குருவி

குருவிக் கூட்டம்

காம்பவுண்டு சுவருக்கு மேலே ஏறி நின்று அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிய தாடிக்காரன் ஒருவன் பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தான். ஸ்பீக்கர் செட் வைத்து உள்ளே வந்த வண்டி டண்டண்டன் டர்னா என்றது. இளைய தளபதியின் முகத்தில் ஆவின் பால் பீய்ச்சியடிக்கப்பட்டது.

ஒன்று. இரண்டு. மூன்று. நாலு. பத்து. இருபது. அதற்குமேல் எண்ணமுடியவில்லை. வினைல் போர்டுகள் அனைத்தும் பாலாபிஷேகம் பெற்றன. கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, காவலுக்கு இருந்த போலீசார் இன்னதுதான் நோக்கம் என்றில்லாமல் அகப்பட்ட உருவங்களின்மீதெல்லாம் தடியடிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள்.

பேண்ட் வாத்திய கோஷ்டி

அடியை வாங்கியபடி அலறி ஓடிய கூட்டம் ஆங்கோர் ஆட்டோவைச் சூழ்ந்துகொள்ள, உள்ளிருந்த எட்டாவது வள்ளல் யாரோ ஒருவர் அத்தனை பேருக்கும் கறுப்பு நிற பனியன் ஒன்றைப் பரிசாக அளித்தார். போட்டிருந்த சட்டைக்கு மேலே அத்தனை பேரும் அந்த பனியனை அணிந்துகொள்ள, ஆயிரம் வாலா சரவெடி விண்ணைப் பிளந்தது. திடீரென்று திறந்துவிடப்பட்ட கூண்டுகளிலிருந்து நூற்றுக்கணக்கான குருவிகளும்.

சுட்டெரிக்கும் பதினொரு மணி வெயிலில் சூரியன் திரையரங்கத்தில் குருவி ரிலீஸ். விஜயின் குருவி.

ரஜினிக்குப் பிறகு இம்மாதிரியான ரசிகர்கள் தமிழகத்தில் வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. குதிரைகள் பூட்டிய சாரட்டுகள், அலங்காரத் திறந்தவெளி வண்டியில் பேண்ட் வாத்தியம், முன்னால் ஆடுவதற்கு நிறைய மேக்கப்பும் குறைவான உடைகளும் அணிந்த பெண்கள், பறக்கவிட ஜிகினாத் தாள், முப்பது ரூபாய் டிக்கெட்டை 150 கொடுத்து வாங்கியதில் அடைந்த பெருமிதம் குறித்த பேச்சு.

சாரட் வண்டிக் கொண்டாட்டம்

ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. வழக்கமான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறிய வேறொன்று. இது தரணி படம். தில், தூள், கில்லி தரணி. மினிமம் கேரண்டி பொழுதுபோக்கு. தவிரவும் விறுவிறுப்பு. வேகம். ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட டண்டண்டண் டர்னா.

டைட்டில் கார்ட் விசில்கள், ஹீரோ அறிமுகக் காட்சிக் கத்தல்கள், களேபரங்களைப் பார்த்தபோது இன்றைக்குப் படம் பார்க்கச் சென்றது தவறோ என்றுதான் முதலில் தோன்றியது.

விஜய் ரசிகர்கள் நல்லவர்கள். ஏழாவது சீனில் அமைதியடைந்துவிட்டார்கள். அல்லது வாயடைக்கச் செய்யப்பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

படம் முடிகிறவரை கத்தல், விசில் ஏதுமில்லை. அமைதியாகவே பார்க்க முடிந்தது.

கதை என்னவென்றெல்லாம் கேட்காதீர். விஜய் ஒரு உழைக்கும் தொழிலாளி. விஜய் ஒரு கார் ரேஸ் வீரர். விஜய், மலேசியாவுக்குப் பொருள் கடத்தி, பொருள் வாங்கி வரும் குருவி. விஜய் ஒரு நல்லவர். விஜய் ஒரு வைரம் திருடும் திருடன்[ர்]. விஜய் ஒரு வீரர். விஜய் ஒரு காதலர். விஜய் கல் குவாரி அடிமைகளை மீட்கும் ஒரு மீட்பர். சகட்டு மேனிக்குக் கண்ணில் பட்ட அத்தனை பேரையும் கோடரியால் வெட்டிக் கடாசினாலும் போலீஸ் ஆபீசர் அவரது சேவையைப் பாராட்டி சுபம் போடக்கூடிய அளவுக்கு சமூக சேவை செய்தவர்.

அப்புறம் த்ரிஷா. பலத்த போட்டிகளுக்கிடையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார் என்று பத்திரிகைகளில் படித்தேன். ஒரு கௌரவ நடிகைக்கான அளவு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. உடைகளும் மேக்கப்பும் அவருக்கு வயதாகிவருவதைச் சொல்கின்றன. மீறி அவர் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும் சில காட்சிகளில் பரிதாப உணர்ச்சி மட்டுமே தோன்றுகிறது.

பின்னனி இசையும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்திருக்கின்றன. ஆனால் பாடல்களில் வீசும் டப்பாங்குத்து நெடி முழுதும் ஆந்திர மார்க்கெட்டை மனத்தில்வைத்தே அமைக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. ஒரு டண்டண்டன் டர்னா இல்லை. அனைத்துமே டண்டண்டன் டர்னாதான்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் அதிரடியாக ஒரு படம் என்கிற திட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கதை எங்கு போகிறது என்றே உணரமுடியாமல் சென்னை, மலேசியா, ஆந்திரா, மீண்டும் சென்னை, மீண்டும் ஆந்திரா என்று ஷட்டில் அடிப்பதில் மிகவும் சோர்வாகிவிடுகின்றது. தவிரவும் தரணி படங்களில் தவறாமல் இருக்கும் இயல்புத்தன்மை, ஓரிழை சமூக அக்கறை, ரசிக்கத்தக்க நகைச்சுவை போன்றவை இந்தப் படத்தில் சுத்தமாக இல்லாதிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும்.

படம் முழுதும் பறந்து, பறந்து, பறந்துகொண்டேஏஏஏஏஏ இருக்கிறார் விஜய். அடிப்பதற்கும் பறக்கிறார், நடப்பதற்கு பதிலாகவும் பறக்கிறார். காதல் மாதிரி என்னவோ ஒன்று வருவதற்கான காட்சிகளில்கூட ஜாக்கிசான் போல் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பலமாடிக் கட்டடத்திலிருந்து குதித்தால்தான் அவருக்கு மூட் வருகிறது.

எனவே, இந்தப் படத்தில் உள்ள கொலைக் காட்சிகளை மட்டும் வெட்டி நீக்கிவிட்டுத் தொகுத்து சுட்டி டிவியில் ஒளிபரப்பினால் குழந்தைகள் பார்க்கும்.

நீங்களும் நானும் பார்க்க லாயக்கில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!