அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடுற்ற வீக்கம்
கலங்குவதெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில்லேந்தி
இலங்கையில் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. எளிமையாக இதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமென்றால் இவ்வாறு சொல்லலாம்:
ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பிரபஞ்சம் என்னும் மாயத்தோற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. யாரைக்கண்டால் இந்த மாயை விலகும்?
பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்.
இந்தப் பூமாலை, கயிறு இதெல்லாம் யாருக்குப் பாம்பாகத் தோன்றுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அத்வைதத்தில் அடிக்கடி வருகிற பாம்பு இது. பிரச்னை அதுவல்ல. ஒரு சந்தேகம் வந்தது.
நான் கேள்விப்பட்டவரை கம்பர் ஒரு வைணவர். சடகோபர் அந்தாதியெல்லாம் எழுதியிருக்கிறார். அக்மார்க் அத்வைத ஃபார்முலாவில் இப்படியொரு பாட்டு எழுதியிருக்கிறாரே என்று படிக்கும்போது மிகுந்த ஆச்சர்யமாகிவிட்டது. கம்பராமாயணத்தில் வேறு ஏதாவது இடத்தில் இப்படி வெளிப்படையாக அத்வைதம் தெரிகிறதா என்று தெரியவில்லை. விசிஷ்டாத்வைதிகள் பார்வையில் இப்பாடலுக்கு வேறு பொருள் ஏதேனும் இருக்கிறதா என்றும்.
வம்புக்கல்ல. உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தெரிந்தவர்கள் விளக்க வேண்டும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
ஐயன் கம்பரின் வைணவ தர்மத்தின் மீதே சேறா? உங்களுக்கு வைணவர்கள் மேல் ஏன் இந்த கோபம்?
ஆண்டாளை அடுத்து இப்ப கம்பரின் மேல் இந்த குற்றச்சாட்டு, வைகுண்டம் மட்டுமல்ல கைலாசத்திலும் உமக்கான இட ஒதுக்கீடு ஒத்திவைக்கப்படுகிறது!
கம்பர் வைணவரா? இல்லைபோலிருக்கே? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளியான “விநோதரச மஞ்சரி”யில் கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய கதையை படித்துள்ளேன்.
அதை அரங்கேற்றுவதற்குள் அவர் நாய் படாதபாடு பட்டிருப்பார்.
அதற்கு பல இடைஞ்சல்கள். சைவரான கம்பர் வைணவக் கடவுள் பற்றி எப்படி எழுதலாம் என்பது அவருக்கு எதிராக கிளப்பப்பட்ட ஆட்சேபணைகளில் ஒன்று. முதலில் தில்லை நாலாயிரத்தாரிடம் போய் அங்கீகாரம் வாங்க வேண்டியிருந்தது. பிறகு வைணவப் பெரியார்களிடம் அங்கீகாரம் வாங்க வேண்டியிருந்தது.
எது எப்படியாயினும் ஒரு கதை என எழுத வந்த பிறகு இந்த பேதங்களை சாதாரணமாக பார்ப்பதில்லை. பௌத்தரான (அல்லது சமணர்?) இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில் “கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணோ” என அனுபவித்து எழுதவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்’
ஐயா இது அத்வைதம் அல்ல.
உங்களுடைய குழப்பங்கள் தீர
அத்வைதம்,விசிஷ்டாத்வைதம் பற்றிய நூற்களை படிக்கவும். பாம்பு,கயிறு ஒரு உதாரணம். அதைக் கொண்டு பலவிதமாக தத்துவவாதிகள் பொருள்
கொள்வர். பாம்பு, கயிறு இரண்டுமே என்னவென்று
தெரியாதவர்கள் முதலில் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் :).
உளவியல் பார்வையில் பாம்பு என்பது வேறு ‘எதுவோ’வின் குறியீடு என்று சிவராமன் சொல்லியிருக்கிறார் 🙂
சார்,
இதை பி.ஸ்ரீயோ அல்லது வேறு யாரோ முன்பு விளக்கியதைப் படித்த ஞாபகம் இருக்கிறது. தேடிப் பார்த்து, கிடைத்தால் உங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறேன். ஆனால் அதற்குள் நமது இணைய ஜாம்பவான்கள் மூலம் விடை கிடைத்து விடும் என்றே நம்புகிறேன்.
//ஆனால் அத்வைதத்தில் அடிக்கடி வருகிற பாம்பு இது//
இந்த ஒரு தவறான அசம்ஷனால் வந்த வி(னை)ளைவு இது என்பது எனது என்னமும் கூட..
பாம்பு,கயிறு மேட்டருக்கான அத்வைதக் கலருக்கான காரணம்?
நடிகர் சிவகுமார் அடுத்து மிக எளிய உங்கள் நடையில் கம்பராமாயணம் ஒரு வேதாந்த மீட்சிப் பார்வை என்ற ஒரு நூல் படிக்க வைத்து விடுவீர்கள் என்று நினைக்கின்றேன்?
//உளவியல் பார்வையில் பாம்பு என்பது வேறு ‘எதுவோ’வின் குறியீடு என்று சிவராமன் சொல்லியிருக்கிறார்// லக்கிலுக் ஸ்மைலி போட்டு சொன்னாலும் கூட இது ஒரு விதத்தில் ஒரு மலின மனநிலையின் வெளிப்பாடு. மலினச்சூழல்களில் இப்படி அதிரடியாக பேசினால் அறிவுஜீவி ஒளிவட்டம் கிடைத்துவிடும். எந்த உளவியல் பார்வையில் என்று அடுத்த கேள்வியைக் கேட்டால் இந்த வெத்து பம்மாத்து வெளுத்துவிடும். ப்ராயிட்? யுங்? அல்லது காம்பெல்? உலகளாவிய தொன்மக்கதைகளில் பாம்பு பெண்மையின் குறியீடாக விளங்குகிறது, புவிச் சார்ந்த பெண்ணிய ஆன்மிக மரபுகளின் குறியீடாக இருக்கிறது. இதனை வெறும் பாலியல் அல்லது தீமைக் குறியீடாக குறுக்கிய பெருமை ஆபிரகாமிய மதங்களையே சாரும். நிற்க ராகவன் கேள்வி எழுப்பியிருக்கும் தளமே வேறு. இணைய ஜாம்பவான்களுக்காக காத்திருக்கிறேன்.
அன்புள்ள அரவிந்தன்: உண்மையிலேயே தெரிந்துகொள்வதற்காகத்தான் நான் இந்த வினாவை எழுப்பினேன். நீங்கள் விளக்க இயலுமானால் மிகவும் மகிழ்வேன்.
//எது எப்படியாயினும் ஒரு கதை என எழுத வந்த பிறகு இந்த பேதங்களை சாதாரணமாக பார்ப்பதில்லை//
டோண்டு சொன்னதற்கு – இதெல்லாம் அந்த காலத்தில் சாத்தியமல்ல. ஒவ்வொரு வாக்கியத்திலும் பாஷ்யக்காரர்கள் வேத சாரம் மற்றும் தத்துவத்துக்கு ஒப்பான கருக்களையே கதைகளில் எழுதுவரே தவிர, மரபிற்கு எதிராக ஸ்தாபிக்க மாட்டார்கள்.
அப்படியே அத்வைதிகளைப் போல் விசிஷ்டாத்வைதிகள் வேதம், பகவத் கீதை போன்றவற்றிற்கு வியாக்யாணம் கொடுத்துள்ளனர்.
//அத்வைதம் தெரிகிறதா என்று தெரியவில்லை. விசிஷ்டாத்வைதிகள் பார்வையில் //
வேளுக்குடியின் ‘பாசுரப்படி ராமாயணத்தில்’ இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்த்,அஸத் – நிலையுள்ள, நிலையில்லா (அழியக்கூடிய) பொருள் எனப்பொருள் படும்படி பிரளய தாதுக்களை பிரித்துள்ளனர். அதன்படி நித்யமான (மாறாத) ஜீவாத்மா, இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மா என இரண்டு மட்டுமே மாறாதவை – இது ஸ்ரீ பராசரர் நிறுவியது.
மற்றவையெல்லாம் (பஞ்சபூதங்கள் உட்பட) மாறக்கூடியவை – அசேதனன். இதற்கு ஒரு விளக்கம் பச்சை நிற மாங்காய் மஞ்சளாய் மாறி இனிப்பாகவும் மாறுகிறது. இந்த மாற்றம் முழுமையாக உடனடியாக நிகழ்வதில்லை.
அதே போல் பாம்பும், கயிறும் இரவில் மாறி மாறி தோற்றத்தை கொடுக்கும்.
`நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸ்த: / உபயோரபி த்ருஷ்டோஸ்ந்தஸ்த்வநயோஸ்தத்வதர்சிபி:`
இல்லாத பொருட்களுக்கு இருத்தல் என்பதில்லை. இருக்கும் பொருட்களுக்கு இல்லாமை என்பதில்லை. ஸ்த்தான ஜீவனுக்கு இல்லாமை இல்லை.
அதனால் பாம்பு இல்லை என நினைக்கும்போது கயிறாகவும், கயிறு இல்லை என நினைப்பவனுக்கு பாம்பாகவும் தோன்றுகிறது.
அதேபோல், மஹா ப்ரளயம் உண்டாகி அழியக்கூடிய பிரபஞ்சத்தை (பஞ்சபூதங்கள் உருவாக்கியது) இல்லை என நினைத்தால் இல்லாமை வந்துவிடும். இந்த பிரபஞ்சமே அஸத், நித்யமானது அல்ல. அதனாலேயே,என்றாவது இல்லாமல் போகும் பொருட்களுக்கு இருத்தல் கிடையாது. நித்யமாக இருக்காது என்பதே பாட்டில் வரும் ‘வீக்கம்’. மாயை என்ற அர்த்தமாகாது. பாம்பு போல் கயிறு இருப்பது, அநித்யமான நம் கண்களுக்குத் தெரிந்தாலும், பரமாத்வாவான வேதங்களுக்கு சாரமான ராமனை உணர்ந்தவர்களுக்கு அது இரண்டுமே அல்ல எனப் பொருள்படும்.
’அவிநாசி து தத் வித்தி யேந ஸ்ர்வமிதம் ததம்’ – பஞ்சபூதங்கள் செய்த இந்த உலகம் ’சூட்சமம்’ – என விசிஷ்டாத்வைதிகள் தெரிவிக்கின்றனர்.
சூட்சமம் – எந்த ஒன்று மற்றொன்றில் பிரவேசிக்க சக்தியுடையதோ(நீர்,நிலம்..), அப்படி பிரவேசிக்கும் வஸ்து இது.
பிரவேசிக்கப்படும் வஸ்து ஸ்தூலம்.
ஸ்ரீ ராமானுஜர், தன் வியாக்கியாணத்தில் அவிநாஸிது தத் வித்தி என ஜீவன்,ஆத்மா மட்டுமே அழியாதது.
மாய உலகம் என்ற விதத்தில் மட்டும் அத்வைத்தம்,விசிஷ்டாத்வைதம் மாறுபடவில்லை.
அன்பின் ராகவன்,
ரா.கிரிதரன் மிக அழகாகவே விளக்கியிருக்கிறார். //அக்மார்க் அத்வைத ஃபார்முலாவில் இப்படியொரு பாட்டு எழுதியிருக்கிறாரே என்று படிக்கும்போது மிகுந்த ஆச்சர்யமாகிவிட்டது.//
மாயையைக் காட்ட அத்வைதிகளால் பயன்படுத்தப்படும் மிக அழகான சித்திரம் கயிற்றரவு. ஆனால் கயிற்றரவு காட்டும் மாயைக் கோட்பாடோ அத்வைதத்துக்கு மட்டுமே உரியதல்ல.
மீட்சிப்படலத்தின் 100 ஆவது பாடலை பாருங்கள். அங்கு உலகத்தை “பெருமாயையினால் வந்த வீக்கம்” என்கிறார் கம்ப நாடார்.
பாடல்:
பகுதி யென்றுளது யாதினும் பழையது பயந்த
விகுதியால் வந்த விளைவு மற்றதற்குமேல் நின்ற
புகுதி யாவர்க்கும் அரியவப் புருடனு நீயிம்
மிகுதி யுன்பெரு மாயையினால் வந்த வீக்கம்
இப்பாடலை நீங்கள் குறிப்பிட்ட பாடலுடன் இணைத்து பாருங்கள். கம்பன் கூறும் கயிற்றரவு மாயையை அத்வைதி போலவே விசிஷ்டாத்வைதியும் கொண்டாடலாம். ஸ்ரீ பாஷ்ய உரையில் மாயை என்பது இல்லாததாகவோ பொய் என்பதாகவோ குறிப்பிடப்படவில்லை. அற்புதமான அறிதல் மயக்கங்களுக்கு ஆட்படுத்துவதாக மாயை கூறப்படுகிறது. இதை பிரகிருதி தன்னிருப்பாகவே செய்யும் தன்மை கொண்டது எனவே பிரகிருதியே மாயை என அழைக்கப்படலாம்.. மாயையின் அதிபதியாக இறைவன் இருப்பதால் மாயோன் என அழைக்கப்படுகிறான். (ஸ்ரீ பாஷ்யம் 1.1.1:12, பிரம்ம சூத்திரங்கள் :ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம், ஆங்கில ஆக்கம் : சுவாமி வீரேஸ்வரானந்தர், சுவாதி ஆதிதேவானந்தர், அத்வைத ஆசிரமம், பக்.72-73) இந்த நூல் உங்களிடம் இல்லையென்றால் மைலாப்பூர் மடத்துக்கு பொடிநடையாக சென்று வாங்கிவந்துவிடுங்கள். (ஒரு ஸ்ரீ வைஷ்ணவரிடம் இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக ஸ்ரீ பாஷ்யம் இல்லையென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு மன்னித்துவிடுங்கள்.)
அநீ
அதோடு கூட இன்னொரு விஷயம். உலகமே மாயை வாழ்வே மாயை என்று கடந்த சில பத்தாண்டுகளில் மிகவும் மலினப்படுத்தப்பட்டிருக்கும் விஷயம் இந்த மாயை. ஆனால் இந்து ஞான மரபிலும் நம் பண்பாட்டிலும் மாயை ஒரு முக்கியமான தத்துவக் கூறு. நம் பாரத சிந்தனை அனைத்துக்குமான ஒரு உன்னத கண்டடைவு மாயை. இன்றைக்கு இக்கோட்பாட்டினை நாம் மருத்துவ தொழில்நுட்பத்தில் குறிப்பாக நரம்பியல் மற்றும் மூளையின் இயங்குதல் குறித்த துறைகளில் நம்மால் பயன்படுத்தி சிக்கலான சில அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடிகிறது. உதாரணமாக (சுய பீத்தலுக்கான மன்னிப்புகளை ஏற்றுக்கொண்டு) இக்கட்டுரையை காணவும்.
http://solvanam.com/?p=2279
அன்புள்ள அரவிந்தன், கிரிதரன்
மிகவும் உபயோகமான, தெளிவேற்படுத்திய உங்கள் பதில்களுக்கு மிகுந்த நன்றி. ஸ்ரீபாஷ்யம் – அரவிந்தன் நீங்கள்தான் மன்னிக்கவேண்டும். என்னிடம் இல்லை. என் தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர மற்ற எதையும் ஆங்கிலத்தில் படிக்கப் பொதுவாக விரும்பமாட்டேன். தமிழில் கிடைக்கும் வாய்ப்புண்டா?
பாரா ! வர வர நீங்க எது எழுதினாலும் உண்மையிலயே தெரிஞ்சிக்க தான் எழுதினேன்னு ஒரு டிஸ்கி எழுதிடுங்க. இப்படி ஆயிடுச்சே நிலைமை !
//‘பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்’
ஐயா இது அத்வைதம் அல்ல.
உங்களுடைய குழப்பங்கள் தீர//
ரியல்பாம்பு – பா.ரா இதை அத்வைதம் எனச் சொல்லவில்லை என நினைக்கிறேன். உலகமே மாயம் என்பதே அத்வைதத்தின் ஒரு கருத்து.பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட மாய உலகம் என கம்பர் கூறும்போது அத்வைத கருத்தையே முன் வைக்கிறார். அது ஏன்? என்பதே கேள்வி.
என் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல், அழியக்கூடிய பொருளான இந்த உலகம் (பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது) என்ற அர்த்தத்திலேயே மாய உலகம் என கம்பர் கூறுவதாய் விசிஷ்டாதவைதிகள் ஸ்தாபிக்கிறார்கள்.
ஸ்ரீராமானுஜரின் கூற்றும் இதையே கூறுகிறது.
என்னிடம் பிரும்ம வித்யா என்று ஒரு பழைய புத்தகம் இருக்கிறது, ரொம்ப பழசு அல்ல. 1986 இல் போட்டது. திருவல்லிக்கேணி பழைய புத்தக கடையில் வாங்கியது. நமது கயிற்றரவு சமாச்சாரம் குறித்து அதில் சொல்லப்பட்டிருப்பது:
சங்கரரின் வாதத்தில் – சரி, பிரத்யசஷத்தை (சஷ என்பதை சேர்த்து ஒரு அட்சரமாக படிக்கவும் என்னால் தட்டச்ச முடியவில்லை) சப்தமும் கயிற்றை நன்கு பார்த்தவன் ‘இது கயிறுதான் சர்ப்பமில்லை’ என்று சொல்லப்படும் சப்தம் பிரத்யசஷ ஞானத்திற்கு பாதிதம். ஆகவே பிரத்யசஷம் பாதிக்கப்படமாட்டாது என்று சொல்வது தவறாகுமோ? அதனால் பிரத்யசஷத்திற்கும் சப்தத்துக்கும் விரோதம் உண்டு. இதனை சங்கரரும் ஒப்புக்கொள்கிறார். பிரத்யசஷம் தவறுதலுக்கு (தோஷத்திற்கு உபாதிக்கு) இடம் தருகிறது. ஆனால் வேதவாக்யம் அவ்விதமில்லை. அது பிரத்யசஷத்தையும் பாதிதம் செய்யும். ….
ஸ்ரீ பாஷ்யம்: ஆகவே பந்த நிவிருத்தி அந்த பந்தம் பலவகைப்பட்ட அத்யாஸங்களின் ரூபமாகவிருப்பது. அது பிரத்யசஷத்தினால் பிரபஞ்சத்தில் பார்க்கப்படுகிறது. அதனால் அது பலவித தவறுதல்களுக்கு உட்படும்படி காரணமாகவிருக்கிறது. அப்பேற்பட்ட பந்த நிவிருத்தி பிரும்ம ஜீவ ஐக்கிய ஞானத்தினாலேயேற்படுகிறது. (எப்படிப்பட்ட பிரும்மம்) அந்த பிரும்மம் அனவகாச (இடைவெளியில்லாத) நிர்விசேஷ நித்திய சுத்த முக்த புத்த ஸ்வபிரகாச சிந்மாத்ர பிரும்ம ஆத்மபாவ (ஐக்ய) போதத்தினால் ஏற்படும்.
பிரும்ம வித்யா பாகம்-2 பக்.58-59; இதனை வெளியிட்டவர் முகவரி: திரு. எஸ்.ஜெகந்நாராயணன், 10 திருவீதி அம்மன் தெரு, ராமகிருஷ்ணா நகர் சென்னை-28
சரி மேலே சொல்லப்பட்டிருப்பதுடன் கம்ப நாடாரின் கயிற்றரவு பாடலைப் பொருத்தி பாருங்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பொருந்தும். ஆனால் எனக்கென்னவோ கவிச்சக்கரவர்த்தி உள்ளுக்குள் அத்வைதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லத்தான் ஆசை 🙂
//என் தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர மற்ற எதையும் ஆங்கிலத்தில் படிக்கப் பொதுவாக விரும்பமாட்டேன்// தமிழ்ப்பற்றின் மற்றொரு விபரீத ம்யூட்டேஷன்? கடவுள் என்று ஒருவர் இருந்தால் உங்களை காப்பாற்றட்டும். தமிழ் சமுதாயத்தையும் …இப்படிப்பட்ட மனநிலைகளிலிருந்து ….
//தமிழ்ப்பற்றின் மற்றொரு விபரீத ம்யூட்டேஷன்// இல்லை. விருப்பமான விஷயங்களைத் தமிழில் வாசிப்பது எனக்கு சௌகரியம். இது ஆபீசுக்கு பேண்ட்டும் வீட்டுக்கு வேட்டியும் போல.
//கடவுள் என்று ஒருவர் இருந்தால்// என்ன சந்தேகம்? நிச்சயம் இருக்கிறார். என்னைக் காப்பது தவிர அவருக்குப் பிரமாதமான வேலைகள் எதுவுமில்லை என்பதில் எனக்கு எப்போதும் ஐயமில்லை.
நன்றி.
சபாஷ்.
மிகச் சரியான விவாதம்.
http://www.google.com/transliterate/indic/Tamil
இந்த லிங்கிலே க்ஷ சுலபமாக அடிக்க வருதே !
சுபிக்ஷம் பரவட்டும்.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.
பார்க்கிறவர் கண்ணில் தான் பூமாலை பாம்பா கயிறா என்பது தெரியும்.
சுந்தரகாண்டத்தில், ஒவ்வொரு முறையும் படிக்கும் பொது ஒரு விஷயம் புலப்படும். இது மரபு!
( பாட்டியின் அரிசி உப்புமா மாதிரி உயர்ந்த டேஸ்ட் பெருகிக்கொண்டே போகும்! )
Aravindan says that snake is a symbol of evil in abrahamic religions. Instead of a sweeping generalization he can quote with context. because i do not see any authentic proof in islam to say that snake is a symbol of evil.
***
உலகளாவிய தொன்மக்கதைகளில் பாம்பு பெண்மையின் குறியீடாக விளங்குகிறது, புவிச் சார்ந்த பெண்ணிய ஆன்மிக மரபுகளின் குறியீடாக இருக்கிறது. இதனை வெறும் பாலியல் அல்லது தீமைக் குறியீடாக குறுக்கிய பெருமை ஆபிரகாமிய மதங்களையே சாரும்.
***
இது தான் அரவிந்தன் சொல்லி இருப்பது. இதில் எங்கே sweeping generalization ? வேண்டுமென்றால் உலகளாவிய தொன்மை கதைகள்ன்னா என்னன்னு அரவிந்தன் கிட்ட கேக்கலாம் ! தொன்மையானதோட வயது என்ன என்றும் கேட்கலாம் !
பாரா,
இதுகுறித்து முன்னரே அகத்தியரிலோ, ராகாகியிலோ விரிவாய் எழுதிய நினைவு. தேடியெடுக்க நேரமில்லை.
கம்பராமாயணத்திலேயே உங்கள் வினாவுக்கு விடை இருக்கிறது:
‘அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்றடைவரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று மால்
சுரநதியின் அயலது , வான் தோய் குடுமிச் சுடர்த் தொகைய தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததியாம் நெடுமலையை வணங்கி அப்பால்..’
‘அரன் அதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி
சென்றடைவது அரிய பரிசு’ என்று அத்வைதியைத்தவிர வேறு யாராலும் இவ்வளவு தெளிவாய்ச் சொல்ல முடியாது.
ஐயமேயில்லை. அம்பிகாபதியின் தந்தை அத்வைதியே; அந்தர்சாக்தரே.. 🙂
அன்புடன்,
ஜாவாகுமார்
அரவிந்தன், கிரிதரன் நல்ல விளக்கங்கள் அளித்துள்ளனர்
கம்பரின் தத்துவச் சிந்தனையில் அத்வைதம் பல இடங்களில் தென்படுகிறது. இரணியன் வதைப் படலத்தில் பிரகலாதன் இரணியனுக்கு செய்யும் உபதேசத்தில் வரும் இப்பாடல்கள் பாருங்கள் –
உன்னின் பிறிதாயினவோ உலகம்
பொன்னின் பிறிதாகிய பொற்கலனே?
கொம்பொடு அடை,பூ,கனி, காய் எனினும்
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே?
இந்த இரு உவமைகளுமே அத்வைத பரமானவை. சங்கரரின் “ஆத்ம போதம்” என்ற நூலின் ஒவ்வொரு பாடலும் அத்வைதத்தின் பல கூறுகளைக் கூறும் உவமைகளால் ஆனது. அதில் மேற்சொன்ன இரு உவமைகளும் உண்டு.
கம்பன் ”பல சமயங்களும் தேடும் பரம்பொருள்” என்று தன் பாடல்களில் கூறுகிறான். ஆற்றுப் படலத்தின் பிரபலமான இந்தப் பாடல் –
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
”எல்லை இல் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது” என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்ததன்றே!
இந்தக் கருத்து வைணவத்தில் பெரிதாகப் பேசப் படவில்லை. சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட ஷண்மதங்களையும் சமமாகக் கருதி அவற்றை வளர்த்த
சங்கரர் நெறியிலேயே அதிகம் பேசப் படுகிறது.
கம்பன் வேதாந்தி என்பதில் ஐயம் இல்லை, அதிலும் அத்வைத வேதாந்தி என்பதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன.
தெய்வத்தின் குரல் முதல் பாகம் “கண்ணனும் சொன்னான், கம்பனும் சொன்னான்” படியுங்கள். உங்களுக்காகவே காஞ்சி பெரியவர் எழுதிஇருக்கிறார்.