துறப்பதும் ஏற்பதும்

உணவு குறித்தோ, நொறுக்குத் தீனிகள் குறித்தோ எப்போது நான் என்ன எழுதினாலும் உடனே, ‘பேலியோ அவ்வளவுதானா?’ என்று யாராவது ஓரிருவராவது கமெண்ட் போட்டுவிடுகிறார்கள். அது ஏதோ கோயிலுக்கு நேர்ந்துகொண்டு மொட்டை போடுவது போல இங்கே நடக்கிறது. இதுவரை அத்தகு கமெண்ட்களுக்கு நான் பதில் சொன்னதில்லை.

ஐந்தாண்டுக் காலம் நான் பேலியோவில் இருந்தேன். 28 கிலோ எடை குறைத்தேன். 6.7 அளவில் இருந்த சர்க்கரையை 5.4க்குக் கொண்டு வந்தேன். பிறகு என்னால் அதைத் தொடர முடியாமல் விட்டேன். எடை ஏறிவிட்டது; என் அதிர்ஷ்டம் சர்க்கரை மட்டும் ஏறவில்லை. அந்த விஷயத்தில் தப்பித்திருக்கிறேன்.

நிற்க. இத்தனை நாள்களாக என்னைத் தொடர்ந்து படித்து வருவோருக்கு ஒரு விஷயம் புரிந்திருக்க வேண்டும். பெற்ற தாய் தகப்பன்,  மனைவி,  மகளைத் தவிர மற்ற அனைத்தையும் காலந்தோறும் நான் மாற்றி வந்திருக்கிறேன். ரசனை மாற்றம் ஏற்பட்டதில்லை. கொண்ட கருத்துகள் மாறியதில்லை. ஆனால், வேறு எது ஒன்றனுக்கும் என்னால் ஆயுள் சந்தா செலுத்த முடியாது. 

பல வருடங்களாக, ஒருநாள் தவறாமல் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது என் வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அவ்வழக்கத்தை விட்டொழித்து, ஒவ்வொரு நாள் நடையின்போதும் குறைந்தது நான்கு இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேட்கிறேன். 

என்ன எழுத உட்கார்ந்தாலும் அதற்குமுன் சில பக்கங்களாவது அசோகமித்திரனை எடுத்துப் படிக்கும் வழக்கம் இருந்தது. இப்போது வள்ளலார், திருமங்கை ஆழ்வார், பழைய ஏற்பாடு,  மாமல்லன், சுந்தர ராமசாமி, திருக்குறள் உரை என்று நாலைந்தைப் புரட்டிவிட்டுத்தான் தொடங்குகிறேன். 

ஓட்டலுக்குச் சென்றால் முதலில் பரோட்டா என்று சொல்லிவிட்டுத்தான் மெனு கார்டையே பார்ப்பது வழக்கம். இப்போது இல்லை. எண்ணிப் பார்த்தால் நான் பரோட்டா தின்றே பல வருடங்களாகிவிட்டன. 

திங்க்பேட் தவிர இன்னொரு லேப்டாப்பை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருந்தது. ஆப்பிளுக்கு மாறியபின் அதை நினைப்பதே இல்லை. நாளை ஆப்பிளையும் தூக்கிப் போடலாம். வேறொன்றுக்கு மாறலாம்.

சிறிதா பெரிதா என்றில்லை. எதையும் மாற்றிக்கொண்டே இருப்பதே என் இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஒன்றை ஏற்பதில் இருக்கும் அதே தீவிரம், நிராகரித்து ஒதுக்கி வைப்பதிலும் இருக்கிறது. இது பற்றிய விமரிசனம் என் வீட்டில் எப்போதும் உண்டு. ஆனால் என்னால் இப்படி மட்டுமே இருக்க முடிகிறது.

ஊரார் கண்ணுக்குத் தென்படாத (தென்பட அவசியமும் இல்லாத) ஓர் ஒழுங்கு, ஒரு லயம் என் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உண்டு. அது மாறாதிருக்கிறதா என்று அடிக்கடி கவனித்துக்கொள்வேன். மற்ற எது குறித்தும் கவலை கொண்டதேயில்லை. 

ஒன்றையே பிடித்துக்கொண்டு தொங்குவதற்கு நான் மதவாதியும் அல்ல; கட்சிக்காரனும் அல்ல. நல்லதோ கெட்டதோ. ஆர்வம் குவியும் அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்கும் வழக்கம் இருப்பதால் மட்டுமே எழுதிக்கொண்டிருக்க முடிகிறது. எழுதிக்கொண்டிருப்பதனால் மட்டுமே இருந்துகொண்டிருப்பதை உணரவும் முடிகிறது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!