சில குறிப்புகள் – விடுபட்டவை

  • முதல்முறையாக இம்முறை நகர தீபாவளி. போக்குவரத்து நிறைய உள்ள சாலைகளில்கூட சகட்டு மேனிக்கு வெடி வைக்கும் மக்கள் மிகுந்த அச்சம் தந்தார்கள். காலை எட்டு மணி சுமாருக்கு மாவா வாங்க வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி, நான்கு இடங்களில் தடுமாறி விழப்போகுமளவுக்கு இன்னும் மக்களின் வெடி விருப்பம் தீரவில்லை. குறிப்பாக இளம் பெண்கள். வாழ்க.

சன் டிவியில் அப்துல் கலாமை விவேக் பேட்டி கண்டதைப் பார்த்தேன். கலாமிடம் மக்கள் எதிர்பார்ப்பது அபத்தக் கவிதைகளையல்ல என்பதை யார் அவருக்கு எடுத்துச் சொல்வார்கள்? முற்றிலும் வீணாக்கப்பட்ட ஒரு வாய்ப்பு.

  • நிறைய எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய பருவ மழை, பருவம் எய்துவதற்கு முன்னமே விடைபெற்றுவிட்டது. இவ்வருட நீர்ப்பஞ்சத்தை எதிர்நோக்குமளவுக்கு நிலத்தடி நீர் சேர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சென்னையில் சாலைகள் அவ்வளவு ஒன்றும் மோசமடையவில்லை என்றே நினைக்கிறேன். பனி வரத் தொடங்கிவிட்டது. இனி சென்னையில் மழை இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் தவறாமல் மின்சாரத் தடை மட்டும் தினசரி. ஆற்காடு வீராசாமியின் ஒழுங்கு ஏன் இயற்கைக்கு இல்லை?
  • குழந்தைக்குச் சற்று சுகமில்லாமல் ஆகி, சைல்ட் டிரஸ்டில் மூன்று தினங்கள் கழிக்கும்படியானது. கடவுளே, எத்தனை குழந்தைகள், எத்தனை விதமான உபாதைகள்! தங்க வைக்க அறைகள் போதாமல் வராண்டாக்களில் கிடத்தியிருக்கும் அவலத்தை வருணிக்கச் சொற்களில்லை. பல மாநிலங்களிலிருந்தும் குழந்தைகள் இங்கே வருகிறார்கள். பெரிய பெரிய மருத்துவமனைகளெல்லாம் சைல்ட் டிரஸ்டுக்கு எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். பிறந்து சில மாதங்களேயான குழந்தைகளின் புறங்கையில் சலைனுக்காக ஊசி ஏற்றி் வரிசையாகத் தொங்கவிட்டிருப்பதைக் காண மிகவும் வேதனையாக இருக்கிறது. கண்டதில் நூற்றுக்கு அறுபது சதம் டெங்கு ஜுரம். வேறு வழியில்லை. கொட்டிய மழையில் சைல்ட் டிரஸ்ட் வளாகமே தெப்பமாகத்தான் மிதந்தது.
  • சென்னைக்குக் குடிவந்தபின்பு நேற்று முதல் முறையாக நண்பர் ஜே.எஸ். ராகவன் வீட்டுக்குச் சென்று வந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை எழுத்தாளர். அதி தீவிர ஒழுக்கவாதி. அவரது வாழ்வில் அவர் கடைபிடிக்கும் நேர்த்திகளை நேருக்கு நேர் பார்த்து சில சமயம் வியந்திருக்கிறேன். பல சமயம் அச்சமடைந்திருக்கிறேன்! வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒழுக்கம் அவருடையது.

‘ராகவன், உங்கள பாக்கறதுக்கு இன்னிக்கி வர்றதா சொல்லியிருந்தேன். ஞாபகமிருக்கோல்யோ? இப்ப மணி த்ரீ ஃபைவ் ஆறது. த்ரீ நைனுக்கு உங்க ஆஃபீஸ்ல இருப்பேன்.’ என்பார். முன்னதாக மாலை மூன்று பத்துக்கு வருவதாகச் சொல்லியிருப்பார். சரியாக மூன்று ஒன்பதுக்கு எங்கள் அலுவலக வரவேற்பரையில் அவரைப் பார்க்கலாம். அங்கிருந்து மாடியேறி வந்து உட்கார ஒரு நிமிடம். சரியாக மூன்று பத்துக்கு ஜே.எஸ். ராகவன் ஆஜர்.

‘ட்வெண்டி மினிட்ஸ் எடுத்துப்பேன். அதுக்குள்ள பேசவேண்டியதைப் பேசிடறேன்’ என்று ஆரம்பித்தால் சரியாகப் பத்தொன்பதாவது நிமிடத்தில் வந்த விஷயத்தை முடித்துவிட்டு, ‘வேறென்ன விசேஷம்?’ என்பார். இருபதாவது நிமிடம் கிளம்பிவிடுவார்.

‘சார், தமாஷா வரிகள் அடுத்த பாகம் ரெடியா? அனுப்பிடுங்களேன்’ என்பேன்.

‘ஓயெஸ். நாளைக்கு வந்துடும்.’ என்பார். மாம்பலம் டைம்ஸில் அவர் எழுதும் நகைச்சுவைப் பத்தி அது. மூன்றாண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பது, நாற்பது கட்டுரைகள் சேர்ந்ததும் புத்தகமாக்குவதற்காக என்னிடம் அனுப்புவார்.

பத்திரிகை கட்டிங்குகளை அப்படியே எடுத்து பின் அடித்து அனுப்புவதோ, எழுதிய பிரதியை முனை மடங்கிய நிலையில் கற்பழிக்கப்பட்ட கதாநாயகிபோல் அனுப்புவதோ அவர் சரித்திரத்திலேயே கிடையாது. இதழ் வெளியானதுமே தனது கட்டுரையை அதிலிருந்து ஒரு ஏ4 சைஸ் தாளில் அழகாக ஜெராக்ஸ் எடுத்து வைத்துவிடுவார். ஒரு புத்தகமளவுக்குச் சேர்ந்ததும் அப்படியே அழகாகக் கொண்டுபோய்க் கொடுத்து பைண்ட் செய்துவிடுவார். முன்னதாக, கட்டுரை வரிசை எண்களைச் சரிபார்த்து, பொருளடக்கம் தயார் செய்து, ஒவ்வொரு கட்டுரைக்குமான படங்களைத் தனியே ஜெராக்ஸ் எடுத்து இணைத்து – அந்த மேனுஸ்கிரிப்ட் பிரதியே ஒரு முழுமையான புத்தகம் போலிருக்கும். கம்போஸ் செய்கிறவர்களுக்கு ஒரு சிறு சந்தேகம் கூட வராது.

அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை எழுதியுள்ள அனைத்துக்கும் ஒரிஜினல் – ஜெராக்ஸ் – புத்தக வடிவம் மூன்றும் அவரிடம் உண்டு. எத்தனை ஆயிரம் பக்கங்கள் என்று கணக்கே கிடையாது. ‘இதெல்லாம் என்ன சார்? சின்ன வேலை’ என்று எளிதாகச் சொல்லிவிடுவார். இம்மாதிரியான விஷயங்களில் முழு ஒழுங்கீனம் கடைபிடிப்பதில் முதன்மையானவனான எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னும்.

அவர் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டும். தனது படிப்பறையை – கோயில் மாதிரி என்று சொல்லத் தோன்றவில்லை, எந்தக் கோயிலும் அத்தனை நேர்த்தியாக இருக்காது – அப்படியொரு ஒழுங்கில் வைத்திருப்பார். ஆயிரக்கணக்கான புத்தகங்கள், துறை வாரியாக, ஆசிரியர் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, இண்டக்ஸ் செய்யப்பட்டு ஒழுங்காக அணிவகுத்திருக்கும். படிக்கும்போது முக்கியமான வரிகளை அடிக்கோடு இட விரும்பினால், அதற்கென்றே தயாராக ஓர் அரையடி ஸ்கேலும் கூரான பென்சிலும் அவர் டேபிளில் எப்போதும் தயாராக இருக்கும். கண்டபடி புத்தகத்தில் கிறுக்கும் வழக்கம் அவரிடம் அறவே கிடையாது. எந்தப் புத்தகமும் முனை மடங்கியிருக்காது. ஒரு தூசு தும்பு இருக்காது. நடுவே நாலு பக்கம் கிழிக்கப்பட்டிருக்காது. பைண்டிங் பிய்ந்து வந்திருக்காது. ஒரு புத்தகம் – முக்கியமான புத்தகம், ஆனால் மிகப் பழையது, நைந்து போகப்போகிறது என்றால், தேவைப்படும் யாருக்காவதோ, ஏதாவது நூலகத்துக்கோ கொடுத்துவிட்டு, வேறு புதிய பிரதியை வாங்கி வைத்துவிடுவார்.

ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போகுமுன் மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைத் தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைப்பார். அப்பாயின்மெண்டுகளுக்காகத் தனியே ஒரு நோட்டு. கட்டுரைகள், கதைகள் அச்சான இதழ், தேதி விவரங்கள், புத்தக வெளியீடுகள் தொடர்பான குறிப்புகளுக்குத் தனி நோட்டு.

ஒரு நாள் திடீரென்று, ‘ராகவன், கிழக்கு ஆரம்பிச்சதுலேருந்து இதுவரைக்கும் எனக்கு எவ்ளோ ராயல்டி வந்திருக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.

எனக்கெப்படித் தெரியும்? என் பணி ஒரு புத்தகத்தை எடிட் செய்து அனுப்புவதுடன் முடிந்துபோகிறது இங்கே.

ஜே.எஸ்.ஆர். சட்டென்று ஒரு நோட்டைப் பிரித்துக் காட்டினார். தேதி, மாதம், வருட விவரங்கள், எந்தப் புத்தகம், எத்தனாவது பதிப்பு, எந்த மாதம் முதல் ராயல்டி, எந்த மாதம் அடுத்த ராயல்டி, வருடாந்திர ராயல்டி என்று சுத்தமாகப் பட்டியல் போட்டு வைத்திருந்தார். எங்கள் அலுவலகத்தில் ஏதாவது கணக்குக் குழப்பம் வந்தால், அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்துச் சரிசெய்துவிடலாம் போலிருந்தது. வியப்பாக இருந்தது. இத்தனை பர்ஃபெக்ட்டான எழுத்தாளர் வேறு யாரையும் நான் சந்தித்ததே கிடையாது!

காலை ஆறு மணிக்கு லெவன்த் அவென்யூவில் வாக்கிங் போவேன் என்று அவர் சொன்னால் சரியாக ஆறு மணிக்கு அங்கே அவரைப் பார்க்கலாம். இந்த வேலையை இன்ன தேதி முடிப்பேன் என்று சொன்னாரென்றால், அந்த வினாடியுடன் அதைப் பற்றிய கவலையை மறந்துவிடலாம்.

தன்னால் முடியக்கூடியதை மட்டுமே சொல்வதும், சொல்லிவிட்டதை எப்பாடு பட்டாவது செய்து முடிப்பதும் அவரது சிறப்பு அடையாளங்கள்.

‘போரடிக்கலியா சார் உங்களுக்கு? இவ்ளோ ஒழுக்கம் உடம்புக்கு ஆகாதே சார்!’ என்பேன் விளையாட்டாக.

சிரிப்பார். ஆனால் ஒருபோதும் தன் இயல்பை அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். தனி வாழ்விலும் எழுத்து வாழ்விலும் அலுவலகத்திலும் மிக உயர்ந்தபட்ச ஒழுக்கங்களை மட்டுமே இன்றுவரை கடைபிடித்து வரும் ஜே.எஸ். ராகவனுக்கு திடீரென்று ஒருநாள் இதயம் தொடர்பான பிரச்னை வந்தது.

ஆச்சர்யமாக இருந்தது. புத்தகங்களையே அத்தனை அக்கறையுடன் பராமரிப்பவர் தன்னைப் பராமரிக்காமல் இருப்பாரா? ஆனாலும் வந்தது. டாக்டர் சிவகடாட்சத்திடம் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், ரெகுலர் செக்கப்புக்காக அடிக்கடி டாக்டரைச் சந்திப்பார் போலிருக்கிறது.

ஒரு சமயம் டாக்டர் ஏதோ ஒரு பழைய விவரத்தைக் கேட்க, ஜே.எஸ். ராகவன் தாம் பிறந்தது முதல் அன்றைய தேதி வரையிலான தனது மருத்துவப் பரிசோதனை விவரங்களை ஒரு ஃபைலாக அவரிடம் நீட்டியிருக்கிறார்.

டாக்டர் மிரண்டு போய்விட்டார். ஒரு பெரிய ஹாஸ்பிடல் கூட அத்தனை ரெக்கார்டுகளை ஒழுங்காகப் பராமரிக்குமா என்பது சந்தேகமே.

வேறு வேலையே இல்லாமல் முழுநேர ஒழுக்கவாதியாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் அவரோ, ஒரு மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி. ஊர் ஊராகச் சுற்றுபவர். உட்கார நேரமில்லாமல் அலைபவர். அலுவலகம் – வீடு என்ற பாகுபாடு இல்லாமல் தனது ஒழுக்க விதிகளை எல்லா இடங்களிலும் கடைபிடிப்பவர்.

இது எப்படி சாத்தியம், எப்படி சாத்தியம் என்று ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்த்துப் பார்த்து மலைத்துப் போவேன். மிகுந்த மனச்சோர்வோ, வெறுப்போ, களைப்போ, வேலை செய்ய முடியாத மன நெருக்கடிகளோ இருக்குமானால் ஒரு போன் செய்துவிட்டு நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். ஒரு மணிநேரம் அவரது அறையில் உட்கார்ந்திருந்தாலே போதும் எனக்கு. அந்தக் காற்றை சுவாசித்தாலே புத்துணர்ச்சியும் உத்வேகமும் பொங்கிவிடும். கூடுதலாக, ஜே.எஸ். ராகவனின் நகைச்சுவை கொப்பளிக்கும் இதமான பேச்சு. அதிர்ந்து ஒரு சொல் பேசமாட்டார். அறையில் ஒருவர்தான் இருக்கிறார் என்றால் ஒருவருக்கு மட்டும் கேட்கக்கூடிய தொனியில் பேசுவார். நான்கு பேர் இருப்பார்களேயானால், நான்கு பேருக்குக் கேட்கக்கூடிய குரல் வரும். எப்போதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பாசிடிவான சிந்தனைகளை மட்டுமே அவர் வெளிப்படுத்துவார். அது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

பிறகு விசாரித்துப் பார்த்தால், இதே காரணங்களுக்காக அவர் வீடுதேடி வரும் வழக்கத்தை வேறு பல எழுத்தாளர்களும் வைத்துக்கொண்டிருக்கும் விவரம் தெரியவந்தது. என் நண்பர் கிரேசி மோகனும் அவர்களில் ஒருவர்.

ஜே.எஸ். ராகவனைப் போன்ற ஓர் ஒழுக்கவாதி ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருப்பது அபூர்வமானது.

  • யுத்தம் சரணம் தொடர் அறிவிப்பு வெளியானதிலிருந்து ஏராளமான விசாரணைகளும் வாழ்த்துகளுமாக வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. வாசகர்களின் ஆர்வத்துக்கு நன்றி. இது என் பொறுப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இலங்கைப் பிரச்னையைப் பொருத்த வரை, சார்பற்ற மதிப்பீடு என்று தமிழில் பெரிதாக ஏதும் வந்ததில்லை. ஓர் எளிய முயற்சியாகத்தான் தொடங்குகிறேன். நேற்று விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்த என்னுடைய காவல் துறை நண்பர் ஒருவர், திடுக்கிடச் செய்யும் விதத்தில் ஒரு கேள்வி கேட்டார்: ‘என்ன சார் இது? நீங்க தமிழ் ஆதரவாளரா?’

அடக்கடவுளே! தமிழ் அல்லவா இதுநாள் வரை என் ஆதரவாளராக இருந்துவந்திருக்கிறது!

* பி.கு: ஒபாமா வெற்றி பெற்றமைக்காக அமெரிக்கர்களுக்கு வாழ்த்துகள். தனியே ஒரு பத்தி எழுத எண்ணிக்கொண்டிருக்கிறேன். நேரம் அமையவேண்டும்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

11 comments

  • ஹும்…. நீங்களும் தான் ‘ராகவன்’னு பேர் வச்சிண்டுருக்கேள்…..ஹி…ஹி…

  • ”””ஞாபகமிருக்கோல்யோ?””’
    /////நீங்களும் தான் ‘ராகவன்’னு பேர் வச்சிண்டுருக்கேள்////

    Hee hehe hee….

  • //ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போகுமுன் மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைத் தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைப்பார். அப்பாயின்மெண்டுகளுக்காகத் தனியே ஒரு நோட்டு. கட்டுரைகள், கதைகள் அச்சான இதழ், தேதி விவரங்கள், புத்தக வெளியீடுகள் தொடர்பான குறிப்புகளுக்குத் தனி நோட்டு.//

    என் உயரதிகாரி ஒருவர் கூட இப்படி நோட்டுப்புத்தகத்தில் எழுதுபவர் தான்.

    ஒரு முறை பழைய சம்பவம் குறித்த சந்தேகம் வந்த பொழுது இருபது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நோட்டை அடுத்த நாள் கொண்டு வந்து விளக்கினார்.

    நான் கூட சில நாட்கள் இந்த பழக்கத்தை கடைபிடித்தேன் 🙂 பிறகு விட்டு விட்டேன் 🙁

  • ஹ்ம்ம் இப்படி சில அதிசயப் பிறவிகள் …ஆச்சர்யப் படமட்டும் தான் முடியும் ,நம்மால் ஆகாது இத்தனை நேர்த்தி (ஏன் ராகவன் சார் ஒழுக்கம் என்ற வார்த்தையை விட நேர்த்தினு மட்டும் சொல்லிருக்கலாம் நீங்க…சோம்பேறிகள் ஒழுக்கமில்லாதவர்கள்னு சொல்றமாதிரி இருக்கு,இதுக்குப் பேர் நேர்த்தி இல்லையா? வேணும்னா செய்நேர்த்தி அல்லது அதிவேக செயல் திறன் இல்லாதவர்கள்னு சொல்லிக்கலாம் .

  • ஜே.எஸ்.ஆர். பற்றி வாசிக்க வாசிக்க அதிசயமாக இருக்கிறது. என்னைப் போன்ற வாழைப்பழ சோம்பேறிகள் வாழும் நகரத்தில், நாட்டில் இப்படியும் இருக்கிறார்களே? 🙂

  • தொடருக்கு வாழ்த்டுக்கள், ஒரு சந்தேகம், இந்த தொடரை விடுதலைபுலிகளுக்கு சாதகமாக எழுதுவீர்களா இல்லை நடுநிலையோடு எழுதுவீர்களா?

    தொடர் எப்போ ஆரம்பம் என்று போடவேயில்லை?

    ஆரம்பிக்கும் போது சொல்லிடுங்கோ, நான் மிஸ் பண்ணீடபொறேன்

  • ‘ட்வெண்டி மினிட்ஸ் எடுத்துப்பேன். அதுக்குள்ள பேசவேண்டியதைப் பேசிடறேன்’ என்று ஆரம்பித்தால் சரியாகப் பத்தொன்பதாவது நிமிடத்தில் வந்த விஷயத்தை முடித்துவிட்டு, ‘வேறென்ன விசேஷம்?’ என்பார். இருபதாவது நிமிடம் கிளம்பிவிடுவார்.

    Good habit but check whether he does the same with his wife:). I wont be surprised if he had done so.

  • —சன் டிவியில் அப்துல் கலாமை விவேக் பேட்டி கண்டதைப் பார்த்தேன்.—-

    பேட்டியா? இது எப்ப வந்தது? சன் டிவியில் தீபாவளியன்று லேப்டாப்பை பார்த்து கலாம் படித்ததுதானே ஒளிபரப்பானது!?

    ஜேயெஸ் ராகவன் குறிப்புகள் தூள்.

    சைல்ட் ட்ரஸ்ட் 🙁

  • ஜே.எஸ்.ஆர். பற்றி வாசிக்க வாசிக்க அதிசயமாக இருக்கிறது. என்னைப் போன்ற வாழைப்பழ சோம்பேறிகள் வாழும் நகரத்தில், நாட்டில் இப்படியும் இருக்கிறார்களே

  • ஜே.எஸ்.ராகவன் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழில் மொழி மாற்றம் செய்து என் பதிவில் இட்டிருக்கிறேன்.

    balaji_ammu.blogspot.com/2008/07/449.html

  • நிறைய எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய பருவ மழை, பருவம் எய்துவதற்கு முன்னமே விடைபெற்றுவிட்டது. இவ்வருட நீர்ப்பஞ்சத்தை எதிர்நோக்குமளவுக்கு நிலத்தடி நீர் சேர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சென்னையில் சாலைகள் அவ்வளவு ஒன்றும் மோசமடையவில்லை என்றே நினைக்கிறேன். பனி வரத் தொடங்கிவிட்டது. இனி சென்னையில் மழை இருக்குமா என்பது சந்தேகமே

    போதும் சார், இதுக்கு மேல தாங்காதுன்ற அளவுக்கு மழை பெய்துவிட்டது…!!

    சரியான வடிகாலமைப்பு இல்லாததால், அவதிப்பட்ட சிறுவன் பாடுகிறான் சரியான சமயத்தில் “RAIN RAIN GO AWAY, COME AGAIN ANOTHER DAY”

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading