பொன்னான வாக்கு – 13

இது தேர்தல் காலம். அரசியல் கட்சிகளை விடவும் இந்தச் சமயத்தில் படு பயங்கரத் தீவிரமாகக் கள ஆய்வு செய்வதில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அடித்துக்கொள்ளவே முடியாது. நாலே முக்கால் வருஷம் இவர்கள் எங்கே போய் கோலி ஆடிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் தேர்தல் என்று சொல்லிவிட்டால் போதும். சொய்யாவெனப் பறந்து வந்து குதித்துவிடுவார்கள்.

நேற்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவினை வாசிக்க நேர்ந்தது. (http://spicknewstamil.in/survey-results.html) முதல் வரியிலேயே திடுக்கிட்டுத் தலைகுப்புற விழுவது போலாகிவிட்டது. இம்மாதம் நான்காம் தேதிதான் தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை வெள்ளத்துக்கு முன்பும் பின்புமாக மொத்தம் 31 நிறுவனங்களுடன் இணைந்து 70,20,000 வாக்காளர்களைச் சந்தித்து பொதுவாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டு முடிவுகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இதில் முப்பத்தி நாலு லட்சத்தி சொச்சம் ஆண் வாக்காளர்களும், முப்பத்தைந்து லட்சத்தி சொச்சம் பெண் வாக்காளர்களும் கருத்துக் குருமா சமைத்திருக்கிறார்கள். அதிமுகவுக்கு 43.6 சதவீதம், திமுகவுக்கு 28.6 சதவீதம், மநகூவுக்கு 7.9 சதவீதம் என்கிறது இவர்களது முடிவு.

தெய்வமே, அதிமுக, திமுக கூட்டணி பேரங்களே இன்னும் படிந்தபாடில்லை. பெரியவர், பழம் எப்போது நழுவும் என்று இன்னும் கொட்டக்கொட்டக் கண் விழித்துக் காத்திருக்கிறார். அம்மணியோவெனில் அம்மையப்பனைக் கூடச் சுற்றாமல் அல்போன்சா ஞானப்பழம் கிடைக்குமா என்று பார்க்கிறார். மநகூ, தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்றாலும் எழுபது லட்சம் சாம்பிளில் ஏழு சதவீத ஆதரவு பெறுமளவு அப்படி என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று புரியவில்லை.

இதோடு முடிந்துவிடுமா? இனிமேல் வாரத்துக்கு ஒரு கணிப்பு உற்சவம் நடக்க ஆரம்பிக்கும். வாயில் பேர் நுழையாத, என்னவாவது வடக்கத்தி கம்பெனியைச் சொல்லி, அவர்களோடு இணைந்து இன்னார் நடத்திய கருத்துக் கணிப்பு என்பார்கள். கலர் கலராக நிறைய கோழி முட்டைகள் போட்டு இன்னாருக்கு இத்தனை சதம், அன்னாருக்குப் பரமபதம் என்று திருவாய் மலரும் அல்ட்ரா மாடர்ன் ஆரூடவாதிகள் ஆங்காங்கே முளைப்பார்கள்.

இந்தக் கணிப்புகளை வைத்துக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கத் தொடங்கும். கட்சிக்காரர்கள் கய்யாமுய்யாவென சண்டை போடுவார்கள். நெறியாளருக்கு நெரி கட்டிப் போய் கன்னத்தில் கை வைத்து உட்காருவார். எப்படியும் நமக்குப் பொழுது போய்விடும்.

நிற்க. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே அபத்தம் என்பதல்ல. இதில் அறிவியல்பூர்வம், புவியியல்பூர்வம் என்று மண்டைக்கு மேலொரு கொண்டை வைக்கும்போதுதான் இடிக்கத் தொடங்கிவிடுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, நாளது தேதி வரை இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஒரு கருத்துக் கணிப்பும் வென்றதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

கடந்த பிகார் பொதுத் தேர்தல் சமயம் ஆத்தா சத்தியமாக பாஜக ஜெயிக்கும் என்று ஆளாளுக்குக் கருத்துக் கதறல் அல்லது குதறல் செய்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

அதற்கு முன் நடந்த டெல்லி சட்ட மன்றத் தேர்தல் சமயத்திலும் இதே கூத்துதான். அட, நாமே பார்க்காததா? ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் மூலைக்கு மூலை வெளியாகும். ஏதாவது ஒரு கம்பெனி அதிமுக கூட்டணி ஜெயிக்கும் என்றால், இன்னொரு கம்பெனி திமுக கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்லும். காசா பணமா? அள்ளி விடவேண்டியதுதான். மாங்காய் விழுந்தால் அன்றே சொன்னார் அண்ணா என்று எழுந்து மார்தட்டிவிடலாம். கல்தான் விழுகிறது என்றால் கடையைக் கட்டிவிட்டு அடுத்தத் தேர்தலுக்கு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வந்துவிடுவது.

வெற்றி – தோல்வியை விடுங்கள். இத்தனை தொகுதிகள் இன்னின்னாருக்கு என்கிறார்களே, அதில் ஒரு அஞ்சு பத்து பழுதானால்கூடப் பரவாயில்லை; யதார்த்தத்துக்குப் பக்கத்து சந்துப் பக்கம் கூட வராத முடிவுகளைத்தான் இந்தக் கணிப்புகள் இதுநாள் வரை நமக்குத் தெரிவித்து வந்திருக்கின்றன.

சாம்பிளிங் பழுது என்பார்கள். தம்மிடம் ஒன்று சொல்லிவிட்டு, வாக்குச் சாவடியில் ஓட்டை மாற்றிப் போடும் மக்கள் மீது போடு பழியை.

உண்மை என்னவெனில் வாக்களித்தலென்பது தாம்பத்தியம் போன்றதொரு சங்கதி. பெரும்பாலும் யாரும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்புவதில்லை. இந்த அடிப்படை உண்மை மேற்படி கணிப்பு கனவான்களுக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் ஒரு பரபரப்புக்கு என்னவாவது செய்தாக வேண்டியிருக்கிறது. ஆகக்கூடியது ஒன்றுமில்லாவிட்டால் அல்வா கிண்டி விற்பதில் என்ன பிரச்னை?

வாழ்க திடீர் இருட்டுக் கடைகள்.

(நன்றி: தினமலர் 23/03/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி