அரசியல்

பொன்னான வாக்கு – 12

தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் சமூகம், மக்கள் நலக் கூட்டணிக்காக இலவசப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பதைக் கடந்த சில தினங்களாக இணையத்தில் பார்க்கிறேன். ஊழல் இல்லை, அப்பழுக்கில்லை, குறுகிய நோக்கில்லை, பதவி ஆசையில்லை, சமூக நலனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக அப்படியொரு உணர்ச்சிப் பிரவாகம்.

ஊழல் என்பதே அதிகாரம் கைக்கு வந்த பிறகு நடைபெறுகிற சங்கதிதான். கரி அள்ளிப் போடாமலேயே கறை படியாத கரங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் நான்கு கட்சிகளும் போன வருஷமே மது ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் தமது கூட்டணி சாத்தியங்களைத் தெரியப்படுத்தியவை. இன்றுவரை கூட்டு தொடர்வது சந்தோஷமே. ஆனால் ஓட்டுகளைப் பிரிப்பது என்பதைத் தவிர இவர்களால் வேறு என்ன சமூக சேவை செய்ய இயலும் என்று தெரியவில்லை. எந்தக் கணத்திலும் இவர்களே பிரிந்துவிடலாம் என்பது தவிர்த்து.

இருக்கிற இரண்டு கம்யூனிஸ்டுகளும் காலகாலமாக திமுக – அதிமுக கூட்டணியில் குட்டிக்கரணமடித்து சீட்டு பெற்றவர்கள். வைகோ, திருமாவும் மாநில திராவிட நீரோட்டத்தில் முங்கிக் குளித்து மூச்சுத் திணறியவர்களே. ஒற்றை இலக்கத் தொகுதிகள் போரடித்த காரணத்தால்தான் இவர்கள் தனிக்கூட்டணி கண்டார்கள் என்றால் சரி. மற்றபடி மாற்று அரசியலை முன்வைக்கிற முகங்களாக இவர்களைப் பார்க்கச் சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி.

ஏனெனில் மாற்று அரசியல் என்பதை வகுக்கும் மிக முக்கியக் காரணி, வலுவான கொள்கைகள். மநகூவின் கொள்கை என்ன? மதிமுகவின் கொள்கைகள் அந்தக் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கே ஒத்துக்கொள்ளாது. இரண்டு கம்யூனிஸ்டுகளுமே தருணம் கிட்டினால் கரணமடித்து, பழைய குருடியின் கதவைத் தட்டிவிடக்கூடியவர்கள். விடுதலைச் சிறுத்தைகளின் தலித் வாக்கு வங்கி தமக்குச் சாதகம் என்னுமளவில் இந்த மூன்று கட்சிகளும் திருப்தியுறுமானால், அப்படி நினைத்து ஒன்றுக்கு இரண்டு முறை பல்பு வாங்கிய கலைஞரை அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். திருமாவுக்கு விழாத தலித் ஓட்டுகள் அதிமுகவுக்குத்தான் விழுமே தவிர, பிறருக்கல்ல.

இந்த வகையில் அதிமுகவுக்கு விழக்கூடிய தலித் ஓட்டுகளில் கொஞ்சத்தைப் பிரித்து எடுத்து வந்திருப்பது தவிர இந்தக் கூட்டணி சாதித்ததும் சாதிக்கப் போவதும் பெரிதாக ஒன்றுமில்லை. மதிமுகவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு வங்கி என்று ஏதாவது இருக்கிறதா என்ன? அப்படி இருந்தால் அதெல்லாம் மல்லய்யாவுக்குக் கடன் கொடுத்தது போன்ற வங்கியாகத்தான் இருக்கும்.

ஆட்சி மாற்றம் என்பது தாரக மந்திரமாக இருந்துவிட்டுப் போவதில் ஆட்சேபணையே இல்லை. ஆனால் இவர்கள் விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்குப் பட்ட பாடுகளைப் பார்த்தபோது கொஞ்சம் பயமாகிவிட்டது. அவருக்கு ஒரு நாலைந்து சத ஓட்டுகள் இருக்கின்றன என்பதைத் தாண்டி மாற்று அரசியலுக்கான முகமாக விஜயகாந்தைப் பார்த்துவிட இயலுமா? எம்பெருமானே.

விஜயகாந்த் தம் கூட்டணிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்கத் தயாராக இருந்திருக்கிறது மநகூ. அது சாத்தியமில்லை என்று இன்று தெளிவாகிவிட்ட நிலையில் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லி மழுப்பப் பார்க்கலாம். ஆனால் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டு அல்லாத புரட்சியாளர்களும் அடங்கிய ஒரு கூட்டணி, புரட்சிக் கலைஞர் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்துக்குக் கொடி பிடிக்க முன்வருவதெல்லாம் எம்மாதிரியான மாற்று அரசியல் என்று தெரியவில்லை.

எல்லாம் இந்தப் புரட்சி படுத்துகிற பாடு.

என்னைக் கேட்டால் மநகூ விஜயகாந்துக்கோ, ஜி.கே. வாசனுக்கோ ஏங்காமல், பேசாமல் டிராஃபிக் ராமசாமியுடன் கூட்டணி வைப்பதைக் குறித்து யோசிக்கலாம். தேர்தலில் நிற்கப் போகிற ஒவ்வொரு ஊழல்வாதிக்கு எதிராகவும் குறைந்தது இருநூறு, முன்னூறு பேரை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கும் சக்கர வியூகம் அல்லது அக்ரம வியூகமொன்றை அவர் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். டிராஃபிக் ராமசாமி நிறுத்தும் அத்தனை பேருக்கும் எத்தனை ஓட்டு விழும் என்பது ஒருபுறமிருக்க, நிறுத்துவதற்கு அவரிடம் அத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே குலைநடுங்கச் செய்கிறது.

ஒன்றுமே இல்லாவிட்டாலும் ஓட்டுகளைப் பிரிக்கும் கொள்கை அடிப்படையிலேனும் டிராஃபிக் ராமசாமி மநகூவுடன் ஒத்துப் போய்விடுவார் அல்லவா?

(நன்றி: தினமலர் 22/03/16)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி