சன்னியாச தருமம்

நண்பர்கள் ஜடாயு, சொக்கன் இடம் சுட்ட, மாயவரத்தான் உதவியால் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட யாதவ பிரகாசரின் ‘யதி தர்ம சமுச்சயம்’ படிக்க ஆரம்பித்தேன். State University of New York Press வெளியீடாக Rules and Regulations of Brahmanical Asceticism என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

பூர்வாசிரமத்தில் ராமானுஜரின் குருவாக இருந்து பின்னர் சீடரானவர் யாதவ பிரகாசர். ஏகதண்ட சன்னியாசியாக இருந்து பின் திரிதண்ட சன்னியாசியானவர். ராமானுஜர் கேட்டுக்கொண்டதன் பேரில் சன்னியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நடைமுறைகளைப் பற்றிய நூலை எழுதினார். (யதி தருமம் என்றால் சன்னியாச தருமம்)

யாதவ பிரகாசரைப் பற்றிய நல்லவிதமான குறிப்புகள் சரித்திரத்தில் அதிகம் கிடையாது. ராமானுஜரைக் காசிக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப் பார்த்தவர் என்பதே அவரைப் பற்றிய பெரும் தகவல். பின்னாளில் மனம் திருந்திய யாதவர் (அதற்கு அவரது தாய் ஒரு முக்கியக் காரணம். இதைப் பற்றி ‘பொலிக பொலிக’வில் விரிவாக எழுதியிருக்கிறேன்) விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஏற்று உடையவரின் சீடராகவே ஆனவர்.

பிரகாசரின் ‘யதி தர்ம சமுச்சயத்தை’ப் படிக்க வேண்டும் என்ற ஆவலில் தேடத் தொடங்கி, தமிழில் அது இல்லை என்று அறிந்தேன். இணையத்தில் கிட்டிய தகவல்களின்படி அதன் ஆங்கிலப் பதிப்பு ஒன்று உள்ளதை (ஆய்வுப் பதிப்பு) அறிந்து, வரவழைத்து, படிக்க ஆரம்பித்தேன்.

இந்த மனிதர் உண்மையில் ரொம்பப் பெரிய ஆள். வேத, உபநிடதங்களில் கரை கண்ட வித்தகர் என்பது இந்நூலைப் படிக்கும்போது புரிகிறது. சன்னியாச ஒழுக்கம் என்பது லேசுப்பட்ட விஷயமல்ல என்பதும்.

அவர் தமக்குத்தாமே பிரித்துக்கொண்டிருக்கும் அத்தியாயங்களில் சொல்ல வரும் விஷயங்களை முதலில் தனியே எடுத்து வைத்துக்கொள்கிறார். பிறகு அதே விஷயங்களைப் பற்றிப் பிரகஸ்பதி என்ன சொல்கிறார், வியாசர் என்ன சொல்கிறார், ஆபஸ்தம்பர் என்ன சொல்கிறார், லிகிதர், காலவர், அத்ரி, தேவலர், ஜமதக்னி, கார்கர் என்று வேதகால ரிஷிகள் ஒவ்வொருவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலைக் கொடுத்துவிட்டே தன் கருத்துக்கு வருகிறார்.

முடி வெட்டுவதில் ஆரம்பித்து, தண்ணீரை எப்படி அருந்தவேண்டும் என்பது வரை; உடல் நலம் பேணுவது முதல் ஊர் நலம் பேணல் வரை; மந்திர உச்சாடனங்களில் தொடங்கி, தியானம், தவம் வரை; பிறப்பு முதல் மோட்சம் வரை ஒன்றையும் விடுவதில்லை.

நூற்றுப் பத்து பக்கங்கள்தாம் படித்திருக்கிறேன். முழுக்க முடித்ததும் விரிவாக எழுதுகிறேன். அதற்குமுன் ஒரு விருப்பம். இந்தப் புத்தகத்தை யாராவது தமிழில் கொண்டுவர வேண்டும். ஜடாயு, அரவிந்தன் போன்றவர்கள் செய்தால் மிகச் சிறப்பாக வரும்.

சன்னியாசி என்ற பெயரில் ஊரில் மலிந்திருக்கும் கார்ப்பரேட் கனவான்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. யாதவ பிரகாசர் விவரிக்கும் சன்னியாச ஒழுக்கம் என்பது புனிதங்களால் எழுப்பப்பட்ட கற்கோட்டை. உள்ளே நுழைவதும் சரி; வாழ்ந்து பார்ப்பதும் சரி. அத்தனை எளிதல்ல.

ஆனால் அவர் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார் என்பது, அவர் வாழ்வை ஓரளவு படித்து அறிந்தவன் என்பதால் புரிகிறது.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading