ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால் தமிழ்நாட்டுக்கு இத்தனை பெருமை இருப்பதைப் பார்த்து வரலாற்று நங்கை திருஷ்டிப் பொட்டு வைத்துவிட்டாள். கடந்த ஒரு நூற்றாண்டாக, ஆண்டுக்கு ஆண்டு நம் புண்ணிய மரபு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் போய்ச் சேர்வதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக ஸ்ரீ வைணவம் எனும் ஞான கங்கை அனைத்துத் தமிழர்களையும் சென்றடைவதில் ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது.
வைணவம் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு அளப்பரியது. வைணவம் தமிழில் கொண்டுள்ள வேர் ஆழமானது. ஆய்ச்சியர் குரவையிலும் பரிபாடலிலும் ஆழ்வார்களின் பாடல்களின் தொடக்க சலனங்களைக் காண இயலும். ஆழ்வார் பாசுரங்களோ, இப்பூவுலகுக்குத் தமிழ் கொடுத்த பெரும் கொடை. ஆழ்வார்களின் மெய்ஞான பக்தியின் உருதிரண்ட செயல் வடிவம் ஸ்ரீ ராமானுஜர். அவர் உருவாக்கிய ஆன்மிக – சமுதாயப் பேரியக்கம் ஸ்ரீ வைஷ்ணவம். ஆனால் இன்று தமிழ்நாட்டில் திருமண்ணே கேலிக்குரியதாக ஆகிவிட்டது. நாத்திகர் மட்டுமல்ல; ஆத்திகரும் கூட சர்வ சாதாரணமாகத் திருமண்ணையும் கோவிந்தனின் திருநாமத்தையும் கேலிக்குரிய பொருளாக உச்சரிப்பதைப் பார்க்கிறோம். நாமம் போடுவதும் கோவிந்தனை விளிப்பதும் தினசரி உரையாடல்கள் முதல் திரைப்படங்கள் வரை கிண்டலும் கேலியும் கொண்ட விஷயங்களாகிவிட்டன. ஆனால் அது ஆழமான நோய் ஒன்றின் புற வெளிப்பாடுதான். ஆழ்வார்களைக் குறித்து நமக்குச் சொல்வார் எவருமில்லை. ஸ்ரீ ராமானுஜரை நம் இன்றைய தலைமுறையினருக்கு, அவர்களுக்குப் புரியும் முறையில் சொல்ல எவருமில்லை. ஆனால் ஸ்ரீ ராமானுஜர் இல்லையென்றால் பாரதமே ஒரு தேசமாக இருந்திருக்காது.
ராமானுஜர் இல்லை என்றால் வட இந்தியாவில் பக்தி இயக்கம் ஏது? ராமானுஜ சம்பிரதாயத்தில் வந்த ராமானந்தரல்லவா கபீரின் குரு? வட பாரதத்தில் அன்னியப் படையெடுப்புகளின்போது குரு நானக்கும் கபீர்தாசரும் இல்லை என்றால் பக்தி இயக்கம் எங்கே? பக்தி இயக்கம் இல்லாமல் போயிருந்தால் வகுப்புக் கலவரங்களாலேயே வட இந்தியா சிதறிப் போயிருக்கும். ராமானுஜர் இல்லை என்றால் இந்தியாவின் எல்லை விந்தியத்துக்கும் தெற்கே வந்திருக்கும். ஏன் இந்தியாவே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்! இது மிகை இல்லை. வரலாற்று யதார்த்தம்.
எனவே ராமானுஜரை ஒவ்வொரு தமிழனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் அவசியம் இருக்கிறது. இதற்குத்தான் பேரருள், பா.ராகவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
இந்நூல் அனைவருக்குமானது என்றாலும், அடி தப்பினால் அதள பாதாளம் என்கிற ஆபத்தான பாதையைக் கொண்டது. ராமானுஜர் வாழ்ந்த காலக்கட்டத்தில் பல தரிசனங்கள், சமயங்கள், வைதிக சமயங்களே கூட, ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. இன்று அத்தகைய மோதல்கள் இல்லை. சாதாரணமாக நம் ஹிந்து சமய மக்கள் எல்லா தரிசனங்களையும் சமயங்களையும் வேற்றுமைகளைக் களைந்து சமன்வயப்படுத்தி ஏற்றுக்கொண்டு விட்டார்கள்தான். ஆனால் பழைய வரலாற்றை எழுதும்போது சில நுண்ணுணர்வுகள் புண்பட்டுவிடக் கூடும். பாரா அத்தகைய பிரச்சனைகளை அசாத்தியத் திறமையுடனும் – ஆனால், ராமானுஜ சம்பிரதாயத்துக்கு எவ்வித சமரச பங்கமும் ஏற்படாமல் கடந்திருக்கிறார்.
உடையவரின் பூர்வாசிரம ஆசிரியரும் அத்வைதியுமான யாதவப் பிரகாசருக்கு மாணவனாக அவரைக் காட்டிலும் ஞான வீரியம் கொண்டு பிரகாசித்தவர், ராமானுஜர். அவர் மீதான அசூயை குறித்துச் சொல்லும்போது, அத்வைதத்தை ராமானுஜர் மறுத்ததல்ல பிரச்னை; மாறாக அகந்தையே ஆதாரப் பிரச்னை என்பதை அழகாகச் சொல்கிறார். அதுவும் யாதவப் பிரகாசரின் அன்னையின் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்: ‘அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள்.’
எத்தனை பிரச்னைக்குரிய விஷயத்தை எத்தனை அழகாகக் கையாண்டு கடந்து செல்கிறார்! ஆனால் அதில் உண்மை இம்மியளவும் சமரசப்படவில்லை என்பதுதான் சிறப்பு.
பொதுவாக அற்புத அதிசயங்களை இந்தத் தலைமுறை மக்களுக்கு எப்படிச் சொல்வது? மத நம்பிக்கை உடைய மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் நவீன மனம்? பன்னிரண்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் வாதம் புரிந்து உடையவர் ஸ்ரீ வைஷணவத்தை ஏற்க வைக்கிறார். அதற்காக அவர் ஆதிசேடனாக உருவெடுக்கிறார். ஆனால் இது திரையின் பின்னால் நிகழ்கிறது. வேண்டுமெனில் உடையவர் சமணர் முன்னால் அந்த உருமாற்றத்தை நிகழ்த்தி ஓர் அற்புதத்தைக் காட்டியிருக்கலாம். ஆனால் அது ஏன் திரையின் பின் நிகழ வேண்டும்? தம் எழுத்துத் திறமையின் உச்சத்தை இந்நிகழ்வை வடித்துக் காட்டுவதில் எட்டியிருக்கிறார் பாரா.
அத்வைத சித்தாந்த பிரசாரகரான யக்ஞமூர்த்தி, வைணவ சித்தாந்தத்தை ஏற்று அருளாளப் பெருமான் எம்பெருமானாராக ஆனது குறித்த எழுத்திலும், பாரா ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். இங்கு அவரை ஆட்கொண்டது, பதினேழு நாள்கள் ராமானுஜர் அவருடன் நடத்திய வாதமே அல்ல. உடையவரின் ஆளுமையில் இருந்த சத்தியமான அருட் பேராற்றலே அவரை ராமானுஜர் காலடிகளில் விழ வைத்தது. அத்வைத சத்தியம் ஆதி சங்கர பகவத் பாதரின் அனுபவ தரிசனமாக பாரதமெங்கும் ஞானப்புத்துயிர் ஊட்டிய ஒன்று. ஆனால் அது வெறும் ஏட்டுச் சித்தாந்தமாக நின்றது மட்டுமின்றி, வெறும் மாயாவாதமாகக் கருதப்படும் அளவில் தேக்க நிலை அடைந்துவிட்டது. அப்படிச் செயலூக்கம் இழந்து சித்தாந்த வறட்சி அடைந்த வேதாந்தத்துக்கு ராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் மூலம் உயிர் அளித்தார். மாபெரும் செயலூக்கத்தை அளித்தார். என்றென்றைக்குமான சமூக நல் மாற்றங்களுக்கான ஆன்மிக மதிப்பீட்டு விதைகளைத் தூவிச் சென்றிருக்கிறார்.
இன்றைக்கு சாதி ஒரு முக்கியமான பேசுபொருள். தேசத்தில் பலருக்கு சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டுமென்கிற ஆர்வம் உண்மையிலேயே இருக்கிறதா அல்லது எல்லாம் கண்துடைப்புத்தானா என்கிற ஐயம் அடிக்கடி நமக்கு ஏற்படுகிறது. இந்நூலில் ஒரு சம்பவம் வருகிறது. ஆளவந்தாரின் சீடர் மாறனேர் நம்பி காலமாகிறார். அந்தணரல்லாத அவருக்கு அந்தணரான பெரிய நம்பி பிரம்ம மேத சம்ஸ்காரம் செய்கிறார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. விஷயம் ராமானுஜரிடம் கொண்டுவரப்படுகிறது. அவர் சொல்கிறார்: ‘பெரிய நம்பியை விழுந்து சேவித்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போங்கள். அது ஒன்றுதான் செய்யக்கூடியது.’
பின்னர் உடையவர் தமிழ் மறையான திருக்குறளை மேற்கோள் காட்டுவதாக சொல் சித்திரம் தீட்டுகிறார் பாரா. ‘அந்தணன் என்பவன் அறவோன் என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார். அறம் வளர்க்கிற விதம் இதுவா? மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம். மாறனேர் நம்பி அந்த விதத்தில் சந்தேகமின்றி அந்தணர்.’
இந்நூல் முழுக்க ஊடுருவி வரும் இழை இது. ராமானுஜர் தம் வாழ்நாள் முழுதும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்தபடியே இருக்கிறார். புரட்சிகரமாகக் கைகளைத் தூக்கிக் கூச்சலிடும் கண்டனம் அல்ல அது. வைணவம், நீர் போல இயல்பானது என்கிறார் ஆசிரியர். இதனாலேயே ராமானுஜரின் சீர்திருத்தங்கள் யாவும் இயல்பாக, இயற்கையாக நடக்கிற ஒன்றாக இருக்கிறது. இதன் அடிப்படையில் இருப்பது ஆன்மநேய ஒருமைப்பாடு. பெருமான் எனும் பெரும் இருப்பின் முன்னால் நாம் அனைவரும் ஒன்று. அவனிடமிருந்து வரும் அன்பில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் சாதி சழக்குகளும் செருக்குகளும் இதர மாசுகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.
காசியில் சமூகத்தால் விலக்கப்பட்டவரிடம் பிரம்ம ஞானத்தைச் செயல்முறையாக அறிந்த ஆதி சங்கர பகவத் பாதரும், சாதியை விலக்கி ஆன்மநேய சம தர்மத்தை சமுதாயத்தில் இயக்கமாகவே பரப்பி தேசத்தைக் காத்த ராமானுஜரும், பாணரை அந்தணர் வீட்டு யாகத்தீ அருகில் மனைவியுடன் உறங்கச் செய்த சீர்காழி பிள்ளையாரும் நமக்கு அளிக்கும் செய்தி ஒன்றுதான். அதன் ஸ்ரீ வைஷ்ணவ வடிவம், இந்நூல் மூலம் நம்மை வந்தடைகிறது.
இன்றைக்கு நம் மாநிலத்தை நோயெனக் கெடுக்கும் பித்தங்கள் அழிய மருந்தொன்றிருக்குது என இந்நூலை அளித்த ஆசிரியருக்கு வணக்கங்களையும் நன்றிகளையும் நெஞ்சார சமர்ப்பிக்கிறேன். இந்நூல் ஒவ்வொரு தமிழ் இளைஞனையும் சென்று அடைய வேண்டும். தமிழக அரசே இந்நூலை கல்விச் சாலைகள் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். மிகக் குறைந்த பட்சம் இந்நூலில் நிரம்பி இருக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை நம் பாடத் திட்டங்களில் வைக்க வேண்டும். நம் கல்லூரி மாணவர்கள் இவற்றைப் பயில வேண்டும். இவை நாடகங்களாகப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கோயில் உற்சவங்களின் போதும் இவை தேர்ந்த பேச்சாளர்களால் பேசப்பட வேண்டும். அரசாங்கம் அதைச் செய்யவில்லை என்றால் சமூக ஆர்வலர்கள் செய்ய வேண்டும். சாதி மத பேதமில்லாமல் தமிழ் கூறும் நல்லுகத்தாருக்குக் கிடைத்திருக்கும் நல் மருந்து இந்நூல். பா.ராகவன் எத்தனையோ நூல்களைப் படைத்தவர். ஆனால் இந்த நூல் அவரது பேனாவிலிருந்தோ கல்வியறிவிலிருந்தோ, ஏன் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தோ கூட வரவில்லை. அவற்றையெல்லாம் உள்ளடக்கி, தனதாக்கி அவற்றைக் கடந்து உள்ளிருந்து ஊற்றெடுத்த ஒரு பேரன்பிலிருந்து வந்திருக்கிறது.
தமிழகமெங்கும் ஓர் ஆரோக்கியமான ஆன்மிக அருள் அலை பரவ இந்நூல் நிச்சயம் உதவும். ஓர் எளிய தமிழ் வாசகனாக பா.ராகவனுக்கு என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.
[பொலிக பொலிக நூல் முன்னுரை]