சின்னக் குத்தூசி

பழம்பெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி இன்று காலமானார். ஓராண்டு காலத்துக்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனக்குத் தெரிந்து இந்த ஓராண்டு மட்டுமல்ல – இதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே சின்னக்குத்தூசியை ஒரு தந்தையாக பாவித்து அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் நக்கீரன் கோபால். குத்தூசியின் புத்தகங்களைக்கூட நக்கீரன்தான் வெளியிட்டு வந்தது. 77 வயதில் இன்று காலமான சின்னக்குத்தூசிக்கு, கலைஞர் உள்பட அநேகமாக ஆயிரம் நண்பர்கள் இருக்கக்கூடும். கோபால் அவர்களுள் முதலானவர்.

அவரது வல்லப அக்கிரகாரம் வீதி மேன்ஷனுக்குச் சென்று அவரோடு உரையாடாத பத்திரிகையாளர்கள் சென்னையில் அநேகமாகக் கிடையாது. பழம் பெரும் பத்திரிகையாளர்கள் முதல் நேற்றே முதல் முதலாகப் பத்திரிகை உலகுக்கு வந்தவர்கள்வரை அத்தனை பேரும் வருவார்கள். எப்படி வருவார்கள், யார் அழைத்து வருவார்கள், எதற்காக வருவார்கள், எத்தனைக் காலம் வருவார்கள் – தெரியாது. ஆனால் ஆபீசுக்குப் போவது மாதிரி ஒரு காரியம்தான், சின்னக்குத்தூசி அவர்களின் அறைக்குச் செல்வது. நானும் போயிருக்கிறேன். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் பலமுறை சின்னக்குத்தூசியின் அறைக்குச் சென்றிருக்கிறேன். கல்கி நிருபர்கள் சந்திரமௌலி, ப்ரியன் போன்றவர்களெல்லாம் அநேகமாக தினசரி குத்தூசியைச் சந்திக்கப் போகிறவர்களாக இருந்தார்கள். எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசுவார். என்ன விஷயம் வேண்டுமானாலும் பேசுவார். இதமாகப் பேசுவார். இளம் பத்திரிகையாளர் என்றால் ஊக்குவிப்புச் சொற்றொடர்கள் அவர் பேச்சில் தாராளமாக இருக்கும். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். பெரும்பாலும் அந்த வாரம் எழுதிய கட்டுரை தொடர்பாகத்தான் சம்பாஷணை ஆரம்பமாகும்.

பேசிக்கொண்டே இருக்கும்போது அறை வாசலில் யாராவது அரசியல்வாதிகள் வந்துவிடக்கூடும். அறிக்கைகள், சட்டசபைப் பேச்சுகள், தீர்மானங்கள் என்று என்னத்தையாவது எழுதி எடுத்துவருவார்கள். ஐயா ஒருவாட்டி பார்த்தாச்சின்னா ஒரு திருப்தி என்பார்கள். பெரும்பாலும் திமுககாரர்கள் என்றாலும் பொதுவில், திராவிட இயக்க அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே அவர்மீது ஒரு பெரிய மதிப்பு இருந்தது. கலைஞர் பல விஷயங்களில் சின்னக்குத்தூசியின் கருத்தைக் கேட்டுத்தான் செயல்படுவார் என்பதால் உண்டானதாக இருக்கலாம்.

சின்னக்குத்தூசி பெரிய படிப்பாளி. நான் சந்தித்த தருணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த கோலத்திலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை கல்கியில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். [சுவாமிகளின் சொற்பொழிவை ஆசிரியர் சீதா ரவி எழுத்துக்கு மாற்றி, வெளியான தொடர்.] அந்த வாரம் நான் சின்னக்குத்தூசியைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றபோது, ‘அதான் சங்கராசாரியார் அருள்வாக்கு போடறிங்களே, இதுவேறயா?’ என்றார். நான் பதில் சொல்லாமல் சிரித்தேன். ‘ஆனா நல்லாருக்கு. படிச்ச, விஷயம் தெரிஞ்ச மனிதர். ஒரு பக்திப் பத்திரிகைக்கு சரியா இருக்கும்’ என்று சொன்னார். [அவர் பரம நாத்திகர்.] கல்கியில் முக்கூராரின் தொடர் மிகப் பிரம்மாண்டமான வெற்றி கண்டபோது திரும்பவும் ஒருமுறை அவரைச் சந்தித்தேன். அவரது முந்தைய விமரிசனத்தை நினைவுகூர்ந்து, ‘என்ன சார் பண்றது? சுஜாதா தொடரைவிட இது பெரிய ஹிட்’ என்றேன். ‘இருக்கலாம். ஆனா காலப்போக்குல புது வாசகர்கள், குறிப்பா இளம் வாசகர்கள் பத்திரிகைக்கு வர்றதைத் தடுக்கக்கூடிய விஷயங்கள் இதெல்லாம்’ என்று சொன்னார்.

அவர் சொன்னது உண்மை. 1999வது ஆண்டு நான் கல்கியில் இருந்து வெளியேறிவிட்டேன். அதன்பின் இளைய தலைமுறையைக் கல்கி பக்கம் இழுக்கும் முயற்சிகள் எத்தனையோ விதமாக மேற்கொள்ளப்பட்டும் பெரிய பலன் இருக்கவில்லை.

தமிழகத்தில் முறையான திராவிட இயக்க வரலாறு அறிந்தவர்கள் வெகு சொற்பம். சின்னக்குத்தூசி அவர்களுள் ஒருவராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் அவரது முரட்டுத்தனமான திமுக சார்பு நிலைபாடு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது.  கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார். அது வெறும் கட்சிக்காரரின் ஆதரவாக இல்லாமல், அறிவுபூர்வமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது பேச்சுதான் என்பது போல் தரவுகளின் அடிப்படையில் வாதிடுவது குத்தூசியின் பாணி. கலைஞரே இப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டார் சார் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். அந்தச் சார்பு அவரது விருப்பம், அவரது தேர்வு, அவரது நம்பிக்கை. ஆனால் பல்வேறு கட்சி, கொள்கைகள், சார்பு, விருப்பு வெறுப்பு உள்ளவர்களோடும் இறுதிவரை அவரால் நட்பு பேண முடிந்திருக்கிறது.

சின்னக்குத்தூசி அவர்களுக்குக் குடும்பம் என்று தனியே ஒன்று கிடையாது. தமிழ் பத்திரிகை உலகம்தான் அவர் குடும்பம். இறந்ததும் அவர் உடலைக்கூட நக்கீரன் அலுவலகத்துக்குத்தான் எடுத்துச் சென்றார்கள். நிறைய ஹைஃபன்களும் ஆச்சரியக் குறிகளுமாக நான் பார்த்த அவரது பழைய மேனுஸ்கிரிப்டுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவரது பாதிப்பால்தான் விகடன் பத்திரிகையாளர்கள் பலர் ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஆச்சரியக்குறி போடுகிறார்களோ என்று பல சமயம் நினைத்திருக்கிறேன். அவரது அறையில் நான் அதிகம் பார்த்தது விகடன் நண்பர்களையே.

திரு சின்னக்குத்தூசி அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

O

நக்கீரன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பு

தமிழினியனின் பதிவு

Share

11 comments

  • //அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும்//
    நான் விகடனில் எழுதியிருந்த ஒரு கட்டுரையை முழுக்க மேற்கோளாகச் சொல்லி முரசொலியில் அரைப்பக்கம் எழுதியிருந்தார். என்னைப் போன்ற ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அதெல்லாம் பெரிய அங்கீகாரம் தான்.

  • இவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவாக பேசியதில்லை. ஆனால் கோபால் அண்ணா இவரை மிகவும் உயர்வாக பேசுவார். மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

    அன்னாருக்கு அஞ்சலி.

  • தமிழ்ப் பத்திரிகை உலகில் பெயர் சொல்லக்கூடிய, மிகச் சிலரில், மிக முக்கியமான அரசியல் விமர்சகர்களில் ஒருவரான சின்னக்குத்தூசி அவர்கள் இறந்தது மாபெரும் இழப்பு. மிகச் சரியாக் அவரை நினைவு கூர்ந்திருக்கிறீகள் சார்.

  • ஆழ்ந்த அனுதாபங்கள் !
    அவரது கட்டுரைகளை விரும்பி படித்த என்னை
    போன்றவர்களுக்கு பெரும் இழப்பே.

  • அன்னாருக்கு அஞ்சலி. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ஒரு முறை என் அண்ணனுடன் முரசொலி ஆபீசில் பார்த்தேன், வணங்க வேண்டிய வாத்தியார்,

  • அன்னாருக்கு அஞ்சலி!

    திராவிட இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகள் எனக்கருதப்படும்,

    1.பார்ப்பன எதிர்ப்பு

    2 ஹிந்து கடவுள் எதிர்ப்பு

    3.ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பது

    போன்றவற்றை உண்மையென நம்பி,
    serious ஆக கடைப்பிடித்து,
    அதற்காக அல்லும் பகலும் உண்மையாக உழைத்தவர்கள்,
    தங்களுகென்று ஒரு குடும்பம் இன்றி,
    திருவல்லிக்கேணி Mansion வாடகை அறையொன்றில்,
    வாழ்வை முடித்துக்கொள்ள,

    மேற்கண்ட கோட்பாடுகளை தேவைப்படும்போது பயன்படுத்தி,
    மற்ற நேரங்களில் புறக்கணித்து,
    வளைந்து வாழத்தெரிந்தவர்கள்,
    பல குடும்பங்களுடன்,உற்றார் உறவினர்களுடன்,
    தங்களுக்கு சொந்தமான Mansion(s) களில்
    சுகபோக வாழ்வு நடத்துகின்றனர்

  • தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு உங்கள் பதில் அவஸ்யம் தேவை. கலைஞருக்காகவே வாழ்ந்தவருக்கு கலைஞர் ஏதாவது செய்தாரா?

    • ஜோதிஜி, செய்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் சின்னக்குத்தூசி யாரிடமும் எதையும் எதிர்பார்த்தவரில்லை. அது தெரியும்.

  • The obituary references by the commenter Ganpat are bolder and refreshing.

    Ur obituary is just a rehash of plain facts abt the late writer.

    To me, the late writer, a brahmin by birth, has sought refuge in an idealogy which runs diametrically opposite to his brahmin community.

    Why did he take that decision to live with that ideology which is the bete noire of every Tamil brahmin ? What sent him packing there ?

    This dark fact is not analysed by you.

    Is there any lurking fear that skeletons may fall from the cupboards ?

    Please analyse boldly as Ganpat has done

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி