தினமும் வீட்டில் இருந்து என் அலுவலகத்தைச் சென்றடைய ஒன்றே கால் மணி நேரம் ஆகும். பதினைந்து கிலோ மீட்டர் தொலைவு என்பது மட்டும் காரணமல்ல. அந்த நாராசப் போக்குவரத்தில் எனது இரு சக்கர வாகனத்தை நடத்தித்தான் செல்ல முடியும். ஓட்டிச் செல்வது கஷ்டம். அசப்பில் பிள்ளையார் மூஞ்சூறில் போவதுபோலத்தான் போய்க்கொண்டிருப்பேன். ஏழெட்டு அடிக்கு ஒருதரம் போக்குவரத்துக் கூழில் வண்டியை நிறுத்தவேண்டி வந்துவிடும். காலால் உந்தி உந்தியே நாலைந்து கிலோ மீட்டர்களைக் கடந்த அனுபவம் எனக்குண்டு.
இந்த தினசரிக் கொடும்பயணக் களைப்பைப் போக்க எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட வழி, பாதையெங்கும் இரு புறமும் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் கொட்டையெழுத்துக் காவியங்களின் மொழிப் பிழையை ரசிப்பது.
என் ரூட்டில் மொத்தம் பதினாறு அம்மா விளம்பரங்கள் இருக்கும். நான்கு சுவர்களில் வைகோ. இரண்டு கலைஞர். மூன்று திருமா. கண்டோன்மெண்டார் என்று யாரோ ஒருத்தர் பெயர் தாங்கிய விளம்பரச் சுவர் ஒன்று உண்டு. அவர் யார், எந்தக் கட்சி என்று இன்னும் கண்ணில் பட்டதில்லை.
இந்த விளம்பரச் சுவர்களுக்கு ஆயுள் சந்தா செலுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பிரதி மாதம் முதல் வாரத்தில், எழுதிய விளம்பரத்தை வெள்ளையடித்து அழித்து, மீண்டும் புதிதாக எழுதுவார்கள். கவித்துவ வரிகளில் ஒரு சில மாறுதல்கள் இருக்கும். போன மாதம் வரை காவிரித் தாயாக இருந்தவர் (ஆனால் த் இருக்காது.) இம்மாதம் காவிய நாயகியாக மாறிவிடுவார். பசி தீர்க்கும் பாசத்தாய் (இங்கும் த் கிடையாது) பத்து நாள் அவகாசத்தில் துயர் துடைத்த தேவதையாகிவிடுவார்.
கலைஞர் விளம்பரங்களில் இந்த அதிரடி மாறுதல்கள் அதிகம் கண்ணில் படாது. ஈவெரா அண்ணா கலைஞர் ஸ்டாலின் படங்களை அழுத்தமாக வரைந்து, சமய சந்தர்ப்பத்துக்கேற்ப கலைஞர் அழைக்கிறார் அல்லது தளபதி அழைக்கிறார் என்று மட்டும்தான் மாற்றுவார்கள். ஆனால் இவண் என்று போட்டு அடியில் இருபது இருபத்தைந்து பெயர்களைச் சேர்ப்பார்கள். இந்தப் பெயர்களில் அவ்வப்போது மாற்றம் இருக்கும். பெயர் வரிசையிலும் மாறுதல்கள் இருக்கும். அதன் பின்னால் இருக்கக்கூடிய நுண் அரசியலை யோசித்தபடி வண்டி ஓட்டினால் கொஞ்சம் பொழுது போகும்.
இந்த விளம்பரப் புரட்சியில், புரட்சி விளம்பரங்களாகப் போட்டுத் தள்ளுபவர்கள் திருமாவளவன் ஆட்கள்தாம். அலைகடல், ஆர்ப்பரிப்பு (இதிலும் ப் இருக்காது), எழுச்சி, விதி செய்வோம் என்றெல்லாம் மிரட்டுவதில் இவர்களை விஞ்ச ஆள் கிடையாது. தொல் என்பதை மட்டும் ஒரு சுவரில் எழுதிவிட்டு, தைரியமாக திருமாவளவனை அடுத்த சுவருக்குக் கொண்டுபோய்விடுவார்கள். இந்தப் பிரம்மாண்டம் அக்கால டி. ராஜேந்தர் செட்டுகளை நினைவுபடுத்தும். பெரும்பாலும் திருமா விளம்பரங்களுக்குப் பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் மூர்த்தியார் என்பவரது விளம்பரம் இருக்கும். இவர் அவ்வையார், பாரதியார் வழியில் வந்தவரோ என்று ரொம்ப நாள் ஒரு சந்தேகம் இருந்தது. சேச்சே, இருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். வைகோவின் சுவர் விளம்பரங்களில் அவர் பெயர் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். என்ன நிகழ்ச்சி அல்லது அறிவிப்பு என்பதைத் தேடித்தான் படிக்க முடியும்.
இவ்வாறாக என் பயணக் களைப்பை இச்சுவர் விளம்பரங்கள் ஓரளவு போக்கிக் கொண்டிருந்தன. இனி அதற்கு வழியில்லை. நேற்று வண்டியில் போகும்போது சாலையின் இருபுறமும் வெளேரென்று இருந்தது. திடீரென்று சாலையே விதவையாகிவிட்டாற்போலத் தோன்றியது. ஒரு விளம்பரம் மிச்சமில்லை. அனைத்தையும் அழித்துவிட்டார்கள். ஆங்காங்கே மின்சாரக் கம்பங்களைக் கூட மிச்சம் வைக்காமல் கட்டியிருந்த தட்டிகளைக் காணோம். அம்மா உணவக போர்டுகளில் படங்கள் இல்லை. பேருந்து நிழற்குடைகளுக்கு விபூதிப் பட்டை அடித்த மாதிரி எழுதப்பட்டிருக்கும் உபயதார எம்பிக்களும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
இந்தத் தேர்தல் கமிஷனுக்குத்தான் எத்தனை வானளாவிய அதிகாரங்கள் இருக்கின்றன! விதி செய்யும் தலைவர்களையெல்லாம் விதிமுறைக்கு அடங்கி நடக்க வைப்பதெல்லாம் லேசுப்பட்ட காரியமா? நூறடிக்கு ஒரு வாகனம் பார்க்கிறேன். தேர்தல் பணி என்று பின்புறம் எழுதி ஒட்டிய வாகனங்கள். சந்தேகத்துக்கு இடம் தரும் வேகத்தில் செல்லும் வாகனங்களை சப்ஜாடாக நிறுத்தி ஆராய்கிறார்கள். ஏதாவது சந்து பொந்தில் என்னவாவது ஒரு கட்சி விளம்பரம் சின்னதாக ஒளிந்துகொண்டிருந்தால்கூட விடுவதில்லை. கைவசம் சுண்ணாம்பு பக்கெட்டோடு பத்திருபது பேரை அழைத்து வந்துவிடுவார்களோ? தெரியவில்லை. ஆனால் வேலை ஜரூராக நடப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
விளம்பர அழிப்பெல்லாம் பிரமாதமில்லை. இன்று அழித்தால் நாளை எழுதிவிடலாம். நாளை என்றால் தேர்தலுக்குப் பிறகு. ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வைபவத்தை மட்டும் திட்டமிட்டபடி இவர்களால் முற்றிலும் தடுக்க முடிந்தால் அது மிகப்பெரிய காரியம். என்றென்றும் பேர் சொல்லத்தக்க செயல்.
ஏனெனில், தானாக உற்பத்தியாகாத தன்மானத்தைத் தடியால் அடித்தாவது உயிர்த்திருக்கத்தான் செய்யவேண்டும்.
(நன்றி: தினமலர் – 24/03/16)