இதுவரை சிரிப்பதற்கு இதில் எதுவுமில்லை என்றிருந்தேன். இந்த அத்தியாயம் அதை தோற்கடித்து விட்டது. வெறும் கதையாக மட்டும் படிக்காமல் எண்ணத்தில் கதையை ஓடவிட்டால் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும் அபார கற்பனை ஆசிரியருக்கு. நீல நகரத்தில் உலா வரும் சூனியனும் கோவிந்தசாமியின் நிழலும் அந்நகரத்தையும் அங்கு வசிக்கும் மனிதர்களையும் பார்வையிடுகிறார்கள்.
நீல நகரத்தின் கட்டிடங்கள் மொக்கையான என்ஜினீயரிங் டிசைன் என்பதால் சூனியனுக்கு சற்றே சலிப்பாக இருக்கிறது. நமக்கும்தான். சூனியன் தன் நகரத்தை நீல நகரத்தோடு ஒப்பிடுகிறான். அங்கு இருக்கும் வெம்மையான சூழலும் வீடுகளுக்கான இடைவெளியும் இங்கு இல்லாதது அவனுக்கு அதிருப்தி தருகிறது. மழை ஓயாமல் பெய்வதால் தீயால் ஆன சூனியனுக்கு சூடாக எதையாவது எடுத்து தன்மேல் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவதில் தப்பில்லை. ஆனால் அவனுக்கு ‘ ஒரு நான்கு கட்டிடங்களையாவது இடித்து விட்டு பத்து பேரை இழுத்து வந்து போட்டு கொளுத்திக் குளிர் காய வேண்டும்’போல தோன்றுகிறதாம்.
சில கதைகளுக்கு லாஜிக் பார்த்தால் அப்படைப்பைக் கொண்டாட முடியாது. இங்கும் அப்படித்தான். ஆனால் அது ரசிக்கும்படி இருக்கிறது.மழை விட்டு பொழுது புலர்ந்ததும்தான் அங்கிருக்கும் மனிதர்கள் இருவரின் கண்களுக்கும் தெரிந்தார்கள். அவர்கள் மனிதர்கள் போலிருப்பவர்கள்தான்.ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. ஆசிரியர் கற்பனையை இங்கு சகட்டுமேனிக்கு ஓடவிட்டிருக்கிறார். என்னவென்றால் அங்கிருக்கும் ஆண்களுக்கு குறிகள் கைவிரல்களோடு வைக்கப்பட்டிருக்கிறது.பெண்களுக்கு பிறப்புறுப்புகள் அவரவர் நெற்றியில் ஒட்டியிருக்கிறது.அடடா!ஆடை கொண்டு எதையும் மறைக்கும் அவசியம் அவர்களுக்கு இல்லையே!
கிட்டத்தட்ட அவதார் பட அவதாரங்கள் போலிருக்கும் அம்மனிதர்களை கண்டு பிரமித்து மதியம் வரை நிழல் வருவதற்கு இருவரும் காத்திருக்கின்றனர். தென்படும் மனிதன் ஒருவனிடத்தில் சாகரிகாவை பற்றி விசாரித்து முகவரி வாங்கிக் கொண்டு அவளை தேடி கண்டடைந்து அவளிருக்கும் இடம் வந்து சேர்ந்து அவளை பார்க்கிறார்கள். அவள் பெண்ணுறுப்பு அவள் நெற்றிக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. அவளை இப்படி கண்டதும் கோவிந்தசாமியின் நிலை என்ன? சிந்திக்க சொல்லி இந்த அத்தியாயம் முடிவடைகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.