இடம், பொருள், ஆவல்

திரும்பவும் அவரை வாழ்வில் எதிர்கொள்ள நேரிடும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. என் தவறுதான். நான் எத்தனை முறை தொலைபேசி எண்ணை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் மாற்றிய ஒரு சில வாரங்களில் அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நம்பர் மாத்திட்டிங்கன்னு சொல்லவேயில்லியே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிப்பார். ஆனால் மாற்றிய எண்ணை யாரிடமிருந்து பெற்றார் என்பதைச் சொல்லமாட்டார். என் எண்ணைக் கண்டுபிடிப்பதற்காகவே தனியொரு உளவுப் படையை அவர் வைத்திருக்கக்கூடும். நான் அவருக்கு அஞ்சி எண்ணை மாற்றுவதில்லை. இது சர்வ நிச்சயம். ஆனால் மாற்றும்போதெல்லாம் இனி அவர் அழைக்கமாட்டார் என்று எண்ணாதிருப்பதில்லை. இதுவும் நிச்சயம். இதுகாறும் ஏழெட்டு எண்கள் மாற்றிவிட்டேன். ஒருமுறையும் அவரை அழைத்து எனது புதிய எண்ணை அளித்ததில்லை. சந்தேகமில்லாமல் நான் நட்பை மதிக்கத் தெரியாதவன் தான். குறைந்தது அவர் விஷயத்தில். ஆனால் இது குறித்த புகார்கள் ஏதும் அவருக்குக் கிடையாது. தன் வழக்கப்படி எங்கிருந்தோ என் புதிய எண்ணைக் கேட்டறிந்து, அவரே அழைத்துவிடுவார்.

முன் சொன்னதுபோல், நம்பர் மாத்திட்டேன்னு சொல்லவேயில்லியே என்பதுதான் உரையாடலின் முதல் வசனமாக இருக்கும். மன்னித்துக்கொள்ளுங்கள், மறந்துவிட்டேன் என்றோ, நான் கொடுக்காவிட்டால் என்ன, உங்களுக்குத் தெரியாமலா போகிறது என்றோ பதில் சொல்லுவேன். அவருக்கு அந்த பதில்கூட அநாவசியம். நேராக விஷயத்துக்கு வந்துவிடுவார்.

‘நாம சந்திக்கணுமே?’

என்ன விஷயம் என்பேன். இதுவும் ஒரு சம்பிரதாயமான வினாதான். என்ன விஷயம் என்று அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. அவருக்கு எப்போதும் இருக்கும் பிரச்னை ஒன்றுதான். உத்தியோகம். ‘சரிப்படலை சார். முழு முட்டாள்கள்கிட்ட என்னால வேல பார்க்க முடியாது. அதான், போடா சர்தான்னு வந்துட்டேன். ஆனா வாழ்ந்தாக வேண்டியிருக்கே. சொல்லுங்க, வேற எங்க போகலாம்?’

நான் என்னத்தைச் சொல்லுவேன்? அவரது துறை, மென்பொருள். உலகில் கோடானுகோடி மென்பொருள் நிறுவனங்களுக்குப் பஞ்சமே கிடையாது. வித்தை உள்ள யாரும் எளிதில் பிழைத்துக்கொள்ள இருக்கிற ஒரே துறை. எதுவுமே இல்லாது போனாலுங்கூட இரண்டு கணிப் பொறிகள் வாங்கிப் போட்டு சுய தொழில் செய்து பிழைக்க முடியும். ஆனாலும் ஒரு வட்டக்கோட்டில் தொடக்கம் மற்றும் முடிவுப் புள்ளியைத் தேடுபவர் மாதிரி பலப்பல வருடங்களாக நண்பர் நடந்து நடந்து பெயர்ந்துகொண்டே இருப்பவர்.

இதுவும்கூட அந்தத் துறையில் சாதாரணம்தான். எனக்குத் தெரிந்த பலபேர் வருடத்துக்கு ஒரு நிறுவனம் வீதம் இடம் பெயர்ந்துகொண்டிருப்பவர்களாக உள்ளார்கள். ஆனால் அதெல்லாம் இருக்கமுடியாமல் பெயர்வதல்ல. குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மாதிரி இயல்பாகப் பெயர்வது. குறைந்தது இருபது சதவீதம் சம்பள வளர்ச்சியை இலக்காக வைத்து இடம் பெயர்வார்கள். அடுத்த இருபது இன்னோர் இடத்தில் கிடைக்கும்போது திரும்பப் பெயர்வார்கள். நதி போன்ற வாழ்க்கை. யாரும் என் நண்பரைப் போல் அழுது புலம்புவோரில்லை.

என் நண்பரும் குறைந்தது இருபது, முப்பது இடங்கள் பெயர்ந்தவர்தான். ஆனால் ஒவ்வொரு பெயர்ச்சியின்போதும் அவரது சம்பளத்தில் அரை சதவீதம் அல்லது கால் சதவீதம் குறைந்துகொண்டே வரும். எனக்குத் தெரிந்து அவர் இருபதாயிரம் ரூபாயில் தனது முதல் உத்தியோகத்தைத் தொடங்கினார். கடைசியாகக் கொஞ்ச காலம் முன்னர் சந்தித்தபோது பதினாலு வருது சார். ரொம்பக் கஷ்டமா இருக்கு என்று சொன்னார்.

ரொம்ப யோசித்துவிட்டு ஓர் ஆலோசனை சொன்னேன். ‘நீங்கள் ஏன் கவிதை எழுதுவதை நிறுத்திவிடக்கூடாது?’

அவருக்கு நகைச்சுவையை ரசிக்கும் மனநிலை அப்போது இல்லை. ‘இல்லை சார். நான் இப்ப கவிதை எழுதறதில்லை. ஒரு நாவல் எழுதிட்டிருக்கேன்’ என்று பதில் சொன்னார். முன்பொரு சமயம் தீவிரமான ஆன்மிக எழுச்சிக்கு ஆட்பட்டு ‘பிரபஞ்ச காரணம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதவிருப்பதாகவும், நான் என்னுடைய நிறுவனத்தில் அதைப் பதிப்பிக்க முடியுமா என்றும் கேட்டவர் அவர்.

தூக்கிவாரிப் போட்டு, அவரது இரண்டு கைகளையும் பாய்ந்து பிடித்துக்கொண்டேன். ‘இதோ பாருங்கள். உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. குழந்தை வேறு பிறக்கப் போகிறது. மென்பொருள் துறை உலகிலேயே வளமான துறை. தெய்வாதீனமாக நீங்கள் அந்தப் படிப்பு படித்திருக்கிறீர்கள். எப்படியாவது ஒரு நல்ல நிறுவனத்துக்குள் நுழைந்துவிட முயற்சி செய்யுங்கள். ஒரு பிடி பிடித்தால் எங்கோ போய்விடுவீர்கள்.’என்று சொல்லிப் பார்த்தேன்.

‘எங்கசார் போறது? உங்க ஃபாரின் நண்பர்கள்கிட்ட சொல்லி அமேரிக்காவுல எனக்கு ஒரு வேலை வாங்கிக்குடுங்களேன்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவரிடமிருந்து பிரபஞ்ச காரணத்தைக் காப்பாற்றுவதற்காகவாவது நான் அதைச் செய்யலாம் என்று தோன்றியது உண்மையே. ஆனால் செய்யவில்லை. காரணம் இந்த நண்பரின் கல்யாண குணங்களை நன்கறிந்தவன் என்பதுதான். ஒரு மாதிரி சமாளித்து, அமெரிக்க நிறுவனங்களெல்லாம் இந்தியாவைத்தான் டார்கெட் செய்கின்றன, நீங்கள் இங்கேயே பன்னாட்டு நிறுவனங்களில் முயற்சி செய்யுங்கள், அவர்கள் டெபுடேஷனில் அமெரிக்காவுக்கு அனுப்புவார்கள். அங்கு போனதும் உங்கள் வழக்கப்படி கம்பெனி கம்பெனியாக மாறி, பச்சை அட்டை பெற்று அமெரிக்கக் குடிமகனாகிவிடுங்கள் என்று சொல்லி வைத்தேன்.

அவருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ‘நான் மாறவேண்டுமென்று விரும்புவதே இல்லை சார். யாருக்கும் என்னைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிவதில்லை’ என்றார். அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘ஏன், உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு கவிஞன். எழுத்தாளனும்கூட. நீங்கள் உத்தியோகம் பார்த்த பத்திரிகைகளிலோ, பதிப்பகத்திலோ எனக்கு ஏதாவது ஒரு வாய்ப்பேனும் கொடுத்திருக்கிறீர்களா? நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் என் ராசி அப்படித்தான் இருக்கிறது. நண்பர்கள்கூட உதவ மாட்டார்கள்’ என்றார்.

எனக்கு ரொம்பச் சங்கடமாகப் போய்விட்டது. அவர் என்னை வசமாகப் பிடித்துவிட்டார். நழுவவே முடியாத இக்கட்டு. ஏதாவது ஒரு சரியான பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் ஒரு கவிஞர்தான். குறைந்தது ஆயிரம் கவிதைகளாவது எழுதியிருப்பார். அனைத்தும் அவரது பச்சை நிற டைரியில் பிரசுரமாகியிருக்கின்றன. ஒரு சில கவிதைகளை எனக்குப் படித்தும் காட்டியிருக்கிறார். நான் மிக மோசமான கவிதை ரசனை உள்ளவன் என்று பலமுறை எடுத்துச் சொல்லியும் சளைக்காமல் அவர் கவிதைகளை எனக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக ஒன்றுகூட என்னைக் கவர்ந்ததில்லை. ‘ஏன் சார், ஒரு தீபாவளி மலரில்கூடவா பிரசுரிக்க முடியாது?’ என்று ஒரு சமயம் கேட்டார். நியாயமாக எனக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். ஆனால் சிரித்தேன். பிரசுரிக்கலாம்தான். ஆனால் அந்த ஒரு பிரசுரத்தோடு அவர் கவிதையைத் தலை முழுகுவார் என்று கோயிலில் வைத்துத் தலையில் அடித்துச் சத்தியம் செய்து தரத் தயாரென்றால் நான் அந்தப் பாவ காரியம் செய்யச் சித்தமாகவே இருந்தேன்.

ஆனால் அவரோ முற்றிலும் வேறு விதமான எதிர்காலத் திட்டங்களை அந்த நிறைவேறாத கனவின் தொடர்ச்சியாக முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தார். ‘இப்ப பாருங்கள் சார். ஒரு கவிதை. ஒரே ஒரு கவிதை பிரசுரமாகிவிட்டால் போதும். ஒட்டுமொத்த பத்திரிகை உலகின் கவனத்தையும் கவர்ந்துவிடுவேன். எனக்கு சந்தப் பாட்டும் எழுத வரும். இசையமைப்பாளர் தீனா ஏதோ வகையில் எனக்கு தூரத்துச் சொந்தம். பழக்கமில்லைதான். ஆனால் போய்க் காட்டி, அறிமுகம் செய்துகொண்டு எப்படியாவது ஒரு வாய்ப்பு பெற்றுவிடுவேன். அதன்பிறகு இளையராஜா என்னை அழைப்பார். யுவன் அழைப்பார். முத்துக்குமார் நிறைய எழுதிவிட்டார். அவருக்கு ஒரு மாற்று தேவைப்படும் நேரம் சார் இது!’

கடவுளே என்று என் நெஞ்சத்துக்கு உள் பக்கமாக எழுந்த ஒரு பேரோலம் அவருக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. தீபாவளி மலர் ஏதாவது ஒன்றின் இருபது ஃபாரங்களுக்குப் பிற்பாடு இடது பக்கமாக ஒரு ஓரத்தில் இவரது ஒரு கவிதையைப் போட்டுவிட ஏற்பாடு செய்யலாம் என்று மெலிதாக எழுந்த எண்ணத்தை அக்கணமே கொன்று புதைத்துவிட்டேன்.

பின்னொரு சமயம் திடீரென்று என் முன்னால் தோன்றி, ‘நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று அத்தியாயங்களை நீங்கள் வாசிக்கவேண்டும்’ என்று சொன்னார். என்ன சப்ஜெக்ட்? மூன்று வரியில் சொல்லுங்கள் என்றேன். மூன்று வரியெல்லாம் முடியாது. அரை மணிநேரம் ஆகும் என்று ஆரம்பித்தவர், என் பதிலுக்குக் காத்திருக்காமல் எழுதிக்கொண்டிருக்கும் நாவலைப் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். அது ஒரு அதிபயங்கரமான கதை. திகார் சிறைச் சாலையிலிருந்து தப்பித்து ஓடிய சார்லஸ் சோப்ராஜ் என்னும் குற்றவாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான் என்று உளவியல் ரீதியில் ஆராயும் புதினம் என்று இறுதியில் சொல்லி முடித்தார்.

கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்கிறபடியால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. எல்லாம் சரி, இதில் உளவியல் எங்கே வருகிறது? நீங்கள் சொன்னதெல்லாம் மூன்றாந்தர ஹிந்தி சினிமாக் காட்சிகள் போல் அல்லவா இருந்தன? என்று கேட்டேன். அவர் புன்னகை செய்தார். ‘சரியாகப் பிடித்துவிட்டீர்கள் சார். இந்த நாவலை நான் எழுதி முடித்ததும் ஏதாவது பத்திரிகையில் தொடராக வெளியிட நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். பிறகு யாராவது ப்ரொட்யூசர்கள் அதைக் கண்டிப்பாகப் படம் எடுக்க வருவார்கள். தமிழ்-ஹிந்தி இரு மொழிகளுக்குமாகச் சேர்த்து எப்படியும் எனக்குப் பத்து லட்சமாவது கிடைக்கும். சமீபகாலத்தில் இம்மாதிரியான ஒரு த்ரில்லர் யாரும் எடுக்கவில்லை அல்லவா? அதனால் இது நிச்சயம் வெற்றி பெறும். எனக்கென்னவோ தமிழில் இதை விக்ரம் செய்தால் நன்றாக வரும் என்று தோன்றுகிறது.’

‘பாடல்கள் முத்துக்குமார், இசை யுவன்’ என்றேன். ஒரு கணம் விழித்தவர், சட்டென்று பளிச்சென சிரித்துவிட்டு, ‘சரி சார். அவரே எழுதட்டும்’ என்றார். எத்தனை பெரிய மனது!

நான் அவரை சகித்துக்கொண்டு நண்பராகத் தொடர்ந்து தக்க வைத்திருப்பதன் ஒரே காரணம் அவர் மிகவும் நல்லவர் என்பதுதான். மிக நிச்சயமாக சூது வாது தெரியாத, சாமர்த்தியங்கள் போதாத, சற்றே அசட்டுத்தனம் மிக்க, ஏராளமாகக் கனவு காணக்கூடிய, எல்லாமே அபத்தக் கனவுகள் என்பதுகூடத் தெரியாத அப்பாவி மனிதர். ஒருமுறை மிகுந்த சுய இரக்கத்துக்கு ஆட்பட்டு என்னை ஒரு கேள்வி கேட்டார். ‘ஏன் சார் யாருமே என்னைப் புரிந்துகொள்வதில்லை? நான் அத்தனை மோசமான மனிதனா?’

‘சேச்சே’ என்று உடனே மறுத்தேன். அவர் உண்மையிலேயே மிக நல்ல மனிதர். தான் எழுதும் எழுத்துகூட யாரையும் பாதித்துவிடக்கூடாது என்று கவனமாக எழுதுமளவுக்கு நல்லவர். நிச்சயமாக அவர் எழுதும் மென்பொருள்கள்கூட அந்தப் பிரகாரம்தான் அமைந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதனாலென்ன? அவரது உள்ளார்ந்த ஆற்றல் ஒளிந்திருக்கக்கூடிய துறை எதுவென்று இறுதிவரை தெரியாமலா போய்விடப்போகிறது?

திடீரென்று இப்போது திரும்பவும் என்னை போனில் பிடித்துவிட்ட நண்பர், இம்முறை பெரிய குண்டாக ஒன்றைப் போட்டார். ‘சார், நான் முடிவு செய்துவிட்டேன். இனி மென்பொருள் துறையில் தொடரப்போவதில்லை.’

‘ஐயோ, அப்புறம்?’

‘ரொம்ப யோசித்துவிட்டேன் சார். எனக்கு டிவி துறைதான் சரி. நீங்கள் எப்படியாவது என்னை ஒரு சானலில் சேர்த்துவிட்டுவிடுங்கள். ப்ரோக்ராம் செக்‌ஷன் வேண்டாம். செய்திப் பிரிவில் சேர்த்துவிடுங்கள். ஊடகத்தில்தான் என் எதிர்காலம் இருக்கிறது.’ என்றார்.

பல ஊடகங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறதே என்று சொல்லிப்பார்த்தேன். ‘நோநோ. புதிய தலைமுறை சானலில் ஏகப்பட்ட ஆள் எடுக்கிறார்களாம். கேள்விப்பட்டேன். முடிவே செய்துவிட்டேன். நீங்கள் என்னை அங்கே சேர்த்துவிடுங்கள்’ என்றார் தீர்மானமாக. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை அப்டேட்டடாக இருப்பார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. எனக்கு அத்தனை செல்வாக்கெல்லாம் இல்லை என்று என்ன சொல்லியும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லை. மீண்டும் என் தொலைபேசி எண்ணை மாற்றும் நேரம் வந்துவிட்டது. சந்தேகமின்றி இம்முறை இந்த நண்பர்தான் இதற்குக் காரணம். தெரிந்தால் வருத்தப்படுவார்.  எனக்கே குற்ற உணர்ச்சி மேலோங்கும். என்ன செய்ய? நண்பரைப் போல் நல்லவர்கள் இருக்கும் தேசத்தில்தான் என்னைப் போல் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

Share

26 comments

  • சார், ஒரே ஒரு சின்ன டவுட்:

    இந்த பதிவை அவர் படிக்க மாட்டாரா?

  • அட! பாவம் நல்லவருன்னு வேற சொல்லிட்டீங்க உங்க வாய்சை வைச்சு எதாச்சும் செஞ்சு அவுருக்கு ஒரு நல்ல பொசிஷன் வேண்டிக்கொடுங்களேன் சார் #ஆதரவு குரல் 🙂

  • அட! பாவம் நண்பருண்ணு சொல்லிட்டிங்க & நல்லவருன்னு வேற சொல்லிட்டீங்க உங்க வாய்சை வைச்சு எதாச்சும் செஞ்சு அவுருக்கு ஒரு நல்ல பொசிஷன் வேண்டிக்கொடுங்களேன் சார் #ஆதரவு குரல் நம்பர் 2

  • >>>>சுய இரக்கத்துக்கு ஆட்பட்டு என்னை ஒரு கேள்வி கேட்டார். ‘ஏன் சார் யாருமே என்னைப் புரிந்துகொள்வதில்லை? நான் அத்தனை மோசமான மனிதனா?’<<<<

    எத்தனையோ நகைச்சுவை வரிகளை சேர்த்திருந்தாலும், அவர் மேல் ஒரு பரிதாபம் வருதுங்க. முதல்ல அந்த சுய இரக்கத்தை தொலைக்க அவருக்கு ஒரு வலை பண்ணுங்க. அதுக்கப்புறம் அவர் யாரையும் தொல்லை செய்யாமல் தன் சொந்த திறமையை நம்பி இறங்கினாலே இப்படிபட்டவங்க மேல வந்துடுவாங்க. பத்து இடத்துல பத்தடி தோண்டுறதுக்கு ஒரு இடத்துல நூறடி தோண்டலாம்!

    😉

  • பாரா சார், இது போல மனிதர்கள் நிறைய பேர் உலகத்தில் இருக்கிறார்கள். அவர் நல்லவர் என்னும் பட்சத்தில் அவரால் என்ன முடியும் என்பதை உங்கள் நட்பால் அவருக்கு உணர்த்துவதுதான் முறை. அவருக்கு ஏதாவது உதவுங்கள் சார்.

  • ஆயில்யன் துபாய் ஷேக்கிற்கு மிகவும் வேண்டப்பட்டவர். துபாயில் பெரிய அப்பாடக்கர் ஆயில்யன். எனவே சமூகம் அவர்கள் உடனடியாக……

  • அண்ணே.. நானும் கவிதைகள்லாம் எழுதி வைச்சிருக்கேண்ணே.. பிரசுரம் செய்ய ஆள்தான் கிடைக்கலை.. கொண்டு வரட்டுமா..? எனக்காச்சும் உதவி செய்வீங்களா..?

  • அன்பின் ப.ரா

    சம்சீர் கல்வியின் சாதக பாதகங்களைப்பற்றி
    விரிவாக எழுத வேண்டுகிறேன்

    நன்றி

  • அன்பின் ப.ரா

    சமசீர் கல்வியின் சாதக பாதகங்களைப்பற்றி
    விரிவாக எழுத வேண்டுகிறேன்

    நன்றி

  • தங்களது நண்பரை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர் கனவுகளை மட்டுமே புசித்து வாழும் வகையை சேர்ந்தவராக இருக்கிறார்.யதார்த்தம் இவ்வளவு காலம் இரக்கமின்றி இவரை சலித்தும் அதனை உணராதவராகவே அவர் உள்ளது வருத்தமே. நீங்கள் சொல்வதும் சரிதான். சூதற்ற இதுபோன்ற மனிதர்களை முற்றாக விலக்கி விட மனம் இடமளிக்காதுதான். எனக்கு தங்களின் நிலையை விட, அவரது மனைவியின் மனோநிலை மிகுந்த தர்மசங்கடத்தில் நிச்சயமாக இருக்குமென்ற நினைவே வருத்தமுறச் செய்கிறது.சிலர் தோழர்கள் அவருக்கு உதவிடுமாறு சொல்லியிருக்கிறார்கள். அவரது நிலையை, அவரது தற்போதைய நிலை அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு கேள்விக்குள்ளாக்கி உள்ளது என அவருக்குப் புரியுமாறு விளங்க வைப்பதே நீங்கள் செய்யும் ஆகச் சிறந்த உதவியாகும். அந்த தோழரின் மனம் யதார்த்தத்தை விரைவில் உணர எனது பிராத்தனைகள்.

  • //ஆனால் அந்த ஒரு பிரசுரத்தோடு அவர் கவிதையைத் தலை முழுகுவார் என்று கோயிலில் வைத்துத் தலையில் அடித்துச் சத்தியம் செய்து தரத் தயாரென்றால் நான் அந்தப் பாவ காரியம் செய்யச் சித்தமாகவே இருந்தேன்//.நல்ல நகைச்சுவை.இந்த பதிவை படித்தும்கூட புரிந்துகொள்ள மாட்டார் என்ற உங்கள் தைரியம் பிரமிக்கவைக்கிறது.

  • டெரர் சார் . நீங்க அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும்.அவருக்கு தன்னம்பிக்கையும்,திறமை இருந்தால் உதவி தானாக வரும் என்பதையும் சொல்லிதாருங்கள் ரைட்டர் சார்.உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றாமல் அவரது எண்ணத்தை மாற்றுங்கள் . பாவம் நல்லவர் அவர் !

  • பேசாம உங்க நீலக் காகத்தை அவர எழுத சொல்லுங்க – ஆதரவுக் குரல்…..நம்பர் 3!.

  • சார் உதவி பண்ணுங்க பிளீஸ்…..ரொம்ப நல்லவரு சார் அவரு…நல்லவங்களும் வாழ்ந்துட்டு போகட்டுமே இந்த உலகத்தில்…

  • என்ன பா.ரா. இது… அவரை ஒரு நல்ல இடத்திற்கு கவுன்சிலிங்கிற்கோ personality development-course க்கோ கூட்டிச்செல்லாமல் இப்படி பகடி செய்துகொண்டிருக்கிறீர்களே… ஆரம்பத்தில் பகடியாக ஆரம்பித்தாலும் இறுதியில் வருத்தமாகப் போய்விட்டது… உங்கள் எழுத்துத் திறமை மொக்கை என ஏன் நீங்கள் முகத்திற்கு நேராக சொல்லிவிடக்கூடாது… அவர் தன்னைப் புரிந்துகொள்வதற்கு உதவுவதுதானே நண்பருக்கு அழகு!!

  • அவரை தயவு செய்து தரைக்கு கொண்டுவாருங்கள் இல்லாவிடில் நிலமை முத்திவிடும் !

    சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை.

  • மன்னிக்கவும். உங்கள் நண்பர் தவிர்க்கப்பட வேண்டியவர். பார்க்க: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • என்ன சார் இப்பிடி பண்ணீட்டிங்க? நம்மிடையே இருந்த நட்பை இப்பிடி பப்ளிக்கா கொச்சை படுத்தலாமா? என்ன பண்றது உலகமே இப்படி தான். கடைசியா ஒரே ஒரு கோரிக்கை உங்க கொலீக் உடைய நம்பர் தரமுடியுமா? அவரை வைத்து முன்னேற முயற்ச்சிக்கிறேன்

  • Ennudaiya naNbar kaalam chendra Venkatachalam avargal adikkadi solvathuthaan gnabagam varugirathu. “Good people are ‘good for nothing people’ We respectfully call them good people”

  • பாத்துங்க. உங்க வீட்டாம்மாவே உங்கள உளவு பாக்க (குரல் மாத்தி பேசும் மென்பொருள் உதவியுடன்) உங்களிடம் பேசிக்கொண்டிருக்க போறாங்க… 😉

  • பா.ரா சார்,

    கட்டுரை மெலிதான நகைச்சுவையுடன் நன்றாக இருந்தது. உங்கள் நண்பர் இன்னும் பட்டால் மட்டுமே திருந்துவார். என்ன செய்தாலும் அடிப்படை (சோறு போடும்) வேலையை விடாமல் இருப்பதே நன்று. பாதி பதிவு படிக்கும் வரை உங்கள் நண்பர் என்று வலைப் பதிவர்களை பகடி செய்கிறீர்களோ என்ற சந்தேகம் இருதது 😉

    அடுத்த முறை தொடர்பு கொண்டால் இந்த கட்டுரையை வாசிக்கச் சொல்லவும். அதுவே போதுமானது. பத்திரிக்கைத் துறையில் இருக்கும் நீங்களே அவர் கவிதையோ கட்டுரையோ எழுத லாயக்கானவர் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி இருக்கும் போது அவருடைய பத்திரிக்கை –> சினிமா கதாசிரியர் –> சினிமா கவிதை எழுத்தாளர் என்ற கனவு மலைக்க வைகிறது.

    பொதுவாக மற்றவர்களை முட்டாள்கள் என்று சொல்பவர்கள்தான் முட்டாள்களாக இருப்பதை வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒரே படம் மட்டும் வெற்றிப் படம் கொடுத்து விட்டு பின்பு கானாமல் போகும் மனிதர்கள் இப்படியான ஆட்களே. இந்த மாதிரி ஆட்கள் அதிர்ஷ்டத்தின் மூலமாக சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் அதை சஸ்டெயின் செய்யும் திறமை இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.

    நீண்ட பின்னூட்டம். பொறுத்துக் கொள்(ல்)ளவும்.

  • பாரா,இது ஒரு புனைவு என்று எனது பார்வை சொல்கிறது…

    உண்மையில் உங்களுக்கு அப்படி ஒரு நண்பர் இருப்பதாக நான் நம்பவில்லை.

    • அறிவன்: நிச்சயமாகப் புனைவல்ல. இருந்தால் சொல்லிவிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் முழு உண்மையின் கனத்தைச் சற்றுக் குறைத்திருக்கிறேன்.

  • The first paragraph reminds me of the persistent nagging of Dr Mathrubootham by Vivek in a movie – in which Mathrubootham changed his name several times, but Vivek would always manage to come up with some hilarious punch dialogues to irritate Mathrubootham! It was a hilarious riot!

    I’ve a great idea – just give your mobile to him, and for God’s sake, don’t ever have any phone in your life. Cut the wires of your land line. Didn’t we live without any phone just 20 years back? Hmmm. but then the way you describe the character, he’d come up with some other trick to get in touch with you!! In a nutshell, I rather pity you.

    Jokes apart, the problem seems to be his self esteem. He needs empathy, at least a patient hearing. Some people, once they pour out their hearts, will become totally relieved at least psychologically.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!