறைக் காசுகளும் இருந்தன. ஏதோ கோயிலில் கொடுத்த குங்குமத்தை கேலண்டர் தாளில் மடித்து வைத்திருந்தார். பஸ் டிக்கெட்டுகள் சில இருந்தன. இரண்டு அஜந்தா பாக்குப் பொட்டலங்களும் ஒரு விக்ஸ் இன்ஹேலரும் இருந்தன. சில பற்கள் உடைந்த ஒரு சீப்பு இருந்தது. பிறகு முப்பத்தைந்து ஆண்டுகளில் அவர் கொட்டிக் கவிழ்த்தது போக மிச்சமிருந்த தூசுத் துகள்கள். சிறிதளவு வியக்கும்படியாகக்கூட அதில் ஒன்றுமில்லாதது ஏமாற்றமாக இருந்தது.

அனைத்தையும் அள்ளிக் கொண்டுபோய்க் கொட்டிவிட்டு வந்த பின்பு, அந்தப் பையை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சில மாதங்களுக்கு முன்புதான் ஜிப் மாற்றியிருந்தார். இப்போதைய அதன் வார் பச்சை நிறத்தில் இருந்தது. அதைத் தைத்த நூலின் ஒரு முனை பிரிந்து நீட்டிக்கொண்டிருந்தது.

வெளியே எறிந்துவிடச் சிறிது தயக்கமாக இருந்தது. பரணில் தூக்கிப் போட்டேன். அப்பா அதற்குள் சென்று படுத்துக்கொண்டார்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter