கடிதம் புத்தகம் பொலிக! பொலிக! ராமானுஜர்-1000

துறையும் மொழியும்

அன்புள்ள பாரா,

டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம் என்பதால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பொலிக பொலிக நிச்சயம் நான் எதிர்பார்க்காத ஒன்று. நீங்கள் இதற்குமுன் ஆன்மீகம் எழுதியிருக்கிறீர்களா? இந்தப் புத்தகத்தில் உள்ள மொழி உங்களுடைய மற்றப் புத்தகங்களில் இல்லவேயில்லை. இதை எழுதியது உண்மையிலேயே நீங்கள்தானா?

ஆ. குமரகுரு, துவாக்குடி

O

அன்புள்ள குமரகுரு,

ஒரு தேர்ந்த எழுத்தாளன் மொழியின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்தத் தெரிந்தவனாக இருப்பான். எப்படி ஒரு நல்ல டாக்டருக்கு எந்த நோய்க்கு என்ன மருந்து என்று தெரியுமோ அப்படி. எழுதும் விஷயத்துக்கேற்ப மொழி தன்னை வடிவமைத்துக்கொள்ளும். இது ஒரு பெரிய விஷயமே அல்ல.

ஆனால் நான் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் முற்றிலும் என் ஆர்வம் தொடர்பானவை மட்டுமே. நானாக விரும்பாத ஒன்றை என்றுமே எழுத மாட்டேன். ராமானுஜரை எனக்குப் பிடிக்கும். புரட்சியாளர், சீர்திருத்தவாதி என்றெல்லாம் எனக்குக் காரணங்கள் தேவையில்லை. அவர் ஓர் ஆளுமை. தன் காலத்தில் தன்னைச் சுற்றியிருந்த சமூகத்தின்மீது மாபெரும் தாக்கம் நிகழ்த்தியவர். இறுகிய சம்பிரதாயங்கள் கோலோச்சிய காலத்தில் எளிய பக்தி வழி முக்தியென்று ஆற்றுப்படுத்தியவர்.

பக்தி, ஆன்மீகம், மதம், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் பொருள் மாறியுள்ள இக்காலக்கட்டத்தில் இருந்து ராமானுஜரை அணுகுவதும் ஆராய்வதும் சுவாரசியமானது. இன்றைக்கும் அவருக்குத் தேவை இருப்பதுதான் முக்கியம். சமூகம் மொத்தமும் கார்ப்பரேட் சாமியார்களின் பிடியில் விழுந்துகொண்டிருக்கிறது. அல்லது திராவிட நாத்திகர்களின் பிடியில்.  [நல்லவேளை, கம்யூனிச நாத்திகர்கள் காலாவதியாகிவிட்டார்கள்.] என்னளவில் இவ்விரண்டும் அவநம்பிக்கையின் வேறு வேறு வடிவங்களே. எது ஒன்றையும் திட்டிக்கொண்டும் மறுத்துக்கொண்டும் நிராகரித்துக்கொண்டும் நமது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியைத்தான் இவ்விரு தரப்பினரும் செய்கிறார்கள். ஆன்மீகமும் நாத்திகமும் நல்ல விற்பனைச் சரக்காகியிருக்கும் காலத்தில், மனித குல மேன்மையை மட்டுமே சிந்தித்து வாழ்நாள் முழுதும் பணியாற்றிய ஒருவர் எனக்கு முக்கியமாகிறார்.

நான் வாசித்தவரையில் ராமானுஜர் ஓர் இயல். இன்னும் இந்த இயலில் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு மதாசாரியராகவே தொடர்ந்து அவர் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறார். அது சரியானதல்ல என்று சொல்ல முடியாது என்றபோதிலும் சரித்திர நோக்கில் அவரை அணுகி ஆராய நிறைய இடம் உள்ளது. ஹரிஜன ஆலயப் பிரவேசம் என்பது மாபெரும் நிகழ்வு. இன்றைக்கு இது வெறும் சொல்லாகவும் தகவலாகவும் தோன்றலாம். ஆனால் ராமானுஜரின் காலக்கட்டத்தில் இன்னொருவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. பின்புலமற்ற ஒரு தனி மனிதர் எத்தனை எத்தனை அரசர்களைத் தம் ஆளுமைத் திறனால் வசீகரித்து, தாம் விரும்பிய ஒரு லட்சிய சமூக அமைப்புக்கான கட்டுமானப் பணிகளின் பக்கம் திருப்பியிருக்கிறார் என்பது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் விஷயம்.

இந்த பிரமிப்பை அதன் உண்மையான சொரூபத்துடன் காட்சிப்படுத்த முடியாத இயலாமை, சரித்திரப் போதாமையினால் உண்டானது. கோடிட்ட இடங்களை அற்புதங்களைக் கொண்டு நிரப்பிவிட்டார்கள். அற்புதங்கள் நிகழ்ந்திருக்கலாம், நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இல்லை என்று சொல்ல முடியாது. ஆன்மீகத்தின் உயர்நிலையில் இயங்குவோருக்கு அற்புதங்கள் ஒரு பொருட்டும் அல்லதான்.

ஆனால் அற்புதங்கள் அல்ல; மண்ணில் கால் பதித்து அவர் இயங்கிய காலக்கட்டத்தில் நிகழ்ந்த மகத்தான சமூக மாற்றங்களே ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவரது இருப்பை நியாயப்படுத்துபவை.

பொலிக பொலிகவில் நான் அற்புதங்களின் தாக்க சதவீதத்தைக் கணிசமாகக் குறைத்தேன். இதைத் தெரிந்தேதான் செய்தேன். ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரமெடுக்கிற காட்சியை மட்டும் விரும்பிச் சேர்த்தேன். அது நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டா என்று பலநாள் தூக்கமின்றி யோசித்திருக்கிறேன். வெறும் ஒரு மதவாதியின் வாழ்வை எழுதுகிறோம் என்ற எண்ணத்துடன் ஆரம்பித்திருந்தால் அந்த யோசனைக்கே இடமில்லை. ராமானுஜர் வாழ்வில் அத்தருணம் ஒரு உச்சம். அதில் சந்தேகமே இல்லை. வாழ்வில் மாய யதார்த்தம் தன்னியல்பில் பின்னிப் பிணைகிற கணம்.

எனக்கு வெகு நிச்சயமாகத் தெரியும், கண்டிப்பாக அவர் அந்தப் பல்லாயிரம் சமணர்களை வழிக்குக் கொண்டு வர மிகச் சரியான வாதங்களை முன்வைத்திருப்பார் என்பது. ஆனால் ஒரே கணத்தில் அத்தனை பேரின் மனமாற்றத்தைக் காட்சிப்படுத்த அம்மாய யதார்த்தம் அவசியமாகிறது. இலக்கியம் அளிக்கும் இடமும் மொழியின் சாத்தியங்களும் இதற்கு உதவின. கணப் பொழுது அவர் ஆதிசேஷனாக உருமாற்றம் கொண்டதல்ல; அதன் விளைவு என்னவென்பதே இங்கு முக்கியம்.

முப்பதுக்கு மேற்பட்ட பத்திரிகைத் தொடர்கள், ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் எது ஒன்றும் இந்தளவு என்னை வருத்திப் பிழிந்ததில்லை. எழுதிய நாள்களெல்லாம் பிராணாவஸ்தைதான். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஒவ்வொரு வரியிலும் சரித்திரப் போதாமையை உணர்ந்தபடியே இருந்தேன். சர்வ நிச்சயமாக நானொரு தீவிர மதவாதியோ, குருட்டு பக்தனோ இல்லை என்பதை எனக்கு உணர்த்திய நாள்கள் அவை. தொடர் வந்துகொண்டிருந்தபோதும் இப்போது புத்தகம் வெளியாகியுள்ள சூழலிலும் தினமும் எனக்கு வரும் மின்னஞ்சல்கள் நான் எடுத்துக்கொண்ட பணிக்கு என்னால் காட்ட முடிந்த நேர்மைக்குக் கிட்டும் பரிசாகவே பார்க்கிறேன்.

பொலிக பொலிக எழுதி முடித்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. தி இந்து தொடரிலும் சைவ பேலியோ பற்றிய புத்தகம் ஒன்று எழுதும் முயற்சியிலும் தீவிரமாகிவிட்டேன். ஆயில் ரேகையின் இரண்டாம் பாகம் எழுதும் திட்டம் ஒன்று உள்ளது. அதற்காகவும் நிறையப் படித்துக்கொண்டிருக்கிறேன். கிருஷ்ணரைப் புரிந்துகொள்வது எப்படி? என்றொரு வினாவின் அடிப்படையில் ஒரு புத்தகத்துக்கான ஆசையும் உத்வேகமும் உண்டாகியிருக்கிறது.

என் பிரத்தியேக விருப்பத்துக்குரிய இரண்டு மூன்று துறைகள் தவிர மற்றவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை. என்ன எழுதினாலும் எல்லாவற்றிலும் ஒரு முழுமை என்பதே அடிப்படை நோக்கமும் விருப்பமும். அதனை நோக்கிய ஓட்டமே வாழ்வின் ஒரே பெரிய சுவாரசியம்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி