நடந்த கதை

காலை கண் விழித்து எழுந்த சில நிமிடங்களிலேயே ஹலோ எஃப்.எம்மில் சிவல்புரி சிங்காரம் சொன்னார். அன்பின் ரிஷப  ராசியினரே! இன்று நீங்கள் வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டும். 

என்றால், முழு நாளும் மொக்கை வாங்குவீர் என்று பொருள்.

அவர் சொல்லும் நல்லவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ. இம்மாதிரியான ஆரூடங்கள் உடனடியாக பலித்துவிடுகின்றன. நேற்று இரண்டு முக்கியமான வேலைகள். காலை ஒன்று; மாலை ஒன்று. 

விடிந்ததுமே காலைக்கு தோசை, மதியத்துக்கு பனீர் புலாவ் வேண்டுமா என்று அட்மின் கேட்டார். நல்ல ஆஃபர்தான். ஆனால் போகிற இடத்துக்கு இரண்டு சாப்பாட்டு மூட்டைகளுடன் போகக் கூச்சமாக இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 

வெறும் தண்ணீர் குடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தேன். முதலாப்பு, ஆபீஸ் சாவியில் இருந்தது. லேப்டாப் பையை ஆராய்ந்தபோது அதில் சாவி இல்லை. டிராவில் தேடினேன். பையைத் தலைகீழாகக் கவிழ்த்துக் கொட்டித் தேடினேன். மேசை மொத்தமும் தேடினேன். சாவி ஸ்டாண்டிலும் பார்த்தேன். இல்லை.

சாவி தேடியதில் அரை மணி நேரம் ஓடிவிட்டது. எனவே மாற்றுச் சாவிக்கு ஏற்பாடு செய்துவிட்டு அவசரமாகக் குளித்துக் கிளம்பினால் வழக்கமான ஓலா, ஊபர்க்காரத் திருவிளையாடல்களில் முக்கால் மணி நேரம் போனது. ஒரு டிரைவர் ஒப்புக்கொள்வார். உடனே கேன்சல் செய்வார். மீண்டும் சக்கரம் சுற்றும். அடுத்தவருக்குப் போகும். அவர் கேன்சல் செய்வார். இன்னொருவருக்குப் போகும். அவர் கேன்சல் செய்வார். இது ஊபரின் கதை. 

ஏனெனில் பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு ஊபர் காட்டும் தொகை ரூ. 225. வெறுத்துப் போய் கேன்சல் செய்துவிட்டு ஓலாவில் புக் செய்யப் பார்த்தால் அங்கே அயோக்கியன், ரூ. 290 காட்டுவான். இதே ஊபர் டிரைவர் அங்கே ஓலாவிலும் இருப்பார். அங்கே கால் அட்டண்ட் செய்து, மேலே முப்பது ரூபாய் போட்டுத் தரச் சொல்லிக் கேட்பார். முன்னதாக நாம் முக்கால் மணி நேரம் வெட்டி விரயம் செய்துவிட்டிருப்பதால், சனியன் ஒழிகிறது என்று சரி என்போம் அல்லவா?

அதற்குத்தான் அவ்வளவும்.

விடுங்கள். ஒரு வழியாக ஒரு டிரைவரைப் பிடித்து ஆபீஸ் சென்று சேர்ந்தேன். மாற்றுச் சாவி கொடுத்து வைத்திருந்தவரிடம் கேட்டு வாங்கித் திறந்து சொத்துபத்துகளைப் போட்டுவிட்டு மீட்டிங்குக்குக் கிளம்பினேன். போகும்போதே நான் இன்னும் சாப்பிடவில்லை என்பதைத் தெரியப்படுத்திவிட்டுத்தான் போனேன்.

அதனாலென்ன, இங்கே நம் அலுவலகத்திலேயே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றார் உத்தமோத்தமர்.

‘என்ன டிபன்?’

‘சாண்ட்விச்’ என்றார்கள்.

சரி ஒழிகிறது என்று மனத்தளவில் தயாராகிச் சென்றால் வெறும் பிரெட்டில் ஒரு துண்டு கேரட், ஒரு துண்டு வெள்ளரி. ஒரு டோஸ்ட் கிடையாது. உள்ளே கொஞ்சம் சீஸ் கிடையாது. வேறு ஒரு கருமாந்திரமும் கிடையாது.

இதை எப்படித் தின்பது? இந்த உலகில் வெறும் பிரெட் தின்பது போன்றதொரு அவலம் வேறில்லை. ஆனால் வேலை நடக்க வேண்டும். பசி இருந்தால் பத்துக்கு ஒன்பதாவது பறந்துவிடும். பல்லைக் கடித்துக்கொண்டு ஒரே ஒரு துண்டு மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு டீயைக் குடித்தேன்.

வாட்சப்பில் ஒரு படம் வந்தது. நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போது வாஷிங் மெஷினில் சுழன்றுகொண்டிருந்த என் பாண்ட்டை வெளியே எடுத்து அட்மின்தான் போட்டோ அனுப்பியிருந்தார். பாண்ட் பாக்கெட்டில் ஆபீஸ் சாவி இருக்கிறது.

நல்லது. சர்வமங்கள ப்ராப்தி ரஸ்து. 

முதல் மீட்டிங் முடித்துவிட்டுக் கொலைப் பசியுடன் ஓட்டலுக்குப் போனேன். போர்ட் அழிக்கும் காய்ப் பொரியல். பாவம் செய்தவர்களுக்கான காய் போட்ட சாம்பார். வாசலிலேயே எழுதிப் போட்டிருப்பான். அதைப் படித்துவிட்டுப் போகத் தோன்றாததற்கும் சிவல்புரிதான் காரணம்.

தலையெழுத்தே என்று தின்று முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வந்தேன். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு முதுகு வலி கொல்லும் அளவுக்கு வேலை இருந்தது. அதனாலென்ன? வந்தமர்ந்த பத்து நிமிடங்களில் பவர்கட். யுபிஎஸ் இருக்கிறது என்றாலும் நாற்பது நிமிடங்களில் செத்துவிடும். அதை ரிப்பேர் பார்க்க வேண்டும். இப்போது அதில் நேரம் செலவிட்டால் உடனடி எழுத்து வேலையும் கெடும்; மாலை மீட்டிங்கும் ஊத்திக்கொள்ளும். 

அத்தனை அவலங்களிலும் ஒரே நல்லது, லேப்டாப்பில் 83 சதமான பேட்டரி இருந்தது. ஒரு பிடி பிடித்தால் இருக்கும் வேலை அனைத்தையும் ஒரே மூச்சில் முடித்துவிடலாம்.

விதி யாரை விட்டது? மீட்டிங் முடிந்ததா, சாப்பிட்டேனா என்று கேட்க அட்மின் போன் செய்தார். அனைத்தையும் சொல்லி ஒரு ஆவர்த்தனம் புலம்பி முடித்துவிட்டு, கொஞ்சம் படுக்கிறேன்; அரை மணி ஆனதும் போன் செய்து எழுப்பிவிடு என்று சொல்லிவிட்டுப் படுத்தேன். 

ஆனால் அன்பு மிகுந்த அதர்மபத்தினிகள் அரை மணியில் எழுப்பிவிடுவதில்லை. மேலும் ஒரு மணி நேரம் தூங்கவிட்டு அதன்பிறகே அழைத்தார். 

அவசர அவசரமாக எழுத வேண்டியதை முடித்துவிட்டு மாலை மீட்டிங்குக்கு ஓடவேண்டியதானது. அங்கே போய்ப் பார்த்தால்…

போதும். ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்த பிறகாவது டாப்பாக என்னவாவது நடக்கிறதா பார்க்க வேண்டும்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!