காணாதிருத்தல்

புத்தக அடுக்கின் நடுவே
ஏதோ ஒன்று
உருவப்பட்டு காணாமல் போயிருக்கிறது
நானே எடுத்திருப்பேன்
அல்லது
யாராவது.
ஒற்றைப் பல்லிழந்த கிழவியின்
புன்னகைபோல்
ஈயென்று இளிக்கிறது புத்தக அடுக்கு
காணாமலான புத்தகம் எதுவாக இருக்கும்
யோசனையில் கழிகிறது பொழுது
அவசரத்துக்கு எடுப்பதையெல்லாம்
வாரமொருமுறை அடுக்கிவிடுவேன்
அவ்வப்போது புரட்டுவதை
அப்போதைக்கப்போதே வைத்துவிடுவேன்
எனக்குத் தெரியாமல்
என் அறைக்கு வருவோர் இல்லை
எனக்குத் தெரிந்தவர்களையும் நான்
தொடவிடுவதில்லை
இருப்பினும் எப்படியோ காணாமல் போயிருக்கிறது
ஒற்றைப் புத்தகம்
நீ எடுத்தாயா
நீ எடுத்தாயா
நீ எடுத்தாயா
மூன்று பேரிடம் கேட்டுவிட்டேன்
இல்லை
இல்லை
என இரண்டு பதில்கள் வந்தபோது
ஆம், எடுத்தேன் என்றது
முதற்காலம்
காலாவதிக் கணக்கு
புத்தகங்களுக்கும் உண்டாம்
விழுந்த இடைவெளியை
இட்டு நிரப்ப
இன்னொன்று வாங்க உத்தேசமில்லை
இடைவெளியில் இருந்த புத்தகம்
எதுவாயிருக்கும் என்ற
யோசனையை
அட்டைபோட்டு அங்கே
சொருகிவைத்துப் பார்த்தால்
அம்சமாகத்தான் இருக்கிறது
எடுத்துப் படிக்காத எதுவும்
தொலைந்து போவதேயில்லை
அட்டை போட்ட யோசனையை
நான் தொலைக்கப் போவதில்லை.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி