ருசியியல் – 06

இன்றைக்குச் சற்றேறக்குறைய இருபது இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒருமுறை உத்தியோக நிமித்தம் கௌஹாத்திக்குப் போகவேண்டியிருந்தது. அது ஒரு பொதுத்தேர்தல் சமயம். பத்திரிகையாள லட்சணத்துடன் நாலைந்து வடக்கத்தி மாகாணங்களில் சுற்றிவிட்டு, அப்படியே மேற்கு வங்கம் போய், அங்கிருந்து கௌஹாத்தி.

நமக்கு வேலையெல்லாம் பிரமாதமில்லை. எங்கு போனாலும் போஜனம்தான் பிராணாவஸ்தை உண்டாக்கும். யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வெளியூர்ப் பிரயாணங்களின்போது நான் ஞானப்பழம் தேடியலைந்த முருகப்பெருமானாகத்தான் இருந்திருக்கிறேன். ஞானப்பழம் கிட்டாத பிராந்தியங்களிலும் வாழைப்பழம் கிட்டிவிடும் என்பதே நமக்குள்ள ஆசுவாசம்.

ஒரு தாவர ஜந்துவின் சிக்கல்கள் அனந்தம். லட்டு நிகர்த்த புவியில் வசிக்கும் மனுஷகுமாரன்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மாமிச பட்சிணிகள் என்பதே காரணம். என்ன செய்ய? மைனாரிடி மகானுபாவர்களுக்கு எப்போதும் சிக்கல்; எல்லா விஷயத்திலும் சிக்கல். இதனாலேயே எங்கு போவதென்றாலும் முதற்காரியமாக அங்குள்ள சைவ உணவகங்களைப் பற்றித்தான் விசாரிப்பேன். கைவசம் நாலைந்து போஜனாலயங்களின் பெயர்களையாவது முகவரியோடு கேட்டு எழுதி எடுத்துக்கொள்ளாமல் இந்தத் தேர் எங்கும் கிளம்பாது.

ஆனால் அஸ்ஸாமுக்குப் போனபோது அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. அங்கே எனக்குத் தெரிந்தவர்களும் கிடையாது; என்னை அறிந்தவர்களும் கிடையாது. எம்பெருமான் ஒருத்தனைத் தவிர. சரி, அவன் நம்மை அளித்துக்காப்பான் என்று கிளம்பிவிட்டேன். அந்தப் பிரகஸ்பதியோ, அந்நேரம் பார்த்து மழைக்கால விடுமுறையில் போய்விட, என்பாடு பேஜாராகிப் போனது.

போய்ச் சேர்ந்த முதல் நாள் ஒரு சைவ உணவகத்தைத் தேடி சுமார் நாலு மணி நேரம் அலைந்தேன். அதுவும் அடித்துக் கவிழ்த்த பெருமழையில். ஒவ்வொரு இடத்திலும் உள்ளே போய்த்தான் விசாரிக்க வேண்டியிருந்தது. உத்தமோத்தமர்கள் ஒருத்தராவது பெயர்ப் பலகையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டுமே? ம்ஹும். எல்லா போர்டுகளும் குப்புறத் தொங்கும் வவ்வால் எழுத்துக்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அன்று நான் கண்ட அஸ்ஸாமியர்கள் மொழி விஷயத்தில் சமரசமே விரும்பாதவர்கள். எழுத்தானாலும் பேச்சானாலும் மண்ணின் மொழி மட்டும்தான். மருந்துக்கும் இங்கிலீஷ் கிடையாது. மறந்துபோய்க் கூட ஹிந்தி கிடையாது. எனக்குத் தமிழைத் தாண்டி மேற்படி இரு மொழிகளில் ஒன்றைச் சுமாராகப் பேச வரும். இன்னொன்றை எழுத்துக்கூட்டிப் படிக்க வரும். என்ன பிரயோஜனம்? அஸ்ஸாமி தெரியாதவனுக்கு அங்கே அன்னப் பிராப்தி கிடையாது என்றது ஊழ்.

அன்றைக்கெல்லாம் ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன். அசட்டுத் தித்திப்பும் அரைப் புளிப்பும் சேர்ந்த கொழுக்கட்டை மாதிரியான ஒரு நொறுக்குத் தீனி கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அகப்பட்டது. அப்புறம் இரண்டு நேந்திரம்பழங்களைச் சேர்த்து ஒட்டிய அளவில் காயா பழமா என்று தெரியாத ஸ்திதியில் ஏதோ ரக வாழை. தப்பித்தவறிக்கூட ருசித்துவிடலாகாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு விளைந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரு பைநிறைய வாங்கி வைத்துக்கொண்டு நாளெல்லாம் தின்றுகொண்டிருந்தேன். கொட்டும் மழையில் இடையிடையே புருஷலட்சண காரியத்தையும் பார்த்தபடிக்கு அன்றைய பொழுதை ஒருவாறு நிறைவுசெய்த நேரம், உள்ளூர் பத்திரிகை நிருபர் ஒருவரின் சகாயத்தால் ஒரு சைவ உணவகத்துக்கு வழி சித்தித்தது.

யார் பெத்த பிள்ளையோ. தென் தமிழ்க்கோடியில் இருந்து வந்திருந்த ஜீவாத்மாவை ஒருவேளையாவது ஒழுங்காகச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைத்து அவரே என்னை அழைத்துப் போனார். போகிற வழியெல்லாம் அஸ்ஸாமிய உணவு வகைகளின் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்.

அங்கே அரிசிதான் பிரதானம். நம்மைப் போலத்தான். ஆனால் முழுத்தாவர உணவு விரும்பிகள் அநேகமாகக் கிடையாது. எல்லா உணவகங்களிலும் மீன் உண்டு. கறி உண்டு. வெஜிடேரியன் உணவகம் என்று சொல்லப்பட்ட இடங்களிலும்கூட முட்டை அவசியம் உண்டு.

எம்பெருமானே என்று என் அந்தராத்மா அலறியது.

பிரச்னையில்லை; உங்களுக்கு சுத்த சைவ வகையறாக்களை நான் வாங்கித் தருகிறேன் என்று அவர் உத்தரவாதமளித்தார்.

உணவகமானது, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து முப்பது நிமிட தூரத்தில் வந்து சேர்ந்தது. உள்ளே சென்று அமர்ந்ததும் நண்பர் நானாவித ஐட்டங்களை எனக்காக ஆர்டர் செய்தார். மொஹுரா பித்தா (Mohura Pitha) என்கிற பூரண கொழுக்கட்டை பாணியிலான ஒன்று. ஆனால் அதில் வெல்லப் பூரணம் இல்லை. சர்க்கரையும் தேங்காயும் சேர்ந்த பூரணம். சாக்கோர் கர் (Xakor Khar). இது வாழைக்காயைச் சீவி, வெயிலில் காயப்போட்டு, கருவாடாக்கி பிறகு அதனோடு பாலக் கீரையைச் சேர்த்து வதக்கிச் செய்யப்படுகிற பொரியல். முற்றிலும் கடுகு எண்ணெயால் சமைக்கப்படுவது. அப்புறம் லப்ரா (Labra) என்றொரு பதார்த்தம். கிடைக்கிற அத்தனை காய்கறிகளையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைத்து திருவாதிரைக் களிபோல் கிளறி, உப்பு – சர்க்கரை இரண்டையும் சம அளவுக்குப் போட்டுச் சமைக்கிறார்கள். கடைசியாக சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்புக்கும் கூட்டுக்கும் இடைப்பட்ட ரகத்தில் பை ருஜுங் (Sbai Rujung) என்ற திடதிரவாதி வஸ்து.

ஆணையிட்ட ஐட்டங்கள் மேசைக்கு வந்து சேர்ந்தன. என் கண்கள் நன்றி அல்லது காரத்தில் கலங்கிவிட்டன. இரண்டு நாள்கள் நான் கௌஹாத்தியில் சுற்றத் திட்டமிட்டிருந்தேன். எங்கே அன்றிரவே டெல்லி சலோ என்று கிளம்பிவிட நேருமோ என்ற அச்சம் தீர்ந்தது. நண்பர் என்னைச் சாப்பிட வைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

விதி அங்குதான் சிரித்தது. என்னால் நான்கு கவளங்களுக்குமேல் சாப்பிடவே முடியவில்லை. வயிறு கல்போல் இருந்தது. காலை முதல் சாப்பிட்டுத் தீர்த்த ராட்சத வாழைப் பழங்களும் அந்தக் கொழுக்கட்டை அல்லது மூசுண்டை ரக நொறுக்குத் தீனியும் அந்த இரவு உணவை உள்ளே இறங்கவிடுவேனா என்றன. நண்பரோ என்னை ஒரு பீம்பாயாக எண்ணி மேலும் மேலுமென சொல்லிக்கொண்டே இருந்தார். நான் போதும் போதுமென அலறிக்கொண்டே இருந்தேன்.

‘என்ன நீங்கள் இப்படிக் கொறிக்கிறீர்கள்? தலைநகரின் ஆகச் சிறந்த ஓட்டல் இது. இந்த ருசியை நீங்கள் வேறு எங்குமே பெற முடியாது. திரும்ப நீங்கள் எப்போது அஸ்ஸாம் வருவது, எப்போது இம்மண்ணின் பாரம்பரிய உணவினங்களை ருசிப்பது?’

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பசிக்குமோ என்ற பயத்திலேயே அன்றைக்குப் பத்துப் பன்னிரண்டு வாழைப்பழங்களைக் கபளீகரம் செய்திருந்ததைப் பற்றிப் பிரஸ்தாபிக்க நாணமாக இருந்தது. நாளெல்லாம் தேடிக் கிடைத்த நல்லுணவு. ஆனால் நமக்கு வாய்த்தது நாலு வாய் மட்டும்தானா?

மூச்சைப் பிடித்துக்கொண்டு நண்பருக்காக மேலும் கொஞ்சம் உண்டேன். உணவானது நாபிக்கமலத்தில் இருந்து மேலெழுந்து, தொண்டைக்குப் பக்கத்தில் வந்துவிட்டாற்போலிருந்தது. தலை சுற்றியது. போதும் என்று எழுந்துவிட்டேன். அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். எனக்கு அந்தச் சாப்பாடு பிடிக்கவில்லை என்று நினைத்துவிட்டார். உண்மையில் அது ஒரு சிறந்த விருந்துதான். பசி பயத்தில் நான் நாளெல்லாம் தின்றிருந்த பழங்கள் அதன் ருசியை மறைத்துவிட்டிருந்தன.

என்னளவில் அது பெரிய இழப்புதான். சந்தேகமே இல்லை. மறுநாள் என்னால் அந்த உணவகத்துக்குப் போக முடியவில்லை. மீண்டும் பழங்கள் உண்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்படியாகிவிட்டது.

அச்சம்பவத்துக்கு மிகப்பல வருஷங்களுக்குப் பிறகுதான் ஒரு விருந்தை எப்படி எதிர்கொள்வது என்ற கலையைப் பயின்றேன். விருந்து ருசிப்பதற்கு விரதமென்ற ஊக்க மருந்து ஊசி அவசியம் என்பதும் அப்போதுதான் புரிந்தது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter