எல்.பி.ரோடில் அரிக்காமேடு

ராமன்

அவர் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். இதோ அதோ என்று இழுத்தே வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சந்திக்க நேர்ந்தது. அடையாறு எல்பி சாலையில் அவர் தனியே ஒரு அரிக்காமேடு வைத்திருக்கிறார். ஒரே வித்தியாசம். இங்கு நாம் தோண்டவேண்டாம். தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அடிக்குறிப்புகளோடு அவர் தயாராக வைத்திருக்கிறார். தொன்மத்தில் ஆர்வமும் கொஞ்சம் கற்பனையில் மிதக்கும் வழக்கமும் இருந்தால் போதும். அவரது அபார்ட்மெண்டுக்குள் இருந்தபடியே ஆயிரம் வருஷங்களுக்கு முன்னோக்கி ஒரு காலப்பயணம் போய்விட்டு வந்துவிடலாம்.

பெட்டி பெட்டியாக ராமன் வைத்திருக்கும் பொக்கிஷங்களுக்கு விலை மதிப்பே சொல்ல முடியாது. அவை பல்லாண்டுகால அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பில் கிடைத்த புதையல்கள். சோழர்கள், பாண்டியர்கள் காலத்துக் காசுகள். மோதிரங்கள். முத்திரைகள். ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் உயிரோட்டமான கதைகள்.

ஒரு சோழர் காலக் காசில் நரேந்திரன் என்று எழுதப்பட்டிருந்தது. இன்றைய பெயர். சோழர்கள் காலத்தில் யாருக்கு அந்தப் பெயர் இருந்திருக்கும்? அதுவும் காசில் எழுதப்படுமளவுக்கு? ஆராய்ச்சி அங்கே தொடங்குகிறது. ராஜராஜ சோழனின் மகள் வயிற்றுப் பேரனுக்கு நரேந்திரன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அவன் பிறந்த சந்தோஷத்தில், அன்று வெளியிட்ட நாணயத்தில் பெயரைப் பொறித்திருக்கிறார் ராஜா.

நாணயம் கிடைத்தது ஒரு பரவசம். அதிலுள்ள பெயர் ஒரு ஆச்சரியம். அதன் பின்னணி இன்னொரு சுவாரசியம்.

ராமன், உங்களுக்கொரு பொற்கிழி தர ஆசைப்படுகிறேன். துரதிருஷ்டவசமாக நான் ராஜராஜ சோழனாக இல்லை.

பொற்கிழிக்கென்ன, என்னிடம் இருக்கிறதே என்று எடுத்துக் காட்டுகிறார். படத்தைப் பார்க்கும் முன்னால் உங்கள் மனத்தில் பொற்கிழி

இதுதான் பொற்கிழி

என்றால் உடனே தோன்றுகிற பிம்பம் என்னவென்று ஒரு கணம் கண்மூடி சிந்தித்துப் பாருங்கள். பளபளவென்று பச்சை, நீலம், சிவப்பு கலரில் ஒரு மூட்டை. குலுக்கினால் உள்ளே தங்க நாணயங்கள் குலுங்கும் ஓசை. எனக்கு இதுதான் வரும். எப்போதும்.

ஆனால் ராமன் எடுத்துக் காட்டிய பொற்கிழி ஒரு குங்குமச் சிமிழைக் காட்டிலும் சற்றே பெரிய அளவில் உள்ளதாக இருக்கிறது. நல்ல உறுதியான, செப்பில் செய்யப்பட்டது. அடக்கடவுளே, இதில் எத்தனை பொற்காசுகள் போடமுடியும்? ஆயிரம் பொன்? அதுவல்லவா கதைகளில் வரும்? இதில் ஆயிரம் கொள்ளுமா?

கொள்ளுமே என்று கிழியில் போடப்படும் பொற்காசு ஒன்றை எடுத்துக் காட்டினார்.

ரங்கநாதன் தெரு பிளாட்பாரங்களில் விற்கும் ஸ்டிக்கர் பொட்டு அளவேயான தங்க நாணயம். நூறு ஆயிரமென்ன? எத்தனை வேண்டுமானாலும் கிழியில் இட்டுக் கிழிக்கலாம்.

ராமனிடம் சோழர்காலப் பொற்காசுகள் மட்டுமல்ல. செப்புக் காசுகள் ஏராளமாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாணயத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் சித்திரங்களும் சொற்களும் அவருக்குச் சரித்திரத்தைச் சொல்கின்றன. அதை அவர் நமக்குப் புரியும் மொழியில் அழகாக எடுத்துச் சொல்கிறார். மதுரையில், அரிக்காமேட்டில், தஞ்சையில் இன்னும் பல்வேறு

ஆவுடையுடன் கூடிய லிங்க மோதிரம்

இடங்களில் அகழ்ந்து எடுக்கப்படும் புதையல்களை ஆராய்வதே ராமனுக்கு முழுநேரப் பணியாக இருக்கிறது. ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த உத்தியோகத்தை இந்த வேலைக்காகவே அவர் விட்டிருக்கிறார். சரித்திரத்தை அறியும் ருசி ஒரு சொட்டு இறங்கிவிட்டால் போதும். அது உங்களை விடாது என்பவர், இந்தத் துறையில் ஐராவதம் மகாதேவனின் சிஷ்யர்.

ராமனின் சேகரிப்பில் என்னைக் கவர்ந்தது ஒரு நூதனமான மோதிரம். பெரும்பாலும் சிவலிங்க டிசைன் உள்ள மோதிரங்கள்தாம். ஆனால் இந்த மோதிரம் சுண்டுவிரலின் நுனியளவே நுழையக்கூடியது. குழந்தைகளுக்கான மோதிரமா?
என்றால், இல்லை. அக்காலத்தில் ஒரே விரலில் நுனியில் ஒன்று, உள்ளே ஒன்று என இரண்டு மோதிரங்களை அணிவது ஃபேஷனாக இருந்திருக்கிறது. ஆதாரம்? ஒரு சோழர்கால சிற்பத்தின் புகைப்படத்தைக் காட்டுகிறார். விரல்களைக் கூர்ந்து பார்த்தால் இரண்டிரண்டு மோதிரங்கள்!

கழட்டி அடித்தால் முட்டியைப் பேத்துவிடுமளவுக்கு கனமான காதணிகள், பாம்பு உருவம் பொறித்த பாம்படங்கள், நெளி மோதிரங்கள், காசுகள், பொற்காசுகள், பொற்கிழிகள், சுடுமண் சிற்பங்கள், அகழ்வாராய்ச்சி தொடர்பான ஆய்வேடுகள், புத்தகங்கள் – ராமன் ஜிப்பா போட்ட ஆராய்ச்சித் தாத்தா இல்லை. ஜீன்ஸ் போடும் முதிரிளைஞர்தான். தமது கண்டுபிடிப்புகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழில் எழுதப் பழகும்படி வற்புறுத்திவிட்டு வந்தேன்.

ஒரு வெண்பாப் புலியின் சகோதரராக இருந்துகொண்டு தமிழில் எழுதாவிட்டால் எப்படி?

Share

15 comments

 • Dear PaRa Sir,

  I like this layout, looks like you’re slowly settling down…you can still try a different background….sorry for this comment in this section.

  Very interesting to read about the “Porkizhi”…

  Regards
  Shriram

 • அவருக்கு எழுத ஆசைதான், ஆனால் எழுதி எ.பி.இம்சை அரசனான தம்பிகிட்ட பல்லுடைப்பட வேண்டுமேன்னு அங்ரேசியில் மட்டுமே மாத்தாடுகிறார் என்று அமெரிக்க கழுகார் சீக்ரெட் பெட்-எக்ஸ் அனுப்பினார்! ;))

 • அடேங்கப்பா.. பொற்கிழி பற்றி மனதில் இருந்ததற்கும் இவர் காட்டுவதற்கும் எத்தனை வித்தியாசம். ஆச்சர்யப்பட்டு போனேன். மோதிரங்கள் குறித்த செய்திகள் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.. அதுவும் அந்த பெயர் பொறித்த நாணயம் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.. ஹேட்ஸ் ஆஃப்..

  கவிதை காதலன்

 • நன்றி பாரா. இம்மாதிரி பலபேர் வெளியே தெரியாமல் பல முக்கிய செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சினிமா நடிகர்களையும் அரசியல்வாதிகளையும்தான் மக்கள் கவனிக்கிறார்கள். அமைதியாக நம் வரலாற்றுக்கும் தொன்மங்களுக்கும் ஆதாரங்கள் தேடி சேகரித்துவரும் ராமன் போன்றவர்கள் உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர்கள். இனம் கண்டு அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. திரு. ராமன் அவர்களை தொடர்புகொள்ள போன் நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரி அளித்தால் பயனுள்ளதாயிருக்கும்.

 • சார்,
  காலையில் இருந்த theme நன்றாகவே இருந்தது. back ground ல் போர் / குதிரை வீரர்கள்.
  இந்த theme மொட்டையாக இருப்பதாக உணர்கிறேன்.

 • ராஜசேகர்:இந்தத் தளத்தில் மேட்டர் மாறாவிடினும் அடிக்கடி தீம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நெடுநாள் வாசகரான நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இப்போது இது. நீங்கள் திரும்ப வரும்போது வேறொன்றாகவும் இருக்கலாம். இது என் விளையாட்டல்ல. எம்பெருமான் திருவிளையாடல்.

 • சரித்திரம் ஒரு அற்புதமான விஷயம். தோண்டத்தோண்ட ஆர்வம் குறையாது. இருந்தாலும் ஒரு சந்தேகம். இது போன்ற கலைப்பொக்கிஷங்களை தனி ஆள் வைத்திருக்க அரசு (இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை) அனுமதிக்குமா ? ராமன் அவர்கள் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறாரா ? நான் ஆசைப்பட்டால் இப்படி வைத்திருக்க முடியுமா ?

 • ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் அடங்கிய பதிவு. ஆகக் கூடி ‘தருமி’ இந்தச் சின்ன செப்புக்காகவா சொக்கனாதரிடம் கேள்விகளைக் கேட்டிருப்பார்? அது போகட்டும்.

  உங்கள் பதிவின் பக்க மூலத்தை பார்த்த போது ‘theProfessional’ தீம் உபயோகித்துள்ளது தெரிய வந்தது. ஒரு ஆர்வத்தில் அந்த வலைப் பக்கம் போன போதுதான் அது எப்படிப் பட்ட ஜகஜ்ஜாலமான தீம் என்று தெரிய வந்தது. ஆனால் ஏன் இப்படி மொக்கையான உபயோகம்? ஒரு வேளை அடுத்த பதிப்புக்கோ?

  அது சரி, PHP கற்றுக் கொண்டாகி விட்டதா? இல்லை, இன்னும் ஒரு மணி நேர வாத்தியாரைத் தேடும் படலம் தொடர்கிறதா?

 • நல்ல கட்டுரையை எழுதியமைக்கு நன்றி. ராமனின் போன் நம்பர் கொடுங்கள் அவரை தொடர்பில் வைத்திருக்க அனைவருக்கும் பயனுள்ளதாக‌ இருக்கும்.

 • ஒரு சமயம் அவர் வீட்டுக்குப் போயிட்டு………( எல்லாம் அந்த வெண்பா புலியைச் சந்திக்க) ‘ஆ’ என வாய் பிளந்து நின்னேன். என்னமாதிரி ஒரு கலெக்ஷன்!!!!! தனியா ரெண்டு நாள் ஒதுக்கினால்தான் பார்த்து முடிக்க முடியும்!

  அவர் எழுதிய புத்தகம் (பல்லவர் காசுகள்) ஒன்று(ம்) பரிசாகக் கிடைச்சது:-)

 • // தமது கண்டுபிடிப்புகள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழில் எழுதப் பழகும்படி வற்புறுத்திவிட்டு வந்தேன்.//

  Please dont discourage his english writing. Tamil is not a suitable (businesswise) langauge for this type of issues..

  -Gokul

 • THAGAVALUKKU NANDRI. ENGALUKKUM ADHAI PAARKA MUDIYADHADHAAL, NEENGAL ELLAVATRAIYUM PHOTO POTTIRUKKALAM.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter