ரயில் வண்டிகளின் மகாராஜா

வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம். எப்படி விட்டேன், எப்படி விட்டேன் என்று இப்போது உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் பல காரணங்கள் தோன்றுகின்றன. எல்லாமே அந்தந்தத் தருணங்களுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவுமே இருந்திருக்கின்றன.

அடக்கடவுளே, சரியான அபத்தம் என்று ஒன்று உண்டா!

உண்டுதான் போலிருக்கிறது. சென்ற மாதம் ஒருநாள் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பெரிய ஹால் நிறையக் கட்டில்கள், குழந்தைகள், கவலை கவிந்த பெற்றோர்கள், அழுகுரல்கள், விளையாட்டுச் சாமான்களின் வினோத சத்தங்கள், ஃப்ளாஸ்க் கழுவும் வினாடிகளுக்குள்ளாக என்னவாவது சண்டை உற்பத்தி செய்துவிடும் பெண்கள், அதட்டும் நர்ஸ்கள், ஆரஞ்சுப் பழங்களுடன் ஆறுதல் சொல்ல வரும் சொந்தபந்தங்கள்.

மூன்று தினங்கள். ‘இந்த டாக்டர், நர்ஸ் எல்லாம் ரொம்ப கெட்டவங்கப்பா’ என்று அது நிமிடத்துக்கொரு தரம் புகார் சொல்லிக்கொண்டிருந்தது. புறங்கையில் ஊசி ஏற்றி சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கையில் லேசாக வீக்கம் கண்டிருந்தது. ஊசி குத்தும் டாக்டர்கள் அனைவரும் கெட்டவர்கள். அதுவும் கை வீங்குமளவுக்கு மாட்டு ஊசி குத்துகிறவர் ராட்சசன் அல்லாமல் வேறு யார்?

‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா கண்ணு. சரியாயிடும். டாக்டர் உனக்கு உடம்பு சரியாகணும்னுதானே செய்யறார்?’ என்று ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தபடிக்கு, கைவசம் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

தொடங்கிய கணத்திலிருந்து சராசரியாக மூன்று நிமிடங்களுக்கொரு முறை நான் சிரித்துக்கொண்டிருந்தது என் குழந்தைக்கே வினோதமாகத்தான் பட்டிருக்கவேண்டும். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பார்த்த பார்வை அத்தனை கௌரவமாக இல்லை. யாரும் அப்படி மனம் விட்டுச் சிரிக்கக்கூடிய இடம் இல்லை அது. விடிந்தால் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நாம் வீட்டில் இருக்கப் போவதில்லை என்கிற வருத்தம் எல்லா பெற்றோருக்கும் இருந்தது. எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடிக்க முடியாமல் போவது பற்றிய கவலையில்தான் இருந்தார்கள்.

எனக்கும் கவலைதான். குழந்தையைச் சாக்கிட்டு நானும் நாலு கம்பி மத்தாப்பு கொளுத்தலாம். புஸ்வாணம் விடலாம். பாம்பு மாத்திரை கொளுத்துவது எனக்கு ஏக ஆனந்தம் தரும் விஷயமாகும். அந்தப் புகையின் நெடி உடனடியாகத் தும்மல் வரவழைக்கும். ஆனாலும் இஷ்டம். வெடி ஒன்றுதான் ஆகாது. காதுக்குக் கேடு.

இப்படியா ஒரு தகப்பன் இருப்பான்? கழட்டி, சுருட்டி எறிந்த லுங்கி மாதிரி கட்டிலில் குழந்தை கிடக்கிறது. உள்ளுக்குள் என்ன செய்கிறதோ, எத்தனை வலிக்கிறதோ, என்ன வேதனையோ? இப்படிச் சிரித்துக்கொண்டிருக்கிறானே கட்டையில் போகிறவன்?

புரியாமல் இல்லை. ஆனாலும் என்னைமீறி வரும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. புத்தகத்தை மூடி வைக்கவும் இயலவில்லை. முத்துலிங்கத்தை வாசிக்காமல் விட்ட அபத்தத் தருணங்களைத் தாண்டி, இப்போது வாசிக்கத் தேர்ந்தெடுத்த தருணமும் மாபெரும் அபத்தமாகவே அமைந்துவிட்டது.

நல்லது. வேறு வழியில்லை. நான் ஒரு நல்ல தகப்பன்தான் நண்பர்களே. அவ்வண்ணமே ஒரு சிறந்த வாசகனும் கூட. இரண்டையும் உங்களுக்கு நிரூபித்துக்கொண்டிருப்பது இப்போதைக்குச் சிரமம். என்னைச் சற்று நிம்மதியாக வாசிக்க விடுவீர்களா? நன்றி.

மருத்துவமனைச் சூழலில் என்னால் விட்டுவிட்டுத்தான் வாசிக்க முடிந்தது. சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் என்னால் படித்து முடித்துவிடக்கூடிய அளவு பக்கங்கள்தான். ஆனாலும் மூன்று நாள்களாயின. இந்தத் தினங்களில் மருத்துவமனையில் என்னைக் கொலைகாரப் படுபாவியாகப் பார்த்த சக பெற்றோர்களுக்கு எனது நடவடிக்கைகள் ஓரளவு பழகிவிட்டிருந்தன. ஒரு பெண்மணி, ‘யார் புஸ்தகம் சார்? கிரேசி மோகனா?’ என்று வந்து கேட்டுவிட்டுச் சென்றார்.

அடடே, இப்படியொரு அபாயம் இருக்கிறதா? மறந்தே போனேன். இன்னும் பாக்கியம் ராமசாமி, கடுகு, எஸ்.வி. சேகர், ஜே.எஸ். ராகவன் என்று யார் யார் பெயர்கள் வந்து மோதப்போகிறதோ என்று அச்சம்கொண்டு, என்னை கவனித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் வலியச் சென்று, ‘இது கதைப் புத்தகமல்ல. கட்டுரைத் தொகுப்பு. அங்கே இப்ப என்ன நேரம் என்று தலைப்பு. எழுதியவர் முத்துலிங்கம். கனடாவில் இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

‘அந்த ஊர் காமெடி ரைட்டரா?’ என்று ஒருவர் கேட்டார். மீண்டும் அபத்தம். முத்துலிங்கம் என்னை மன்னிக்கவே போவதில்லை.

*

பத்து, பன்னிரண்டு வருடங்கள் இருக்குமா? பதினைந்தேகூட இருக்கலாம். அ. முத்துலிங்கம் முதல்முறை சென்னை வந்திருந்த சமயம் ஓர் உணவு விடுதியின் புல்வெளியில் அவருக்கொரு வரவேற்பு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. எஸ்.பொவும் இந்திரா பார்த்தசாரதியும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

எனக்கு இ.பாவைத் தெரியும். எஸ்.பொவைத் தெரியும். முத்துலிங்கத்தைத் தெரியாது. மணிமேகலைப் பிரசுரத்தில் அவரது புத்தகம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். ஆகவே அன்றைய குலவழக்கப்படி அவரைப் பற்றி அறிந்துகொள்ளவோ, படித்துப் பார்க்கவோ ஆர்வம் கொண்டிருக்கவில்லை. நான் மதிக்கும் இரு பெரும் எழுத்தாளர்கள் என்னை அழைத்தபடியால் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நிகழ்ச்சி முடிந்து, நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதோடு முத்துலிங்கத்தை மறந்தும் போனேன்.

மணிமேகலை பிரசுரத்தில் அப்போது புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரது புத்தகங்களை அடுத்தடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளரே முதலீடு செய்து புத்தகம் வெளியிடும் திட்டம் அறிமுகமாகியிருந்த காலகட்டம். வாசிக்கக் கிடைத்த பெரும்பாலான அந்த ரக நூல்கள் என்னை மிகவும் இம்சித்திருந்தபடியால் மேற்கொண்டு விஷப்பரீட்சைகள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன்.

முத்துலிங்கம் விஷயத்தில் நான் மேற்கொண்ட முதல் அபத்த முடிவு அது.

பிறகு ஆர். வெங்கடேஷ் ஓரிருமுறை அவரைப் பற்றித் தற்செயலாகப் பேசினான். படித்துப்பார், தவறவிட்டால் பின்னால் வருத்தப்படுவாய் என்று சொன்னான். அலட்சியமாக இருந்துவிட்டேன். காரணம், அவன் சுட்டிக்காட்டிய வேறு சில எழுத்தாளர்கள் எனக்கு முன்னதாக அத்தனை பிடிக்காது போனதுதான்.

குமுதம் தீராநதி தொடங்கப்பட்டபோது அதில் மதிப்புரை எழுதவென முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ புத்தகம் வந்திருந்தது. தளவாய் சுந்தரம் அதை என்னிடம் கொடுத்து, எழுதித்தருகிறீர்களா என்று கேட்டார்.

என்னடா இந்த மனுஷன் அடிக்கடி நம் வழியில் குறுக்கிடுகிறாரே, சரி படித்துத்தான் பார்ப்போம் என்று வாங்கிக்கொண்டேன். ஆனால் படிக்கவில்லை. படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஜங்ஷன் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் என்னை ஆக்கிரமித்திருந்தன. உதவிக்கு யாரும் கிடையாது. நானே ஆசிரியர். நானே உதவி ஆசிரியர். நானே ப்ரூஃப் ரீடர். நானே வாட்ச்மேன். நானே ப்யூன்.

நான் மட்டுமே வாசகராகவும் இருந்துவிடக் கூடாது என்பதனால் என் முழுச் சக்தியையும் செலவிட்டு அந்தப் பத்திரிகைக்காக மிகக் கடுமையாக உழைக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு நாளில் இருபது மணிநேரம் உழைத்தேன். என் தனிப்பட்ட வாசிப்பு, எழுத்து எல்லாம் தாற்காலிகமாக விடைபெற்றிருந்தன. வீடே பகுதிநேரமாகி, அலுவலகம் முழுநேரம் என்னைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. எனவே முத்துலிங்கத்தின் புத்தகத்தை வாங்கி வைத்ததோடு மறந்து போனேன்.

அந்தப் புத்தகத்தைத்தான் இப்போது மருத்துவமனையில் வைத்துப் படித்து முடித்தேன்.

ஆனால் இடையில் அவ்வப்போது அவருடைய சில சிறுகதைகளையும் ஒன்றிரண்டு கட்டுரைகளையும் வாசித்திருந்தேன். அவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கட்டுரை, ஜெயமோகன் எழுதிய ஒரு பெரிய  கட்டுரை – இம்மாதிரி வேறு சில குறிப்புகளையும் வாசித்திருந்தேன். நண்பர் தமிழினி வசந்தகுமாருடன் ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்தபோதும் ஒரு மிக முக்கியமான எழுத்தாளரை நாம் தொடர்ந்து தவற விட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டுமென்று செய்வதில்லை. என்ன காரணத்தினாலோ இவ்வாறு நேர்ந்துவிடுகிறது. பதினைந்து வயதில் எனக்கு தி. ஜானகிராமன் கிடைத்துவிட்டார். ஏனோ முப்பதுக்குப் பிறகுதான் புதுமைப்பித்தன் அகப்பட்டார். கல்கியை முழுக்கப் படிக்கவேண்டும் என்று இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். அமையவில்லை. ஒரே நாளில் பிச்சமூர்த்தியின் முழுப் படைப்புகளைப் படித்துத் தீர்க்க முடிந்த எனக்கு, புளிய மரத்தின் கதையைப் படித்து முடிக்க ஆறு வருடங்கள் பிடித்தன. ஆனால் ஜேஜே ஒரே நாள். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் இரண்டு நாள். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை சுமார் பத்து வருஷங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் புரிந்த விஷயங்கள் எல்லாம், முடித்த வயதில் முற்றிலும் வேறாக அர்த்தம் கொடுத்த அனுபவம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

இன்றுவரை எனக்கு இதற்கான காரணம் தெரிந்ததில்லை. எழுத்தாளர்கள் மீதோ, புத்தகங்களின்மீதோ, எனது ஆர்வத்தின்மீதோ பழுதில்லை என்று உறுதியாகச் சொல்லமுடியும். ஆனாலும் சமயத்தில் இப்படி நேர்ந்துவிடுகிறது. படிக்கலாம் என்று வாங்கிச் சேர்க்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பேற்படுத்துகிறது. அனைத்தையும் முடிக்காமல் இனி வாங்கவே கூடாது என்று ஒவ்வொரு ஜனவரியிலும் சபதம் செய்துகொள்வேன்.

சபதங்கள் என்பவை மீறுவதற்கு மட்டுமே. ஸ்டேஷன்களில் வந்து நிற்கும் ரயில் வண்டிகளின் பெட்டியைக் குறிபார்த்து  தபால் மூட்டைகள் வீசப்படுவதுபோல் எனக்கான புத்தகங்கள் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபடியேதான் இருக்கின்றன. சமயத்தில், பிரிக்கத்தான் தாமதமாகிவிடுகிறது.

*

முத்துலிங்கத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன். நான் எழுதித் தராத மதிப்புரைக்காக ஒரு புத்தகத்தை என்னிடம் இழந்த தளவாய் மனத்துக்குள் எத்தனை திட்டித் தீர்த்திருப்பாரோ தெரியவில்லை. முத்துலிங்கத்துடன் சேர்த்து அவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் நான் செய்த முதல் காரியம் தமிழினி வெளியிட்ட அவரது சிறுகதைகளின் முழுத்தொகுப்பைத் தேடிப்பிடித்து வாங்கியதுதான்.

தினம் கொஞ்சமாக ஒரு மாதத்தில் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது, தமிழில் யாருடனும் ஒப்பிட இயலாத அபூர்வமான தனித்துவம் பொருந்திய எழுத்து அவருடையது. திருவிழாவில் வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனின் மனோபாவத்துடன் வாழ்க்கையை அணுகி, தேர்வுத்தாள் திருத்தும் ஒரு கணக்கு வாத்தியாரின் கறார்த்தனத்துடன் சொற்களில் அதனைப் படம் பிடிக்கிறார். கட்டுரையானாலும் சரி, சிறுகதையானாலும் சரி. ஒரு வரி, ஒரு சொல் அநாவசியம் என்று நினைக்க முடிவதில்லை. ஓரிடத்திலும் குரல் உயர்த்தாத மிகப்பெரிய பக்குவம் முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பிலும் காணக்கிடைக்கிறது.

அவர் பேசவே பேசாத கதைகளிலும் சரி, அவர் மட்டுமே பேசும் கட்டுரைகளிலும் சரி. விவரிக்கப்படும் வாழ்க்கை அல்லது அதன் ஓர் அத்தியாயம் அதன் முழுப்பூரணத் தன்மையை வெகு இயல்பாக எய்திவிடுகின்றது. பாசாங்கில்லை, போலித்தனங்கள் இல்லை, தத்துவ தரிசனங்களை நோக்கிய தகிடுதத்தப் பயணங்கள் இல்லை. கடுமையான அனுபவங்களைத் தந்தாலும் வாழ்க்கை நேரடியானது. சரியாக உடைத்த தேங்காய் போன்றது. எனவே எழுத்தும் அவ்வண்ணமேதான் இருந்தாக வேண்டும். முத்துலிங்கத்தின் எழுத்தில் தொடர்புச் சிக்கல் என்ற ஒன்று எந்த இடத்திலும் இல்லை.

அப்புறம் அவரது நகைச்சுவை உணர்வு. பிறகொரு சமயம் தனியே விரிவாக இதுபற்றி எழுதுகிறேன். முத்துலிங்கத்தை வாசிப்பதற்கு முன்னால், தமிழின் ஆகச் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கொண்ட நாவல் என்று ஜேஜே சில குறிப்புகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். பல கட்டங்களில் அந்நாவலின் நகைச்சுவை அம்சம் தடம் பெயர்ந்து அங்கதமாகிவிடுகிறது என்றாலும் வாய்விட்டுச் சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை அந்தளவு வழங்கிய வேறொரு நாவலை நான் வாசித்ததில்லை. நாகூர் ரூமியின் குட்டியாப்பா இந்த வகையில் முக்கியமானது. ஆனால் அது நாவல் இல்லை.

அசோகமித்திரனும் சிரிக்க வைப்பார். ஆனால் மனத்துக்குள் மட்டும். என்ன பிரச்னை என்றால் சிரிக்கும் கணத்திலேயே நமக்குள் அச்சிரிப்பு உறைந்துவிடும் – அவரது எழுத்தில். மிகத் தீவிரமான விஷயத்தைச் சொல்ல வரும்போது நகைச்சுவையை அதற்கான வெளிப்பாட்டுக் கருவியாக அவர் பயன்படுத்துவார். எனவே, நாம் நகைச்சுவையில் மூழ்கிவிட்டால் விஷயத்தை விட்டுவிடவேண்டிய அபாயம் நேரிடும்.

முத்துலிங்கத்தின் நகைச்சுவையை உள்ளர்த்தங்கள் தேடாமல், நகைச்சுவைக்காகவே ரசிக்க முடிகிறது என்பது எனக்கு மிக முக்கியமான விஷயமாகப் படுகிறது. கார் ஓட்டக் கற்றுக்கொண்டது பற்றிய அவரது ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு ஒருவாரம் பைத்தியம் மாதிரி போகிற வருகிற வழியிலெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தேன். நானும் கூட ஒன்றிரண்டு முறை அந்த விபரீத முயற்சியில் இறங்கியிருக்கிறேன். எனக்குச் சற்று மனிதாபிமான உணர்வு அதிகம் என்பதால் தொடரவில்லை.

முத்துலிங்கத்தின் சிறுகதைகள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் தனித்தனியே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்னை மாதிரி அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டிருக்கக்கூடிய வாசகர்கள் யாராவது இருப்பார்களானால், அவர்களைத் தூண்டி விடுவதற்காகவே இந்த முன்சொல்.

*

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே நான் வசிக்கும் சென்னையில், கைக்கெட்டும் தொலைவில், மிக எளிதாக அறிமுகம் செய்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தும் முத்துலிங்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேனே என்று இப்போது ஏக்கமாக இருக்கிறது. எங்கோ வட துருவத்துக்குப் பக்கத்தில் இப்போது அவர் இருக்கிறார். கனடாவுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால், பத்மினி மாதிரி அவர் வீட்டுக்குப் போயோ, அல்லது அந்த லாட்விய எழுத்தாளர் மாதிரி ரெஸ்டரண்டில் வைத்தோ சந்தித்து அளவளாவலாம். மைக்கல் ஷுமாக்கரின் தோல்வியை அவரைப்போலவே என்னாலும் ஒப்புக்கொள்ள முடியாததைப் பகிர்ந்துகொள்ளலாம். ஷேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதும் தமிழ் நாடகக்காரர்களைப் பற்றிப் பேசிச் சிரிக்கலாம். சூடானில் அவர் ஒசாமா பின்லாடனையோ, முஹம்மத் அடஃபையோ ஏன் சந்திக்க முயற்சி செய்யவில்லை என்று கேட்கலாம்.

ஆனால் எப்போது போவேன்?

தெரியவில்லை. மேலும் சில சரியான அபத்தங்களுக்குப் பிறகு அப்படியும் ஒரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்?

Share

20 comments

  • சுவையான அனுபவமா எழுதியிருக்கீங்க 🙂 முன்னர் ஒரு பதிவில் நீங்கள் சொன்னதுதான் “என்ன பண்ண? அந்தந்த வினாடிகளில் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது” (அது எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் கூட) how true..

    எனக்கும் கூட கிட்டத்தட்ட இதேமாதிரியான ஒரு அனுபவம் உண்டு. தமக்கையின் பிரசவத்திற்காக மருத்துவமனை வாசம்.. நாள் முழுவதும் சும்மா அமர்ந்திருப்பதும் கதைப்பதும் எனக்கு ரொம்ப தூரம் என்பதால், என்றோ வாங்கியிருந்த The Hobbit படிக்க ஆரம்பித்தேன்.. அந்த ஒரு சில நாட்களில் hobbit தவிற வெறென்னென்ன நடந்தன என்பது என் நினைவில் இல்லை.. ஆரஞ்சுப்பழங்களுடன் வந்து சென்ற சொந்தபந்தங்களைக் கூட கவனிக்கவில்லை.. அப்படி ஒரு மாய உலகம் அது.. ஒரு வேளை ஓய்வாக இருக்கும் போது படித்திருந்தால் கூட இந்த fantacy தன்மை வந்திருக்குமா என்பது இப்போது சந்தேகமாய்ப்படுகிறது.. ஆனால், அந்த அபத்தமான சூழ்நிலை கூட என் வாசிப்பனுபவத்தை சுவாரஸ்யமாக்கிய ஒரு காரணி என்று இப்போது படுகிறது.. இந்த பதிவைப் படித்தனால், சின்னதா ஒரு கொசுவர்த்தி சுத்தியாச்சு.. 🙂 🙂

    //அனைத்தையும் முடிக்காமல் இனி வாங்கவே கூடாது என்று ஒவ்வொரு ஜனவரியிலும் சபதம் செய்துகொள்வேன்.//
    வாய்ப்பே இல்லை அதற்கு.. 😛
    (நான் இரு மாதங்களுக்கு ஒருமுறை.. )

  • நாளை ஒரு புத்தகக்கண்காட்சிக்குச் செல்கிறேன்.. நிச்சயம் முத்துலிங்கத்தைத் தேடிப்பாக்கணும்.. அறிமுகத்திற்கு நன்றி 🙂

  • பாரா அவர்களுக்கு,

    நீங்கள் வாசிக்கச் சொல்லி சிபாரிசு செய்துள்ள பல புத்தகங்களை நான் வாங்கிப் படித்துள்ளேன். உண்மையில் அனைத்துமே எனக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருக்கின்றன. இம்முறையும் முத்துலிங்கம் அவர்களுடைய புத்தகத்தைக் கட்டாயம் வாங்கிப் படிப்பேன். அவை எங்கே கிடைக்கின்றது என்பதைத் தெரியப்படுத்துவீர்களா? நன்றி.

  • Dear para, Excellent write up. it is really a pleasure reading an article about a great writer written by another great writer!
    By the way, I have started reading your serial in kumudam reporter. I request you not to condense anything for any reasons. Please do write in detail for heaven sake. There is no accurate and detailed book in Tamil about sri lankan issue.

  • Para,
    அமுத்துலிங்கத்தின் புத்தகங்களை உடனடியாக படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது உங்கள் கட்டுரை.
    Can you please provide the address where we can get his books.
    Please do provide such kind of introduction articles frequently.
    Indeed, I’ve been laughing heartily at times while reading some of your articles.

  • எப்படி மிஸ் செய்தீர்கள் ராகவன் சார், ஆனால் அதையும் அழகான காரணங்களோட அடுக்கிவிட்டீர்கள்.. (எழுத்தாளர் அல்லவா…தன்னையே விமர்சனம் செய்யவும் ஒரு தெளிவு வேண்டும்) அ.முத்துலிங்கம் தவிர்க்க முடியாத எழுத்தாளர், அதனால் தான் உங்களிடம் எப்படியோ வந்து சேர்ந்து விட்டார். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர். நல்ல நண்பர். ‘வியத்தலும் இலமே’ கட்டாயம் வாசியுங்கள். அதைவிட நீங்கள் வெகு நிச்சயமாக வாசிக்க வேண்டியது ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’ ஏன் இவ்வளவு strong recommendation என்றால் அவருக்கு இந்த புத்தகத்தில் நான் தான் coordinator. எனக்கு credit கொடுத்திருப்பார். உங்களுக்கு கொரியரில் அனுப்பிவைக்கிறேன். நம் எழுத்தாளர்கள் (சுஜாதா, எஸ்.ரா, ஜெமோ….மொத்தம் 20 அமுவையும் சேர்த்து) தங்களுக்கு பிடித்த, தங்களை மிகவும் பாதித்த படைப்பைப் பற்றி கட்டுரை எழுதியிருப்பார்கள். இன்னும் இரண்டு வருடம் கழித்து படிக்காமல் சீக்கிரம் படித்துவிடுங்கள். நான் கொரியரில் அனுப்புகிறேன் ;)))))

  • சதாசிவம், ராஜேஸ்வரி:

    முத்துலிங்கம் சிறுகதைகளின் முழுத்தொகுப்பினைத் தமிழினி வெளியிட்டிருக்கிறது. ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ அதே தமிழினியில் கிடைக்கும். மேலே உமா குறிப்பிட்டிருக்கும் இரண்டு புத்தகங்களையும் நான் வாசிக்கவில்லை. உமாவின் கூரியர் வந்ததும் உங்களுக்கு மேல் விவரம் சொல்கிறேன்! சமீபத்தில் அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஒலிப்புத்தக வடிவத்தையும் [audio books] ஆங்கில மொழியாக்க நூல் வடிவத்தையும் எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா வெளியிட்டிருக்கிறது. என்.எச்.எம். தளத்தில் இவை பற்றிய விவரத்தை நீங்கள் பெற இயலும்.

  • நண்பர் ஒருவர் சொல்லி தான் அ.முத்துலிங்கம் படித்தேன். நன்றாக எழுதி இருந்தார். அந்த ஒரு புத்தகத்தைத் தவிர மற்றவை படித்ததில்லை. இங்கு நீங்கள் சொல்லும் பொழுது அன்று படித்த பத்மினி பற்றிய கட்டுரையும், ஷுமாக்கர் பற்றிய கட்டுரையும் முழுதாக நினைவுக்கு வருவது அந்த எழுத்தின் வெற்றிதான். 🙂

    //ஃப்ளாஸ்க் கழுவும் வினாடிகளுக்குள்ளாக என்னவாவது சண்டை உற்பத்தி செய்துவிடும் பெண்கள், //

    ஆஹா! இவ ஸ்டைல் ஆணாதிக்கம் இங்கயும் வருதே! 🙂

  • அட்டகாசமான கட்டுரை. உடனே ஓடிச்சென்று வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எப்படி இப்படி எழுதுகிறீர்கள்?உங்களுக்கு மருத்துவமனையில் நடந்ததுபோலவே எனக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உடனே அது நினைவுக்கு வந்துவிட்டது. அனால் இப்படி ரசனையுடன் அதனை என்னால் விவரிக்க முடியாது! சமீபத்தில் படித்த மிக சிறந்த கட்டுரை இது. வாழ்த்துக்கள்.

  • அருமையான கட்டுரை பாரா, நன்றி!

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு நூல்களும் முழுமையாக மின்வடிவில் இங்கே கிடைக்கிறது, Pirated / Illegal வடிவம் அல்ல, அதிகாரப்பூர்வமாகவே ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள், நம்பி இறக்கலாம்:

    http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    உங்களுக்கு கம்ப்யூட்டரில் புத்தகம் படிக்கப் பிடிக்காது என்று தெரியும், இந்தத் தகவல் மற்றவர்களின் வசதிக்காக 🙂

    என்றும் அன்புடன்,
    என். சொக்கன்,
    ப்யூனே 😉

  • சொக்கன்,

    தகவலுக்கு நன்றி. ஆனால் அதிகாரபூர்வத்துக்கு ப் வராது.

  • அவருடைய கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறதுன்னு ஒரு தொகுப்பிருக்கிறது.இருபது தமிழ் எழுத்தாளர்களுக்கு பிடித்த கதைகள் அதில் இடம் பெற்றிருக்கும்.அது அவருடைய ஒரு அருமையான முயற்சி.

  • கட்டுரை எழுதறதுக்கு முன்ன சுரேஷ் கண்ணன்கிட்ட பேசிகிட்டிருந்தீங்களா? இத்தனை “அபத்தங்கள்” கட்டுரையில. அந்த வார்த்தைக்கே ஸ்வஸ்திக்காருதான் eternal copyright வாங்கிவச்சிருக்கார்ன்னு தெரியுமோ இல்லையோ?

    >ஸ்வஸ்திக்காரு ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி<

  • அ. முத்துலிங்கம் அவர்களை தேடிபவர்களுக்கு,
    thinnai.com போய் தேடிப்பாருங்கள். அவரின் ஆக்கங்கள் நிறைய கிடைக்கும்.

  • “..புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பேற்படுத்துகிறது. அனைத்தையும் முடிக்காமல் இனி வாங்கவே கூடாது என்று ஒவ்வொரு ஜனவரியிலும் சபதம் செய்துகொள்வேன்.
    சபதங்கள் என்பவை மீறுவதற்கு மட்டுமே. ஸ்டேஷன்களில் வந்து நிற்கும் ரயில் வண்டிகளின் பெட்டியைக் குறிபார்த்து தபால் மூட்டைகள் வீசப்படுவதுபோல் எனக்கான புத்தகங்கள் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தபடியேதான் இருக்கின்றன. சமயத்தில், பிரிக்கத்தான் தாமதமாகிவிடுகிறது.” Fits me to a T too.

  • இதென்ன அதிசயமாக உள்ளது பா.ரா நீங்கள் எழுதிய கிட்டத்தட்ட அதே நேரத்தில் , நாஞ்சில் நாடனும் முத்துலிங்கத்தை பற்றி ” தீதும் நன்றும் ” என்ற தொடரில் ஆனந்த விகடனில் எழுதி உள்ளார் .

    Back home its called as raghavan instinct ah? [:)]

  • இப்போதாவது படித்தாயே, ரொம்ப சந்தோஷம். நான் அவ்வப்போது கொஞ்சம் நல்ல சஜ்ஜஷன்களும் கொடுப்பேன்!!

  • அ. முத்துலிங்கம் எழுதியது “மகாராஜாவின் ரயில் வண்டி” என ஞாபகம் சரியா..

  • இந்த இணையத்தள முகவரிக்குச் சென்றால் அ. முத்துலிங்கம் அவர்களின் நூல்களை வாசிக்க முடியும்.

    http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • அருமையான பதிவு.
    திரு முத்துலிங்கத்தின் எழுத்துகளை படிக்க வேண்டும்.
    நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி